சு.ரா. பற்றிய பார்வைகள்

சுந்தர ராமசாமி: இந்தியப் பண்பாட்டின் தமிழ் முகம்

சுயாந்தன்

உன் கவிதையை நீ எழுது என்று எண்பதுகளில் ஒலித்த அழுத்தமான கவிதைக் குரலுக்குச் சொந்தக்காரர் சுந்தர ராமசாமி. அந்தக் குரலால் வழிநடத்தப்பட்டு அவரது வழிவந்த மாணாக்கர்கள் பலரை இன்றும் தமிழ் எழுத்துலகில் நாம் காணமுடியும்.

Camera
Camera

பிறகு பார்க்கவில்லை

ஆற்றூர் ரவிவர்மா

தென்னிந்தியப் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பற்றி எம். கோவிந்தனின் தற்செயல் பேச்சிலிருந்துதான் சுந்தர ராமசாமி என்னும் பெயரை முதன்முதலில் கேள்விப்பட்டேன்.
அது என் தமிழ்ப் படிப்பின் தொடக்க காலம்.
பேருந்து மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள், தினத்தந்தி, விகடன், லக்ஷ்மி போன்றவர்களின் நாவல்கள் . . .

இவைதான் பாடங்கள். மலையாளத்தில் நாங்கள் செய்துவரும் எழுத்து முறையிலான படைப்புகள் தமிழிலும் இருப்பதாக அறிந்தபோது வாசிக்கும் ஆர்வம் தோன்றியது. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்னும் சுந்தர ராமசாமியின் நாவலைக் குறித்து கோவிந்தன் பலமுறை பேசியிருக்கிறார்.

கல்லூரியில் பணிபுரியும் எனது சக ஊழியர்களான தமிழாசிரியர்களிடம் கேட்டபோது ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னும் நாவலை எழுதியவர் என்பதற்கு மேல் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அது நாகர்கோவிலைப் பற்றிய கதையென்பதாகவும் சுந்தர ராமசாமி ‘காகங்கள்’ என்றொரு இலக்கிய விவாத அரங்கினைத் தன் வீட்டு மாடியில் நடத்திவந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். அவ்வப்போது கூடிக் கலகம் செய்யும் காகங்கள்.

சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும்.
‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலை மொழிமாற்றம் செய்த நோட்டுப் புத்தகத்துடன் நான் நாகர்கோவிலை அடைந்தேன். வரும் விவரத்தை முன்கூட்டியே சுந்தர ராமசாமிக்குத் தெரிவித்திருந்தேன். பஸ்ஸைவிட்டு நான் இறங்கி நின்றதும் ஒரு சிறிய காரை அவரே ஓட்டிக்கொண்டு வந்து என் பக்கத்தில் நிறுத்தினார். உயர்ந்து, மெலிந்து, நடனக் கலைஞரைப் போன்ற தோற்றத்துடன் ஒருவர். சுந்தர ராமசாமி. ஒல்லியான காட்டு மூங்கில் கூட்டம் போன்ற மரங்கள் நிழல் தரும் வளாகத்திலுள்ள தன் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார்.

என் மொழிபெயர்ப்பை இரவு பகலாக வாசித்தார். வரிக்கு வரி சரிபார்த்தார். கருத்து முரண்படும் இடங்களில் எந்த தாட்சண்யமுமில்லாமல் விவாதம் செய்தார். படைப்பு ரீதியிலான வர்ணனைகளைத் தொட்டுச் சென்றார். மின்சாரம் தடைபட்டபோது எமர்ஜென்சி லைட் வைத்து . . . நான் சார்மினார் சிகரெட்டுகளைப் புகைத்து ட்ரேயை நிறைத்தபடியே புதிய தமிழுக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகு மலையாள எழுத்தாளர்களையும் நூல்களையும் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். ஒரு பட்டியல் தயார்செய்து மலையாளத் தொடர்களை மனமொன்றிப் பார்த்தார். சுந்தர ராமசாமியின் துணைவி கமலாவுக்கும் கொஞ்சம் மலையாளம் பேசத் தெரிந்திருந்தது.

தமிழ்க் கவிதைகளைப் பற்றியும் சுந்தர ராமசாமி சொன்னார். வாசித்துக் காட்டினார். ஞானக்கூத்தனையும் சி. மணியையும் பற்றி அப்போதுதான் நான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். இவர்களுடையதும் மற்றும் பலருடையதுமான கவிதைத் தொகுப்புகளைத் தந்தார். முதன்முதலில் ஜெயமோகனையும் இங்கே வைத்துதான் பார்த்தேன். ஒரு பையன். மலையாள இலக்கியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தெரிந்துவைத்திருக்கிறான்.

இலங்கையிலிருந்து ஒரு நண்பரும் வந்திருந்தார். அவர் எனக்கு ‘மரணத்தில் வாழ்வோம்’ என்ற இலங்கைத் தமிழ்க் கவிதைத் தொகுப்பைத் தந்தார். மலையாளத்தில் சில கவிதைகளை மொழிமாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். புளியமரத்தின் கதை நிகழும் பல இடங்களை நடந்து சென்று பார்த்து அனுபவித்தேன். பஸ் நிறுத்தும் இடத்திலிருந்த பெஞ்சிலமர்ந்து சுந்தர ராமசாமியும் நானும் ஜெயமோகனும் சேர்ந்து தமிழ் கூறு நல்லுலகை நிந்தனை செய்தோம், பாராட்டினோம்.

திருச்சூருக்கு முதல் முறையாக சுந்தர ராமசாமி வந்தது ஒரு வரவேற்பு நிகழ்வுக்காக! கவிதைக்கான ஆசான் விருது முதன்முதலில் சுந்தர ராமசாமிக்குக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு கோவிந்தனும் வருவதாகக் கூறியிருந்தார். ஏதோ அசௌகரியம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்துவிட்டார். அனந்தமூர்த்தி தாமதமாக வந்து சேர்ந்தார். சுந்தர ராமசாமிக்கு கோவிந்தனைப் பார்க்க வேண்டும். நானும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனுமாகப் புறப்பட்டோம். பஸ் ஏறியும் நடந்தும் வீட்டையடைந்தோம். அப்போது துணை வேந்தராயிருந்த அனந்தமூர்த்தி வேறு வழியாகக் காரில் வந்து கோவிந்தனைப் பார்த்துவிட்டு அப்போதுதான் திரும்பியிருக்கிறார். மலையாளத்துடனும் கோவிந்தனுடனும் சுந்தர ராமசாமி கொண்டுள்ள மதிப்பை, தொடர்ந்து நடந்த சம்பாஷணையிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. திரும்பி வந்து சேரும்போது மிகவும் பிந்திவிட்டது.

திருச்சூரில் என் வீட்டில்தான் சுந்தர ராமசாமி தங்கினார். விசேஷமாக அவருக்கு எந்தத் தேவையுமில்லை. வீட்டின் கட்டுமானப் பணி பாதிதான் நடந்திருந்தது. வீட்டைச் சுற்றிலுமிருந்த வயலையும் அமைதியையும் பார்த்து சந்தோஷப்பட்டார். நிகழ்ச்சியின்போது எந்த மொழியில் பேசுவது என்று யோசனை செய்தார். தனது முறை வந்ததும் நல்ல மலையாளத்தில், எளிமையாக, தான் எழுத்துலகுக்கு வந்து சேர்ந்தது எப்படி என்பதை விவரித்துச் சொன்னார். கூட்டத்தினருக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாள்களுக்குப் பிறகு மீண்டும் வந்தபோது இங்கே நிறைய வீடுகள் இருப்பதைப் பார்த்து அவருக்கு வருத்தமாக இருந்தது.

சென்னையில் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணனின் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். என்னுடன், அப்போது சென்னையில் வசித்திருந்த மாதவன் அய்யப்பத்தும் கே.சி. நாராயணனும் வந்தார்கள். மலையாள எழுத்தாளர்களைக் கண்டதும் சுந்தர ராமசாமிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

புதிய தமிழ் எழுத்தாளர்கள் அங்கே நிறைய இருந்தனர். உறவினர்களைவிட அதிகமாக! தற்காலத் தமிழ் அகராதியை மிகுந்த சிரமம் எடுத்துத் தயாரித்திருந்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணனையும் புகழ் பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனையும் சுகுமாரனையும் மேலும் பலரையும் அங்கு வைத்துதான் பார்த்தேன். கிட்டத் தட்ட ஒரு புதிய இலக்கியத் திருவிழா போலிருந்தது. சுந்தர ராமசாமி வழக்கம்போலவே அமைதியான தோற்றத்துடன் எங்களை மணமக்களுடன் அமர வைத்துப் புகைப்படம் எடுத்த பிறகுதான் விட்டார்.

‘ஜே.ஜே: சில குறிப்புக’ளில் வரும் ஜே.ஜே.யைப் போல்தான் சுந்தர ராமசாமியும் என்று எனக்குத் தோன்றியதுண்டு. சிந்தனை, வாக்கு, செயல் ஆகியவற்றை இணைப்பதற்கான தீவிர முயற்சி. தன் குழப்பமான காலகட்டத்திலும்கூட எதையும் மிகைப்படுத்துவதில்லை, இனிப்புச் சேர்ப்பதில்லை.

