சுந்தர ராமசாமி நேர்காணல்

வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் முக்கியமானவை

கேள்வி: நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் இருந்திருக்கின்றன. சூழல் கழுத்தை நெரித்தபோது ஒருசில வருடங்கள் எழுதாமலும் இருந்திருக்கிறேன். எழுத்தை விட்டு விடுவோமா என்றும் யோசித்திருக்கிறேன். பிழைப்புக்கான வேலை நிர்ப்பந்தங்கள் எழுத்துக்கான நேரத்தை ஒழித்துக் கட்டிவிட்ட காலமும் உண்டு. எழுத்தைக் குறைந்த பட்ச வாசகர்களிடம்கூடக் கொண்டு போக முடியாத திணறல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. என் எழுத்துகள் பலவும் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்படும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.

இப்போது நிலைமையில் சில மாற்றங்கள். முழு நேரமும் எழுத்து அல்லது வாசிப்புத்தான். வேறு பொறுப்புகள் இல்லை. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் முன்னைவிடவும் எவ்வளவோ மேல். வயது ஆக ஆக ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகிறது. ஆகச் சிறிய வயதில்தான் ஆக மோசமான நோயாளியாக இருந்தேன்.

நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த தமிழ்ச் சூழலுக்கும் பின்வந்த காலங்களில், தமிழ்ச் சூழல் அதை எதிர்கொண்ட சவால்களையும் முகம் கொடுத்து முன் சென்றிருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மாற்றங்கள் சிறுகச் சிறுக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய பாய்ச்சல் என்று சொல்ல முடியாது. தமிழ் இனி 2000 இலக்கிய அரங்கில்கூட நீங்கள் கவனித்திருக்கலாம். யுவன் சந்திரசேகர் என்ற கவிஞர் கவிதை பற்றிய அவரது ‘விசேஷத் தத்துவத்தைப்’ பேசும்போதுகூட இருநூறு, முன்னூறு பேர் அதைக் கேட்கிறார்கள். என் சிறுவயதில் ம. பொ. சி., ஜீவா, அண்ணா போன்றவர்கள் இலக்கியத்தை அரசியலுடன் கலந்து பேசும்போதுதான் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆழமான, கடினமான இலக்கியக் கட்டுரைகளின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெறத்தான் ஒரே கூட்டம். எதற்கெடுத்தாலும் புரியவில்லை என்ற பேச்சு குறைந்து கடினமான விஷயங்களையும் அதிக உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தலைதூக்கி இருக்கிறது.

நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு – அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை – இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்.

‘பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற படைப்பு, படைப்பாளியின் ஆளுமை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்றைத் தந்தவர் நீங்கள். இப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தொகுத்து மிகவும் கனதியான தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். தமிழ்ச் சூழலில் இவ்விரு ஆளுமைகளின் தேர்வுக்கான காரணம் என்ன?

புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சிறப்பாகப் பதிப்பித்திருப்பவர் ஆ. இரா.வேங்கடாசலபதி. நான் அதற்கு முன்னுரை மட்டுமே எழுதியிருக்கிறேன். புதுமைப்பித்தன் சிறுவயதிலேயே என்னை ஆட்கொண்டவர். இதைப் பற்றிப் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது கதையான மகாமசானத்தைப் படித்தபோது அது தந்த யதார்த்த உணர்வு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைப் பாதித்தது. மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். யதார்த்தத்திற்கும் மொழிக்குமான உறவில் கூடிவந்த அழகியல் தந்த கிளர்ச்சி அது. ரொமான்டிசிஸத்துக்கு எதிரான ஒரு மனோபாவம் சிறுவயதிலிருந்து தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறது.

தமிழ்ச் சூழலின் வகைமாதிரிகளைப் புதுமைப்பித்தன்போல் பதிவு செய்தவர் எவரும் இல்லை. இந்த வகைமாதிரிகளின் வீச்சும் விரிவும் எனக்கு மிக முக்கியமானவை. மேலேயிருந்து கீழே இருப்பவர்கள் வரையிலும் மேன்மைகளிலிருந்து தாழ்வுகள் வரையிலும் இலக்கியப் படைப்புக்கு உகந்த விஷயம் என்பதை அவர்தான் நிரூபித்தார். பகுதிகள் என்றில்லாமல் மொத்த வாழ்க்கையையும் முக்கியத்துவப்படுத்தினார். அவர் படைப்புகளில், ‘வாழ்க்கையை நேரடியாகப் பார்’ என்ற செய்தி இருக்கிறது. இந்தச் செய்தியும் எனக்கு முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் தாழ்வு கனவும் கற்பனையும் சார்ந்த பார்வை. நீண்ட கவிதை மரபின் பின்விளைவு இது. சமயம், புராணம் ஆகியவையும் இவற்றில் கலந்து கிடக்கின்றன. தமிழர்களின் ரொமான்டிக் மனோபாவத்தைத்தான் சகல வணிகச் சக்திகளும் – இதழ்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், தொலைக்காட்சி – சுரண்டிக்கொண்டிருக்கின்றன. மொழி உருவாக்கும் ரொமான்டிசிஸம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. புதுமைப்பித்தனின் பார்வை இன்றையத் தேவை என்று நான் நம்புகிறேன்.

எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை. அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெற முடியும். இவ்வகையான சிந்தனைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மன நிலையில் வாழ்ந்தவர் ந. பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்து போவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல. கனமான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தவர் பிச்சமூர்த்தி. ஆனால் அவர் தன் வாசிப்பை விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை. தான் எழுதியுள்ள படைப்புகளை முன்னிலைப்படுத்த தானே உழைப்பது எழுத்தாளனுக்கு அவமானம் என்று அவர் நம்பினார். நாளிதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிபவர்களுக்குக்கூட அவர் ஒரு கவிஞர் என்பது தெரியாது.

இன்றைய சூழலைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியைப் போன்ற ஒரு கலைஞர் வெகு சமீபத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார் என்பதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. அவருடன் உறவு கொண்ருந்தவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். பண்டாரங்கள், பைராகிகள், கைரேகை பார்ப்பவர்கள், ஜோசியர்கள், அரைகுறை வைத்தியர்கள், பிச்சையெடுப்பதற்காகத் துறவறம் பூண்டவர்கள், கோயில், குளம், மண்டபங்களில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள், சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான பாலத்தை நிர்மாணித்தவர் அவர்தான். அலட்டிக்கொள்ளாமல் அதை லெகுவாகச் செய்தார். இன்று எனக்கு அவர் கவிதைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சிறுகதை ஆசிரியர்களில் இன்றும் அவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

உங்கள் படைப்பு வாழ்வில் நீங்கள் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, மொழிபெயர்ப்பு போன்றவைகளில் காலூன்றி நின்றிருக்கிறீர்கள். இவற்றில் உங்கள் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்த ஏற்ற உலகமாக எதை அதிகமாகக் கருதுகிறீர்கள்?

முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது வேறு இலக்கிய உருவம் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்பா என்னை உதவாக்கரை என்று நினைத்தார். அதை நியாயமான மதிப்பீடு என்றுதான் சொல்வேன். இலக்கியத்தில் ஒன்றைச் சாதித்து, வெளி உலகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அப்பாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இடதுசாரி இயக்கத் தொடர்பும் அவர்களுடைய தத்துவங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் படைப்புக்கு ஒரு சமூக நியாயத்தை உருவாக்கித் தந்திருந்தன.

அதன் பின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எழுதினேன். க.நா.சு.வின் தூண்டுதலால்தான் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். இலக்கிய உருவங்கள் சார்ந்த நம்பிக்கைகள் எனக்கு முக்கியமானவை. ஒரு உருவத்தை மற்றொரு உருவத்துடன் பொறுப்பின்றிக் குழப்பியடிப்பதில் விருப்பமில்லை. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அழுத்தம் இருக்கிறது. ஒரு முன்னுரிமை இருக்கிறது. ஆனால் எந்த உருவத்தில் அதிக நம்பிக்கை என்று கேட்டால் என் குறிக்கோள் சார்ந்து எல்லா உருவங்களிலும் என்றுதான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நோக்கம் அல்லது விஷயம்தான் உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இருப்பினும் வாழ்வின் புதிர்களை ஆராய நாவல் தரும் வசதியைப் பிற உருவங்கள் தராததால் நாவல்மீது தனியான மரியாதை வைத்திருக்கிறேன்.

தமிழில் நீண்டகாலமாக ஒரு யதார்த்தவாதப் பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த யதார்த்தவாதப் பண்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் ஒரு எழுத்தாளன் தான் நினைத்ததை முற்று முழுதாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை என்கிறார்கள். இந்த யதார்த்தவாதம் என்பது ஒரு தேர்வுக்கு உட்பட்ட அல்லது சமூக மனோபாவத்தை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட இலக்கிய முயற்சிகள்தானா?

படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். யதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மானிக்கக்கூடியது அல்ல. ஒரு யதார்த்தத் தளத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். யதார்த்தத் தளம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்திவருகிறது. அதன் மீதான என் விருப்பம் தமிழ் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் சார்ந்தது.

தமிழில் யதார்த்தவாதிகள் எவரும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும் இல்லை. ‘ஆறில் ஒரு பங்கு’, ‘சின்னச் சங்கரன்’ போன்ற கதைகளை எழுதிய பாரதிதான் ‘ஞானரத’த்தையும் எழுதியிருக்கிறான். ‘பொன்னகரம்’, ‘கவந்தனும் காமனும்’ போன்ற கதைகளை எழுதிய புதுமைப்பித்தன்தான் ‘ஞானக்குகை’, ‘பிரம்மராக்ஷஸ்’ போன்றவற்றையும் படைத்திருக்கிறான். கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி போன்றவர்களும் யதார்த்தவாதத்தைத் தாண்டிப் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மௌனி யதார்த்தவாதத்துக்குள் நுழையவே இல்லை. யதார்த்தம் தாண்டிய படைப்பு நம்பிக்கைகளைப் புதிய கண்டுபிடிப்புகள்போல் இப்போது சிலர் பேசுவது உண்மை அல்ல.

என் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புகூட யதார்த்தவாதக் கதைகளைச் சேர்ந்தது அல்ல. இப்போதைய என் கதைத் தொகுப்பின் தலைப்பான ‘காகங்கள்’ கதையையும் ஒரு யதார்த்தவாதக் கதை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் மேல்நாட்டுத் தத்துவங்களைப் படித்துவிட்டுப் போலி செய்தவையும் அல்ல. இந்திய மரபில் இல்லாத மாந்த்ரீக யதார்த்தம் வேறு எந்தத் தேசத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

யதார்த்தவாதத்தின் பாதிப்பைப் பெற்ற ஒரு மூளையால்தான் அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். யதார்த்தவாதம் வழியாகத்தான் நீங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லும் தத்துவங்களுக்கும் போக வேண்டும். நம் வாழ்வின் ஸ்திதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத, மிகச் சிக்கலான தத்துவங்களைப் பேசுவதன் மூலம் பேசுபவர்களுக்கு உபயோகப்படும் அதிகார மையங்களை உருவாக்கலாம். தமிழ் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் நிகழ்த்த முடியாது. தமிழ்ச் சூழலில் அரசியல் சார்ந்த இன்டெலச்சுவல் வர்க்கத்தின் அதிகபட்ச எல்லை பாரதிதாசன். புதுமைப்பித்தன் இன்றும் அவர்களுக்கு ஒரு புதிர். இவையெல்லாம் தமிழ் யதார்த்தங்கள். புதிய சிந்தனைகளின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்டவையெல்லாம் காலாவதியாகிவிட்டன என்ற பாவனை உண்மையில்லை. ஆசிரியர் ‘இறந்துவிட்டார்’ என்று கூறுகிறவர்கள் ஆசிரியருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் விமர்சனங்களைத்தான் இப்போதும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி அதீத முக்கியத்துவம் பெற்று வருகிறான் என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பிரதியும் ஒன்று என்று சொன்னவர்கள் பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் இன்றையப் படைப்பாளிகளில் பொருட்படுத்தத் தகுந்தவர்களைப் பற்றியுமே பேசுகிறார்கள்.

தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் உங்கள் ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ ஒரு முக்கியமான திருப்பம். இது இயல்பாக நடந்ததா அல்லது முற்கற்பிதத்துடனான எழுத்துச் செயல்பாடா?

பெருமளவு இயல்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை எழுதி முடித்த நிலையில் தமிழ் நாவல் மரபில் அது வித்தியாசமானது என்ற உணர்வு மட்டும்தான் எனக்கு இருந்தது. நண்பர்களும் முன் பின் தெரியாத வாசகர்களும் சாதகமான அபிப்பிராயங்களைக் கூறத் தொடங்கிய போது நான் எதிர்பாராத காரியம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். விமர்சகர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். வாசகர்களின் வரவேற்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அபிப்பிராயங்களை விமர்சனம் சிறிய அளவில்கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது என் அனுபவம்.

மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா?

பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம்.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப் பற்றிச் சொல்கிறது.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான்.

படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம்.

அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான்.

மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா?

பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம்.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப் பற்றிச் சொல்கிறது.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான்.

படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம்.

அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான்.

உங்கள் எழுத்தை வாசிக்கும்போது முரண்பாடுகள் மீதான உணர்வுகளையே காண முடிகிறது. தனிமனிதர்கள்மீதான முரண்பாடு, தத்துவங்கள் மீதான முரண்பாடு. உங்களுக்குத் தனி மனிதன், சமூகம், சமூக நிறுவனங்கள், தத்துவங்கள் எதுவுமே திருப்தியைத் தரவில்லையா?

சமூக வாழ்க்கையில் எனக்குத் திருப்தி இல்லை. தத்துவங்கள் சார்ந்தும் சமூக ஒழுக்கங்கள் சார்ந்தும் மனிதன் போடுகிற வேஷம் மிகப் பெரிய சீரழிவை உருவாக்குகிறது. உயர்வானவையும் மனித ஸ்பரிசம் படும்போது கீழிறக்கம் கொள்கின்றன. பதவியைப் பிடிக்கத் தத்துவங்களைப் பயன்படுத்தும்போது உபயோக மதிப்பு உள்ளார்ந்த சாரத்தை அரித்து விடுகிறது. பார்வையற்றோர் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவை ஆசிரியர்கள் திட்டமிட்டுத் திருடுகிறார்கள். மனிதன் மேலானவன் என்பதை ஒரு ஸ்லோகமாக்க நான் விரும்பவில்லை. மனிதநேயம் படைப்பாளி நம்பித் தீர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அல்ல.

படைப்பாளியிடம் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன. மனித ஸ்திதியை அது எவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையிலும் புரிதல் சார்ந்து மேலெடுத்துச் சென்றுவிட முடியும். பிரக்ஞைபூர்வமான வேஷதாரிகளைத் திருத்துவது மிகக் கடினம். வேஷதாரி களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம். கபடமற்ற ஜனங்களின் சரிவு அல்ல பிரச்சினை. திட்டமிட்டு ஏமாற்றும் சக்திகளின் கூட்டு ஒப்பந்தம்தான் பெரிய பிரச்சினை.

நீங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்கள் மொழி ஆளுகையில் அறிவின் மொழியினூடாக உங்கள் சிந்தனை வெளிப்படுவது எப்படி சாத்தியமாகிறது?

தமிழ்ச் சூழலில் உணர்ச்சியின் பீறிடல்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழும் பணமும் பதவியும் தேடித் தர ஏற்ற விற்பனைப் பண்டமாகவே உணர்ச்சியின் பீறிடல் தமிழ்ச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் மேடைக் கத்தல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கண்ணீரின் பிரவாகம், வணிக எழுத்தாளர்களின் நெகிழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் எதிராக நான் என் உணர்ச்சியைச் செம்மை செய்துகொள்ள விரும்பினேன். வாசகர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் சுயமான விமர்சனம் உருவாகும். இந்த விழிப்புநிலையிலிருந்துதான் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் செயல்பாடுகள் தோன்றுகின்றன. அறிவு சார்ந்த மொழி உருவாகும்போது இன்னும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும். இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.

மதங்களில், தத்துவங்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பது உங்கள் குரலாக உள்ளது. மனிதர்கள் பற்றிப் பிடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் தேவையில்லையா? உங்கள் அனுபவம் சார்ந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மனிதர்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவன் விரும்பும் சமயத்தில் அல்லது தத்துவத்தில் அல்லது சிந்தனைகளில் நம்பிக்கை கொள்ளட்டும். எவற்றினூடாகவும் மனித வாழ்க்கை சார்ந்த விமர்சனமும் கனவும் ஒருவனுக்கு இருக்குமென்றால் அவனுடன் விவாதம் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் எந்தத் துறையைச் சேர்ந்த போலிகளுடனும் நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. அது என்னையே அழித்துக் கொள்வதாகும். முற்போக்கு, பிற்போக்கு சார்ந்த பழைய இலக்கணங்கள் எல்லாம் சுக்கு நூறாகத் தெறித்துவிட்டன. சங்கராச்சாரி ஜாதி புத்தி கொண்ட பிற்போக்குவாதி என்பது என் எண்ணம். ஜெயலலிதா பக்தி கொண்ட வீரமணி எந்த விதத்தில் முற்போக்குவாதி? பொதுவுடைமைவாதிகள் – இவர்களில் பலர் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் – கால் நூற்றாண்டேனும் சகல மனித ஒடுக்கல்களையும் அறிந்த நிலையில் சோவியத் சர்வாதிகாரத்துக்குத் துணை போனவர்கள். தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்காமலே அவ்வாழ்க்கை புதைந்துபோய்விட்ட திருப்தியில் இப்போதும் ஜனநாயகம் பற்றியும் சமூக முன்னேற்றம் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதனாகவும் இருக்கிறான் என்பது எனக்கு முக்கியம். எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்கிறவனாகவும் இருக்கிறான்? சமூகப் பிரக்ஞையுடன் செயல்படுகிறானா அல்லது ஏமாற்றுவதற்காகச் செயல்படுகிறானா? படைப்பாளியின் எழுத்து எந்தவிதமான வாழ்க்கையைச் சென்றடைய அவன் கனவு காண்கிறான் என்பதைக் காட்டுகிறது. மனித சாரத்தைப் பேண முற்படுகிறவர்களுடன் நான் மானசீக உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஊரையும் உலகத்தையும் தழுவிய உறவு இது.

