வாழ்க்கை

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டியின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம்பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக் கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார். மனைவி: கமலா. குழந்தைகள்: தைலா, கண்ணன், தங்கு. (மூத்த மகள் சௌந்தரா 1996இல் காலமானார்.)

வாழ்வின் தடங்கள்

சுந்தர ராமசாமி 1931ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி பிறந்தார். பிறந்த ஊர் நாகர்கோயிலுக்கு அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோயில் என்னும் சிறிய கிராமம். குழந்தைப் பருவத்தைக் கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் கழித்தார். அங்கே அவரது தந்தை எஸ். ஆர். சுந்தரம் அய்யர் பர்மா எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார்.

சுந்தர ராமசாமியின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் சிறு வயதில் கோட்டயத்தில் இருந்ததால் மலையாளம் கற்றார். அவர் தந்தை தன் வியாபாரத்தை மூடிவிட்டு நாகர்கோயிலுக்கு வந்துவிடலாம் என 1939இல் முடிவுசெய்தார். அப்போது சு.ரா.வுக்கு எட்டு வயது. சு.ரா.வுக்குத் தமிழோடு அறிமுகம் ஏற்பட இந்த இடப்பெயர்ச்சி ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. சுந்தர ராமசாமி நாகர்கோயிலில் படிக்க ஆரம்பித்தார். ஆனால் கன்யாகுமரி மாவட்டம் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்ததால் இங்கும் கல்வி மலையாளத்திலேயே தொடர்ந்தது. படிப்பில் மந்தமாகவே இருந்துவந்தார்.

பத்து வயதாக இருக்கும்போது வாத நோய் தாக்கியதில் சில ஆண்டுகளுக்கு அவரது நடமாட்டம் முடங்கியிருந்தது. பள்ளிக்கு ஒழுங்காகப் போக முடியவில்லை. ஒரு கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது. அப்போதுதான் - 18 வயதில் - தமிழ் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் வந்தது. சொந்த முயற்சியால் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்தார். அவரது அம்மா ‘மணிக்கொடி’ இலக்கிய இதழையும் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா முதலானவர்களின் கதைகளையும் படித்துக் காட்டினார். சுந்தர ராமசாமிக்குப் புதுமைப்பித்தனை மிகவும் பிடித்துப்போனது.

புதுமைப்பித்தன் மீதிருந்த ஈடுபாட்டினால் புதுமைப்பித்தன் நினைவு மலரை 1951இல் சுந்தர ராமசாமி உருவாக்கி வெளியிட்டார். அவரது முதல் சிறுகதையும் (தலைப்பு: முதலும் முடிவும்) அதில் வெளியாயிற்று. 1952இல் தண்ணீர் என்னும் சிறுகதையை ‘தாமரை’இதழில் எழுதினார். 52, 53ஆம் ஆண்டுகளில் அவர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய தோட்டியின் மகன்என்னும் மலையாள நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த நாவல் ‘சரஸ்வதி’ இதழில் 1957இல் தொடராக வெளிவந்தது.

தன் தந்தையின் கடுமையான கண்டிப்பைச் சர்வாதிகாரப் போக்காக அவர் கண்டார். இந்தப் போக்கும் தன் தாய்மாமனின் வறுமை நிரம்பிய வாழ்வும் தன்னை வெகுவாகப் பாதித்ததாக சு.ரா. குறிப்பிட்டிருக்கிறார்.

இதே காலகட்டத்தில் அவர் அரசியல், பண்பாடு, இலக்கியக் கோட்பாடுகள் குறித்த பல்வேறு நூல்களைப் படித்திருக்கிறார். காந்தி, பெரியார் ஈ.வெ. ராமசாமி, அரவிந்தர் ஆகியோரது நூல்களைப் படித்தார். மலையாள எழுத்தாளர் எம்.கோவிந்தனின் எழுத்துக்கள் மீது பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. பின்னாளில் கோவிந்தனும் சுந்தர ராமசமியும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

இந்தக் காலகட்டத்தில் சுந்தர ராமசாமி இடதுசாரி அரசியலின்பால் கவரப்பட்டார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியை அவர் ஆதரித்தார். இது தன் தந்தைக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்னும் முனைப்பில் எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முடிவு எனப் பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸிய இலக்கியங்களைப் படித்தார். நண்பர்களுடன் அவை குறித்து விவாதித்தார். நாகர்கோயிலில் முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்.

அவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ இதழிலும் விஜயபாஸ்கரன் ஆசிரியராக இருந்த ‘சரஸ்வதி’ இதழிலும் வெளியாயின. இவர்கள் இருவரும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள். இருவருமே கம்யூனிஸ்டுகள். மார்க்சிய இயக்கத்தின் சில கோட்பாடுகள் சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தாலும் சோவியத் அமைப்பின் மீதும் ஸ்டாலினின் அரசியல் கண்ணோட்டத்தின் மீதும் அவருக்குக் கடுமையான சந்தேகங்கள் எழுந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது ஈடுபாடு நெடுங்காலம் நீடிக்கவில்லை. ஸ்டாலின் காலத்து நடவடிக்கைகள் பற்றி குருஷேவ் வெளியிட்ட தகவல்களையும் ஹங்கேரிப் புரட்சி ஒடுக்கப்பட்ட விதத்தையும் படித்த அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகினார். நவீனத்துவ இயக்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். சி.சு. செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ இதழில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

முற்போக்கு யதார்த்தவாதக் கதைகள் என்று சொல்லத்தக்க கதைகளை ஆரம்பத்தில் எழுதிவந்தார். சமூக மாற்றம் என்னும் நோக்கம் அவற்றில் வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ இருந்தது. பிறகு அந்த வரையறையிலிருந்து விடுபட்டு, கலையம்சத்திற்கு அழுத்தம் தரும் கதைகளை எழுதினார். கோட்பாடுகளுக்கு முக்கியத்துவமோ அழுத்தமோ கொடுக்காமல், கொள்கை சார்ந்த முடிவுகளோ முன்முடிவுகளோ இல்லாமல் யதார்த்தத்துக்கும் அழகியலுக்கும் கலை அம்சத்துக்கும் இவர் முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார்.

ஐம்பதுகளின் இறுதியில் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தார். ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னும் தலைப்பு கொண்ட அந்த நாவல் 1966இல் எழுதி முடிக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நாவல் இலக்கிய உலகில் இவரது இடத்தை நிலைநிறுத்தியது.

பிறகு அவர் கதைகளுடன் கட்டுரைகளையும் எழுத ஆரம்பித்தார். இலக்கியம் பற்றியும் இதர பல விஷயங்கள் பற்றியும் அவரது கட்டுரைகள் அமைந்தன. அக்கரைச் சீமையில், பிரசாதம், திரைகள் ஆயிரம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகிப் பரவலாகக் கவனம் பெற்றன.

சுந்தர ராமசாமி என்னும் தனது இயற்பெயரிலேயே கதை, கட்டுரைகளை எழுதிவந்த இவர், பசுவய்யா என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதினார். அவரது முதல் கவிதைத் தொகுதி ‘நடுநிசி நாய்கள்’ 1975இல் வெளியானது. ‘யாரோ ஒருவனுக்காக’ என்னும் இரண்டாவது கவிதைத் தொகுதி 1987இல் வெளியாயிற்று. 1995இல் ‘107 கவிதைகள்’ என்னும் தொகுப்பில் அவர் அதுவரை எழுதிய எல்லாக் கவிதைகளும் வெளியாயின. அவரது மறைவுக்குப் பிறகு ‘சுந்தர ராமசாமி கவிதைகள்’ என்னும் தொகுப்பு 2006இல் வெளியானது. இதில் அவர் பிரசுரிக்காமல் வைத்திருந்த கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

1967 முதல் 1973வரை அவர் எதுவும் எழுதாமல் இருந்தார். தனிப்பட்ட வாழ்வின் நெருக்கடிகள் இதற்குக் காரணமாக அமைந்தன என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இடைவெளிக்குப் பிறகு அவர் எழுத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. கதையில் கையாளப்பட்ட விஷயங்கள், கையாளும் விதம், மொழி, வடிவம் எனப் பல விஷயங்களும் மாறின.

‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்னும் நாவல் 1981இல் வெளியானது. அந்த நாவலின் அமைப்பும் உள்ளடக்கமும் முற்றிலும் புதுமையாகவும் புதியதாகவும் இருந்தன. அதுவரையிலான எந்த நாவலையும்போல அது இல்லை. தமிழ் நாவல் உலகில் மிகவும் புதுமையான முயற்சியாக அது இன்றளவும் கருதப்படுகிறது.

இலக்கியச் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கிவந்த சுந்தர ராமசாமி, 1988இல் ‘காலச்சுவடு’ என்னும் காலாண்டிதழைத் தொடங்கினார். மூன்றாண்டுகளில் எட்டு இதழ்களும் ஒரு சிறப்பு மலரும் கொண்டுவந்தார். காத்திரமான படைப்புகள், புதிய சிந்தனைகள், புதிய அறிவுத் துறைகள் சார்ந்த அக்கறைகள் எனப் பல தளங்களில் ‘காலச்சுவடு’ அழுத்தமான சுவடுகளைப் பதித்தது. இதழை நடத்துவதில் உள்ள நடைமுறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் அதை நிறுத்திவிட்டார்.

1994இல் அவர் மகன் கண்ணனின் பொறுப்பில் ‘காலச்சுவடு’ மீண்டும் வரத் தொடங்கியது. அந்த இதழ் பின்னாளில் இரு மாத இதழாக மாறி இப்போது மாத இதழாக வந்துகொண்டிருக்கிறது. காலச்சுவடு பதிப்பகம் என்னும் பெயரில் பதிப்பகமும் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சுந்தர ராமசாமியின் மூன்றாவது நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ 1998இல் வெளியானது. கோட்டயத்தில் சிறு வயதில் இருந்த நாட்களை நினைவுகூரும் நாவலாக இது அமைந்தது. இதுவே அவரது கடைசி நாவலாகவும் அமைந்துவிட்டது.

சுந்தர ராமசாமிக்கு 1954இல் திருமணம் ஆயிற்று. மனைவி கமலா திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் பிறந்தவர். சௌந்தரா, தைலா, கண்ணன், தங்கு என நான்கு குழந்தைகள். மூத்த மகள் சௌந்தரா 1996இல் நோயின் காரணமாகக் காலமானார். தைலாவும் தங்குவும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கண்ணன் நாகர்கோயிலில் சுந்தர ராமசாமி வசித்திருந்த வீட்டில் வசிக்கிறார். சுந்தர விலாஸம் என்னும் பெயர் கொண்ட அந்த வீட்டில்தான் சு.ரா.வின் மனைவி கமலா ராமசாமியும் வசிக்கிறார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுந்தர ராமசாமி தன் மகளின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். பிறகு அடிக்கடி போகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான கிரீன் கார்டை வாங்கிக்கொண்டார்.

2005, அக்டோபர் 15 அன்று நுரையீரல் தொற்று காரணமாக அவர் அமெரிக்காவில் மரணம் அடைந்தார்.

சு.ரா. வாழ்நாள் முழுவதிலும் இலக்கியத் துறையிலும் பிற துறைகளிலும் உள்ள பலருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். வயது, பாலினம், சாதி, மதம், மொழி ஆகிய பேதங்கள் இன்றிப் பல தரப்பட்டவர்களும் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். நேரடி உரையாடல்கள், கடிதங்கள் மூலம் அவர்களுடனான உறவை சு.ரா. பேணிவந்தார்.

- அரவிந்தன்
நன்றி: சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘இந்திய இலக்கியச்
சிற்பிகள்: சுந்தர ராமசாமி’ நூல்.