கடைசியாகப் பார்த்தது சென்ற வருடம¢ இதே சமயத்தில் அமெரிக்காவில் மாஸாசூசெட்ஸில் ஸ்டாஃபோர்ட் எனும் சிறு நகரில் வைத்து. கடைசி மகள் தங்குவுடன் தங்கியிருந்தார். அதே முகத் தெளிவு, அன்பான விசாரிப்புகள். மனைவி கமலாவுமிருந்தார். தனது அமெரிக்க அனுபவங்களைச் சொன்னார். சாந்தாகுரூசில் தங்கியிருக்கும்போது பெரிய புத்தகக் கடைகளில் சூடு ஊட்டப்பட்ட சுகமான வாசிப்பு அறைகளில் செலவிடும் பகல் பொழுதுகளைப் பற்றிச் சொன்னார். நீண்ட தூரம் நடப்பதைப் பற்றியும். கன்னியாகுமரியைப் போல் அமைதியான அட்லாண் டிக் கடற்கரையிலும். தமிழ் முறைப்படி எங்களை உபசரித்தார். கார் வரைக்கும் வந்து வழியனுப்பினார். பிறகு பார்க்கவில்லை.

(அக். 30, 2005 கலா கௌமுதி)
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
காலச்சுவடு, டிசம்பர் 2005

Camera

முதலும் கடைசியும்

அ. முத்துலிங்கம்

எல்லோரும் சு.ரா. என்று அன்போடு அழைக்கும் திரு. சுந்தர ராமசாமியை எனக்குக் கடந்த பத்து வருடங்களாகத்தான் தெரியும். தெரியும் என்றால் கடிதம் மூலம்தான். முதன்முதல் நான் அவரைச் சந்தித்தது 2000 ஆண்டு சான்டாக்ரூஸில். ஒரு நாள் முழுக்க அவருடன் கழித்தேன். அவருடைய துணைவியாரின் விருந்தோம்பல் மனதை நெகிழவைத்தது. என் வாழ்நாளில் அது மறக்க முடியாத ஒரு நாளாகி விட்டது.
நான் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு அவர் 2001ஆம் ஆண்டு மே மாதம் டொரன்டோவுக்கு வருகை தந்தார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், டொரன்டோ பல்கலைக்கழகத்தின் தென்னாசியக் கல்வி மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார். அந்த வைபவத்தில் அவர் பேசியது என்றென்றும் என் மனதில் நிற்கிறது. ‘என் மண்ணும் என் மொழியும்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை அவருடைய வாழ்நாளிலேயே முக்கியமான ஒன்று.

அடுத்த நாள் அவரை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தேன். அவருடைய உணவுப் பழக்க வழக்கங்கள் எனக்குத் தெரியாது. என் மனைவி திண்டாடிப்போனார். அவர் யாழ்ப்பாணத்து முறையில் மரக் கறி உணவு தயாரித்திருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கோழிக் கறியும் வைத்திருந்தார். சு.ரா., அவருடைய மனைவி கமலா, மகள் தங்கு, அவர் கணவர், இன்னும் பல தமிழ் அன்பர்களும் கூடியிருந்தார்கள். இருபது பேருக்கு மேல் இருக்கும். எல்லோரும் மேசையிலிருந்து ஒன்றாக உணவருந்த முடியாது. ஆகவே buffet முறை நடை முறைப்படுத்தப்பட்டது. மேசையில் அவர்களே தட்டை எடுத்து அவர்களே பரிமாறிக் கொண்டு உண்ண வேண்டும். எல்லோரும் தங்களுக்கு வேண்டியதைப் பரிமாறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.

கடைசியாக சு.ரா.வும் பரிமாறிக் கொண்டு அமர்ந்தார். நானும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டேன். அப்போது சு.ரா. ‘முத்துலிங்கம்’ என்று என் முழுப் பெயரையும் சொல்லி அழைத்து ‘ஒரு ரகஸ்யம்’ என்றார். எப்பொழுதும் அவர் என் முழுப் பெயரைச் சொல்லியே அழைப்பார். அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தனக்கு மணமாகி 45 வருடங்களுக்கு மேலாகிவிட்டது; இத்தனை வருடங்களில், தன் தட்டில் தானே பரிமாறிச் சாப்பிடுவது இதுவே முதல் தடவை என்றார். எந்த நேரம் சாப்பிடுவது, என்ன சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்று அத்தனையும் கமலாவே பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். அன்று அவர் தனக்குத் தானே பரிமாறிச் சாப்பிட்டது முதல் தடவை. அதுவே கடைசித் தடவையாகவும் இருக்கும்.

தொலைபேசியில் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் சு.ரா.விடம் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அவர் வழக்கம்போல “முத்துலிங்கம், நான் சின்னப் பையனாய் இருந்தப்போ ரொம்ப நோய்ப்பட்டு இருப்பேன். பள்ளிக்கூடத்துக்கும் போக முடியாது. ஆனால் இப்ப, வயது கூடக்கூட ஆரோக்கியம் கூடிக் கொண்டே போறது. டெய்லி வாக்கிங் போறேன்” என்பார். கேட்க சந்தோசமாக இருக்கும்.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் Edward P. Jones எழுதிய The First Day என்ற சிறுகதையை நான் அப்பொழுதுதான் தமிழில் மொழிபெயர்த்து அது பிரசுரமாகியிருந்தது. அவரும் அதே கதையை ஆங்கிலத்தில் படித்திருந்தார். என்னுடன் பேசியபோது தனக்கு அந்தக் கதை பிடித்திருந்ததாகவும், அதைத் தான் மொழிபெயர்க்க நினைத்திருந்ததாகவும், ஆனால் நான் முந்திக்கொண்டுவிட்டேன் என்றும் சொன்னார். நான் “அட, நீங்கள் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமே” என்றேன். “இல்லை, நல்லாவே செய்திருக்கிறீர்கள்” என்றார் பெருந்தன்மையாக.

எங்கள் உரையாடல் ஒரே பொருளில் நிற்பதில்லை. தாவித் தாவிச் செல்லும். நான் என்னவோ சொல்ல நினைப்பேன், அவரும் அதே நிமிடத்தில் ஏதாவது பேச ஆரம்பிப்பார். அவர் என்ன புத்தகம் படிக்கிறார் என்று நான் கேட்பேன். சொல்வார். நான் படிக்கும் புத்தகம் ஆங்கிலப் புத்தகமாயிருந்தால் அவர் விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்வார். நானும் அப்படியே செய்வேன். அப்படி அனுப்பத் தவறினால் நினைவூட்டுக் கடிதம் வந்துவிடும். புத்தகத்தைப் பற்றிய முழு விவரமும் அவருக்குத் தேவை.

டொரன்டோவிலிருந்து வெளிவருவது ‘காலம்’ சஞ்சிகை. அதன் இருபத்தைந்தாம் இதழை ஒரு சிறப்பு மலராகக் கொண்டுவர வேண்டும் என அதன் ஆசிரியர் செல்வம் விரும்பினார். அவர் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த இதழை நடத்திவருகிறார். ‘காலம்’ பத்திரிகைக்காக சு.ரா.விடம் ஒரு சிறுகதை வேண்டுமென்றேன். மிகவும் யோசித்துத்தான் கேட்டேன். சமீபத்தில் அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தார். “காலம் இதழுக்காக நீங்கள் கேட்டு நான் எப்படி மறுப்பது?” என்றார். நான் அப்படியே விட்டுவிட்டேன். சு.ரா. ஒரு வாக்குக் கொடுத்தாரென்றால் எப்படியும் அதை செய்து முடித்துவிடுவார். அது எனக்குத் தெரியும். ஒரு மாதம் கழித்து மெலிதாக நினைவூட்டினேன். சில நாட்களில் அனுப்புவதாகச் சொன்னார். கடைசித் தேதி நெருங்கிக்கொண்டே வந்தது. மிகவும் தயக்கத்துடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். அடுத்த நாளே கதை வந்து சேர்ந்தது. அவர் இரவிரவாக அதை எழுதியிருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அதிகம் தொந்தரவு கொடுத்துவிட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னை வருத்தியது. அந்தக் கதையின் தலைப்பு ‘ஜகதி’. அது ‘காலம்’ இதழில் ஒக்டோபர் மாதம் வெளியானது. ஆனால் அதை அவர் பார்க்கவில்லை. அதுவே அவர் எழுதிய கடைசிச் சிறுகதை.

இந்தச் சிறுகதை எனக்குக் கிடைத்த தேதி செப்டம்பர் 12. மிகச் சிறியதாக இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தைக் கூர்மையாகச் சொன்ன கதை. நான் அந்தக் கதையைப் பற்றி அவருடன் இரண்டு நாள் கழித்து, 14ஆம் தேதி தொலைபேசியில் பேசினேன். இரண்டு விசயங்களை அவரிடம் கூறினேன். கதை தொடங்குவதற்கு முன் வரும் கிராம வர்ணனை நீண்டதாக உள்ளதுபோல் தெரிகிறது என்றேன். அவர் அதை வர்ணித்த பிறகுதான் தன்னால் கதைக்குள் இறங்க முடிந்தது என்றார். இரண்டாவதாக இந்தக் கதைக்கும் அவருடைய முந்தைய கதையான ‘பள்ள’த்துக்கும் ஒற்றுமை இருக்கிறது என்றேன். சினிமா பைத்தியமான ஒரு தாய் தன் குழந்தையின் கண்ணைத் தோண்டிவிடுகிறாள். இந்தக் கதையில் ஒரு பைத்தியக்காரத் தாய் தன் குழந்தையைத் தாரிலே முங்கிக் குளிப்பாட்டி அதைக் கொன்றுவிடுகிறாள். இரண்டுமே தாய், பிள்ளை உறவைச் சொல்லும் கதை. “அப்படியா, உங்களுக்குக் கதை பிடித்திருக்கிறதா?” என்றார். “நிறைய” என்றேன். சரியாக ஒரு மாதம் கழித்து, அதே 14ஆம் தேதி, ஒக்டோபர் மாதம் அவர் இறந்து போய்விட்டார்.