நீங்கள் முதல் எழுதத் தொடங்கிய நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. 38, 40களில் அக்கதை நடக்கிறது. ஆனால் இடையில் உங்களுடைய இரு நாவல்கள் வெளிவந்தன. மூன்றாவது நாவலாகத்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் ஏன் அந்த நாவல் அதிகக் கவனம் பெறாது போய்விட்டது. இதுவே உங்கள் முதல் வெளிவந்த நாவலாக இருந்தால் நீங்கள் தமிழில் அதிகக் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பீர்களா?

நான் 1978, 79 காலங்களில்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை எழுதத் தொடங்கி னேன். (இப்போது வெளிவந்திருப்பது அதிலிருந்து வெகுவாக விலகிவந்த ஒரு எழுத்துருவம்.) ஆகவே இது என் முதல் நாவல் அல்ல. முதல் நாவலாக வந்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கும், மூன்றாவது நாவலாக வந்ததால்தான் கவனம் பெறாது போய்விட்டது என்பது உண்மை என்றால் அது கவனம் பெறாமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அதன் உயிர்ப்பு சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறதே தவிர அதன் வரிசை சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

என் மூன்று நாவல்களில் மிக முக்கியமான நாவலாக நான் கருதுவது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’தான். அதுதான் வாழ்க்கையை அதன் முழுமையான தளத்திற்கு விரித்துப் பார்க்க முயல்கிறது. அது காட்சியளிக்கும் வகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் அது எனக்கு ஒரு இழப்புத்தான். அந்த நாவலில் வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை என்று நம்புகிறேன். அவற்றைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்க சிரத்தையான, ஆழமான வாசிப்புத் தேவை. அதை ஊடுருவி வாசித்த பின்பும் ஏற்கவில்லையென்றால் அதை நான் மதிக்கிறேன். இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை. மோஸ்தர் சார்ந்த புறக்கோலங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அது உதாசீனப்படுத்தப்பட்டால் வாசகனுக்கு அது ஒரு இழப்பு என்றே சொல்வேன்.

உங்கள் எழுத்துக்களின் பின்னால் ஒரு தொனி இருக்கிறது. இப்போது இருப்பவன் புரிந்துகொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் என்னைப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் வருவான். அவனுக்காகவே நான் எழுதுகிறேன் என்கிறீர்கள். அப்படியான வாசகன் வந்துவிட்டானா?

திட்டவட்டமாக அப்படி சொல்ல முடியாது. வாழும் காலத்தில் அங்கீகாரம் பெற முடியாத எழுத்தாளன் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ வாக்கியங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இன்று இல்லையென்றாலும் நாளை ஒளி வரும்’ என்பது. சமூக ஸ்திதியும் எழுத்தாளனின் ஆதங்கத்தையும்தான் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. பலருக்கு ஒளி வராமல் போயிருக்கிறது. புல் முளைத்து மண்டியிருக்கிறது. எதிர்மறையான சூழலில் நம்பிக்கை கொண்டு செயல்பட பல மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. போன நூற்றாண்டு முழுக்கப் பல படைப்பாளிகள் வெவ்வேறு வகைகளில் இந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். சிலருக்குக் காலம் துணை நின்றும் இருக்கிறது.

உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவுவரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக்கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றைய சரிவு கொடுமையானது.

நீங்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறீர்கள். பின்னால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இவ்விடைவெளி மார்க்ஸியத்தின் போதாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது மார்க்ஸிய நிறுவனங்களின் பலவீனங்களின் அடிப்படையில் ஏற்பட்டதா?

மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான். சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காகத் தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் ‘ஜே. ஜே : சில குறிப்புகளில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப் பெரிய நாகரீகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் என் பிரச்சினை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது.

சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை, ஆளுமையை உருவாக்குவதில் மலையாளச் சூழலுக்கு எந்த விதமான பங்களிப்பு உள்ளது?

பெரிய அளவில் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இடதுசாரிச் சிந்தனைகளில் கவனம்கொள்ள என்னைத் தூண்டியவை மலையாள எழுத்துகள்தான். மார்க்ஸிய பார்வை கொண்ட சிறுகதைகளை நான் ஆரம்பகாலத்தில் எழுதத் தூண்டுதல் பெற்றதும் மலையாளப் படைப்பிலக்கியத்தின் பாதிப்பாக இருக்கலாம்.

ஈழத்துத் தமிழ்ச் சூழலில் மேற்கு நாடுகளுக்கான தமிழ் புலம் பெயர்வு அதிகமாக நடந்திருக்கிறது. அங்கு போய் தமிழில் எழுதுகிறார்கள். தமிழில் புலம் பெயர் இலக்கியம் என்ற ஒரு அம்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னை மிகவும் பாதித்த விஷயம் இது. இருபத்தைந்து வருடங்களாகவே எனக்கு ஈழத்து எழுத்தாளர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் இவர்களைப் பற்றிய என் ஞாபகங்கள் வழியாகத்தான் பார்க்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. கசப்பான பல உண்மைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை அங்கு நீடிக்கும் என்றால் அவர்கள் குடும்பங்களிலிருந்து தமிழ் வெளியே போய்ச் சூழலில் இருக்கும் மொழி உள்ளே வந்து விடும். குழந்தைகளால் தமிழைக் காப்பாற்ற முடியாது. இது வரலாற்றின் கட்டாயம். இந்தத் தலைமுறையில் ஏதேனும் தமிழ் எழுத்துகள் வந்தால்தான் உண்டு. படைப்பு உருவாவதற்கு மொழியறிவு மட்டும் போதாது. மொழி சார்ந்த வாழ்க்கையும் வேண்டும்.

பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்?

பின் நவீனத்துவக் கோட்பாடும் தமிழ்ச் சூழலும் இன்றுவரையிலும் பொருந்தாமல்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்புகள் வழியாக அதன் பாதிப்பு குறிப்பிடும்படி நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. சகல முனைகளிலும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிக்க வேண்டும் என்றாலும்கூட நடைமுறையில் பாலியல் விவரணைகளில் மட்டும்தான் விரிக்கப்படுகிறது. இது அதிர்ச்சி மதிப்புக்குத் தரும் முக்கியத்துவம் தவிர வேறு அல்ல. பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் இணைத்துக் காட்டும் படைப்புச் சிந்தனை தோன்றும் என்றால் அந்தச் சிந்தனை இன்னும் அதிகக் கௌரவத்தைப் பெறும். படைப்பிலக்கியத்தையும் பாதிக்கும்.

தமிழ் சிற்றிதழ் வரவில் காலச்சுவடு மிக முக்கியமானது. அச்சிற்றிதழ் வருகைக்கான குறிக்கோள்கள் எட்டப்பட்டுவிட்டனவா? இப்போது எங்கே நிற்கிறது?

இப்போது காலச்சுவடை உருவாக்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கண்ணனும் மனுஷ்யபுத்திரனும் அவர்களது நண்பர்களின் உதவியுடன் செய்துவரும் காரியம். நான் நடத்திவந்த காலச்சுவடின் எல்லைகள் இப்போது பெரிய அளவுக்கு விரிந்திருக்கின்றன. குறிக்கோளைச் சென்றடைந்துவிட்டோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் வாசகர்களிடையே மிகப் பெரிய விழிப்புநிலையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்க வேண்டும். வாழ்க்கையை மதிப்பிடவும் மறுபரிசீலனை செய்யவும் புதியவற்றை ஏற்கவும் பழையவற்றைக் கழிக்கவும் அவர்களால் சாத்தியப்பட வேண்டும்.

தமிழ் இனி 2000 சந்திப்பில் எதைச் சாதிக்க வேண்டுமென விரும்பினீர்கள்?

தமிழ் இனியை உருவாக்கியவர்களின் நோக்கம் எல்லோரும் கூடி கடந்து வந்த பாதையைப் பற்றியும் இனி நடக்க வேண்டிய பாதையைப் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பது என்பதுதான். அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிற்று என்று நினைக்கிறேன். இதன் மூலம் பல நல்ல விளைவுகள் கூடி வர வேண்டும்.

அண்மைக் காலமாக ஈழத்துடன் உங்களுக்கான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக உங்கள் மனநிலை என்ன?

ஈழத்து இலக்கியம் பற்றிச் சொல்வதென்றால் கவிதைப் படைப்புகளிலும் விமர்சனச் சிந்தனைகளிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை. அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்துகொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது. தங்களைப் பற்றித் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும் பிறர் உருவாக்கும் மிகையான அபிப்பிராயங்களையும் மறுபரிசீலனை செய்ய அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் படைப்புகளைத் தரும் உத்தேசங்களில் உங்களை ஈடுபடுத்தியிருக்கிறீர்களா?

நிச்சயமாக. ஒருசிலவேனும் கூடி வரும் என்று நம்புகிறேன்.



நன்றி: மூன்றாவதுமனிதன்இதழ் 10 ஜனவரி–மார்ச் 2001

Camera
Camera

நானும்என்எழுத்தும்

நான் எழுத்துத் துறையில் புகுந்த வருஷம் பிறந்த அடுத்த வீட்டுப் பெண் குழந்தை ஸாரி கட்டிக்கொண்டு கல்லூரிக்குப் போகிறது. அவளுக்குப் பதினைந்து வயது தாண்டியிருக்க வேண்டும்.

இந்தப் பதினைந்து வருடங்களில் என்ன சாதித்தேன் என இப்போதெல்லாம் அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கேள்வி பிறந்த மாத்திரத்தில் சோர்வு தட்டுகிறது. எழுதாமல் வீணாகிப்போன காலங்களின் சுமை நெஞ்சை அழுத்துகிறது. ‘நாளையிலிருந்து அதி தீவிர எழுத்து வேலை ஆரம்பமாகிறது’ எனும் வாக்கியத்தின் சாராம்சத்தை அவ்வப்போது இருந்த மனநிலைகளுக்கு ஏற்றாற்போல் பலவாறு விரித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் எழுதியுள்ள டயரிக் குறிப்புகள் எண்ணிக் கணக்குப் பார்க்க இடமளிப்பவை அல்ல.

எதை எதையோ தேடுகிறபோதெல்லாம் வாய்விட்டுச் சொல்லப்படாமல், மனசுக்குள் புதையுண்டு கிடந்தால் அவற்றிற்கு வலு அதிகம் என எண்ணி, புது வாழ்வின் துவக்கத்திற்கு அடையாளமாய் அவ்வப்போது வாங்கிய புத்தகங்களும் கண்களுக்குப் புலனாகின்றன. வாங்கப்பட்ட காலங்களில் அவை வெறும் புத்தகங்களாக மட்டும் பிறர் கண்களுக்குக் காட்சி தரும் அஞ்ஞானத்தை எண்ணி மனசுக்குள் சிரித்திருக்கிறேன். இப்போது எனக்கும் அவை வெறும் புத்தகங்களாகி விட்டிருக்கின்றன. முதல் பக்கத்தைத் திருப்பித் தேதியைப் பார்க்கிறேன். அன்றைய தேதியில் எதுவும் புதுசாய் ஆரம்பமாகிவிடவில்லை என்பதற்கோ ஆரம்பமாகியிருந்தால் அதுவும் வெகு விரைவில் ஆறிப்போய்விட்டது என்பதற்கோ எனது இன்றைய நிலைமை தவிர வேறு சாட்சியங்கள் தேவையில்லை.

இன்னும் வேறு சில சந்தர்ப்பங்களில் - இவ்வாறு செய்யாததால்தான் காரியம் கெட்டுப் போய்விட்டது போல் - சபதங்களைக் கொட்டை கொட்டையாக எழுதுவதோடு, அடியில் கோணாமல் இரு வரைகளையும் இழுக்கிறேன். முக்கியத்துவம் மேலும் அதிகரிக்க, ஆங்காங்கு பெருக்கல் சின்னங்களில் புள்ளிகள் குத்துகிறேன். மனைவியையும் ஒரு சாட்சியாக இழுத்துப் போட்டுவிட்டால், அவளிடம் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேனும் இயங்கத் தொடங்கிவிடுவோம் என்றெண்ணி, ‘ஞாபகம் வைத்துக்கொள். இன்னிக்குத் தேதி ஆறா?. . . 07.04.65’ என்கிறேன்.
‘08.12.64 என்னாச்சு?’ என்கிறாள் அவள்.
‘அது சரி. போனது போகட்டும்’ என்கிறேன்.
‘01.02.64?’
‘அது சரி.’
‘03.08.63?’
இப்படியே அவள் பின் நகர்ந்து, கழுத்தில் நான் தாலி கட்டிய தேதியை நெருங்கிவிடுவாள் என்பது எனக்குத் தெரியும்.
புத்தக அலமாரியின் பின்பக்கம் நூலாம்படை தட்டுகிறபோது, அங்குச் சுவரில் சிவப்புப் பென்சிலால் எழுதியிருக்கும் ஒரு பழைய தேதி பார்வையில் தட்டுப்படுகிறது. அதையொட்டிப் பழைய நினைவுகள் கொஞ்சம் கிளம்புகின்றன. பச்சாதாபம் மனசில் கவிகிறது. துணிமணிகளை எடுத்துச் சுவர் அலமாரியைச் சுத்தப்படுத்துகிற போதும், பின் சுவரின் மூலையிருத்து 11.3.53 என்று ஒரு மிகப் பழைய தேதி தலையைக் காட்டுகிறது.

நாளை நாளை என நழுவவிட்டுப் பதினாறு ஆண்டுகள் ஓடி விட்டன. மொத்தத்தில் இவை பச்சாதாப நாட்களே தவிர வேறு அல்ல. கனவு கண்டு கண்டு காரியம் காணாத நாட்கள் இவை. என்றாலும் இன்றுவரையிலும் கனவுகள் கண்டே வந்திருக்கிறேன். ஒரு இலக்கியக்கர்த்தா ஆகிவிட வேண்டும் என்றே எப்போதும் எண்ணி வந்திருக்கிறேன். இதைவிடவும் மேலானது என்று மற்றொன்றை நம்ப மனசு மறுத்துக்கொண்டேதான் வந்திருக்கிறது.
இவ்வாறு ஒரு ஆசை என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை எண்ணுகிறபோது ஆனந்தமாகத்தான் இருக்கிறது.

எழுதாமல் வீணாகிப்போன நாட்கள் ஒருபுறமிருக்க, இன்று வரையிலும் நான் எழுதியிருப்பவை எவ்வாறு எழுதப்பட்டுப் பிரசுரமும் ஆகிவிட்டன என்று யோசிக்கையில் அதுவும் ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.
நவீன எழுத்தாளனின் ஒரே மேடை, சஞ்சிகை என்றாகி விட்டது. தமிழ்நாட்டிலோ எந்தப் பிரபல சஞ்சிகைக்கும் இலக்கியத் தகுதி கொண்ட ஒரு ஆத்மா ஆசிரியராக இருப்பதாகத் தெரியவில்லை. வாசகர் கூட்டத்தின் அசட்டுத் தேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, நல்ல லாபத்தில் விற்றுமுதல் செய்ய, அவர்கள் எழுத்தாளர்களிடம் சரக்குக் கொள்முதல் செய்ய அலைகிறார்கள். தங்கள் கொள்முதல் கொள்கை செலாவணியில் இருந்துவர, அசட்டு வாசகர்களைத் தயாரிப்பதில் அவர்கள் மேலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

எனக்கு இவர்களுடைய தாட்சண்யம் தேவையில்லை. கடந்த முப்பதாண்டு இலக்கியச் சரித்திரத்தில், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அர்த்தமளித்திருக்கும் எந்த சிருஷ்டிகர்த்தாவை உருவாக்குவதிலும் பிரபல பத்திரிகைகளுக்குப் பங்கில்லை என்பது ஆராய்ச்சி தேவைப்படாத ஒரு உண்மையாகும். வேறு மேடைகளில் அவன் தன் குரலை வெளிப்படுத்தித் தன்னை உருவாக்கிக்கொண்ட பின்னரே இவர்களுடைய கவனம் அவன் மீது கவியும். எந்த அடிப்படைக் குணங்கள் அவனிடம் தொழில்பட்ட காரணத்தால் அவன் சிருஷ்டித் துறைக்கான தகுதியை ஏற்படுத்திக்கொண்டானோ, அவற்றையெல்லாம் அவன் காலப்போக்கில் இழந்துவிடுவதே அவர்களுடைய தொடர்பு அவனுக்கு அளிக்கும் பரிசாகவும் இருக்கும். சிருஷ்டியை அனுபவிக்க அக்கறை கொண்ட வாசகன் தன்னை அதற்கு ஏற்றாற்போல் தயார் செய்து கொள்ள வேண்டுமே தவிர, வாசகனின் தரத்தோடு சமரசம் செய்து கொள்வது இலக்கியக்கர்த்தாவின் நோக்கத்திற்கே நேர் எதிரானதாகும். பத்திரிகைகளோ வாசகர்களுடைய மேல்வாரியான தாகங்களைத் தீர்ப்பதற்காகத் தயார் செய்யப்படும் வியாபாரச் சரக்குகளே.

எதற்காக எழுதுகிறேன் எனும் கேள்வியை எழுப்பிக் கொள்கிறேன். லகுவாக அதற்குப் பதில் கிடைக்குமென்று தோன்றவில்லை. அப்போது எதற்காக எழுத ஆரம்பித்தேன் எனும் கேள்வி பிறக்கிறது.

படிக்க வேண்டிய காலத்தில் படிக்காத மாணவனும் சம்பாதிக்க வேண்டிய காலத்தில் சம்பாதிக்காத இளைஞனும் மலடியான மருமகளும் - அவர்களுக்கு வேறு தகுதிகள் ஆயிரம் இருக்கட்டும் - குடும்பங்களில் அவர்களுக்குரிய அந்தஸ்தைப் பெற முடியாது. நான் முதல் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பு முடிப்பதுவரையிலும் கடைசி பெஞ்சு மாணவனாகவே இருந்து வந்திருக்கிறேன். என் பள்ளி வாழ்க்கையில் பக்தி சிரத்தையோடு நாலு வரிகள் உருப்போட்ட நினைவு எனக்கில்லை. இதன் விளைவாகக் குடும்பம் என்னை அசடு என்று முத்திரை குத்திற்று. அப்போது அந்தப் பட்டம் கனகச்சிதமாய்ப் பொருந்தும்படியாகவே நான் இருந்தேன் - குறைந்த பட்சம் வெளி உலகிற்கேனும். எனது துரதிர்ஷ்டம், என்னுடன் படித்து வந்த என் சகோதரி படிப்பில் கன சூட்டிகையாக வந்து வாய்த்தாள். அவளோடு ஒப்பிட்டுப் பேசப்படும் சங்கடங்களுக்கு ஆளானேன்.

நான் முட்டாள் அல்ல என்பதை நிரூபித்து என் தந்தையை ஒப்புக்கொள்ளச் செய்துவிட வேண்டும் என்பதற்காகவே எழுத ஆரம்பித்தேன். அவர் மதிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஒரு புத்திசாலி உலகம் என்னைக் கொண்டாடும் நாட்களை உருவாக்கி அவரை அசடு வழியச் செய்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதோடு என் எழுத்தில் மயங்கி அழகிய ரசிகைகள் யாரேனும் வலிய வந்து என்னைக் காதலிக்கக்கூடும் என்ற நப்பாசையும் எனக்கு இருந்தது.

எனக்கே முற்றிலும் தெளிவாகாத ஒரு இயற்கைத் தாகம்தான் இன்றும் என்னை எழுதத் தூண்டுகிறது எனத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் இதைத் தவிர வேலை எதுவும் மேற்கொள்ள என்னால் ஆகாது என்றும் சொல்லலாம். ஒரு வியாபார ஸ்தாபனத்தின் தமிழ்க் கடிதப் போக்குவரத்தைக் கவனித்தல், ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருத்தல், கவுரவமான குடும்பம் ஒன்றில் காரோட்டியாக வேலை பார்த்தல், ஐந்து வகுப்பு வரையிலும் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எடுத்தல் ஆகிய வேலைகளையும் என்னால் திருப்திகரமாகச் செய்ய முடியுமென்றாலும், எழுதுகிறபோது ஏற்படுகிற ஒரு ‘அட் ஹோம்’ உணர்ச்சி எனக்கு வேறு வேலைகளில் ஏற்படுவதில்லை. வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போது எனது மூர்த்தீகரம் சிந்திச் சிதறுவதாகத் தோன்றுவதாலும், எழுத்தில் குவிந்து தன்னம்பிக்கையையும் ஆத்ம திருப்தியையும் ஏற்படுத்துவதாலும் இயற்கை இந்த ஒரு வேலைக்கே என்னைத் தயார் செய்திருக்கிறதோ என எண்ணிக் கொள்கிறேன்.

எழுதுவதன் மூலம் நான் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் கடமைப்பட்டவனாக உணரவில்லை. என்னுடைய வாசகர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது. வாசகர்களை சுவாரஸ்யப்படுத்துவதோ அவர்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டுவதோ வாழ்க்கைப் பாதையில் அலுப்பு நடை நடந்து அவர்கள் ‘அப்பாடா!’ என்று ஆயாசத்துடன் சோர்ந்து உட்காரும்போது குதிரைச் சதை பிசைந்துவிடுவதோ என்னுடைய வேலை அல்ல. இதுதான் தர்மம் என்று காட்டவோ, இதுதான் உண்மை என உணர்த்திவிடவோ என்னால் ஆகாது. எது தர்மம், எது உண்மை என்பது எனக்கே குழப்பமாக இருக்கிறது. தமிழ்ப் பண்பாடுகளைக் கொஞ்சம் அழுத்துவோம் என்றால் அதன் கீழ்வரும் அயிட்டங்கள் என்ன என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. மனிதாபிமானத்தையாவது பரப்பலாமே என்றால், நானே ஒரு மனிதாபிமானிதானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

நான் எனக்காக மட்டும் எழுதக்கூடியவனாக இருக்கவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பின்புதான் எனக்கே அது இருந்திருப்பது தெரியவருகிறது. இதேபோல் வேறு என்ன என்ன இருக்கின்றன என்பதை அறிந்துகொண்டுவிடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ! இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக ஆளாக, என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்தியமாக இருக்குமென்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள்தாம் என் வாசகர்கள். என்னுடைய பூட்டுக்கு நான் அடித்த சாவிகள் அவர்களுடைய பூட்டுகளுக்கும் சேரும் என்று கேள்விப்படுகிறபோது அவர்கள் என் வீடு தேடி வருவார்கள். நான் படித்துக்கொண்டும் கனவுகள் கண்டுகொண்டும் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை தட்டினால்தான் கதவையே திறப்பேன்.

ஒரு பிரஜை என்ற அளவில் நான் சமூக வாழ்க்கைக்குத் தகுதியானவன்தான். என் வீட்டுக் கொல்லையைப் பெருக்கி அடுத்த வீட்டுக் கொல்லையில் கொட்ட நான் ஒருநாளும் இடமளிக்க மாட்டேன். எனது கைத்தடியைச் சுழற்றும் சுதந்திரம் எதிராளியின் மூக்கு நுனியோடு முடிவடைந்துவிடும் என்பது எனக்கு எப்போதும் நினைவிருக்கும். அரசாங்க வரிகளைப் பாக்கி போடாமல் செலுத்துவதில் அக்கறை கொள்வேன். சொந்தக்காரர்களின் பிணங்களைக் காடுவரையிலும் சென்று வழியனுப்பி வரத் தயங்க மாட்டேன். அகாலத்தில் வந்து சேரும் விருந்தாளியின் பசியாற என்னால் ஆகக்கூடியதைச் செய்வேன். பொது நன்மைக்காகக் குலுக்கப்படும் உண்டியல்களில் என் காணிக்கையையும் செலுத்திவிட வேண்டுமென்றே நினைப்பேன். நட்புக்குத் துரோகம் இழைக்காமலிருக்க கூடுமான வரையிலும் முயல்வேன். பொய்கள் சொல்வதை - முற்றிலும் விட்டுவிடுவது சிரம சாத்தியமாகவே இருக்கிறது என்றாலும் - குறைத்துக்கொள்ள அந்தரங்க சுத்தமாகப் பாடுபடுகிறேன்.

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்துவிடக் கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். வெகு ஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ புதிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி, அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும் காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன். மனிதனின் சராசரித் தன்மையின் அழுத்தத்தினால் வெளியே பிதுங்கிவிடும் விதிவிலக்கான உண்மைகள் அலட்சியப்படுத்தப்பட்டு முக்கால் உண்மைகள் முழு உண்மைகளின் தோற்றம் கொள்கிறபோது, மைனாரிட்டியின் கால் உண்மையில் கலந்துகொண்டு கத்துவது தவிர்க்க முடியாத காரியமாகவே எனக்குப் படுகிறது. இந்திய -

சீன எல்லையில் சண்டை மூண்டபோது ஒரு பிரஜை என்ற அளவில் நம் போர் வீரர்களின் தாக்குதல்கள் பற்றியும் இந்திய மக்களின் ஒற்றுமை உணர்ச்சியைப் புலப்படுத்துவதுமான செய்திகளை நான் அக்கறையுடன் கவனித்தேன் என்றாலும், அதை மேலும் ஊக்குவிக்கும் காரியத்தைக் கலைப் பூர்வமாகச் செய்யவேண்டிய பொறுப்பு எனக்குண்டு என நான் கருதவில்லை. அது என்னுடைய வேலை அல்ல என்றே கருதினேன். இந்தியாவில் பிறந்து நம்மிடையே வாழ்ந்துவரும் சீனர்கள் அந்நாட்களில் என்ன என்ன சிரமங்களுக்கு ஆளாவார்கள் என்பதை அவர்கள் மீது பரிவுணர்ச்சி கொண்டு விவரிப்பதே ஒரு இலக்கியகர்த்தா என்ற அளவில் அப்போது எனக்கு எழுதத் தகுந்த ஒரே விஷயமாகப்பட்டது. அந்தப் பார்வையை ஏற்றுக்கொண்டு நம்மவர்கள் ‘இந்தியச்’ சீனர்களுடன் சகோதரத்துவம் கொண்டாட ஒரு தேசிய அடிப்படையில் முற்படுவார்கள் என்றால், முழுக்க முழுக்க அவர்களை நம்புவது விவேகமல்ல என்று நான் சொல்ல ஆரம்பிப்பேன். இந்த விசுவாசமற்ற தன்மையை ஒரு எழுத்தாளன் காப்பாற்றி வர அவனுக்கு அத்தியாவசியமான சுதந்திரத்தையே எழுத்துச் சுதந்திரம் என்று நான் மதிப்பேன். சுலபமாக விவரிக்கப்பட்ட மேற்சொன்ன காரியங்களை நடைமுறையில் பின்பற்ற அவசியமான அளவு சத்திய உணர்வோ தைரியமோ இன்று எனக்கில்லை. எனினும் அவை வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அது சாத்தியம் என்றே கருதுகிறேன்.

ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளனான நான் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., பிச்சமூர்த்தி, செல்லப்பா, க.நா.சு., ராமாமிருதம், ஜானகிராமன், அழகிரிசாமி இவர்களுக்குப் பின்னால் வந்தவன் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறேன். சிருஷ்டிகள் மூலம் அவர்கள் பவித்திரப்படுத்தியும் கூராக்கியும் தந்த வார்த்தைகள் என் வேலைக்குப் பயன்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். இவர்களை முற்றாகப் புறக்கணிக்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதோடு இவர்களைப் புறக்கணிக்கும் எந்த ஸ்தாபனம், குழு, தனி மனிதனின் பாராட்டையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு எனக்கு அளிக்கப்படுமென்றால் அதை நான் அவர்கள் முகத்தில் விட்டெறிந்துவிடுவது என்பது என்னைப் பொறுத்தவரையிலும் தவிர்க்க முடியாத காரியமாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்னுடைய இலக்கிய முன்னோர்களைக் கவுரவிக்கத் தவறியதன் மூலம் எனக்குப் பரிசளிக்கும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதாகும்.

எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்கிருந்த மிதமிஞ்சிய உற்சாகம் இப்போது எனக்கில்லை. ஸ்வீடிஷ் அகாடமியிலிருந்து அழைப்பு வந்து விட்டால் விலை உயர்ந்த பனிக்கோட்டுகள் வாங்குவது சிரமமாக இருக்குமே என எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். நாள் போகப் போக உலக இலக்கியம் பொருட்படுத்தும்படி எதையேனும் அளிக்க என்னால் ஆகுமா என்று மலைப்புத் தட்ட ஆரம்பித்திருக்கிறது. என்னைக் கருவியாய்க் கொள்ளும் இயற்கையின் முகவிலாசம் பின்னால் எப்படி விரியும் என முன்கூட்டிக் கணிப்பது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சமாதானம் அடைகிறேன். இலக்கிய உலகில் மகத்தான வெற்றி கிடைக்காவிட்டாலும் தோல்வி ஏற்படும் எனில் அத்தோல்வியும் மகத்தான தோல்வியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன். அற்ப வெற்றி எனும் தண்டனைக்கு ஆளாகாமல் தப்புவேன் என்றால் அதுவே பெரிய அதிர்ஷ்டம் என்று கருதுவேன்.

வாழ்வின் அந்திமதசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும் : “என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக்கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப்படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன்.”

இவ்வளவு போதும் எனக்கு.

நான் செல்லும் பாதை என்னைக் கோவிலின் சந்நிதானத்திற்கு இட்டுச் செல்வதற்குள் நான் களைப்படைந்து போய்விடலாம். ஆனால் நடந்து செல்கிற பாதை சுத்தமான பாதையாக இருந்துவிட்டாலே போதும். அப்போது வழி நெடுகிலும் கோவில்கள்தாம்; வழி நெடுகிலும் கோபுரங்கள்தாம்.

தீபம், 1966

புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள்

எனக்கும் புதுமைப்பித்தனுக்குமான உறவு தெளிவாகவே இருப்பது போல்தான் இருந்தது, சென்ற வாரம் வரையிலும். சென்ற இருபது வருட காலத்திலும் ‘நம்ம புதுமைப்பித்தன்தானே’ என்ற எண்ணத்திலேயே எப்போதும் இருந்து வந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. அவருடைய மன அறைகளின் சாவிக் கொத்து என் இடுப்பிலேயே தொங்குவது மாதிரியும் நடமாட்டங்களில் அது ‘கிணிங் கிணிங்’ என்று ஓசைப்படுத்துவது மாதிரியும் எண்ணிக்கொண்டிருந்ததின் அழகு, கையில் தராசைத் தந்து ஒருவர் எடை போடச் சொன்ன போது எனக்கே வெளிச்சமாகி விட்டது.

இவருடைய எழுத்தை வாசகர்களில் சிலர் வாங்கிக்கொள்வதில் ஆயாசப்படுகின்றனர் எனக் கூறி, என் வாசக அனுபவம் தேவை எனக் கேட்டபோதும், என் அனுபவம் பயன்படும் என்று சொன்னபோதும், பயன்படலாம் என நானே நம்பியபோதும் ‘இவருடைய எழுத்தில் அப்படி என்ன இருட்டு, புதிர், முடிச்சு?’ என நானே கேட்டுக்கொண்டேனே தவிர, எனக்கும் சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் என்பது அப்போது தெரியாது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், புதுமைப்பித்தன் கதைகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய இயற்பெயரோ இலக்கிய உலகில் அவருடைய ஸ்தானமோ பிற விவரங்களோ அன்று எனக்குத் தெரியாது. நம்மிடையே அவர் இல்லை என்பதும் அன்று நான் அறிந்திராத ஒன்று. எடுத்த எடுப்பில் அவருடைய புனைபெயர் எனக்கு லேசான கசப்பை ஏற்படுத்தியது. காரணம் சொல்லத் தெரியவில்லை. தன்மை விளக்கமாகக்கொண்ட பெயர்கள் எனக்கு ருசிப்பதில்லை என்று சொன்னால், அதுவும் இன்றைய மனநிலையை ஒட்டிய விளக்கமே தவிர, அன்றைய காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனோ பிடிக்கவில்லை.

இன்று அவருடைய எழுத்தை, அதன் தன்மைகளை முடிந்தவரையிலும் மனத்திரையில் விரித்துப் பார்க்கிறபோது, அப்பெயர் அற்புதமாய் அவருக்குப் பொருந்துவது தெரிகிறது. அதைத் தவிர்த்து மற்றொன்றைச் சூட்டுவது சாத்தியமற்றதாகவே படுகிறது. அவருடைய எழுத்துக்கு, அதன் நடை, எடுத்தாளும் விஷயம், அவ்விஷயத்தைக் கையாண்ட கோணம், சொல்முறை, உருவம், ஆரம்பங்கள், முடிவுகள், வருணனைகள், பாத்திர சிருஷ்டி, எழுத்தில் நீக்கமறக் கலந்து நிற்கும் விமர்சனப் பாங்கு, இன்னும் இழை கண்டு சொல்ல முடியாதவையும் ரசனைக்கு மட்டும் அனுபவ சாத்தியமாகிறவையுமான சூட்சும அம்சங்கள் ஆகியவற்றை உணர்ந்து பார்த்தால், அவர் சூட்டிக்கொண்ட பெயர் அசைக்க முடியாதபடி அவருக்குப் பொருந்துவதை உணரலாம். எனக்கு இப்போதும் அப்பெயர் ருசிக்கவில்லை என்பது வேறு விஷயம். முக்கியமான விஷயம் அல்ல அது.

படைப்புக்கு முன்னாலேயே, அதன் கிளை படரும் காட்சிகளை உணர்வதற்கு முன்னாலேயே, எவ்வாறு அவர் இப்பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டுவிட்டார்? தான் நடந்து செல்லப்போகும் பாதைகள் எல்லாம் பயணத்தைத் தொடங்கும்போதே அவருடைய காட்சிக்குப் புலனாகிவிட்டனவா? கலைஞர்களில் அநேகருக்கு அது மங்கலாகத் தெரியும் பிராந்தியம் அல்லவா?

இலக்கியப் படைப்பு அநேக சந்தர்ப்பங்களில் வெகுளித் தனமான காரணங்களோடுதான் துளிர்க்கிறது. பந்தமும் சுற்றமும் தங்களுடைய மனவுலகில் ஒரு நாற்காலி தருவதற்காக; தான் அசடு ஒன்றுமல்ல என்பதைப் பிறருக்கு உணர்த்துவதற்காக; எழுத்தை அச்சில் பார்த்ததும் நாளங்களில் ஓடும் லகரியைச் சற்று அனுபவிப்பதற்காக; வேறு எதைஎதையோ இழந்து போனதற்குப் பதிலாக - இப்படி எத்தனையோ காரணங்கள். கலைஞனின் மனத்தில் அவனுடைய இளமைப் பருவத்தில் விரியும் கனவுகளை வார்த்தைகளில் தேக்குவது கடினம். தத்துவ வாதிக்குத் தனது எதிர்காலப் பயணத்தின் பாதை பளிச்சென்று தெரியாவிட்டாலும் அதன் கரைகளேனும் தெரிந்திருக்கும். அவனுக்குப் புத்தி முதலீடு. பதில் தேடி ஆராயும் நாட்கள் அவனுக்கு எதிர்காலம் தான் என்றாலும் தொடக்கத்தில் அவன் கேள்விமயமானவன்தான் என்றாலும் அவனுக்கு அவனுடைய கேள்விகளேனும் தெளிவானவை; சந்தேகங்கள் தெளிவானவை.

கலைஞனோ உணர்ச்சிகளை விரிப்பவன். சௌந்தரியம் அவனை இழுத்துச் செல்கிறது. சமூக அர்த்தத்தில் ஏதோ ஒரு கோணலுக்கு அவன் ஆட்பட்டுவிடுகிறான். அவன் உள்ளம் இளமையிலேயே வடுப்பட்டு விடுகிறது.

மேற்சொன்ன லட்சணங்களில் புதுமைப்பித்தனும் ஒரு கலைஞன். பெயரிலிருந்து ஆரம்பித்து, சற்றே திசை மாறிப்போவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியவாறு நான் அணுக முனைவதெல்லாம், புதுமைப்பித்தன் பெரிதும் உள்ளுணர்வு கொண்ட, அந்த உள்ளுணர்வின் அடிப்படையில் இளமையிலேயே எதிர்காலத்தில் தெளிவுறப் போகும் தன் முக விலாசத்தை மனக்கண்ணாடியில் முன்கூட்டிக் கண்டுகொண்டு விட்ட கலைஞன் என்பதை வற்புறுத்துவதற்காகத்தான். நான் பின்னால் அவரைப் பற்றிப் போடப் போகிற தீர்மானங்களுக்கு எல்லாம் அவர் முன்னாலேயே பின்மொழிந்திருக்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய இலக்கிய முகத்தை முன்கூட்டி உணர்த்தும் விசேஷமான உள்ளுணர்வு ஒன்று அவருக்கு இருந்திருக்கிறது.