அமெரிக்காவில் இருக்கும்போது சு.ரா. தன் இரண்டு மகள்களுடனும் மாறி மாறித் தங்குவார். அவர் கனெடிக்கட்டில் இளைய மகளுடன் தங்கியிருந்தபோது ஒரு நாள் அழைத்தேன். என்ன புத்தகம் படிக்கிறீர்கள் என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார். நான் அப்போது The Prophet of Zongo Street என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். இதை எழுதியது Mohammed Naseehu Ali என்பவர். ஆப்பிரிக்காவின் கானாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது நியூயார்க்கில் வாழ்பவர். அவர் ஓர் இசைக் கலைஞரும்கூட. நான் அலியின் புத்தகத்தைச் சிலாகித்துச் சில நிமிடங்கள் நிறுத்தாமல் பேசினேன். அவருடைய சிறுகதை ‘நியூயார்க்க’ரில் வெளியானபோது அதைப் படித்திருந்தேன். ஆகவே அவருடைய புத்தகம் வெளிவந்ததும் முதலாளாக நின்று வாங்கிப் படித்திருந்தேன். “அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார். நான் அதை அவருக்கு அனுப்புவதாகச் சொன்னேன். அவர் “வேண்டாம், வேண்டாம்” என்றார்.

முன்பொரு முறை Frank McCourt எழுதிய Angela's Ashes என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு நான் ஓயாமல் அது பற்றியே சு.ரா.விடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு surprise-ஆக இருக்கட்டும் என்று ஒரு புத்தகம் வாங்கி பார்சல் மூலம் அவருக்கு அனுப்பிவைத்தேன். அவர் ‘நன்றி’ என்றுவிட்டுத் தனக்குப் புதுப் புத்தகங்கள் அனுப்ப வேண்டாம் என்றார். அவர் இருக்கும் இடத்துக்குக் கிட்ட மிகக் குறைந்த விலைக்குப் பழைய புத்தகக் கடையில் என்ன புத்தகமும் வாங்கலாம் என்றார். ஆகவே அவருக்கு அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் ஒரு புத்தகமும் அனுப்பவில்லை. என்ன காரணமோ அலியின் புத்தகத்தை மட்டும் அவருக்கு எப்படியும் அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தேன். இளைய மகள் வீட்டில் ஒரு மாத காலம் தங்கிவிட்டு மீண்டும் சான்டாக்ரூஸ் வருவதாக சு.ரா. சொல்லியிருந்தார். சான்டாக்ரூஸுக்கு வரும்போது புத்தகத்தை அனுப்பி வைக்கலாம் என்று நான் தீர்மானித்துக்கொண்டேன். ஆனால் அதை அவருக்குச் சொல்லவில்லை.

என் டயரியில் சு.ரா.வின் மூன்று விலாசங்கள் இருக்கின்றன. ஒன்று நாகர்கோவில். ஒன்று சான்டாக்ரூஸ். இன்னொன்று கனெடிக்கட். இதில் எந்த முகவரிக்கும் இனி நான் அந்தப் புத்தகத்தை அனுப்ப முடியாது.

நான் தொலைபேசியில் அவருடன் எப்பொழுது பேசினாலும் சமீபத்தில் படித்த சில தமிழ்ப் புத்தகங்களைப் பரிந்துரை செய்யத் தவற மாட்டார். அப்படி அவர் சொன்னால் நான் உடனே வாங்கிப் படித்து விடுவேன். அவர் கடைசியாகப் பரிந்துரை செய்தது இரண்டு தமிழ்ப் புத்தகங்கள். ஒன்று ரா.அ. பத்மநாபன் தொகுத்த ‘பாரதியின் கடிதங்கள்’. அடுத்தது கே.ஏ. குணசேகரன் எழுதிய சுயசரிதை நூல் ‘வடு’. உடனே சென்னைக்கு மின்னஞ்சல் அனுப்பி இரண்டு புத்தகங்களையும் தருவித்துவிட்டேன். இரண்டுமே சிறிய நூல்கள்; ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். நூல்கள் என் கையில் கிடைத்தபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் குணமாகி வெளியே வரும்போது நூல்கள் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை.

கடைசியாக அவருடன் பேசியபோது நான் படித்த புத்தகங்கள் பற்றிக் கேட்டார். நானும் சொன்னேன். இம்முறை இரண்டு நூல்கள். ஒன்று அருந்ததி ராய் எழுதிய War Talk என்னும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். அடுத்தது The Next Fifty Years. அடுத்த ஐம்பது வருடங்களில் உலகத்தில் என்ன நடக்கும் என்று 25 உலகத்து முதல் தரமான விஞ்ஞானிகள் எழுதிய கட்டுரைகள். சு.ரா.விடம் உள்ள சிறப்பு அவர் கடைசி வரை வியப்படைவதை நிறுத்தவில்லை. புது விசயங்களை ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கேட்பார். மூப்படையாத மனம். ‘அப்படியா, அப்படியா’ என்று ஆச்சரியப்படுவார். எல்லாப் புத்தகங்களும் அவருக்குத் தேவை. இந்தப் புத்தகங்களை வாங்கினாரா தெரியாது. வாங்கினாலும் படித்தாரா என்பதும் தெரியவில்லை.

என்னதான் புத்தகங்கள், சஞ்சிகைகள் என்று தொடர்ந்து பேசினாலும் நான் எழுதிய புத்தகங்கள் பற்றியோ கட்டுரைகள் பற்றியோ ஒன்றுமே பேச மாட்டார். சில வேளைகளில் அவர் எழுதும் ஒரு பத்திரிகையில் அவருடைய கட்டுரைக்குப் பக்கத்திலேயே எனது கட்டுரையும் வந்திருக்கும். ஆனால் அது பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார். எனக்குக் கூச்சம். நானும் கேட்க மாட்டேன்.

செப்டம்பர் ‘காலச்சுவடு’ இதழ் உணவுச் சிறப் பிதழாக வெளிவந்தது. அதிலே ‘மொர மொரெனவே புளிக்கும் மோர்’ என்னும் கட்டுரையை எழுதியிருந்தேன். ஒரு நாள் அபூர்வமாகக் காலையில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “உங்கள் கட்டுரை நல்லா வந்திருந்தது. முதல் வரியில் இருந்தே அம்மா காரக்டர் சரியாக அமைந்துவிட்டது” என்று பாராட்டி னார். நான் நன்றிகூடச் சொல்ல முடியாமல் திகைத்து நின்றேன். எதற்காகப் பேசினார்? இதைச் சொல்லவா தொலைபேசியை எடுத்தார்? அவராகத் தொலைபேசி எடுத்து என்னைப் பாராட்டியது அதுவே முதல் தடவை. அதுவே கடைசியுமாகிவிட்டது.

Camera

ஓர் அத்தியாயம்

கி. ராஜநாராயணன்

பதின் வயசைக் கனவு காணும் வயசு என்று சொல்லலாம். அதிலும், ஏலாதவன் ரொம்பத்தான் கனவு காணுவான்; பகல் கனவு. இங்கே ஏலாதவன் என்பதை உடம்புக்கு ஏலாதவன் என்று கொள்ள வேண்டும். மாசக் கணக்காக, வருசக் கணக்காகப் படுக்கையில் கிடந்தால் சொல்லவே வேண்டாம். எனக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது.
சன்னல் வழியாகவும் கதவு வழியாகவும் தெருவைப் பார்த்துக்கொண்டும் கவனித்துக்கொண்டுமிருக்கும் குமரி,

தட்டுப்படுகிறவர்களோடெல்லாம் பேச முடியாத ஊமை, இவர்கள் செய்து கொண்டிருப்பது உலகின் நடவடிக்கைகளை உன்னிப்பாக உள்வாங்கிக்கொண்டேயிருப்பது தான். இவர்களைப் பற்றி ஒரு சொலவடை இப்படிச் சொல்லுகிறது: “ஊருக்குள்ளே நடக்கிறதை யாரிட்டெக் கேட்டாத் தெரியும்? ஊமை கிட்டெயும் வீட்டுக்குள்ளெ அடைஞ்சிக் கிடக்கிற குமரி கிட்டெயும்!” தெரு வழியாகப் போகிற ஒருத்தனை இவள் பார்ப்பது ஒரு வினாடிதான்; அவம் போற தினுசே சரியில்லை டோய் என்பாள். என்னெ இப்படிச் சொல்றாளே என்று யோசிப்பதற்குள் அவன் போன இடத்திலிருந்து ஒரு சலசலப்புக் கேட்கும். ரொம்ப அப்புராணிபோலப் போறானே என்று நாம் ஒருவரைப் பற்றி நினைப்போம். ‘அவம் ஒரு சரியான ஊமைக் குசும்பன்’ என்பாள். நாம நினைச்சது இவளுக்கு எப்படித் தெரியும்! அதுதான் அவர்களிடமுள்ள சூக்குமம். ஒரே ‘கிளிக்’கில் பல விசயங்கள் இவர்களுக்குள் பதிவாகிவிடுகிறது.

அநியாயமாக இப்படிப் படுக்கையில் முடங்கிப் போனோமே என்று மனசு குமுறிக்கொண்டே இருக்கும்போது, உடன்பிறந்தவர்களும் வீட்டின் பெரியவர்களும் - முக்கியமாக அப்பா - கண்டு பிரமிக்கும்படியாக ஒன்றைச் சாதித்துக் காட்டவேண்டும் என்கிற வைராக்யம் கூடிக்கொண்டேவரும். அப்படியான எண்ணம் தான் ‘எழுது சாதித்துக் காட்டு என்று தூண்டியது’ என்று ஒரு தடவை சு.ரா. சொல்லியிருக்கிறார். அவருடைய ‘சன்னல்’ கதை ஒரு அருமையான சித்தரிப்பு. நேரில் இன்னொரு முறை பேசிக் கொண்டிருந்தபோது, நாகர்கோயில் டாக்டர்களால் இனி இவரைக் குணப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டபோது, அப்பா திருவனந்தபுரம் போய் அப்போது அங்கே பிரபலமாக இருந்த டாக்டர் சங்கர்ராமனை அழைத்துவந்¢ததைச் சொன்னார். சங்கர்ராமன் டாக்டர் ஒரு நாளைக்கு ரெண்டே ரெண்டு நோயாளிகளைத்தான் பார்ப்பாராம். மூணாவது நோயாளியாக அந்தப் ‘பொன்னு திருமேனியே’ வந்தாலும் சரி, போயிட்டு வா என்று சொல்லிவிடுவாராம். அவ்வளவுக்குக் கரால்! வௌ¤யூருக்கும் போக மாட்டாராம். ஒரே ஒரு நம்பிக்கை சங்கர்ராமனுடைய அப்பாவும் சுந்தர ராமசாமியின் அப்பாவும் நண்பர்கள் மற்றும் பள்ளித் தோழர்கள். அவர் முதலிலேயே சொல்லிவிட்டாராம்: ‘அவங் கொணம்தான் உனக்குத் தெரியுமெ; நீயே கூப்பிட்டுப் பார்’ என்று. கராலான ஆசாமிகளிடம் போவதென்றால் யாருக்குமே தயக்கம்தான் என்றாலும் அப்பா அவருடைய ரூமுக்குப் போய் விசயத்தைச் சொல்லி வேண்டினார்.

தடிமனான ஒரு புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த டாக்டரின் முகம் அப்பாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.

“வர்ற நாயித்துக் கிழெம ஈவினிங் நானே வர்றேம், நீங்க வரவேண்டாம்.”

டாக்டருடைய முகம் திரும்பவும் புத்தகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. டாக்டருடைய அப்பா சந்தோச முகத்தோடு வாசலில் காத்திருந்தாராம்.

நாகர்கோயில் டாக்டர் வட்டாரங்களில் செய்தி பரவிவிட்டது, சங்கர்ராமன் வருகிறார் வருகிறார் என்று. இதுவரைக்கும்தான் நான் - கி.ரா. - சொல்ல முடியும். பாக்கியை சுந்தர ராமசாமியே சொன்னால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். பல தடவை அவரை சொல்லச் சொல்லி நாங்கள் அந்த டாக்டர் சங்கர்ராமன் கதையைக் கேட்டு ரசித்திருக்கிறோம். சமையலில் எதை எதை எவ்வளவுக்குச் சேர்த்தால் ருசிப்படும் என்று அறிந்து சேர்ப்பதைப்போல பேச்சில் எந்தெந்த வார்த்தைகளை எவ்வளவுக்குச் சேர்க்க, நீக்க வேண்டும் என்பது அவருக்குத்தான் தெரியும். பேச்சுக் கச்சேரி படு சுருதி சுத்தமாக அமைந்திருக்கும் அவரிடம். (அவர் சொன்னதை) முடிந்தவரை சுருக்கமாகச் சொல்ல முயலுகிறேன்;

அன்றைய சாயந்திரம் மிகச் சரியாக டாக்டருடைய கார் ‘சுந்தர விலாஸ்’ பங்களா காம்பவுண்டுக்குள் ஒரு வளையம் போட்டுச் சல்லென்று வந்து நின்றது. காரை அவரேதான் ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். முகமன்கள் முடிந்து டாக்டர் சங்கர்ராமன் சு.ரா.வின் படுக்கை அறைக்குள் நுழைகிறார்.

“எல்லாரும் முதல்லெ வெளியெ போங்க; ஜன்னல் எல்லாத்தையும் திறந்து வைங்க.”

இப்பொ டாக்டரும் அம்பியும்(சு.ரா.)தான் அந்த அறைக்குள். கதவையும் அடைத்தாயிற்று.

“. . . ம் . . . சொல்லு; என்ன பண்றது?”

“பயமா இருக்கு.”
“ஏம், எதுக்கு?”
“செத்துப் போயிருவமோன்னுட்டு”
“யாரு சொன்னா!” டாக்டர் சிரிக்கிறார். “பயமே வேண்டாம்; நா வந்துட்டனோல்யோ”
என்று சொல்லி ஆதரவாய்த் தடவுகிறார்.

“டெஸ்ட் பண்ணுவமா?”
தயக்கமான ஒரு சின்னத் தலை அசைப்பு.
“ட்ரெஸ்ஸெ எல்லாம் களைஞ்சிரணும்.”
அம்பிக்குத் தயக்கம். டாக்டர் வர்றார் என்று இருக்கிறதில் நல்லதா, பொருத்தமாய்ப் பார்த்துப் பார்த்து டிரெஸ் பண்ணிக்கொண்டது! இப்பொ டாக்டரெ எல்லாத்தையும் கழட்டு என்கிறார். ராஞ்சனையாக (லஜ்ஜை) இருந்¢தது. டாக்டர் கதவை ஒரு நாலு விரற்கடை திறந்து வைத்துக்கொண்டு “ஒரு கோமணத் துணி வேணும்” என்கிறார். கோமணத் துணியா? கோமணத் துணிக்கு எங்கெ போறது. வீடே அல்லோலகல்லோலப்படுது. ஒரு கோமணத் துணிக்காக. கப்பல் கொள்ளும் அளவுக்குக் கடையில் துணிகள் இருந்தும் ஒரு கோமணத் துணியைச் சமாளிக்கத் திண்டாட வேண்டியதிருக்கு.

எப்படியோ கோமணத் துணி வந்து டாக்டர் கையில் சிக்கியது. அணிந்துகொள்ள அவரும் உதவி செய்கிறார்.

ஸ்டெதஸ்கோப்பை எடுக்கிறார்.

எல்லா டாக்டர்களும் செய்கிறதுபோல இவரும் எடுத்தோம், காதில் மாட்டிக்கொண்டோம் என்று இல்லாமல் . . . அதைச் சரிபார்த்துக் காதில் மாட்டிக் கொண்டு, முதலில் அவருடைய மார்பில் வைத்துச் சரிபார்த்து, பிறகுதான் சு.ரா.வின் நெஞ்சில், பல இடங்களில் வைத்துப் பார்க்கிறார். (இப்படி எந்த டாக்டரும் செய்து பார்த்ததில்லை!)

சு.ரா. இதைப் பாவனையுடன் சொன்னபோது எங்களுக்கும் சிரிப்பு வந்தது.
டெஸ்ட் எல்லாம் முடித்து, “டிரெஸ்ஸை மாட்டிக்கோ” என்றதும் உடம்பில் ஒரு தெம்பு வந்ததுபோல இருக்கு. கதவு திறக்கப்பட்டது. குடும்பத்தார் உள்ளே நுழைகிறார்கள். டாக்டர் கொஞ்சம் மாத்திரைகள் தருகிறார்.

“ஊசி?”
“ஒன்னும் வேண்டாம். உடம்புல ஒரு ரோகமும் இல்லெ. நாளைக்கே எழுந்திருச்சி உக்காந்திருவான். திரும்பவும் ‘ஷட்டில்காக்’ விளையாடலாம். பள்ளிக் கூடம் போகலாம்.”

டாக்டர் சந்தோசமாய்ச் சொல்லுகிறார். அந்த சந்தோசம் எல்லோரையும் பற்றிக்கொள்கிறது. ஒரு வாரத்தில் எல்லாமே சரியாகிவிட்டது. மனசும் உடம்பும். இப்போது கேள்வியெல்லாம் - நாகர்கோயில் டாக்டர் வட்டாரத்தில் - டாக்டர் சங்கர்ராமன் கொடுத்த அந்த மாத்திரை என்னது? இதைத் தெரிந்துகொள்ள ரொம் . . . பப் பிரயாசைப்பட்டார்களாம்! (தெரிந்தால் இவ்வளவுதானா என்று ஆகிவிடும்) ஒன்றுமில்லை சல்பா மாத்திரைதானாம். நம்ப முடியலை. இல்லை; ஏதோ மறைக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு வந்ததாம். (மருத்துவ ரகஸ்யம் என்று இருக்கலாமே!)

இப்படி ஒரு அற்புதம் நிகழ்த்திப் போய்விட்டார் சங்கர்ராமன். அபூர்வமானவர்களைப் பார்த்து நாம்கூட சொல்லுவதில்லையா, உங்கள் பாதம் எங்கள் வீட்டில் படணும் என்று.