புதுமைப்பித்தனுடைய எழுத்து அவருடைய பலத்திற்கும் பலவீனத்திற்கும் சாட்சியாய் நம் முன் நிற்கிறது. இந்த இரண்டு அம்சங்களையும் ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘காஞ்சனை’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும் ஆதாரமாகக்கொண்டு ஒரு வாசக அனுபவத்திற்குப் புலனாகிற தோரணையில் பார்ப்போம்.

புதுமைப்பித்தனின் இயல்புகளை நாம் தெரிந்துகொள்ள உபயோகப்படும் சில கேள்விகள் என்னிடம் எழுகின்றன.

திட்டம் என்பதிலும் பயிற்சி என்பதிலும் நம்பிக்கை கொண்ட கலைஞர்தானா இவர்? தனது உணர்ச்சிகளைப் புத்தி மண்டலத்திற்கு உயர்த்தி, இழை எடுத்து சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு ஆசை இருந்திருக்கிறதா? புலன்கள் வாயிலாக நாம் பெறும் அனுபவம் உண்மையாய் அமைவது கடினம், பொய்யாய்ப் போய்விடுவது சுலபம் என்ற ஜாக்கிரதை உணர்வு இவரிடம் தொழில்பட்டிருக்கிறதா? சைக்கிள் சக்கரத்தில் நாம் பார்க்கும் விதமாய், சிறுகதையின் ஜீவ தாதுவை மையத்தில் பொருத்தி, வெளிவட்டத்திலிருந்து கம்பிகளை இழுத்து உறுதிப்படுத்தும் பொறுமை, அதன் அவசியம், அதற்கான பயிற்சி இவற்றிற்கெல்லாம் இவர் கட்டுப்பட்டவர்தானா? கதையிலிருந்து அனாவசியத்தை அகற்றினால் அவசியம் மேலும் துலங்கும் என்பதை இவருடைய கதைகள் எப்போதும் நமக்கு உணர்த்துகின்றன என்று சொல்ல முடியுமா? கதை அரங்கில் கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்ப்பது - அதாவது தன் சொந்த அபிப்பிராயங்களுக்கும் இடம் போட்டுக் கொண்டு எழுதுவது - விவேகமல்ல என்ற விதியை விடாமல் பின்பற்றக் கூடியவரா இவர்? கதையைக் கடைசிவரையிலும் நடத்திக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதிலோ அல்லது சென்றுவிட முயல வேண்டும் என்பதிலோ இவர் காட்டும் நிர்ப்பந்தம் எவ்வளவு? சிக்கலான தடத்தில் போகிறபோது, சீதையைப்போல் விலை உயர்ந்த ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே போகாவிட்டாலும், ஒரு லட்சிய வாசகன் எட்டிப் பிடித்துவிடுவதற்கு அவசியமான படிகளையேனும் கோடி காட்டிவிட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி எப்போதும் காட்டியவர் என்று இவரைப் பற்றிச் சொல்ல முடியுமா? தடம் தெரியாமலும் தனக்கே புரியாமலும் பேனா ஓட ஆரம்பித்தால் அதை இழுத்து நிறுத்தி மூடியை அதன் வாயில் செருகிவிடுவது விவேகமான காரியம் என்பதில் இவருக்கு நம்பிக்கை உண்டா?

மேற்கண்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்குமே எதிர்மறையான பதில் சொல்லும் நிலையில் நாம் நிற்கிறோம். மேதாவிலாசம் வாய்க்கப்பெறாத ஒரு கலைஞன் மேற்கண்ட பலவீனங்களால் கொடிய தண்டனைக்கு ஆளாகியிருப்பான் என்பதிலும்; நமக்குச் சற்றும் உவக்காது போய்விட்ட அவன் எழுத்துக்கு, மேலே சொன்ன குறைகளில் சிலவற்றையேனும் காரணமாக எடுத்துக்காட்டிக் கொண்டிருப்போம் என்பதிலும் சந்தேகமில்லை.

கலையின் வெற்றிக்குத் துணை செய்யும் எனப் பெரிதும் நம்பப்படுகிற, மேதாவியான கலைஞன் பரவலாகப் பின்பற்றிய, சில வித்தைகளைக் கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகங்களில் இடம்பெறத் தகுந்த நியதிகளை இரக்கமின்றி மிதித்துக்கொண்டே, பூரணத்துவம் பெறவில்லை என்றாலும் சில வெற்றிகளைச் சாதித்த புதுமைப்பித்தனின் கலை வன்மை பொருந்தியது. இவ்வெற்றியின் வசீகரம் அவருடைய எழுத்துகள் அனைத்திலும் இழையோடுவதையும் பார்க்கலாம்.

சூத்திரமாகச் சில வார்த்தைகளைச் சொல்லி இவரை உணர்த்த முயலும்போது, மேதாவிலாசம் பொருந்தியவர்; நியதிகளை அலட்சியம் பண்ணுகிறவர்; தான் வாழ்ந்த காலத்தின் கோலத்தில் அதிருப்தி தெரிவித்தவர்; மனித இயல்புகளை ரசிப்பவர்; எழுத்தை ஆத்மார்த்தத்தோடு கையாண்டவர்; தனிமனிதன்மீது விழும் கட்டுப்பாடுகள் - அவை குடும்பம், தேசம், தேசியம், கட்சி, சமூகம், மொழி, கலை உலகு போன்ற எந்தத் திசையிலிருந்து வந்தாலும் சரி - அவற்றை ஏற்றுக்கொள்ளப் பிடிவாதமாய் மறுப்பவர்; தன்னுடைய உணர்வுகளையே பிரதானமாய் மதித்து அதன் வழியே செல்பவர்; வாழ்க்கையைத் திருத்தவோ மாற்றவோ செப்பனிடவோ சீர்குலைக்கவோ உருவாக்கப்படும் தத்துவங்களையும் அவற்றின் செயலுருவமான இயக்கங்களையும் அவநம்பிக்கைக் கண் கொண்டு பார்த்தவர்; பக்தி, பவித்திரம், அமானுஷ்யம் இவற்றிலிருந்து எழுந்த பீடங்களை -

காலம் காலமாய் அதன்முன் மனிதன் தலைகுனிந்து நின்று களிம்பேறிப்போன பீடங்களை - தனது பலவீனமான கைகளால் அசைத்து, அப்பீடங்களிலுள்ள விக்கிரகங்கள் அசைவதைக் கண்டு உதட்டின் கோணத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டவர் என்றெல்லாம் சொல்லலாம்.

பலவீனங்களைத் தாண்டி வெற்றிகளை எட்டிவிட்ட புதுமைப்பித்தனுக்குப் பின்னால், பலவீனங்களால் பாதிக்கப்பட்ட புதுமைப்பித்தனையும் பார்க்கிறோம்.

இவருடைய பல கதைகள் சிறுகதையின் தனிப்பெரும் குணமான உருவத்தைத் தாண்டி அப்பால் நகர்ந்துவிட்டவை. அப்போது எந்த அர்த்தத்தில் அவை சிறுகதை உருவம் பெறத் தவறியவை என்ற கேள்வி எழலாம்.

சிறுகதை என்ற தனியான, பிற இலக்கிய உருவங்களுக்கு வித்தியாசமான - கதைகளிலிருந்தும் துண்டாக வேறுபட்ட - ஒரு இலக்கியப் பிரக்ஞையை நாம் மனத்தில் பேணி வந்தோம் என்றால், இவருடைய கதைகளில் பல சிறுகதை உருவம் பெறத் தவறிவிட்டவை என்பதை உணர முடியும்.

அவ்வாறு கதைகளிலிருந்து வித்தியாசம் காட்டுகிற வேறுபட்ட சிறுகதை உருவப் பிரக்ஞை ஒன்றை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று கேட்கலாம். அவசியம் என நம்புகிறவர்களும் அவசியமில்லை என்று வாதாடுகிறவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அவசியம் என்பது என் அபிப்பிராயம்.

மையப் புள்ளி ஒன்றில் சுழல்வதும் கதையின் விரிவு அந்த மையப் புள்ளிக்கு வலுவூட்டும் ஆலாபனையால் அமைவதுமான கதைகளை நம்முடைய பழைய இலக்கியத்திலிருந்து, பழைய இந்திய இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டிவிட முடியும் என்று நம்பிவிடுவதற்கில்லை. அவ்வாறு ஏகதேசமாய் ஒன்று எடுத்துக்காட்டப்பட்டாலும் அது தவறிப்போய் சரியான திசையில் விழுந்துவிட்ட தற்செயலான காரியமாக அமையுமே அல்லாது, அந்த சிருஷ்டியின் பின்னால் போதபூர்வமாய்த் தொழிற்பட்ட ஒரு உள்ளத்தைக் காணமுடியாது. நாம் மேலே சொல்லி வந்த சிறுகதையின் லட்சணங்கள் மேல்நாட்டுப் பரிச்சயத்தின் மூலமே நமக்குத் தெரியவந்தவை என்ற உண்மையை இன்றைய இலக்கிய உலகில் பலரைப் போலவே நானும் நம்புகிறேன். 1920க்கு முன்னர் தமிழில் இவ்வுருவம் சாத்தியமாகவில்லை என்பதையும் இலக்கியப் பிரக்ஞையுடன் பரவலாக உருவாக்கப்பட்ட கதைகள், அதாவது தமிழில் வசனத்தின் முதல் கலைப்படைப்புகள் காலமும் இயக்கமும் கூடித் தோன்றியது 1930க்குப் பின்னரே என்றும் சொல்ல வேண்டும். இந்த இலக்கியப் பிரக்ஞை கொண்ட முதல் கோஷ்டியில் முக்கியமானவர் புதுமைப்பித்தன்.

போதிய சிரத்தை எடுத்துக்கொள்ளப்படாததால் சிறுகதை உருவத்திலிருந்து நகர்ந்துவிட்ட இவருடைய கதைகளுக்கு உதாரணமாய் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

‘கலியாணி’ என்ற கதை இவ்வாறு ஆரம்பமாகிறது :

“வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்பது எனக்குத் தெரியும்.”

இதைத் தொடர்ந்து வாணிதாஸபுரத்தின் ‘லொக்கேஷன்’, யாருடைய துணையுமின்றி ஒரு குழந்தைகூட அவ்வூரை அடைந்து விடுவதற்குப் போதுமான பூகோளத் தகவல்கள்; நதி, வாய்க்கால், குளம் ஆகிய நீர்நிலைகள் காணப்படும் இடங்கள்; வாணிதாஸபுரம் நாகரிக மோஸ்தருக்கு ஆட்படாமலிருக்கும் தன்மை; கிராம மக்களின் பிழைப்பு விரிந்திருக்கும் கோலங்கள்; பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் ஜீவனோபாயம்; பிள்ளைமார்களின் குல தர்மம்; மறவர்களின் சோம்பல் தர்மங்கள்; பறைச்சேரியின் அவலம் முதலியவற்றை மிக ரசமாய் இரண்டு பக்கங்களில் சொல்லி முடித்துவிட்டு, இரண்டாவது பகுதிக்கு வருகிறார் ஆசிரியர்.

அர்ச்சகர் சுப்புவையர் ஏறக்குறைய மெஜாரிட்டியைக் கடந்து விட்டவர். தமது 45ஆவது வயதில் மூத்தாளை இழந்துவிட, இரண்டாவது விவாகம் செய்துகொண்டார். இளையாள் வீட்டிற்கு வந்து சிறிது காலந்தான் ஆகிறது. அவள் சிறு குழந்தை. 16 அல்லது 17வயதுள்ள கலியாணி சுப்புவையரின் கிரகத்தை மங்களகரமாக்கவே அவரது சமையற்காரியாகக் காலம் கழித்தாள்.

சிறுகதையின் உருவப் பிரக்ஞையை மனத்தில் கொண்டோம் என்றால் மேலே காட்டிய இரண்டாவது பகுதியிலேயே கதை ஆரம்பமாவது விரும்பத்தக்கது என்று சொல்லலாம். அப்படியானால் முதல் பகுதியில் அவர் அளித்திருக்கும் தகவல்கள் அவசியமற்றவையா, அத்தகவல்கள் இக்கதைக்கு வலுவூட்டவில்லையா, அவற்றின் நீக்கத்தில் கதை பாதிக்கப்படாதா ஆகிய சந்தேகங்கள் தோன்றுவது இயல்பு. முதல் பகுதியின் நீக்கத்தில் கதை குறைவுபடாது என்பது மட்டுமல்ல, மேலும் செம்மையாய்த் துலங்கும். ஏனெனில் முதல் பகுதி நீக்கப்பட்டாலும் அப்பகுதியிலுள்ள தகவல்கள் - சூழ்நிலையை நாம் மனத்தில் வாங்கிக்கொள்ள உபயோகப்படும் அத்தகவல்கள் - கதையின் மீதிப் பகுதியில் உள்ளார்ந்து நின்று ஜொலித்துவிடுகின்றன என்று சொல்லலாம். சொல்லப்படாத ஒன்று, சொல்லப்பட்டதற்கு நிகராகக் காரியம் ஆற்றுமா என்ற சந்தேகத்திற்கு, சில சந்தர்ப்பங்களில் சொல்லப்படாத நிலையிலேயே சொல்லப்பட்டதற்கும் மேலாகக் காரியம் ஆற்றும் என்பதுதான் பதில்.

ஒருவன் மிகப் பெரிய அடுப்பு ஒன்றில், அரை ஆள் உயரம் எழும்பியிருக்கும் ஜ்வாலையில் இரும்புத் தகடு ஒன்றைக் காய்ச்சிக் கொண்டிருக்கும் வண்ணத் திரைப்படக் காட்சியை மனத்தில் கற்பித்துக் கொண்டோம் என்றால், இரு விதங்களில் காமிராவில் இக்காட்சியைப் பதிவுசெய்ய முடியும். ஒன்று: தீக்கொழுந்து அடுப்பில் படர்ந்து நிற்பதையும், காய்ச்சுபவனின் மீசையும் தாடியும் கொண்ட, ஜ்வாலையின் வீச்சு செக்கச்செவேலென அடித்திருக்கும் முகத்தையும், சுத்தியல் தகட்டின்மேல் விழுவதால் எழும் ஓசையையும் இவ்வாறாக அக்காட்சியை முழுமையாகவே பதிவு செய்துவிடலாம். இது ஒரு முறை. மற்றொரு முறை: தீக்கொழுந்தில் சிவப்பேறி நிற்கும் அவன் முகத்தை மட்டும் காட்டித் தகட்டில் சுத்தியல் விழும் ஓசையைப் பின்னணியில் இணைத்து விடுவதாகும். அவ்வாறு காட்டப்பட்டாலும் அடுப்பும், அதில் கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையும் கிடுக்கியும் சுத்தியலும் தகடும் நம் மனக் கண்முன் தாமே விரிந்துவிடும். இங்குக் காட்டப்படாத அம்சம், காட்டப்படும் அம்சத்துக்குள் உள்ளார்ந்து ஜொலித்து நம் மனத்திரையில் உருவம் பெற்றுவிடுகிறது. இதேபோல் ‘கலியாணி’ என்ற கதையின் முதல் பகுதியிலுள்ள தகவல்கள், அவை நீங்கலாக உள்ள பகுதியில் பிண்டமாக இல்லாவிடினும் சூட்சுமமாகவேனும் உணர்ந்துகொள்ளும்படி அமைந்திருக்கிறது. இரண்டாவது பகுதி மட்டுமே சிறுகதையாக முழுமையான உருவம் பெற்றிருக்கும்.

இதே பலவீனத்துக்கு ஆட்பட்ட மற்றொரு கதை ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’. இதிலும் முதல் பகுதி துருத்திக்கொண்டு நிற்பதோடு, இரண்டாவது பகுதியின் ஆரம்பம் ஒரு சிறுகதையின் கச்சிதமான ஆரம்பம்போல் அமைந்திருப்பதை படிப்பவர்கள் உணர முடியும்.

உருவப் பிரக்ஞை காட்டும் கதைகளை சைக்கிளின் சக்கரத்திற்கு உவமித்துச் சொல்லலாம். முதல் பகுதி வெளியே நீண்டு நிற்கும், மேலே எடுத்துக்காட்டப்பட்ட தரத்துக் கதைகளை, வளையத்தை உந்துவதற்கு வசதியாய் அதோடு ஒரு கம்பியை இணைத்து வைத்துக்கொண்டிருக்கும் கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுச் சக்கரத்துக்கு உவமித்துச் சொல்லலாம். சக்கரத்தோடு இணைக்கப்பெற்ற கம்பியே கதைக்கு முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் முன்பகுதிகள் ஆகும். ஓரளவுக்கு மேல் இவ்வுதாரணங்களை அழுத்தமாக ஏற்றுக்கொள்வதும் ஒரு வாசகனின் மன உணர்வில் கொப்புளிக்கும் விமர்சன எண்ணங்களைக் கதையின் முடிவான நியதிகளை ஸ்தாபிக்கும் சட்டங்களாக எடுத்துக் கொள்வதும் விரும்பத்தக்கதல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவருடைய கோணத்தில் விமர்சன வீச்சு ஓயாமல் குமிழியிட்டுக் கொண்டே இருக்கிறது. புதுமைப்பித்தனின் கலைமுகத்தின் ஒரு பகுதியாகவே இத்தன்மை இணைந்திருக்கிறது எனலாம். வாக்கியங்கள், கதைக் கரு, சம்பவம் அல்லது உரையாடல் -

இவற்றுக்குப் பின் சொந்தக் குரலில் ஒரு சவுக்கின் சொடுக்கை நெடுகிலும் பார்க்கிறோம். கதை முடிவுக்குப் பின்னும்கூட ஒரு தடவை சவுக்கை சொடுக்கினால்தான் இவருக்குத் திருப்தி ஏற்படுகிறது போலும்!

பெட்ரோல் நாகரிகத்தை பெட்ரோல் நாகரிகத்தின் ஏகாதிபத்தியம் என்று சொன்னால்தான் இவருக்கு நிம்மதி. உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி, ஊர்க்காவல் என்ற சில்லறைக் களவு, டிராம் வண்டி எனும் நாகரிக யக்ஷன், பணக்காரர்களான பூலோக தெய்வங்கள், இத்யாதி இத்யாதி.

கதையின் மையக் கருத்துக்கு அனுசரணையாய், அக்கருத்தை நம் மனத்தில் ஒரு வேகத்தோடு உந்துவதற்கு ஏதுவாய் வருணனையில் விமர்சனப் பாங்கு இணைந்து கலைவெற்றிக்கு உதவியிருக்கிறது. சில கதைகளில் சில சந்தர்ப்பங்களில் பாதகமாகவும் தொழிற்பட்டிருக்கிறது. வருணனையில் கலந்து நிற்கும் விமர்சன நோக்கின் சாதகத் தன்மைக்கு ஒரு உதாரணம். ‘கவந்தனும் காமனும்’ கதையிலிருந்து ஒரு வருணனைப் பகுதி :

நீங்கள் இரவு எட்டு மணிக்கு மேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது.

கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப் பறிக்கும் நாகரிகம்! மனிதனின் உயர்வையும் உடையையும் ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்!

இது கலியுகமல்ல, விளம்பரயுகம் என்பதற்குப் பொருள் தெரிய வேண்டுமானால், இந்த நகரத்தின் இரவைக் காண வேண்டும். இந்தக் கூட்டங்கள்! ஏன் இவ்வளவு அவசரம்? இதுதான் நாகரிகத்தின் அடிப்படையான தத்துவம் - போட்டி வேகம்.

டிராம் வண்டிகளின் கணகணவென்ற ஓலம், ஒருவேளை இது நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ என்னவோ!
பெண்களின் பல் வரிசைக்கு முத்துக் கோத்தாற்போல் என்கிறார்கள். இந்த வரிசையான மின்சார விளக்குகளுக்கு உபமானமாகத் தேவலோகத்திலும் இவ்வளவு பெரிய முத்து கிடையாதே!
புதிதாக வந்தவன் மலைத்துப் போகலாம். உற்சாகப்பட முடியாது.
வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணைப் பறிக்கும் வெளிச்சம்!
இதுதான் தெரு மூலை!
இதுதான் மனித நதியின் சுழிப்பு!
இதற்கு உபநதிகள்போல் பெரிய கட்டடங்களுக்கிடையே ஒண்டி ஒடுங்கிப் போகும் ரஸ்தாக்கள்.
இது வேறு உலகம்!
இங்கு விமர்சன நோக்கு கதையின் மையத்திற்கு வலுவூட்டும் முறையிலேயே அமைந்திருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் கதையைக் கடைசிவரையும் நடத்திக்கொண்டு செல்வதில் இவருடைய பொறுமையின்மையைப் பார்க்கிறோம். மிகுந்த ஈடுபாட்டுடன் ஆரம்பித்து, களத்தை விஸ்தாரமாய் அமைத்து, பாத்திரங்களை ஒருவர் பின் ஒருவராக எழுப்பி, பெரும்போக்காக நகர்த்தும் சிரத்தை, பின்பகுதியில் சலிப்படைந்து சட்டென்று கால் கைகளைச் சுருக்கிக்கொண்டுவிடுவது தெரியும். ‘துன்பக்கேணி’, ‘வாழ்க்கை’ போன்ற கதைகள் இன்று நாம் அச்சில் பார்ப்பதைவிடவும் அதிக வனப்பும் கம்பீரமும் கொண்டதாய் ஆசிரியர் மனத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அக்கதைகள் கேட்டு நின்ற தவத்தையும் உழைப்பையும் கலைஞன் கொடுக்கத் தவறி விட்டான் என்றும் நமக்குத் தோன்றக்கூடும்.

‘துன்பக்கேணி’ அதன் முடிவை நெருங்குகிறபோது, முடித்துவிட உந்தும் சோம்பல் மனம், அதுவரையிலும் கவனமாய் இழைத்துக் கொண்டு வந்த இழைகளையெல்லாம் எத்தனை அவசரமாக, இழை நுனிகளில் பட்பட்டென்று முடிச்சுப்போட்டு முற்றுப்புள்ளி குத்திவிடுகிறது!

இதற்கு மாறாக ‘காஞ்சனை’, ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’, ‘செல்லம்மாள்’, ‘சாப விமோசனம்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘மனித யந்திரம்’, ‘நினைவுப் பாதை’ போன்ற கதைகளில் கதையைக் கடைசிவரையிலும் நடத்திச் செல்ல அவசியமான சிரத்தை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் உணரலாம். அதிலும் ‘செல்லம்மாள்’, ‘சாப விமோசனம்’ என்ற இரண்டு கதைகளிலும் பேனா மிக அழுத்தமாயும் அமைதியாயும் நகர்வதைப் பார்க்க முடிகிறது.

தனக்கே புரியாத விஷயங்களைத் தவிர்த்துவிடும் நாகரிகம் காட்டாத கதையாக ‘பிரம்ம ராக்ஷஸ்’ என்ற கதையைச் சொல்லலாம். ஒரு விமர்சன மேதை தோன்றிச் சிக்கல் எடுக்கவேண்டிய கதை அது. சிக்கல் என்ற ஒரு குறைக்குத்தான் அல்லது நிறைவுக்குத்தான் - எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் - அது பாத்திரமாகியிருக்கிறது என்றால் ஒரு விமர்சன மேதையின் பாததூளியில் அதற்கு விமோசனம் கிடைக்கும். அதுவரையிலும் ‘வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களை பயங்காட்டுவது ரொம்ப லேசு’ என்ற புதுமைப்பித்தனின் வார்த்தைகளை அக்கதையின் தலைப்புக்கு மேல் எழுதி வைத்துவிட்டுப் பொறுத்திருப்பதுதான் விவேகமான காரியம் என்று தோன்றுகிறது.

ஒரு அர்த்தத்தில் புதுமைப்பித்தன் அவருடைய காலத்தில் ஓங்கி நின்ற தனிமரம். வ.வே.சு. ஐயரின் காலத்திலிருந்து புதுமைப்பித்தன் காலத்துக்கு உள்ள இடைவெளி பத்தாண்டுகள்தாம் என்றாலும் ‘மங்கையர்க்கரசியின் காத’லிலிருந்து புதுமைப்பித்தன் கதைகளுக்கு வரும்போது ஒரு கலைஞர் பல பத்தாண்டுகளை வேகமாக விழுங்கி விட்டதனாலேயே இக்கதைகள் சாத்தியமாயின என்று தோன்றத்தான் செய்கிறது. புதுமைப்பித்தனின் வெற்றியும் தோல்வியும் சோதனையும் நவநவமான அம்சங்களை இழைத்துத் தொழில்படும் போக்கும் வளம் மண்டிக்கிடக்கும் ஒரு இலக்கியப் பகுதியின் விளைவுபோல் தென்படுகிறதே அன்றி, ஒரு தனிப்பட்ட கலைஞனின் தனிப்பட்ட காரியமாகத் தோன்றுவதில்லை.

சிறுகதை வல்லுநர் என நாம் இன்றும் நம்பும் பலருடனும் சேர்ந்துதான் இவரும் தொழில்பட்டார் என்றாலும் திறமை எனும் வார்த்தையைச் சிறுமைப்படுத்திவிடும் மேதாவிலாசம் இவர் ஒருவருக்குத்தான் சித்தியாகியிருந்தது என்று சொல்லலாம். அவருடைய பலவீனங்களையும் இந்த மேதாவிலாசத்தின் ஒரு அம்சமாகக் கொள்வதில் தவறில்லை. பயிற்சியிலும் சூத்திரத்திலும் இலக்கிய நியதிகளிலும் இலக்கிய வல்லுநர்களின் பாடப் புத்தகக் கருத்துகளிலும் நம்பிக்கை வைக்க மறுப்பது மேதாவிலாசத்தின் ஒரு பகுதியே. கலையை, அளவுகோலுக்கு ஏற்றபடித் தயாரிப்பதைவிட, தனது ஆளுமைக்கு ஏற்றபடி சதையும் ரத்தமுமாய் நம்முன் தள்ளிவிட்டுச் சென்றுவிடுகிறது அது. சீவுளி போட்டுச் சீவிக் கொண்டிருக்க அது பொறுமை கொள்வதில்லை. கலையின் பூர்ணத்துவத்தை விடவும் இயற்கையின் ஜீவன் துடிப்பதையே - அது சற்று மோட்டாவாக இருந்துவிட்டாலும் பாதகமில்லை - ஆசைப்படுகிறது இவருடைய கலை மேதமை.

தன்னுள்ளிருந்து கலையின் புயலைப் பரப்பி அப்புயல் இட்டுச் சென்ற திசைகளில் எல்லாம் சுழன்ற அசுரத்தன்மைக்கு ஆளான கலைஞர் இவர். இவருடைய தன்னிச்சையான வேகச் சுழற்சியில் கலையுலகில் சம்பிரதாய வேலிகள் எத்தனை சரிந்தன என்பதை இப்போது நாம் கற்பனை செய்து பார்ப்பது சிரமமான காரியம். தன்னுடைய ருசியையே ஆதர்சமாகக் கொண்டு இயங்கிவிட்ட போக்குக்கு, வெளியுலக இலக்கிய சம்பிரதாயங்கள் தன்னை நெருங்காமலே ஒதுங்கிப்போன கதை, தெரியாத ஒன்றாகவே இருக்கலாம். தனது இயற்கையான போக்கு, எத்தனை அலாதியானது என்பதை உணர, மற்றொரு பார்வையை இரவல் வாங்கிக்கொண்டால்தான் உண்டு. புதுமைப்பித்தனின் இயல்பு இந்த இரவல் பார்வைக்கு அப்பாற்பட்டது.

புதுமைப்பித்தனின் காலம் கலை மண்டிக்கிடந்த காலம் அல்ல. தமிழ் இலக்கியம் அவருக்கு எந்தச் சவாலையும் விடக்கூடிய நிலையில் இல்லை. தன்னிடம் உள்ளதைத் தான் அடைந்துவிட வேண்டும் என்று அவரை ஏங்க வைக்கும் சூழ்நிலை அன்றில்லை. காலம் புதுமைப்பித்தனுக்கு அவருடைய மேதாவிலாசத்தைப் பெரிதுபடுத்திக் காட்டும் காலமாகவும் இருந்திருக்கிறது. பழைய தமிழ் இலக்கியத்தின் கலைப் பகுதிகளில் ஈடுபாடு, மேல்நாட்டு இலக்கியப் பரிச்சயம், பத்திரிகையாளராக வேலை செய்ததன் காரணமாக காலத்தை உணர்ந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை, விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகிய துறைகளில் நவீன மனிதனிடம் நாம் எதிர்பார்க்கும் பரிச்சயம், வாய்த்துடுக்கு, நண்பர்களான ரசிகர்கள், சுற்றிச்சூழக் கேவலத்தை அச்சேற்றிக்கொண்டு வரும் பத்திரிகைகள், இயற்கையாய் அவர் கொண்டிருந்த வித்தியாசமான கோலம், அக்கோலத்தை விரிக்க அவசியமான கலைத்திறன், இந்த நிலைமையிலும் பலமும் பலவீனமும் கொண்ட ஒரு ஆத்மா, எட்டாததையெல்லாம் தொட்டுவிட வேண்டும் என்று அப்போதும் கனவு கொண்டிருந்தால் அது ஆச்சரியம்; மனத்திற்குள் தனக்கே ‘பேஷ்’ போட்டுக்கொண்டிருந்தால் அது இயற்கை. புதுமைப்பித்தன் இந்த இரண்டு நிலைகளிலும் மாறிமாறி விழுந்தவர். மேலே குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாய் அமைந்திருக்கக் கூடும் என்று நாம் அனுமானிக்கும் மனநிலையிலிருந்து இரண்டு அம்சங்கள் புதுமைப்பித்தனின் இலக்கியத்தில் ஏறின. இரு வேறுபட்ட தன்மைகள் தோன்றின. பரிபூரண சுதந்திரத்தின் அழகுகள்; மிதமிஞ்சிப் போன சுதந்திரத்தின் குறைகள்.
இவ்விரு நிலைகளிலும் அவரிடமிருந்து நீங்காமல் நின்றிருந்த குணம் ஒன்றுண்டு. அதுதான் அந்தரங்க சுத்தி.

புதுமைப்பித்தனின் கதைகளைப் படிக்கும்போது மேதாவிலாசம், அந்தரங்க சுத்தி, சுதந்திரம் என்ற மூன்று வார்த்தைகளையும் நமது அடிமனம் உச்சரித்துக் கொண்டுதானிருக்கும். புத்தியின் தணிக்கைக்குக் காத்திராத அவருடைய கலை உணர்ச்சி இம்மூன்று குணங்களிலிருந்தும் செழுமையை உறிஞ்சி அவருடைய கதைகளில் எத்தனையோ சோபைகளை ஏற்றியிருக்கிறது.

தனது மனப்பாங்கையும் எண்ணங்களையும் கூசாது வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய கலைஞராக இருந்தார் அவர். கற்பனையிலும் கற்பனையை விரிக்கும்போது தாண்டிச் செல்லும் கருத்துகளிலும் அபிப்பிராயங்களிலும் வருணனைகளிலும் உவமைகளிலும் ‘இது என்னுடைய ருசி, இது என்னுடைய எழுத்து, அனைத்தும் நான்’ என்ற அடிநாதத்தைக் கேட்கிறோம். அவருடைய பிரக்ஞைவெளியில் சுதந்திரமாக அவர் சுழன்று வந்தார் என்று சொல்ல வேண்டும்.

ஆத்மார்த்தமான இயல்பு கொண்ட கலைஞர், தன்னுடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட உலகத்தை தனது எழுத்துக்கும் அப்பாற்பட்டதாகக் கருதிவிடுகிறார். தான் உணராத அனுபவங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார் இவர். தான் கண்டும் கேட்டும் பார்த்தும் பேசியும் தனது மனக்கோலத்தில் பதிந்துவிட்ட ஒரு உலகிற்கு, அந்தத் தாமிரவருணியின் கரைகளுக்கு, மிகுந்த ஈடுபாட்டோடு மீண்டும் மீண்டும் வருவதை உணர்கிறோம். அங்குள்ள கிராமங்களையும் அவற்றின் அமைப்பையும் சாலைகளையும் சோலைகளையும் பனங்காட்டையும் வண்டிப்பாதைகளையும் சுப்பையா பிள்ளைகளையும் சகரியாஸ் நாடார்களையும் பிள்ளைமார் தெருக்களில் அடிக்கிற வாசனைகளையும் அவருக்குச் சொல்லித் தீராது போலிருக்கிறது. ‘இதையெல்லாம் கொஞ்சம் தனியாவர்த்தனம் பண்ணிவிட்டுத்தான் நான் என் கதைக்குள் போவேன். சோட்டா விமர்சகனின் கத்தி விழுந்தால் விழட்டும்’ என்று அலட்சியப்படுத்தும் ஆசையுடன் அதையெல்லாம் எழுதியிருக்கிறார் அவர்.

அவருடைய கதாபாத்திரங்கள் பல்வேறுபட்ட மன இயல்பு கொண்டவர்களாக இருப்பினும், பொதுவான குணம், அவர்கள் எல்லாரும் சாதாரண மனித சுபாவங்களுக்கும் எண்ணங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதே. கனவு காண்பதும் கண்ட கனவு பொய்த்துப் போவதும் மீண்டும் கனவு காண்பதுமாக இருக்கிறார்கள் அவர்கள். இல்லாமை எனும் கொடுமை அவர்களைக் குதறிக் கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவருக்கேனும் கடவுளை இன்னும் கண்ணாரக் காணவில்லையே என்ற ஏக்கம் வதைப்பதாகத் தெரியவில்லை. ஒரு பொய் சொல்லிவிட்ட பாவத்தின் குடைச்சலில் கண்ணுறங்க முடியாமல் போய்விடுகிற உத்தம ஜீவிகள் அல்ல அவர்கள். சமூக அந்தஸ்தைப் பெற்று, வீடும் வயலுமாக, பெண்களைச் சீரும் செனத்தியுமாய்க் கல்யாணம் செய்துகொடுத்து வயோதிகத்தில் அக்கடா என்று இருக்க நமக்கு லபிக்குமா என்று ஏங்குகிற ஜீவன்கள். மேல்தட்டுகளிலிருப்பவர்களைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறவர்கள். பரோபகாரம் என்ற கொடிய பழக்கத்திற்கு இந்தப் பொல்லாத காலத்திலும் ஆட்பட்டு வாயை இளித்துவிடுகிறோமே என்று எண்ணுகிறார்கள் அவர்கள். லட்சியத்தின் கறை படிந்த முகம் அவர்களில் ஒருவருக்கேனும் இல்லை.

தினசரிப் பத்திரிகைகளில் உழைத்தார் புதுமைப்பித்தன். அவருடைய காலத்தில்தான் இந்திய அரசியலில் தேச விழிப்பின் பேரலைகளான ஒத்துழையாமை இயக்கமும் உப்பு சத்யாக்கிரகமும் நிகழ்ந்தன. காந்தி என்ற சுதந்திரச் சூரியனின் கிரணங்கள் மூலைமுடுக்கெல்லாம் பரவிப் பிரேதங்களை உசுப்பிவிட்டுக் கொண்டிருந்த காலம். சமூகச் சீர்திருத்தங்களுக்கு எழுத்தாளர்கள் தங்களையும் தங்கள் பேனாவையும் அர்ப்பணித்துக்கொண்ட காலம். சமூகப் புண்கள் ஒன்று பாக்கியில்லாமல் அவர்களுடைய பேனாவுக்கு இலக்காகிக்கொண்டிருந்த காலம். புதுமைப்பித்தனின் காலமும் அதுதான் என்பதை அவருடைய எழுத்து நமக்குக் காட்டுகிறதா? புற உலக உத்வேகங்களுக்கு எளிதில் ஆட்படக் கூடியவர் அல்லர் அவர். இது நிறையா குறையா என்பது அவரவர்கள் வகுத்துக்கொண்டிருக்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. நாம் முக்கியமாகத் தெரிந்துகொண்டு திருப்திப்பட வேண்டிய விஷயம், ஒரு கலைஞன் என்ற நிலையில் அவருடைய மனம் கவியாத, போலித்தனமான கிரீடங்களை அவர் தாங்கிக் கொள்ள மாட்டார் என்பதே. போலி உத்வேகத்தை ஏற்றுக்கொண்டு, கிளர்ச்சி பெற்று, கும்பலின் வாலில் அவசரமாய் இணைந்துகொண்டு விடும் கெட்டிக்காரத்தனத்தையே கண்டுகொண்டிருக்கிற நமக்கு, ரசனை காரணமாகவும் சுபாவ விசேஷம் காரணமாகவும் கலைஞனின் அந்தரங்க சுத்தமான ஒதுக்கம் கவர்ச்சியாகத் தோன்றாது. அவன் நம்பாத கோஷங்களுக்கு ஏன் அவன் இரண்டு ‘ஜே’ போட்டிருக்கக் கூடாது என்று நாம் கர்ஜனை செய்கிறோம். கலைஞன் நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய வரவில்லை என்பதும் தன்னுடைய தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ள வந்திருக்கிறான் என்பதும் உண்மையாக இருந்தாலும், சுவாரஸ்யமாகப்படாது.