திரும்பவும் இதே பேச்சு வந்தபோது சு.ரா.விடம் அவர் காராம்பசுவின் அம்சம் என்றேன். அதென்ன காராம்பசு அம்சம் என்று கேட்டார். வீட்டைக் கட்டி முடித்ததும் அந்த வீட்டினுள் காராம்பசுவின் காலடிதானே முதலில் பட வேணும் என்று நினைக்கிறோம் என்றேன். எல்லாரும் சிரித்தார்கள், கி.ரா. எதையாவது சொல்லுவார் என்று.

எது எப்படியோ, ‘சுந்தர விலா’ஸுக்குள் அந்த டாக்டர் வந்தது எனக்கு இன்றும் ஒரு பெரிய்ய முக்கியமாகப் படுகிறது. சு.ரா.வின் வாழ்க்கையில் இது ஒரு அத்தியாயம் என்றே சொல்லுவேன். அவர் அந்த நெடுநாளைய படுக்கையிலிருந்து மீண்டெழுந்து வந்தது தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய வரவாக முடிந்தது.

Camera

காலமும் கலைஞனும்

இமையம்

“நல்ல சொற்கள் ஒருவனுக்குப் பெருமை தேடித்தரும்
நல்ல செயல்கள் ஒருவனுக்கு மதிப்பு பெற்றுத் தரும்.”

லாவோட்சு

1985ஆம் ஆண்டு மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்ற மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில்தான் சுந்தர ராமசாமி என்ற பெயரைக் கேள்விப்பட்டேன்.

அன்றுதான் முதன்முதலாக சு.ரா.வைப் பார்த்தேன். அந்தப் பயிற்சி முகாமிற்குப் பிறகுதான் இலக்கிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘சுந்தர ராமசாமி கட்டுரைகள்’ என்ற க்ரியா பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த நூலைப் படித்தேன். அதுதான் சு.ரா.வுக்கும் எனக்குமான முதல் உறவு. பிறகு ‘நடுநிசி நாய்கள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘பள்ளம்’, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’, ‘சுந்தர ராமசாமி சிறுகதைகள்’ என்று எங்கள் உறவு வளர்ந்துகொண்டேபோயிற்று.

1994இல் ‘கோவேறு கழுதைகள்’ என்னும் என்னுடைய முதல் நாவல் வெளிவந்த இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் மதுரையில் உள்ள தன் நண்பர்களிடம் கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி, அதற்கான விமர்சனக் கூட்டத்தை சுந்தர ராமசாமி தான் ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியது ‘காலச்சுவடு’ இதழிலும் வெளிவந்தது. அன்று அவருக்கு நான் வணக்கம் மட்டுமே தெரிவித்தேன். வேறு வார்த்தைகள் பேசவில்லை.

1995ஆம் ஆண்டு முதல் முறையாக சுந்தர ராமசாமியைப் பார்ப்பதற்காக நாகர்கோவிலுக்குச் சென்றேன். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதன்பிறகு சென்னை புக் பாயின்ட்டில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டு விழாவில் தூரமாக நின்று அவரைப் பார்த்தேன். அதே மாதிரிதான் ‘தமிழ் இனி 2000’ மாநாட்டிலும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற மௌனி பற்றிய கருத்தரங்கிலும் பார்த்தேன்.

மௌனி பற்றிய கருத்தரங்கு முடிந்த மறுநாள் விருத்தாசலத்தில் ‘எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் உரையாடல்’ என்ற ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். பாண்டிச்சேரியிலிருந்து சு.ரா.வை அழைத்துவந்தேன். பயண நேரத்தில் சு.ரா.வுடன் நான் அதிகம் பேசவில்லை. ஆனால் திருமதி கமலா சுந்தர ராமசாமி அவர்களோடு சளசளவென்று பேசிக் கொண்டே வந்தேன். கூட்டம் முடிந்து ரயிலுக்காகக் காத்திருந்தபோது, “என்னைப் பத்திரமாகக் கண்ணனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கவலைப்படுகிறீர்களா” என்று திடீரென்று சு.ரா என்னிடம் கேட்டார். ரயில் தாமதமாக வருகிறது. மழை எந்த நேரத்திலும் அடித்துப் பெய்யலாம் என்ற நிலையில் நான் பதற்றமாக இருந்தது உண்மைதான். அப்போது நான் சு.ரா.விடம் “சுந்தர ராமசாமி கண்ணனுடைய சொத்தல்ல. பொதுச் சொத்து. பொதுச் சொத்தைப் போற்ற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதே மாதிரி இந்தச் சமூகத்திற்கும் இருக்கிறது” என்று சொன்னேன். சத்தமில்லாமல் சிரித்தார். என்ன நினைத்தாரோ, நடக்கலாம் என்று சொல்லி என் தோளின் மீது கையைப் போட்டு நடக்க ஆரம்பித்தார். குறைந்தது பிளாட்பாரத்தில் அரைமணி நேரம் நடந்திருப்போம்.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் இரண்டாம் பதிப்பு வருவதற்கு முன்பு நாவலில் சில பிரச் சினைகள் இருக்கிறது, சரிசெய்து வெளியிடுங்கள் என்று கண்ணனிடம் கூறினேன். நான் கூறிய மறுநாள் சுந்தர ராமசாமி தொலைபேசியில் “நாவல் குறித்த அபிப்பிராயங்களை நேரில் வந்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்டு அவர் சொன்ன தேதியில் நாகர்கோவிலுக்குச் சென்றேன். சுமார் 46 மணி நேரத்திற்கு மேல் இருவர் மட்டுமே ஒன்றாக இருந்தோம். நாவல் குறித்து மட்டுமே பேசினோம். புதிதாக எழுத ஆரம்பித்த ஒரு எழுத்தாளன் கூட அவனுடைய படைப்பு குறித்த திருத்தங்களைப் பிறர் கூறும்போது முகம் சுளிக்காமல் ஏற்பதில்லை. ஆனால் நான் சொன்ன அத்தனை விசயங்களையும் சு.ரா. கேட்டார். இந்தப் பண்பை வேறு எந்த எழுத்தாளரிடமும் நான் கண்டதில்லை.

நான் கடைசியாக சுந்தர ராமசாமியை மதுரையில் நடைபெற்ற நாவல்கள் குறித்த கருத்தரங்கில்தான் பார்த்தேன். வணக்கம் சொன்னபோது, “எப்போதும் தி.மு.க. வேட்டிதான் கட்டுவீங்களா?” என்று என்னிடம் கேட்டார். நான் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்தேன். அதுதான் அவர் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தை. அதன் பிறகு 21.10.2005இல் அவருடைய இயக்கமற்ற உடலை மட்டும்தான் பார்த்தேன்.

சுந்தர ராமசாமியுடன் சமூகம் குறித்தும் இலக்கியம் குறித்தும் இன்னும் பிற விசயங்கள் குறித்தும் நிறைய கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. எங்கள் உறவில் வார்த்தைகளுக்கு அதிக இடமில்லாமல் இருந்தது. மௌனம்தான் எங்களை நெருக்கமாகப் பிணைத்தது. எனக்கு நான்கு நண்பர்கள்தான். அதில் சு.ரா.வும் ஒருவர். சு.ரா.வின் நிஜமான, நீண்டகால நண்பர்கள்தான் என்னுடைய இன்றைய நண்பர்கள். அந்த நண்பர்கள் உருவாக்கிய சு.ரா.வின் பிம்பம் தான் எனக்குள் இருப்பது.

சுந்தர ராமசாமியும் நானும் வாய்ப்பிருந்தும், தனித்திருந்தும் அதிகம் பேசிக்கொள்ளாதவர்கள். அவர் மீதும், அவருடைய எழுத்துமீதும் எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு. அவரும் என்மீது அன்பு கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். காரணம், அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு திருச்சியில் எனக்கு வழங்கிய போது, அந்த விழாவிற்கு சு.ரா. வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். விழாக் குழுவினர் சு.ரா.விடம் கேட்டனர். “உடல்நிலை மோசமாக இருக்கிறது. வரக்கூடிய நிலையில் இல்லை” என்று கூறிவிட்டார். விசயத்தை விழாக் குழுவினர் என்னிடம் கூறினர். “நான் அவர் வர வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறுங்கள்” என்று சொன்னேன். விழாக் குழுவினர் சு.ரா.விடம் நான் சொன்னதை சொன்ன மறுநிமிடமே விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். உடல்நிலை மோசமாக இருந்தபோதும் விழாவுக்கு வந்திருந்தார்.

சுந்தர ராமசாமி எனக்கு மட்டுமல்ல நண்பர். நீண்டகாலமாக எழுதிவருகிற எழுத்தாளர்களுடனும் ஒரு வருசத்திற்கு முன்பு எழுதவந்த எழுத்தாளர்களுடனும் அவருக்கு நட்பும் உறவும் இருந்தது. பத்துக் கவிதை மட்டுமே எழுதியவர்களையும், ஒன்றிரண்டு சிறுகதை, கட்டுரை என்று எழுதியவர்களையும் அறிந்து வைத்திருந்தது மட்டுமல்ல, அவர்களோடு நல்ல நட்பும் கொண்டிருந்தார். இந்தப் பெருமை சு.ரா.வுக்கு மட்டும் தான் உரியது. இவ்வளவு எழுத்தாளர்களை, வாசகர்களை நண்பர்களாகக் கொண்ட வேறு ஒரு எழுத்தாளன் தமிழ்நாட்டில் இல்லை. தன் பெரும்பகுதி நேரத்தை நண்பர்களுடன் பேசுவதற்கென்றே ஒதுக்கிய ஒரே எழுத்தாளர் சு.ரா. மட்டும்தான். அவர் யாரையும் முகம் முறித்துப் பேசியதில்லை. சரியோ தவறோ பிறர் சொல்வதைக் கேட்க வேண்டும், பிறர் கூறுகிற வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பண்பு தான் அவரை நோக்கி எல்லாரையும் போக வைத்தது. நண்பர்கள்தான் அவருடைய மிகப் பெரிய பலம், சொத்து. தனித்தீவாக என்றுமே அவர் இருந்ததில்லை.

1996இல் நான் மிகவும் நெருக்கடியான மனநிலையில் இருந்தபோது நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்த மனிதர் சுந்தர ராமசாமி. அவருக்கு நான் ஒரு கார்டில் என் நிலையை எழுதினேன். நான்காவது நாள் சு.ரா.விடமிருந்து ஒரு கார்டு வந்தது. அதிலிருந்து நான் ஒரு தெளிவைப் பெற்றேன். அதன் பிறகு கடிதத் தொடர்பு எங்களுக்கிடையில் இல்லை. நான் சு.ரா.வுக்கு நண்பர் என்றால் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் நான் நண்பர்தான். நான் எழுத்தாளன். எனக்கும் நண்பர்கள் உண்டு. என் நண்பர்கள் எனக்கு மட்டும்தான். என் குடும்பத்தாருக்கு இல்லை. இப்படித்தான் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சு.ரா.விடம் கற்றுக்கொள்ள ஏராளமான உயர்ந்த பண்புகள் இருந்தன.

சுந்தர ராமசாமி வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்தை உலுக்கிய பாதித்த எல்லா விசயங்களுக்கும் ஒரு மனிதனாக, ஒரு கலைஞனாக எதிர்வினையாற்றியிருக்கிறார். மகாமகப் படுகொலை, தூக்குத் தண்டனைக்கு எதிரான மாநாடு, குஜராத் பூகம்பம், குஜராத் கலவரம், கும்பகோணம் தீ விபத்து, சுனாமி, சங்கராச் சாரியார் கைதுவரை தன் குரலை உரத்து ஒலிக்கச் செய்துள்ளார். தான் வாழும் சமூகம் குறித்து ஓயாமல் சிந்தித்து, கவலைப்பட்டு, புதிய மதிப்பீடுகளை உருவாக்க முனைந்தார்.

கலைஞனை அவன் வாழும்போது மதிக்க வேண்டும் என்று தன் கடைசிக் காலம் வரை குரல் கொடுத்தவர் சுந்தர ராமசாமி. தமிழ்ச் சமூகம் அவரை மதித்ததா இல்லையா என்பதைவிடத் தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே அவரை மதித்தார்கள், போற்றினார்கள். அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள்கூட, அவருடைய கருத்துக்குத்தான் எதிராக இருந்தார்களே ஒழிய அவருக்கு எதிராக ஒரு ஆள்கூட இல்லை. அதே மாதிரி நிறைய எழுத வேண்டியவர் எழுதவில்லை என்று அனைத்துத் தரப்பினர் குற்றச்சாட்டுக்கும் ஆளான எழுத்தாளரும் அவர் மட்டும்தான்.

க்ரியா பதிப்பகத்தையும், க்ரியா பதிப்பகத்தோடு தொடர்புடைய நண்பர்களையும் விட்டு விலகிவந்து விட்டோமே என்ற ஏக்கம் சுந்தர ராமசாமிக்குக் கடைசிவரை இருந்தது. அதற்குப் பின் சு.ரா. எழுத்துத் துறையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வது குறித்துப் பேச, விவாதிக்க, சில விசயங்களைக் கவனப்படுத்த, நண்பர்கள் அதிகமில்லை.

சுந்தர ராமசாமி இறந்துவிட்ட செய்தி கிடைத்ததிலிருந்து சுமார் அரை மணிநேரம் வரை நடந்தேன். பிறகு வீட்டுக்கு வந்து ‘சுந்தர ராமசாமி சிறுகதைகள்’ என்ற நூலை எடுத்து எனக்குப் பிடித்த கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அன்று மட்டும் முப்பது கதைகளைப் படித்து முடித்தேன்.

காலம் தின்று செரிக்காத மனிதன் கலைஞன் மட்டும்தான். உடல் சிதைந்தாலும் கலைஞன் ஒருபோதும் அழிவதில்லை. சுந்தர ராமசாமி ஒரு மகத்தான கலைஞன். அவர் இல்லை. அவருடைய எழுத்துகள் உயிரோடு இருக்கின்றன. நிஜமான கலைஞன் கடல் மாதிரி, வானம் மாதிரி.

Camera

எந்த நாள் காண்பேன் இனி!

நாஞ்சில்நாடன்

எழுபதுகளின்பிற்பாதி.

பம்பாயில் இருந்து இருபத்தோருநாட்கள் விடுப்பில் வந்திருந்தேன் நாகர்கோயிலுக்கு வந்த முதல் வெள்ளிக்கிழமை, சுந்தரராமசாமியின் கடை விடுமுறை. பிற்பகல் நான்கு மணிக்கு வீட்டுக்கு வருவதாகச்சொல்லி இருந்தேன். அன்றெல்லாம் எங்களூருக்கு தேரூர் - தாழக்குடி என்ற பஸ் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றேமுக்கால்மணிக்கூருக்குஒருட்ரிப். மதியம் இரண்டரை பஸ்விட்டால் அடுத்த பஸ் நாலேகாலுக்கு. அன்றுபார்த்து இரண்டரை பஸ் வரவில்லை.

வீரநாராயணமங்கலம் ஆரம்பப் பள்ளி வாசலும் தேரே காலின் கரையுமான சாலையில் சற்றுநேரம் காத்து நின்றுவிட்டு, எதற்கும் இறச்சகுளம் போனால், அது நாகர்கோயில்-பாலமோர் எஸ்டேட் சாலை என்பதால், அருமநல்லூர், திட்டுவிளை, கடுக்கரை, தெரிசனங்கோப்பு, அழகியபாண்டிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் கட்டாயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் ஒன்றரை மைல் நடந்தேன். நல்ல வெயில். பழையாறு, நொண்டிப்பாலம் தாண்டி. தோவளைத் தாலு காவான பூதப்பாண்டி - ஜீவா பிறந்த ஊர், கிருஷ்ணன் நம்பி பிறந்த ஊர், கிருத்திகா வாழ்க்கைப்பட்ட ஊர். எங்களூரில் இருந்து பழையாற்றங் கரை வழியாக, மண்ணடி தாண்டிப் போனால் இரண்டரை மைல் வரும். வயக்காட்டு வரப்பு வழியாக, தாழக்குடி தாண்டி நெடுங்குளம் கரையோரமாக, புத்தனாற்றங்கரைக்கு வந்து, சீதப்பால் தாண்டி நடந்தாலும் அஃதே. ஆனால் அன்றெல்லாம் பூதப்பாண்டிக்கு ஒரேயொரு பஸ்தான் அலுப்புச் சலிப்பில்லாமல் திரும்பத் திரும்ப போய் வந்து கொண்டிருந்தது. இரண்டரை மணிக்கு ஒருதரம் ஒரு ட்ரிப், எனவே பள்ளி, கல்லூரி செல்வோருக்கு இறச்ச குளம் விலக்குதான் சாலச் சிறந்தது.

இறச்சகுளம் விலக்கில் என்றுமில்லாத இருசனக்கூட்டம். ஆடவரும் பெண்டிரும், தங்களிடம் இருந்த ஆகச் சிறந்த ஆடைகள் அணிந்து, தலையில் நிறைய எண்ணெய் தேய்த்துச் சீவி, பூவும் பொட்டும் இன்றி, கைகளில் தாங்கிய வேதப் புத்தகத்துடன். எல்லோரும் சாம்பவர் இன வேதக்காரர்கள். வடமதியில் இருந்து வரும் மேற்சொன்ன பஸ்கள் எல்லாம் பிதுங்கி வழிந்துகொண்டிருந்தன. இரண்டு பேர் இறங்க இரு நூறுபேர் ஏற முயற்சி செய்தனர். சில பஸ்கள் டபுள் விசில் ஊதிப் பறந்தன. சில பஸ்கள் பஸ் நிறுத்தம் தாண்டி எருக்கலை மூட்டுச் சாத்தா கோயில் பக்கம் நின்று நகர்ந்தன. ஓடிப்போய் பிடிக்க முடியாது. லாரிகளில் டெம்போக்களில் போவோர் ஆரவார ஒலி எழுப்பினர். நான்கு மணி வரை நின்று பார்த்தேன். ஒரு இரட்சையும் இல்லை.

அன்றெல்லாம் எங்களூரில் ஃபோன் கிடையாது. ஃபோன் என்ன, ஃபேனே கிடையாது. இறச்சகுளம் ஊருக்குள் கோட்டுப்பிள்ளை வீட்டில் ஃபோன் இருந்தது. ஆனால் அஃதோர் கோட்டை. இறச்சகுளம் விலக்கில் மாடிப்பிள்ளை உரக்கடையில் இன்னுமோர் ஃபோன் இருந்தது. கறுத்த, கனமான, பெரிய மண்டையுடைய ஃபோன். நேரடியாக எண்ணைச் சுழற்ற முடியாது. ரிசீவரை எடுத்ததும், அன்று நாளும் கோளும் நன்றாக இருந்தால், 'கொர்' எனும் சத்தம் கேட்கும். எந்த நேரத்திலும் தூக்கத்தில் இருக்கும் பூதப்பாண்டி ஆபரேட்டர், எண்ணை வாங்கி, வேறு வழி ஏதும் ஓய்த்துவிடத் தெரியாவிட்டால், தொடர்பு கொடுப்பார். மறுமுனையில் ஒலித்தது சுந்தர ராமசாமியின் குரல்.