விரக்திக்கும் மனக் கசப்புக்கும் ஆளான கலைஞர் இவர் என்று பரவலாகச் சொல்லப்பட்டுவிட்டது. இதை முதன்முதலில் சொன்னவர் புதுமைப்பித்தன்தான் என்பதும் நமக்குத் தெரியும். நம்முடைய சமூகத்தின் அதலபாதாள நிலையும் அவலமும் பொருளாதார நெருக்கடிகளும் பாதுகாப்பில்லாத வாழ்க்கையும் அவரைப் பாதித்து விட்டன என்று காரணமும் காட்டுகிறார்கள். இதன் அர்த்தம், புற உலகமே இக்கசப்பு மண்டக் காரணமாக அமைந்தது என்பதே. அப்படியே இருக்கலாம் என்று ஏற்றுக்கொண்டே மற்றொரு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.

நமக்கு இன்று கிடைத்திருக்கும் அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால், புதுமைப்பித்தன் தனது இளம்பருவத்திலேயே குடும்பத்தின் நாலு சுவர்களுக்கு உள்ளேயே பல வடுக்களைப் பெற்றுக்கொண்டிருந்திருப்பார் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உயிர்ச்சத்துக் கிடைக்காத உடலில் சோகை படர்வதுபோல், அன்பும் அரவணைப்பும் கிடைக்காத, நேர்மாறாகப் புறக்கணிப்பே நித்திய அனுபவமாகிவிட்ட இளமை வாழ்வு, கசப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காக அமைந்துவிடுவது இயற்கையான காரியமாகும். இளமை வாழ்வோ கலைப்படைப்போடு வேறு எந்தக் காலப் பகுதியை விடவும் ஜீவனான தொடர்பு கொண்டது. 42 வருடங்கள் வாழ்ந்த புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் முதல் பத்தாண்டும் கடைசிப் பதினைந்து ஆண்டும் திருநெல்வேலிச் சீமைக்கு வெளியே கழித்திருந்தும்கூட இளமைப் பருவத்தின் பிரதேசமான அச் சீமை அவருடைய கதை உலகில் எத்தனை வலுவான ஆட்சியைச் செலுத்துகிறது! அந்தப் பதினைந்து வருட வாசம் அவருடைய மனவெளியில் எத்தனை உக்கிரமாகக் கவிந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது!

என் அனுபவத்தின் கடைசிப் பகுதியாய் புதுமைப்பித்தனுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் உள்ள உறவைக் கோடி காட்டலாம் என்று நினைக்கிறேன்.

புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘கட்டிலை விட்டிறங்காக் கதை’, ‘வேதாளம் சொன்ன கதை’, ‘காலனும் கிழவியும்’, ‘மனக்குகை ஓவியங்கள்’ இவற்றினூடே பொதுவாக ஓடும் அடிச்சரடு ஒன்றிருக்கிறது. மனிதன் அண்ணாந்து பார்க்கும் பீடங்களைப் பாமர மனிதனின் லோகாயத விமர்சனத்திற்கு உட்படுத்தும் மனோபாவமே இங்குத் தொழில்படுகிறது. இவ்விமர்சனம் மிகவும் மதிக்கத் தகுந்த உருவகக் கதை மாதிரியோ அல்லது புராணக் கிண்டலாகவோ அல்லது நேரடியான விமர்சனத் தாக்குதல் போலவோ கதையின் சூழ்நிலைக்கேற்ப அமைகிறது. அமானுஷ்ய சக்திகளுக்கு முன் கூனிக் குறுகிப்போய் மனிதன் நிற்பது நமக்கு மிகவும் பரிச்சயமான காட்சியே. அந்தப் பரிச்சயமான இலக்கிய மரபுக்கு நேர் எதிரிடையான வக்கணை இது. புழுதியில் காலூன்றி பாவக் கறைபட்டு வாழ்க்கைக் கடனைச் சுமந்து நிற்கும் மனிதன், தன் நிலையை ஒப்புக்கொண்டு தனது விமர்சனத்தை அமானுஷ்ய சக்திகள்மேல் செலுத்துகிறான்.

‘காலனும் கிழவியும்’ கதையில், கிழவி காலனிடம் “நான் உன்கூட வரணுமாக்கும்? என்னக் கூட்டிக்கிட்டுப் போக ஒனக்குத் தெறமையிருக்கா? உன்னாலே என் உசிரைத்தானே எடுத்துக்கிட்டுப் போக முடியும்? இந்த உடலைத் தூக்கிக்கிட்டுப்போக ஒனக்குத் தெறமையிருக்கா?” என்று கேட்கிறாள். கிழவியின் வாய் வீச்சுக்குக் காலன் தலைகுனிந்துவிட்டான் என்ற தோரணை காட்டுகிறார் புதுமைப்பித்தன். “உன்னுடைய உடலைத் தூக்கிக்கொண்டு போவது என் வேலை அல்ல. அதற்கு முனிசிபல் லாரி வரும்” என்று லோகாயதப் பார்வையிலேயே யமனைப் பேச வைக்கத் தெரியாதவர் அல்ல புதுமைப்பித்தன். ரத்தம் சுண்டிப்போன கிழவியின் கையைப் பிடித்துக் காலனின் தலையில் குட்ட வேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஆசை. சர்வ வல்லமை பொருந்திய இப்பீடத்தை அசைப்பதற்கு மார்க்கண்டேயனையோ சாவித்திரியையோ எதிர்பார்க்காமல் கரிசல் காட்டுக் கிழவியை முன் நிறுத்திவிடுவதே புதுமைப்பித்தனின் தனிப் பார்வை எனலாம்.

‘வேதாளம் சொன்ன கதை’யிலோ இம்மனநிலை அப்பட்டமான கிண்டலாகக் கொப்புளிக்கிறது.

வேதாளம் சொல்கிறது :

“எனக்கு பார்வை கொஞ்சம் மங்கல். அதனால்தான் . . .

பார்வை மங்கக் காரணம் என்ன தெரியுமோ? நான் பிறந்தது திரேதா யுகம்?”

கதை தொடர்கிறது:

. . . என்னை அடிக்க வேதாளம் கையை ஓங்கியது.

திடீரென்று ஓங்கியதால் அதன் கை மளுக்கென்ற சப்தத்துடன் சுளுக்கிக்கொண்டது. இந்தக் கிழ வேதாளத் தின்மீது நிஜமாகவே எனக்கு அன்பு தோன்றவும் அதன் கையைப் பிடித்து உதறித் தடவிவிட்டுக்கொண்டே “வயசு காலத்திலே இப்படி உடம்பை அலட்டிக்கொள்ளலாமா? நீர் பூர்வ ஜென்மத்திலே பிராமணன்தானே! அப்படியானால் தர்ப்பணம், சிரார்த்தம் செய்துவைத்துப் பிழைக்கலாமே” என்று ஆலோசனை சொன்னேன்.
“நீர் சொல்கிறதும் நல்ல யோசனைதான். ஆனால் எனக்கு வாதமாச்சே! குளிர்ந்த ஜலத்தில் குளித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதே, என்ன செய்யலாம்?”
“அப்படியானால் உடம்புக்கு ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிட வேண்டும். உங்கள் உலகத்தில் வைத்தியர்கள் கிடையாதா?”
கிண்டல் அப்பட்டமாகவே விரிகிறது.
மற்றொரு சந்தர்ப்பம் :
“என் பத்தினிப் பெண்ணே அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து குட்டிச்சுவராய்ப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா என்று கருதுகிறேன்.”

இவ்வார்த்தைகள் அரச கம்பீரத்துடன் ஒலிக்கின்றன. பட்டத்து மகிஷி பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதையும் நாம் கற்பனை செய்து கொண்டுவிடுகிறோம். ஆனால் இவ்வார்த்தைகளை உதிர்ப்பது மூட்டைப் பூச்சிக் கணவனாகும். அருகே இருப்பவள் மூட்டைப்பூச்சி மனைவியாகும். இங்குக் கிண்டலுக்கு அரச பவிஷு இலக்காகிறது என்பது தெளிவு.
மற்றொரு இடம்:
“வட்டும் கரித்துண்டும் இருக்கே, நீ வட்டாட வருதியா?” என்று கூப்பிடுகிறது குழந்தை, கடவுளை.
குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டு நொண்டியடித்து ஒரு தாவு தாவினார் கடவுள்.
“தாத்தா தோத்துப்போனியே” என்கிறது குழந்தை.
கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

“ஆட்டம் தெரியாமல் ஆட வரலாமா?” என்று கேட்கிறது குழந்தை கடவுளிடம். ஒரே மனோபாவத்திலிருந்து வெளிப்படும் காரியங்கள்தாம் இவை.
‘மனக்குகை ஓவியங்கள்’ என்ற கதைக் கொத்திலும் இதே மனோபாவம்தான், கிண்டலுக்கு மேற்பட்ட, தத்துவார்த்த அடிப்படையில், யீணீதீறீமீ போன்ற இலக்கிய உருவத்தில் தரப்படுகிறது. இத்தலைப்பின் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகளையும் ஒரே மணியின் நாதமாகக் கொள்ளலாம்.
“ஹே மானுடா! ஏனப்பா உன் பார்வை குனிந்தே போய் விட்டது?” என்ற குரல் பல யோசனைகளுக்கு அப்பால் உள்ள மனிதனுடைய உள்ளத்தில் ஒலித்தது.
மனிதன் தன்னுடைய நம்பிக்கை வறண்ட கண்களுடன் அண்ணாந்து பார்த்தான்.
“நீர் எப்போதும் அங்கேயே இருக்கிறீரே?”
“நான் என்ன செய்யட்டும்? உன்னை மாசுபடுத்தும் அந்தப் புழுதி தோய்ந்த கரங்களுடன், மார்புடன் என்னைக் கட்டித் தழுவ முயலுகிறாயே?”

“என்னைச் சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியை விட்டு நான் எப்படி விலக முடியும்? அதை விட்டு விலகி நான் உம்மை எப்படி வரவேற்க முடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம்? புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு அதன்மீது நிற்கும் என்னை அறிந்துகொள்ள சக்தியுண்டா? நீர் அந்த சக்தி பெற்று கீழே வரும்வரை நான், இந்தப் புழுதியில் கண்டெடுத்த - அதில் என்னோடு பிறந்த என் சகோதரனான - இந்த இரும்புத் துண்டை வைத்து, என்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன்” என்று பதில் சொல்கிறான் மனிதன்.

கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைவெளி லேசில் அடைபடக் கூடியதல்ல என்பதைப் புதுமைப்பித்தன் உணர்த்துவது மாதிரியும் இருக்கிறது. இந்நிலையை ஒரு அவலமாகக் காட்டாமல் மனிதனின் பக்கத்தில் நின்றுகொண்டு அவனுடைய லோகாயத தர்மத்தைப் பேசுவது புதுமைப்பித்தனுக்கே உரிய கோணமாகும்.

கலைஞனுடைய தொழில் ஏதோ ஒரு நிமிஷத்தில் அதன் சிகரத்தை அடைந்துவிடுகிறது. அச்சிகரத்தை நாம் உணர்ந்து கொள்கிறபோது அவன் அதுவரையிலும் சிந்திவந்த வியர்வையும் சுமந்து வந்த சிலுவையும் நமக்கு அர்த்தப்படுகின்றன.

புதுமைப்பித்தன் ‘சாப விமோசனம்’ என்ற கதையில் தன் சிகரத்தை எட்டியிருப்பதாகச் சொல்லலாம். விமர்சன உலகில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட இக்கருத்து ஆமோதிக்கத் தகுந்த ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும்போது ‘யார் எப்படிக் கருதினாலும் ராமாயணக் கதையின் அமைதி முற்றும் பொருந்தித்தான் இருக்கிறது’ என்று தனக்கே ஒரு சபாஷ் போட்டுக்கொள்கிறார் கதாசிரியர். கதையைப் படித்துப் பார்க்கிறபோது ‘அவர் பெருமைப்படுவது நியாயம்தான்’ என்று நம்முடைய மனமும் எதிரொலிக்கும். தமிழில் இதுவரையிலும் எழுதப்பட்டுள்ள கதைகளில் ஒரு கலைஞனின் வெற்றியை இத்தனை வலுவாக முழங்கும் கதை, எனக்குத் தெரிந்தவரையிலும் மற்றொன்று இல்லை.

ஞானரதம், 1970

Camera
Camera

திருவள்ளுவர் என்னும் நண்பர்

திருக்குறளுடன் நாம் எந்தவிதமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? நாம் விரும்பும் வகையில் உறவு வைத்துக் கொள்ள நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இந்த உறவின் தன்மையை வகுத்துக்கொள்ள வேண்டியது நாம்தான்.

திருவள்ளுவரை மேடைப்பேச்சில் வியந்து பாராட்டலாம். அவருடைய பேரறிவை குறட்பாக்களை அள்ளிவீசி நிரூபிக்கலாம். ஒரு குறளுக்கு ஒன்பது விளக்கங்களைச் சொல்லிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தலாம். குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை ‘எடுத்துவிட்டுப்’ பேச்சாளர் தன் ஆங்கில ஞானத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டலாம். வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய்வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

மேடைப்பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலைநாட்ட திருக்குறளைச் சற்று விரிவாகக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஆங்காங்கேவாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது. பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்திவருவதுபோல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்தக் குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப்படுத்திக்கொள்வதும் மேடைப்பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்ல முதலில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. ஆனால் கைத்தட்டல் தரும் பரவசம் அவ்வியாதியை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிடும்.

திருக்குறள் சார்ந்த புலமையை மெய்யாகவே தேடிச் செல்வது மற்றொரு வகையினரின் இயல்பு. இவர்களின் நோக்கம் சமுதாய நலன் சார்ந்தது. வள்ளுவரின் கருத்துக்களைச் சமுதாயத்தில் பரப்பினால் மக்கள் மேல்நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. தமிழ் வாசகர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகியோரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுவருகிறவர்கள் இவர்கள். திருக்குறளைத் தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் தொண்டைத் தலைப் பொறுப்பாக வைத்துக்கொண்டிருக்கும் இவர்களுடைய செயல்பாடுகள் பொதுவாக இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. எழுத்து வடிவத்திலும் பேச்சு வடிவத்திலும். மேடைப் பேச்சாளர்கள் நூலாசிரியராகவும் நூலாசிரியர்கள் மேடைப் பேச்சாளர்களாகவும் இயங்குவது இயற்கை. இரண்டு ஆற்றல்களையும் சரிசமமாகக் கொண்ட இரட்டைத் துப்பாக்கிகளும் நம்மிடையே உண்டு.

திருக்குறளைச் சமுதாயத்தில் பரப்ப விரும்புகிறவர்களின் ஆவேசங்கள் கட்டுக்கடங்காதவை. இவர்களை நான் அவ்வப்போது சந்திக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடு இன்றி - குறளை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும்; திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கினால்கூடத் தவறில்லை என்றார் ஒரு நண்பர். திருக்குறளை முழுமையாகக் கற்றவர்களையே தமிழ் அறிஞர்கள் என ஒப்புக்கொள்வேன் என்றார் மற்றொருவர். திருக்குறளை முழுமையாகக் கற்றறியாதவர்களின் டாக்டர் பட்டங்களைத் தான் மதிப்பதில்லை என்றும் சேர்த்துக் கொண்டார். தமிழர்களுக்கு வேதம், குரான், பகவத் கீதை, பைபிள், தம்மபதம் எல்லாம் குறள்தான் என்றார். இவர்களுடைய ஆவேசங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு.

1330 குறள்களையும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒப்பிக்கத் தெரிந்து விட்டால் தமிழ்ச் சமூகம் மேல்நிலையை அடைந்துவிடுமா என்று நான் என் ஆவேச நண்பரிடம் கேட்டேன். உறுதி, உறுதி, உறுதி என்று மூன்று முறை சொன்னார். நமக்குத் தேவை மனப்பாடத் தகுதியா அல்லது முற்றாக நம்பி ஏற்கும் குறள்களின் கருத்துக்களையேனும் வாழ்வில் புகுத்தி அவற்றின் வலிமையை நடைமுறையில் உணர்ந்து கொள்வதா என்று கேட்டேன். இந்த உணர்வு வலுவடையும்போதுதானே திருவள்ளுவர் மீது அதிக நம்பிக்கை கொள்வோம் என்றும் சொன்னேன்.

குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு நூல். இன்றும் நம்மைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் அந்நூல் உதவும் என்று நம்பத் தொடங்கும்போதுதான் குறளுக்கும் நமக்குமான உறவு துளிர்க்கத் தொடங்குகிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நூலை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மேடைப் பேச்சுக்கு உபயோகப்படும் கருவியாகவா? நினைவாற்றலை வளர்க்கும் ஒரு பயிற்சியாகவா? புலமைப் பிரகடனத்திற்கான முகாந்திரமாகவா?

நாம் வாழ்வின் தளத்தில் ஏழ்மைப்பட்டு நிற்கிறோம். பொருள் சார்ந்த ஏழ்மையும் கலாச்சாரம் சார்ந்த ஏழ்மையும் இக்காலத்தில் நம்மை வாட்டுகின்றன. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது காலாவதியாகிவிட்டது. பண உறவுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான சகல உறவுகளையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. மனித நேயம் என்ற சொல்தான் எழுத்திலும் பேச்சிலும் அதிகம் அடிபடும் சொல். வாழ்க்கையில் அருகிப்போயிருப்பதும் இந்த மனித நேயம்தான். உலகியல் சார்ந்த கால்களை மண்ணில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இந்த உலகத்திற்குரிய இன்பங்களைத் துறக்காமல், பொறிகளை ஒடுக்காமல் மற்றொரு உலகத்தை எண்ணி ஏங்காமல், மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புகிறோம். இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சில அடிப்படை நியதிகளை இளமையிலேயே நாம் தெரிந்து கொண்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு செயலுக்குத் துணையாக நிற்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் பொய்த்துப்போய்விடுகிறது. நிரந்தரமான நியதிகள் என்று எதுவுமே கிடையாதா? இருந்தால் அவற்றைத் தொகுத்துக்கொள்வது வாழ்க்கைக்கே ஒரு ஊன்றுகோல் போல அமையுமே. இவ்வாறான தேடல் உருவாகும் மனங்களுக்குத் தான் பொது நெறிகளை வற்புறுத்தும் பேரிலக்கியம் தேவையாக இருக்கிறது.