"நீங்க இப்ப எங்க இருக்கியோ?"
''நான் இறச்சகுளம் விலக்கிலே ஒரு மணிக்கூரா நின்னுக்கிட்டு இருக்கேன். நாகரோயில்லே சகோதரர் தினகரன் கூட்டம் இருக் கதுனாலதான் இவ்வளவு நெரிசல்... நான் நாளைக்கு வரட்டா?"
'வேண்டாம், அங்கயே நில்லுங்கோ... நான் இப்பம் வாறேன்.'
இருபது நிமிடங்களில் இறச்சகுளம் விலக்கில் ஃபியட்காரொன்று வந்து திரும்பியது. அவரே ஒட்டிக்கொண்டு வந்தார். நன்றாக நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் - அன்றெல்லாம் எங்களூருக்கு கார் வரும் சந்தர்ப்பங்கள், மாப்பிள்ளை அழைப்பு, புது மறுவீடு, கடைசி முயற் சியாக மனிதனை ஆஸ்பத்ரிக்குக் கொண்டுபோக, த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி விற்க...

காத்து நின்ற சனமெல்லாம் பார்க்க, செம்மாந்து நடந்து போய் காரில் ஏறி அவர் பக்கம் அமர்ந்தேன். எனது துர்ப்பாக்கியம் அவர்களில் ஒருவருக்கும் என்னைத் தெரியாது. நாஞ்சில் நாடன் எனும் எழுத்தாளனை அல்ல - அது இன்றும் தெரியாது - சுப்ரமணியம் என்ற மனிதனையும். காரில் போகும்போது அவரிடம் சொன்னேன், 'ஒரு தப்பு செய்திட்டேன். உங்களுக்குப் ஃபோன் செய்யச்சிலே எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு முன்னால நிக்கம்ணு சொல்லீட்டு, இங்கேருந்து ஓட்டமும் நடையுமாப் போயி அங்கிண போயி நின்னுருக்கணும்...''

"அதுக்கென்னா, அடுத்த வெள்ளிக்கிழமை அங்கேருந்து கூட்டிக் கிட்டு வாறேன். நீங்க ஊருக்கு ஒரு முன்னறிவிப்பு கொடுத்திற்றா போரும்..."
என்ன ஏமாற்றம் எனில், அவரைசுதர்சனம் ஜவுளிக்கடை முதலாளி என்று ஒரு சிலருக்குத் தெரியும். இன்னும் பெரிய ஏமாற்றம் இருக்க வாய்ப்பில்லை. நுட்பங்களைத் தேடி அலைகிற எந்தப் படைப்பிலக்கியவாதிக்கும் இதுதான் நிலையாக இருக்கும், இருக்கிறது.
நெடுநாட்களுக்குப் பிறகு, மதியம் இரண்டுமணிக்குப் போனவன், பேசிக்கொண்டிருந்துவிட்டு, ஆறு ஆறரைபோல, அடுத்த வேலை கருதி சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

"நீங்க வந்து ரொம்ப நேரமாச்சுல்லா... யூரின் பாஸ் பண்ணீட்டுப் போங்கோ" என்றார். எனக்கும் முட்டிக்கொண்டுதான் இருந்தது. வெளியே, சாலையோரம் மரத்து மூட்டில் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சுந்தர ராமசாமியின் அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தியது.
எனது எந்தப் புத்தகம் வெளியானாலும் முதல் பிரதி அவருக்குப் போகும். கிடைத்ததற்கும் புத்தகத்தின் அமைப்பு பற்றியும் முதலில் முடங்காமல் கடிதம் வரும். பின்பு புத்தகம் வாசித்தபிறகு இன்னொரு கடிதமும். வரவில்லை என்றாலும் நான் கேட்கமாட்டேன். படித்திருந் தால், பிடித்திருந்தால் எழுதி இருப்பாரே என்று சமாதானம் செய்து கொள்வேன்.

தலைகீழ்விகிதங்கள்' வெளியான 1977ல், பாலம் இதழில் ஒரு விமர்சனம் எழுதி இருந்தார். இதுவரை நான் சந்தித்த கடுமையான விமர்சனங்களில் அது முதலாவது. இரண்டாவது 'மிதவை' நாவலுக்கு அம்பை எழுதிய கடிதம். அது வெளியாகவில்லை. சற்று என்ன சற்று, பெரிதும் வருத்தமாக இருந்தது. பின்பு யோசித்துப் பார்த்தேன், எனது முதல் நாவலை அவர்பொருட்படுத்திப் படித்ததும் எழுதியதுமே பெரிய காரியம். மேலும் நட்போடு பழகிக் கொண்டிருந்த என்னை வன்மையாக விமர்சிக்க அவருக்கு வேறு முகாந்திரங்கள் இல்லை, நூலின் தகுதி அல்லது தகுதி இன்மை தவிர்த்து. நான் அதை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டது அவருக்கு சந்தோசம் தந்தது என்று பின்பு சொன்னார்.

பாம்பன்விளை முகாம்கள் நடந்த நாட்களில், மதிய உணவுக்கு மற்ற பண்டங்களுடன் வெந்து மலர்ந்திருந்த மரச்சீனிக்கிழங்கு வைத்திருந்தார்கள். சோற்றுக்கு ஊற்றிக்கொள்ள அயிலைமீன் புளிமுளம் இருந்தது.கிழங்கும் மீனும் எடுத்துக்கொண்டு உட்கார இடம் தேடினேன். "இங்க வாங்க" என்றார் சுந்தர ராமசாமி. எனக்க கூச்சமாக இருந்தது. 'பரவால்ல வாங்க, நீங்க மீன் சாப்பிடறதை பிறகு எப்பம் பாக்க?" என்றார்.

எனக்கெனவோர் இலக்கியக் கொள்கை இன்றிருக்குமாயின் அது அவர் வழி நடத்தியது. தீ சுடும் எனச் சொல்லக் கேட்டும் நான் தொட்டுப் பார்க்க விழைந்ததும் உண்டு, சுட்டுப் பொத்துக்கொண்டதும் உண்டு.

என்னிடம் சொல்வதற்கு ஒன்றும் மிச்சம் இல்லை அவரது மனிதப் பண்புகள் பற்றி. பேராசிரியர் ஜேசுதாசன், எம். எஸ். அண்ணாச்சி, பா. விசாலம் போன்றோர் கூறவேண்டும். பேராசிரியர் பேச முடியாத இடத்துக்குப் போய்விட்டார். அண்ணாச்சி எப்போதும் பேசமாட்டார்.
நான்கு ஆண்டுகள் முன்பு எனக்கு இதயநோய் வந்தது அறிந்து, என்னைப் பேசவேண்டாம் என்று பணித்துவிட்டு அவர் தொலை பேசியில் பேசிக்கொண்டு போனார். எனது கன்னங்கள் நனைந்து கொண்டிருந்தன. 'ஒய்பைக் கூட்டிண்டு வாங்கோ... எங்க கிச்சன்லே பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடந்துண்டிருக்கு..." என்றார்.

எல்லா முன்னெச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு நான் முட்டாள்தனமாகத் தின்று திரிகிறேன்.
தாடி இருக்கிற நாட்களில் அதை அவர் விரல்களால் சுண்டுகிற விதம், உரையாடல்களின் போது சில தொடர்களை மறுபடியும் சொல் வது, நாம் சொல்வதை கூர்த்த அக்கறையுடன் கவனிப்பது, புன்னகை, வாய்விட்ட சிரிப்பு எல்லாம் மனதில் வந்து வந்து போகின்றன.
மறுபடியும் கவிமணியின் வெண்பா ஈற்றடிதான் ஞாபகம் வருகிறது.

'எந்த நாள் காண்பேன் இனி!’

Camera

நவீனத்துவக் கனவு வடிவம்

சி.மோகன்

ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவல் எடிட்டிங் தொடர்பாக நான் சு.ரா. வீட்டில் தங்கியிருந்தபோது, வீடு வெகு இதமாகவும் மிக நெருக்கமாகவும் ஆனது. காலையில் மாடிக்கு வெகு ருசியான பில்டர் காபி வரும். கூடவே இரண்டு பில்டர் வில்ஸ் பாக்கெட்டுகளும் வந்துவிடும். ஒரு நாளில் சு.ரா. இரண்டு அல்லது மூன்று சிகரெட்டுகள் புகைப்பார். அதை மிகவும் லயித்துச் செய்வார். அந்த நாட்களில் இரவு விடியும் வரை பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். ஒருநாள் அதிகாலை கோழி கூவியபோது, ‘விடிஞ்சிடுச்சுபோல’ என்று முறுவலித்தார்

தன் அனுபவங்களின் பரிசீலனையோடு வாழ்வின் சாளரங்களை அவர் திறந்து காட்டிய அந்தத் தருணங்களை வாழ்வு என் மீது காட்டிய பெரும் கருணையாகவே உணர்ந்திருக்கிறேன். எந்த ஒன்றையும் நம் அனுபவங்களின் வழி உரசிப் பார்த்தே ஏற்கவோ, நிராகரிக்கவோ வேண்டும் என்பதே – கடவுள் உட்பட – அவரது அணுகுமுறை.