நாம் உலகியலில் பற்றுக் கொண்டிருப்பதால் திருவள்ளுவரின் உறவு மிக இணக்கமாக அமைந்துவிடுகிறது. ஒரு ஊரின் வரைபடம் ஒன்று நம் கைவசம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது சரியான வரைபடம்தானா? அந்த வரைபடம் சார்ந்து பயணத்தை மேற்கொள்ளும்போது அது சுட்டும் இடங்களுக்கு நாம் சரிவரப் போய்ச் சேர்ந்தால் அந்த வரைபடம் சரியானதுதான். சில நோய்களுக்குச் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ள வழிவகைகள் கூறும் நூல்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும்போது அந்த நூல்களின்மீது நம்பிக்கை கொள்கிறோம். வாழ்க்கையின் அடிப்படையையே கற்றுத்தர முற்பட்ட நூல் வள்ளுவம். அது தமிழ் வாழ்விற்குரிய நெறியை வகுத்திருக்கிறது. மதிப்பீடுகளை மொழிக்குள் துல்லியப்படுத்தித் தருகிறது. திருவள்ளுவர் 2000 வயதான இளைஞர். இன்றும் அவர் உயிர்ப்புடனேயே இருக்கிறார். அந்த உயிர்ப்பை நமக்கு உணர வைப்பது அவருடைய மொழி ஆற்றலும் சிந்தனையின் கூர்மையும். அதில் பழமையின் பாசி இன்னும் படியவில்லை.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் திருக்குறளைப் பயன்படுத்தும்போதுதான் அந்தப் பெரு நூலுக்குரிய மதிப்பை உண்மையாகவே அதற்கு அளிக்கிறோம். 1330 குறள்களையும் நாம் மனப்பாடமாகக் கற்றுவிடலாம். குறுகிய நேரத்தை ஒதுக்கி ஓராண்டில் முடித்துவிடலாம். ஆனால் அந்த மனப்பாடத் தகுதி நம் வாழ்க்கையில் கடுகளவு மாற்றத்தைக் கூட உருவாக்காது. குறளைக் கற்று அதன் பொருளை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளப் பல உரைகள் இருக்கின்றன. அந்த உரைகள் நமக்கு உபயோகமானவைதான். ஆனால் குறளுக்கு நாம் அளிக்கும் பொருள் உரைகள் சார்ந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. உரைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும்கூட எந்த உரையைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. நாம் நமக்குச் சொந்தமான உரைகளை விவேகத்துடன் உருவாக்கிக் கொள்ள முடியும். உரைகளின் உதவியுடன் நாம் உருவாக்கும் அர்த்தங்கள் மூலபாடத்துக்கு முரண்பட்டு நிற்கக் கூடாது. இதன் பொருள் திருவள்ளுவர் ஒன்று சொல்ல நாம் அதை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதுதான்.

திருவள்ளுவரை நாம் நண்பராகத்தான் பாவிக்க வேண்டும். இதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் இல்லாத இளமையை அவர் சென்ற நூற்றாண்டில் - இப்போது நாம் தாண்டி வந்திருக்கும் நூற்றாண்டில் பெற்றிருக்கிறார். அவர் மிகப்பெரிய பெருமையை அடைந்ததும் சென்ற நூற்றாண்டில்தான். எந்த அறிவையும் புனிதப்படுத்தினால் அது அந்நியப்பட்டுப்போய்விடும். நடைமுறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றிவிட்டால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்.

திருக்குறள் மக்களுக்கான நூல். அது நிரந்தரமான உண்மைகளைக் கூறுகிறது என்றாலுங்கூட காலத்துக்குக் காலம் அவற்றில் சில குறள்கள் அழுத்தம் கொள்கின்றன. கால மாற்றத்தில் முன்னகர்ந்திருப்பவை பின்னகர்ந்தும் பின்னகர்ந்திருப்பவை முன்னகர்ந்தும் வரக்கூடும். காலத்தை வென்று நிற்கும் செவ்விலக்கியங்களின் குணம் இது. இன்றைய காலத்துக்கு ஏற்ப பகுத்தறிவுப் பார்வையும் சமத்துவம், சமநீதி சார்ந்த பார்வையும் திருக்குறள் மீது ஏறுகின்றன. அந்நிலை இயற்கையானதுதான். பொது ஒழுக்கம் சீரழிந்து இவ்வொழுக்கத்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்குகிறபோது திருவள்ளுவரின் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் மேலோங்கும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள் ‘கள்ளுண்ணாமை’ என்ற அதிகாரத்தில் பல குறள்களை மேடையில் சுய நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் அப்படிக் கூற முடியும் என்று தோன்றவில்லை. தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது - அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை - ‘கள்ளுண்ணாமை’ மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கலாம். இப்படித்தான் பேரிலக்கியங்கள் தங்கள் முகங்களை மாறி மாறி ஒளிரச் செய்து காலத்தைத் தாண்டி வருகின்றன. திருக்குறளைப் பின்பற்றித் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் அது பற்றிப் பேசலாம். திரு.வி.கவும் மு.வவும் அவர்களைப் போல் எண்ணற்ற தமிழர்களும் திருக்குறள் நெறிகளைக் கடைப்பிடித்துத் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொண்டவர்கள். அவர்களைப் போன்றவர்கள்தான் அறிவார்கள் திருக்குறளின் வலிமையை. அவர்களைப் போன்றவர்களால்தான் திருக்குறள்மீது ஆழ்ந்த நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும் முடியும். திருக்குறளை முழங்கும் பிரச்சார பீரங்கிகளிடம் ‘நீங்கள் குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறீர்களா அல்லது அவ்வாறு வாழவேனும் முயற்சிக்கிறீர்களா’ என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.

அவ்வாறு கேட்பவர்கள்தான் திருவள்ளுவரின் நண்பர்கள்.

(விண்நாயகன், 1-15, பிப்ரவரி 2000)

காந்தி இன்று

இன்றைய பார்வையில் காந்தியின் எண்ணங்கள் எந்த அளவிற்குப் பொருட்படுத்தும் படியாக இருக்கின்றன? காந்தியின் எண்ணங்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையைச் சார்ந்தவை. வாழ்க்கையை மட்டுமே சார்ந்தவை. சுத்தமான தத்துவக் கேள்வி என்று அவரிடம் எதுவும் இல்லை. அவர் தத்துவ உலகத்தைச் சார்ந்தவரும் அல்லர். இதில் நமக்கு ஒரு நிம்மதி உண்டு. வாழ்க்கையைச் சார்ந்தே, தான் பெற்ற அனுபவங்களைச் சார்ந்தே, மிக விரிவாக ஒருவர் எழுதி வைத்திருக்கும்போது, வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் தகுதியினாலேயே நாமும் அவரது எண்ணங்களின் அகண்ட உலகத்துக்குள் நுழைய முடிகிறது. குறையான வாழ்க்கையை நிறைவாக மாற்றுவதற்கான சோதனைகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். குறையான வாழ்க்கையின் பிரதிநிதிகளாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இது அவரது எண்ணங்களின் உலகத்திற்குள் நுழைய நமக்கு மற்றுமொரு ‘தகுதி’யாகிவிடுகிறது. இவற்றைவிட்டு, அவர் வாழ்ந்து முடித்த வாழ்க்கையின் தளம், அந்தத் தளத்தின் தரம், மேன்மை இவற்றோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தளத்தின் தரத்தை மட்டுமே ஒப்பிடுவோம் எனில் நாம் அவரைப் பற்றி எதுவுமே பேச அருகதை அற்றவர்களாகிவிடுவோம்.

மிக விரிவாக அவர் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். எண்பது தொகுதிகளுக்கு மேல் அவரது எழுத்துகள் வெளிவந்துள்ளன. தொகுக்கப்படாதவையாகவும் காலத்தின் நீட்சியில் மறைந்து போனவையாகவும் கணிசமான அளவு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. காந்தியை அறிந்துகொள்ள இன்று நாம் யாரையும் சார்ந்து நிற்கவேண்டியதில்லை. வழிகாட்டிகளையோ உரையாசிரியர்களையோ தேடிக்கொண்டு போக வேண்டியதில்லை. காந்தியைப் பற்றி ஒரு காந்தியப் புலவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரை அணுகுகிறோமே தவிர, காந்தியின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள எந்தக் காந்தியப் புலவரின் துணையும் தேவையில்லை. இருந்தும்கூட இங்கு காந்தி போதிய அளவு மறுபரிசீலனைக்கு ஆளாக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

காந்தியின் மறைவுக்குப்பின் இந்திய சமூகக் கருத்துலகில், கடந்த நாற்பது வருடங்களில், இடதுசாரிச் சிந்தனைகளை விளம்பரப்படுத்தும் பல சொற்றொடர்கள் பிரபலமாகிவிட்டன. இந்தச் சொற்றொடர்களை உருவாக்கியவர்களும் பரப்பியவர்களும் இந்திய மக்களை இன்றுவரையிலும் பெரும் அளவுக்குப் பாதித்துவிடவில்லை. ஆனால் கருத்துலக ஆய்வுகளிலும் புத்தகங்களின் உலகங்களிலும் மாநாட்டுக் கருத்தரங்குகளிலும் இந்தச் சொற்றொடர்களும் இந்தச் சொற்றொடர்களைச் சார்ந்த மேம்போக்கான தத்துவ விவரிப்புகளும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதன் விளைவாக, சிந்தனையாளர்கள் மேம்போக்காக இரு கூறாகப் பிரிக்கப்பட்டுவிட்டனர். ஒன்று, முற்போக்குவாதிகளின் முன்னணிப் படை; மற்றொன்று, இந்தப் படையில் சேர்ந்து, யார் யாருக்குச் சீருடை வழங்க முடியவில்லையோ அவர்கள் அனைவரும் பிற்போக்குவாதிகள். ஆனால் வாழ்வின் தளத்திலோ இந்த முற்போக்குவாதிகளும் பிற்போக்குவாதிகளும் கூடிக் கலந்து கிடக்கிறார்கள். இருவருமே எண்ணங்களின் உலகில், கருத்துகளின் உலகில், புத்தகங்களின் உலகில் தொழில்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பிற்போக்குவாதிகளிலிருந்து முற்போக்குவாதிகளை இனம் கண்டு கொள்வது எப்படி? அதற்கு எளிமையான வழி ஒன்று உருவாயிற்று. இடதுசாரிச் சிந்தனைகளைச் சார்ந்தவை என்று கருதப்படும் சொற்றொடர்களை ஒருவன்மீது வீசவேண்டும். அந்தச் சொற்றொடர்கள் அவன்மீது ஒட்டிக் கொள்ளும் என்றால், அந்த அளவுக்கேனும் முற்போக்கு மோஸ்தரின் ஈரப்பசையுடன் அவன் இருந்தால், சந்தேகமே இல்லை, அவன் முற்போக்கு வாதிதான். வீசப்பட்ட சொற்றொடர்கள் உதிர்ந்துவிட்டால், அப்போதும் சந்தேகமே இல்லை, அவன் பிற்போக்குவாதிதான்.

இன்று நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கிழவர் இந்த முற்போக்கு மோஸ்தரின் சொற்றொடர்களை ஏற்க மறுத்து அவற்றை உதிர்த்துக்கொண்டு நிற்கிறார். அவர் பிற்போக்குவாதி என்று தீர்மானிப்பதற்கு வேறு என்ன சோதனை வேண்டும்! இந்த மனப்போக்கு அவரை உதாசீனப்படுத்தக் காரணமாயிற்று. சொற்றொடர் சோதனையின் மூலம் ஒருவன் பிற்போக்குவாதி என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அதன் பின் என்ன செய்ய வேண்டும்? பிற்போக்குவாதியைக் கிழித்து நாட்ட வேண்டும். கிழித்து நாட்டுகிறவன் எவ்விதக் கோட்பாடும் இல்லாமலே, தத்துவ பலம் இல்லாமலே, செயல்பாடு இல்லாமலே, பிற்போக்குவாதியைக் கிழித்து நாட்டுகிறான் என்பதினாலேயே, முற்போக்குவாதியும் ஆகிவிடுகிறான். எவ்வளவு சுலபமான பதவி உயர்வு!

எந்தப் பெரும் வாழ்விலும் அபஸ்வரங்கள் உள்ளன. காவியத்தில், கற்பனையின் தளத்தில்கூட, ஒரு முழுமையான கதாநாயகனைக் கவிஞனால் படைத்துக் காட்ட முடிந்து விடவில்லை. எங்கோ ஒரு சிறு கோணலேனும் விழுந்துவிடுகிறது. கவிஞனும் பரிபூரணத்திற்கு ஏங்கும் மனிதனே அன்றி, பரிபூரணத்தை எட்டிவிட்ட பரிபூரணன் அல்லன். காந்தியின் வாழ்விலும் அபஸ்வரங்கள் உள்ளன. இந்த அபஸ்வரங்கள் நம்மால் சற்றும் கூச்சம் இன்றிக் கண் திறந்து பார்க்கப்பட வேண்டியவை. பல முரண்பாடுகள், ஒரு சில பாரபட்சங்கள், தந்திரங்கள், வழுக்கல்கள், சறுக்கல்கள் எல்லாம் உள்ளன. திருத்தொண்டர் என்றோ புனிதர் என்றோ எடுத்துக்கொண்டால் கூர்மையாகிவிடும் குறைகள். அரசியல்வாதி என்று எடுத்துக்கொண்டால் மங்கிப் பின்னொதுங்கிப் போகும் குறைகள். மலைச் சிகரத்தில் விஷச் செடிகள் போல் இவை தெரிகின்றன. மலைச் சிகரத்தின் அழகுகளை, வானம் அளாவி நிற்கும் அதன் கோலத்தை, எவனுக்கு முழுமையாகப் பார்க்கத் தெம்பு இருக்கிறதோ அவன் விஷச் செடிகளை விஷச் செடிகளாகக் காண்பதில் எவ்விதத் தவறும் இல்லை. மகோன்னதம் அந்த அளவுக்கு மாசுபடட்டும். பெருமையின் நிமிர்வுகள் அந்த அளவுக்குக் குறையட்டும். அவர் வற்புறுத்தி வந்த சத்தியம், ஈவிரக்கமற்ற அந்தச் சத்தியம், அவரையும் தராசில் நிறுத்தட்டும். அனைத்தையும் முழுமையாகக் கண்டு சுதந்திரமான முடிவுக்கு வருவது ஒன்று; விழத்தட்டுவதற்காக ஓட்டைகளை, அபஸ்வரங்களை, பலவீனங்களைக் கண்டுபிடிப்பது மற்றொன்று. இடதுசாரிகளாயினும் சரி, மேலோட்டமான வலதுசாரிகளாயினும் சரி, காந்தியை விழத் தட்டுவதற்குரிய கீறல்களை முன்வைத்தே, அதிகமும் அவற்றிற்கு அழுத்தம் தந்தே பேசியிருக்கின்றனர்.

நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்த விதமான உறவு கொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். மேற்கத்தியச் சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் கஷ்டங்கள் நம்மையும் நமது நட்பையும் சுற்றங்களையும் பிடுங்கியிருக்கின்றன. நாம் வாழ்ந்திராத காலத்தின் கொடுமைகளையும் நாம் அறிந்திராத மக்களின் துன்பங்களையும் இலக்கியத்தின் மூலம் அனுபவப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த அனுபவங்களின் பிரக்ஞை ஒருவனுக்கு இருக்கும் எனில், அவன் காந்தியை எதிர்கொள்ள சகல தகுதிகளும் உள்ளவனாக இருக்கிறான். தத்துவச் சிறையிலிருந்து அவரைப் பார்க்காமல் வாழ்க்கைச் சோதனைகளின் துன்பச் சுழிப்பிலிருந்து நமக்கு அவரைப் பார்க்கத் தெரிய வேண்டும். அவரை நிலைநாட்டுவதற்காகவோ துதிப்பதற்காகவோ வணங்குவதற்காகவோ நாம் அவரைச் சந்திக்க மறுத்து, கிழித்து நாட்டவோ பிளந்து காட்டவோ அக்கறை கொள்ளாமல், உன்னதமான வாழ்வு ஒன்றைப் புரிந்துகொள்வதற்காக நாம் அவரைச் சந்திக்க வேண்டும்.

இன்று வாழ்வின் இந்தக் காலகட்டத்தில் உன்னதங்கள்மீது நாம் ஆயாசமே கொண்டிருக்கிறோம். உன்னதங்களைக் கண்டு, பரவசப்பட்டு அவற்றைப் பின்பற்றி வெகுதூரம் ஓடி, சூன்யத்தின் குழிக்குள் விழுந்து ஏமாந்து திரும்பிக்கொண்டிருப்பது நம்முடைய தொழிலும் அல்ல. இவர் வருவதற்கு முன்னரே புத்தரைக் கண்டு, யேசுவைக் கண்டு, நபிநாயகத்தைக் கண்டு, இவர்களையொத்த எண்ணற்ற உன்னதங்களைக் கண்டு நாம் சரித்திரத்தில் பரவசப்பட்டிருக்கிறோம். பரவசம் கொப்பளிக்க ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டிருக்கிறோம். பின் பரவசம் தந்தவர்களைக் காப்பாற்ற மிருக வெறிகொண்டு பரஸ்பரம் வெட்டிச் சாய்த்துக்கொண்டும் இருக்கிறோம். உன்னதங்கள் கண்ட ஊனங்கள் தொடர்கின்றன. அவர்கள் கண்ட அவலங்கள் தொடர்கின்றன. அவர்கள் விவரித்த ஸ்திதி இன்றும் நம் முன்னால் நிற்கிறது. நம்மை அச்சுறுத்துகிறது. நிலைகுலையச் செய்கிறது. ஆக, இன்றைய வாழ்வின் ஊனங்களுக்கு ஏதும் பரிகாரம் பெற முடியுமா என்று பார்ப்பதற்காகவும் நாம் காந்தியை அணுகுகிறோம்.

இவ்வளவு மனநிலைகளையும் முன்னிலைப்படுத்திப் பார்க்கும் ஒருவன், இன்றைய வாழ்வைச் சிறிது செப்பனிட்டுக் கொள்வதில் காந்தி மீண்டும் பங்குபெற முடியும் என்று எண்ண சாத்தியக்கூறுகள் உள்ளன. காந்தியைக் கற்கத் தொடங்கும் மாணவன் முதலில் மூன்று புத்தகங்களில் கவனம் கொள்ள வேண்டும். இது என் தேர்வு. ஆனால் இந்த வாசல் வழியாகத்தான் உள்ளே போகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒன்று: காந்தியின் சுயசரிதம். அதாவது ‘சத்திய சோதனை.’ இரண்டு: ‘இந்திய சுய ராஜ்ஜியம்.’ காந்தி தனது எண்ணங்களின் அடிப்படைகளை விளக்கும் புத்தகம். மூன்று: ‘காந்திஜி ஒரு சொற்சித்திரம்.’ காந்தியிடம் நேர்ப்பழக்கம் கொண்ட பலரும் தத்தம் அனுபவங்களைக் கூறியிருப்பவற்றின் தொகுப்பு.

பி. பி. சி. தயாரித்து அளித்தது. நம் மனத்தில் இருக்கும் கற்பனை காந்தியிலிருந்து உண்மையான காந்தியைப் பிரித்து எடுத்துக் கொள்ள இந்த நூல்கள் உதவும்.

வெள்ளையன் கையிலிருந்து இந்தியாவைப் பிடுங்குவது என்பது அவருடைய லட்சியங்களின் இறுதியும் அல்ல; மிக முக்கியமான லட்சியமும் அல்ல. அவருடைய கவனம் படிந்திருந்த எண்ணற்ற காரியங்களில் அதுவும் ஒன்று. வாழ்க்கையின்மீது அவர் கொண்டிருந்த கவனங்கள் பரந்துபட்டவை. உணவு, உடை, குடியிருப்பு, மருத்துவம், தன்னை மட்டுமே சார்ந்து நிற்பதன் மூலம் ஒருவன் பெறக்கூடிய சுதந்திரங்கள், தொழிலாளர் வாழ்வு, இந்திய விவசாயியின் நலன்கள், கல்வி, நாகரிகம், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், மதத்தின் அசுத்தங்கள், கழிவறையின் சுத்தங்கள் அல்லது அசுத்தங்கள், உடலைப் பேண வேண்டியதன் அவசியம், மரணத்தைச் சந்திப்பதற்கான அவசியங்கள், பிரம்மச்சரியம், ஆண் - பெண் உறவு, காமம், காமத்துக்கும் சில பொல்லாத உணவுகளுக்குமான உறவுகள் என எண்ணற்ற பகுதிகளில் அவரது சிந்தனைகள் வளர்ந்துள்ளன.

அவருடைய சோதனைகள் முக்கியமாக இரண்டு தேசங்களில் நடைபெறுகின்றன. முதலில் தென்னாப்பிரிக்காவிலும் பின் இந்தியாவிலும். என்னை இழிவுபடுத்தக்கூடாது என்பதிலிருந்து இந்தப் போராட்டம் ஆரம்பித்து எங்களை யாரும் இழிவுபடுத்தக் கூடாது என்ற திசையை நோக்கி விரிகிறது. எவனும் எவனையும் இழிவுபடுத்தக்கூடாது என்ற ஆதர்சம் தோன்றி மனித விடுதலையே இறுதி லட்சியம் என விகாசம் கொள்கிறது. ரஸ்கினின் ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தபோது அதிலிருந்து முக்கியமாக மூன்று கருத்துகளை அவர் எடுத்துக்கொள்கிறார்.

1. எல்லோருடையவும் நலனில்தான் பாதிக்கப்பட்டவனின் நலனும் அடங்கியிருக்கிறது.
2. உழைப்பினால் வாழ்கிற தொழிலாளியின் வேலைக்கு இருக்கிற அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் இருக்கிறது.
3. உழுது பாடுபடும் குடியானவனின் வாழ்க்கையே உயர்வான வாழ்க்கை.
ஃபீனிக்ஸ் பண்ணையை அமைக்க இக்கருத்துகளே அவரைத் தூண்டின.


இம்மூன்று கருத்துகளும் சமூக முக்கியத்துவம் கொண்டவை. வேலை சார்ந்து ஒருவன் தாழ்வாகவோ உயர்வாகவோ கருதப்படுவானாயின் அது நாகரிக சமுதாயம் அல்ல. காலம் காலமாக வந்த ஏற்றத் தாழ்வுகள் மறைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்ற வாதம் உண்டு. அந்த வாதம் இன்று செல்லுபடியாகக்கூடியது அல்ல. ஏற்றத் தாழ்வுகள் மறைவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக நாம் மேற்கொள்ளும் போது மட்டுமே இந்த வாதம் செல்லுபடியாகும். ஜாதி, அதிகாரம், பணம் எனும் மூன்று தளங்களிலும் இந்த ஏற்றத் தாழ்வுகள் துலக்கமாக வெளிப்படுகின்றன. அதன்பின் ஒருவனின் தோற்றம், படிப்பு, குடும்பம், தேசம் சம்பந்தமான ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அதிகாரத்திலிருப்பவன் ஜாதியின் ஏற்றத்தாழ்வுகளை விமர்சிக்கும்போதே அவனுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறான். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராடும் குணம் முற்றாக மங்கிய நிலையில் நாம் இன்று இருந்துவருகிறோம். இத்தீமைக்கு எதிரான போராட்டத்தை உருவாக்க காந்தி இன்றும் நமக்குப் பெரும் ஆவேசத்தைத் தரக்கூடியவராக இருக்கிறார். ஏற்றத்தாழ்வுகளின் கொடுமைகளை வேறு எவருடைய மொழியிலும் கூறுவதைவிடவும் காந்தியின் மொழியில் மக்களிடம் எளிமையாக எடுத்துச் செல்ல முடியும். காந்தியின் இந்த முற்போக்கான முகத்திற்கு இன்று எந்தவிதமான பிரச்சாரமும் இல்லை. இன்றைய தலைமைக்குச் சகல மட்டங்களிலும் இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பேச்சாக மட்டும் சுருக்கி ஆதாயங்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காந்தியின் வாரிசுகள் என்று நம்பப்படுபவர்கள்கூட, காந்தியின் சமூக சாராம்சம் கொண்ட கருத்துகளைப் பரப்ப முற்படுவதில்லை.

மற்றொன்று, மதுவிலக்கு எனும் சீர்திருத்தம். காந்தி உருவாக்க முனைந்த சமுதாயத்திற்கும் என்னைப் போன்ற ஒரு படைப்பாளி கனவு காணும் சமுதாயத்திற்கும் வேற்றுமைகள் இடைவெளிகள் இருப்பது ஆச்சரியம் அல்ல. உன்னதமான கோட்பாடுகளை உறுதியாகக் கடைபிடித்த தன் மூலம் சில உரமான, திட்பமான, அசைக்க முடியாத நம்பிக்கைகளைக் கொண்டவர் காந்தி. இதுபோன்ற வாழ்க்கையை மேற்கொள்ளாதவர்கள் இந்த எண்ணங்களின் ஆழத்தை உணர முடியாது. என்னளவில் நான் மனிதன்; சாதாரண மனிதன். நியாயமான எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவன். விசேஷ சந்தர்ப்பங்களில், சுய விவேகத்தால் எல்லைகள் வரையறுக்கப்பட்ட கேளிக்கைகளிலும் ஈடுபடலாம் என்ற எண்ணம் கொண்டவன். ஆனால் இன்று மனிதனுக்கும் மதுவுக்குமான உறவு காந்தியின் கோட்பாட்டிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது மட்டும் அல்ல; என்னைப் போன்ற சாதாரண மனிதனின் கனவுகளிலிருந்தும் சபலங்களிலிருந்தும் வெகுதூரம் விலகிச் சென்று விட்டது. இந்தத் தேசத்தில்தான் மதுவிலக்குப் பிரச்சாரம் ஒரு காலத்தில் மிகத் தீவிரமாக நடந்தது என்றால் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதை நம்புவார்களோ என்னவோ! அன்று அந்தப் பிரச்சாரம் பத்திரிகைகளின் பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. சினிமாவிலும் நாடகங்களிலும் இந்தப் பிரச்சாரம் இடம்பெற்றிருந்தது. இந்தத் தேசத்தில்தான் மதுக்கடைகளுக்கு முன்னால் வக்கீல்களும் ஆசிரியர்களும் டாக்டர்களும் எழுத்தாளர்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் மறியல் செய்தார்கள். பூரிப்புடன் சிறைத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்கள். எப்போது இந்தப் பானத்தை, அதன் மிக மோசமான சேர்க்கைகளில் - உடலை அரித்துத் தின்றுவிடும் சேர்க்கைகளில் -

தெருவுக்கு இரண்டு கடைகளாகத் திறந்து எல்லோருடைய வாயிலும் ஊற்ற ஆரம்பித்தோமோ அன்று அதற்கெதிரான சகல எதிர்ப்புகளையும் முடக்கிக்கொண்டுவிட்டோம். இன்று தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் அன்றாடச் சம்பாத்தியத்தை இக்கொடிய பழக்கத்தில் இழந்து தம் உடலையும் முற்றாகச் சீரழித்துக்கொண்டு, தத்தம் குடும்பங்களையும் எல்லையற்ற துயரத்திற்கு ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை உண்மையாக நம்மைப் பாதிக்கும் என்றால் இத்தீமை பற்றிக் காந்தி கூறியிருக்கும் கருத்துகளும் இதனை ஒழிக்க அவர் வகுத்திருக்கும் திட்டங்களும் இன்றும் நம்மை வெகுவாக ஆட்கொள்ளும்.

இந்திய வாழ்க்கை மேற்கத்திய நாகரிகத்தால் பாதிக்கப் படுவதை காந்தி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். வெள்ளையன் இந்தியாவில் அவனுடைய நாகரிகத்தைப் புகுத்தாமல், நமது நாகரிகத்தை முற்றாக ஏற்றுக்கொண்டு அதையே இங்கும் பரப்பிக்கொண்டும் இருப்பான் என்றால் அவர்கள் நம்முடன் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லக் கூட காந்தி ஒரு சமயம் முற்பட்டிருக்கிறார். ஆக, சுயராஜ்ஜியம் என்பதில் முக்கியமான அழுத்தம் இந்திய நாகரிகத்தை விழுங்க முற்படும் மேற்கத்திய நாகரிகத்தை விரட்டுவது என்பது. இதன் இரண்டு முக்கியமான அம்சங்கள்:
1. வாழ்க்கை பற்றி இந்தியனின் அடிப்படையான எண்ணங்களையே மேற்கத்திய நாகரிகத்தின் ஊடுருவல் தகர்த்து விடுகிறது.
2. இந்திய வாழ்க்கையில் பெரும் இயந்திரங்கள் ஊடுருவி அவற்றின் மிருகபலத்தைச் செலுத்த ஆரம்பிக்கின்றன.

உணவுக்கும் உடைக்கும் குடியிருப்புக்கும் இன்னும் பிற காரியங்களுக்கும் தன் உழைப்பை தன் கைகளையே சார்ந்து நின்று, தானே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டிருந்த மனிதன், சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், இயந்திரங்களின் உறுப்பாகி உடல் உழைப்பை முற்றாகத் துறந்து, புறச்சக்தி ஒன்றுக்கு மண்டியிட்டு நிற்கிறான். இதை மிகக் கேவலமான நிலையாகக் காந்தி கண்டார். இது மிக ஆழமாகப் பரிசீலனை செய்துபார்க்க வேண்டிய வாழ்க்கை நிலையாகும். மனிதன் மீண்டும் எளிமைப்பட வழி உண்டா? தன் கரங்களை நம்பும் மார்க்கம் அவனுக்கு உண்டா? தன்னையும் தனக்குச் சேவகம் செய்யும் சிறு இயந்திரங்களையும் வைத்துக்கொண்டு பெரும் இயந்திரங்களின் மரணப் பிடியிலிருந்து அவன் இனி விமோசனம் பெற முடியுமா? பெரும் யந்திரங்களின் விஷக் கழிவுப் பொருள்களை உண்ணாமல் சுவாசிக்காமல் இனி அவனுக்கு இருக்க முடியுமா? யந்திரங்கள் அள்ளி அள்ளித் தரும் வசதிகளை அனுபவிக்கும் மோகத்துக்கு ஆட்பட்டுவிட்ட மனிதனை இனி எளிமையின் உன்னதங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்க முடியுமா? யந்திரங்களின் சக்கரங்களும் மனிதனின் பேராசைகளும் சபலங்களும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. நடந்து வந்த பாதையை மீண்டும் திரும்பி நடந்து கடப்பது சாத்தியமற்ற காரியமாகவே தோன்றுகிறது. ஆனால் குறைந்தபட்சம் நின்று, கடந்த வந்த பாதை பற்றியும் போகும் திசை குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இன்று உலகெங்கும் பல அறிஞர்களும் இந்த மறுபரிசீலனையை வற்புறுத்தி வருகிறார்கள். இந்த மறுபரிசீலனையை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நமக்கும் விவேகம் இருக்கும் என்றால் அப்போது காந்தி ஆற்றக்கூடிய பங்கும் மிகப் பெரிதாக இருக்கும்.

காந்தி ஒரு ஆழ்ந்த மதவாதி. எல்லா மதங்களின் அடிப்படையான கூறுகளும் ஒன்றே என்ற நம்பிக்கை கொண்டவர். தன் பிறப்பின் மூலம் தன்னிடம் வந்து சேர்ந்த இந்து மதத்தின் மூடப் பழக்கவழக்கங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அவரளவில் பிற்போக்கானவை என்று கருதிய அம்சங்களையும் களைந்து, சமூக வாழ்வு செம்மை பெறுவதற்கான தொண்டையும் வழிகளையும் வற்புறுத்தும் மதக் கோட்பாட்டை அவர் உருவாக்கிக்கொண்டார். கடவுளைக் காண்பதைத் தனது இறுதி லட்சியம் என்றும் சொல்லிவந்தார். அவ்வப்போது தான் கடவுளை இன்னும் காணவில்லை என்பதையும் தெரிவித்துக்கொண்டிருந்தார். இறுதிவரையிலும் கடவுளைக் காண்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அமையவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. மனிதத் தொண்டு மூலமே கடவுளைக் காணமுடியும் என்ற அவரது நம்பிக்கையும் செயல்பாடுமே இன்று நாம் அவரைப் பொருட்படுத்திப் பேசும் முகாந்திரத்தை உருவாக்கியிருக்கின்றன. மனிதத் தொண்டை விட்டுவிட்டு வேறு வழிகளில் அவர் கடவுளைக் காண முயன்றிருந்தால், அப்போது அவர் கடவுளைக் கண்டிருப்பாரா என்பதை நம்மால் கூற முடியாது. நாம் அவரைக் கண்டு கொண்டிருக்கமாட்டோம் - இன்று காணும் அர்த்தத்தில் -

என்பது தெளிவு. அந்த ஆத்மீக வாழ்வின் ஒரு பகுதியாகப் பிரம்மச்சரியம், சைவ உணவு போன்ற கட்டுப்பாடுகளையும் அவர் வற்புறுத்திவந்தார்.

சாதாரண மனிதனைப் பொறுத்தவரையிலும் பிரம்மச்சரியம் என்பது ஒரு செயற்கையான, இயற்கையை விவேகமின்றிச் சண்டைக்கு இழுக்கும் சாகசம் என்றே நினைக்கிறேன். பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிக்க முயலும் மனிதர்கள் பெரும் அளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டால், அவர்களுடைய உலகத்தில் நடக்கக்கூடிய ஊழல்களையும் ஒழுக்கக் கேடுகளையும் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. மேலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரையும் அவர்களது குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ள அளவுக்குக் கடவுள் விவேகமானவர் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

அடுத்து சைவ உணவுக்கும் ஆத்மீக வாழ்க்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆத்மீகச் சிந்தனையாளர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, கிழக்கத்திய நாடுகளில் மட்டுமல்ல, உலகெங்கும் இருந்துவந்திருக்கிறார்கள். இருந்துகொண்டிருக்கிறார்கள். இந்து முனிவர்களுக்குக் கொஞ்சமும் குறையாத கிறிஸ்துவ முனிவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இதற்கு மேல் முஸ்லிம் முனிவர்களும் சூஃபிகளும் இருந்துவந்திருக்கிறார்கள். ஆல்டக்ஸ் ஹக்ஸிலி யின் றிமீக்ஷீமீஸீஸீவீணீறீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்குச் சைவ ஆத்மீகவாதிகள் இருந்திருக்கிற அளவுக்கு, ஒருக்கால் அதற்கு மேலும் அதிகமாக, அசைவ ஆத்மீகவாதிகள் இருந்துவந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மனிதன் எந்தவிதமான உணவை உண்கிறான் என்பதல்ல; உணவுக்கும் அவனுக்குமான உறவை எப்படி வைத்துக்கொண்டிருக்கிறான் என்பதே முக்கியமானது.

இதேபோல் காந்தியின் தர்மகர்த்தா சித்தாந்தமும் அஹிம்சை சித்தாந்தமும் இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முன்னால் ஆழ்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. மனிதனின் பேராசைகளையும் சொத்தின் மீது அவன் கொண்டிருக்கும் பற்றையும் ஆழமாகவே உணர்ந்திருந்த காந்தி, தர்மகர்த்தா சித்தாந்தத்தை உருவாக்கியது விந்தையாகவே இருக்கிறது. காந்தியின் பிற கருத்துகளைப் பார்க்கும் போது உழுது பயிரிடும் விவசாயிக்கே நிலங்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்ற கருத்தே அவர் முற்றிலும் வற்புறுத்தியிருக்க வேண்டிய விஷயமாக எவருக்கும் படக்கூடும். இந்திய வாழ்க்கையை மேம்படுத்த மிக அவசியமான அடிப்படையான இந்தச் சீர்திருத்தத்தை அவர் ஏன் ஏற்றுக்கொள்ளாது போனார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள்மீது நாம் மெய்யான அக்கறை கொள்ளும்போது காந்தியின்மீதும் நாம் தீவிரமான அக்கறை கொள்வோம். அவருடைய எண்ணங்களில் இன்று நாம் ஏற்றுக்கொள்ளும் பகுதி கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதேபோல் இன்று நாம் நிராகரிக்கும் பகுதியும் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். நாளை நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப இந்நிலைகளில் மாறுபாடும் ஏற்படலாம். ஆனால் இன்று திறந்த மனத்துடன் அவரைப் பார்ப்பவர்களுக்கு, சில அடிகளேனும் முன்னால் இட்டுச் செல்ல, அவரது வாழ்க்கையும் சிந்தனைகளும் பயன்படும் என்பதை மறுக்க முடியாது.

[திருச்சி புனித பால் சமய போதனைக் கல்விக்கூடத்தில் காந்தி பற்றி நடந்த கருத்தரங்கில் 1985 மார்ச் 3ஆம் தேதி படிக்கப்பட்ட கட்டுரை.]

(ஞானரதம், 1986)

Camera