அக்காலகட்டத்தில், சு.ரா.விடம் கார் இருந்தது. அம்பாசிடர். அடர்நீல வண்ணம். அவரேதான் ஓட்டுவார். கார் ஓட்டுவது அவருக்குப் பிடித்தமானதாகவும் இருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று முறை பத்மநாபபுரம் அரண்மனைக்கும் கன்னியாகுமரிக்கும் காரில் அழைத்துப்போயிருக்கிறார். இம்முறை தினமும் மாலை அவருக்கு மிகவும் பிடித்தமான ஓரிடத்துக்குச் சென்று வந்தோம். ஊருக்கு வெளியே கொஞ்ச தூரம் சென்றால் ஒரு சிறு ஓடைப் பாலம் வரும். சாலையின் இடதுபக்கம் ஓடை. வலதுபக்கம் சற்று தொலைவில் மலை.இருபுறமும் வயல்வெளி. மாலை மங்கும் அத்தருணத்தில் அந்த இடம் ஏகாந்தமாக இருக்கும். மலை, பார்வையில் படும்படியாக இடதுபுற ஓடைப் பாலத் திண்டில் அமர்ந்துகொள்வோம். முதல் நாள், அந்த மலை முழுவதும் எழுதப்பட்டிருந்த பெயர்களையும் சின்னங்களையும் காட்டி விசனப்பட்டார். ‘நம்ம ஆட்களுக்கு எதையும் அசிங்கப்படுத்திப் பார்த்தால்தான் நிம்மதி’ என்றார்.

அவர் ஒருசமயம் கன்னியாகுமரியில் ஒரு வடநாட்டு இளம் பெண் துறவியாரைச் சந்தித்திருக்கிறார். அவர் தனியாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில் ஸ்தலங்களுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். இப்படித் தனியாக அலைவதிலும் இரவில் எவ்விதப் பாதுகாப்புமற்று எங்கோ படுத்துறங்குவதிலும் உங்களுக்குப் பிரச்சனை ஏதுமில்லையா? என்று அவரிடம் சு.ரா. கேட்டிருக்கிறார். அப்படி ஏதும் இல்லையென்றும், அதேசமயம் எந்த ஊருக்குப் போனாலும், பள்ளிக்கூடம் விடும் நேரங்களில், அந்தப் பகுதியைக் கடக்காதிருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வேன். கும்பலாக வரும் குழந்தைகளிடமிருந்து தப்பிப்பதே பெரும் பிரச்சனை என்றும் கூறியிருக்கிறார். இதை என்னிடம் சொல்லிவிட்டு, அசாதாரணமானவர்களைக் கேலியும் கிண்டலுமாகக் குழந்தைகள் நடத்துவதையும், சமயங்களில் கல்லெறிந்து இம்சிக்குமளவுக்கு அவர்கள் சென்றுவிடுவதையும் குறிப்பிட்டார். சிறார்கள் பற்றிய கற்பிதங்கள் அன்று கேள்விக்குள்ளாகின.

ஜே.ஜே. நாவல் பணிக்காகச் சென்ற நான், போன வேலை முடிந்த பின்னும் கிளம்புவது தள்ளிக்கொண்டே போனது. இச்சமயத்தில் எனக்குத் திருமணமாகி, ஒரு வயது மகனும் இருந்தான். ஒருநாள் உறுதியாகக் கிளம்ப முடிவெடுத்து, சு.ரா.விடம் சொன்னேன். “சரி, மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போகலாம்” என்றார். காலை உணவுக்குப் பின்னர், மாடி அறையில் பேசிக்கொண்டிருந்தபோது, “இடையில் ஒருநாள் ஏ.கே.பி. (அ.கா.பெருமாள்) ஃபோன் பண்ணினார். நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னேன். பார்க்க வருவதாகச் சொன்னார். வேலை முடிந்ததும் சொல்வதாகச் சொன்னேன். இன்று அவருக்கு காலேஜ் கிடையாது. வரச் சொல்வோமா?” என்றார். சரி என்றேன். வந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே இருந்தார். நேரம் வெகுவாகக் கடந்தது. “நாளை போகலாமா?” என்று ராமசாமி கேட்டார். நானும் சிரித்தபடி தலையாட்டினேன்.

மறுநாள் மதிய உணவுக்குப் பின் கிளம்பினேன். கீழே வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டபோது, அந்த வீட்டில் ஒருவராக வாழ்ந்திருந்து, சமையலறையை மேலாண்மை செய்து, விதவிதமாகச் சமைத்து, மிகுந்த வாத்சல்யத்துடன் பரிமாறும் ஹரிகர ஐயர், “பட்சணங்கள் இருக்கு. வீட்டில கொடுங்கோ” என்றபடி ஒரு பெரிய பார்சல் கொடுத்தார். காரில் ஏறிக்கொண்டேன். திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில், டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நான் இருக்கையில் உட்கார்ந்த பிறகு, சு.ரா. சிரித்த முகத்துடன் கையசைத்து விடை கொடுத்தார். நான் கலங்கி உட்கார்ந்திருந்தேன். நான் மதுரை திரும்பிய பின், ராமசாமியிடமிருந்து வந்த நீண்ட கடிதத்தின் முதல் சில வரிகள் இப்படியாக அமைந்திருந்த ஞாபகம்: “நீங்கள் இம்முறை இங்கு தங்கியிருந்த நாட்களில் கிருஷ்ணன் நம்பியின் மறைவுக்குப் பின்னான வெற்றிடம் நிரம்பி வருவதை உணர்ந்தேன்.”

சமூக மனிதனாக வாழ்ந்தபடியே, சமூகத்தின் அவலங்களையும் கோணல்களையும் சிடுக்குளையும் போதாமைகளையும் ஆழ்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தியபடி, சமூக அமைப்பானது, மனிதர்கள் சிறப்பாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்குரியதாக இருக்க விழையும் நவீனத்துவ மனம் இவருடையது. இத்திசையில் அலைக்கழியும் நவீனத்துவ மனதின் இருப்பே இவருடைய படைப்புலகம். அதற்கேற்ப, தகிக்கும் மனதின் ஜூவாலையையும் எள்ளல் மனதின் தன்மையையும் இவருடைய படைப்பு மொழி ஏற்றிருந்தது. தனதான படைப்பு மொழியை வசப்படுத்திய வெகு சில தமிழ்ப் படைப்பாளிகளில் சு.ரா. தனித்துவம் கொண்டவர். வெளிப்பாடும் மொழியும் லயப்படும் இசைமையில் ஓர் உச்சத்தைத் தொட்டவர்.

அவருடைய வாழ்வின் கடைசி கட்டத்திய சில ஆண்டுகளின்போது அவரோடு எனக்குத் தொடர்பில்லை. தன் வரையான நியாயங்களோடும் கோபங்களோடும் விட்டு விலகுவதற்கான தார்மீகத்தை ஒருவகையில் கற்றுக் கொடுத்தவரும் அவர்தான். ஆனால், ‘சுந்தர ராமசாமி தீவிர உடல்நலக் குறைவால் ஆபத்தான கட்டத்தில் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார்’ என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாகர்கோவில் சென்று அஞ்சலி செலுத்திய நாள் வரையும் நிராதரவான தவிப்பும் கலக்கமும் மனதில் கவிந்திருந்தது. எது எப்படியென்றாலும், அடிப்படையில் அவர் என் ஆசான் என்பதைத் தீர்க்கமாக உணர்த்திய நாட்கள் அவை.

அஞ்சலி நாளன்று வந்திருந்த பல எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் மனோபாவங்களை, அவர்களுடைய நடவடிக்கைகள், பேச்சுகள், மற்றும் ஆழ்ந்த மெளனங்களிலிருந்து அவதானித்தபோது, ஒரு விசேஷமான அம்சத்தை உணர முடிந்தது.

அநேகமாக, ஒவ்வொருவருமே மற்ற எவரையும் விடத் தனக்குத்தான் சு.ரா. மிக நெருக்கமானவர் என்ற அலாதியான உணர்வோடு கலங்கிக்கொண்டிருந்தார்கள். சு.ரா.வின் ஆளுமையில் சுடர் கொண்டிருந்த ஓர் அற்புத அம்சமிது. அவர் வாழ்வின் ரகஸ்யம். எவராலும், இனி எப்போதும் கைப்பற்ற முடியாத ரகஸ்யம்.

நன்றி: இந்து தமிழ் திசை (மே 20, 2018)

Camera

தீப்பொறிகள் பறக்கச் செய்தவர்

சக்கரியா

மலையாளிகள் தங்களுடைய எழுத்தாளராகவே சுந்தர ராமசாமியைக் காண்கிறார்கள். அவர் தனது பால்ய காலத்தைக் கோட்டயத்தில் செலவிட்டார் என்பதும் அவருடைய பிரபலமான நாவலின் பின்புலம் கேரள மென்பதும் மட்டுமல்ல இதற்குக் காரணம். மலையாள இலக்கியத்தின் நவீனத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் நவீனத்துவம் சு.ரா.வின் எழுத்திலுண்டு.

மலையாள இலக்கியம் அதன் நவீனத்துவத் தேடலைப் பாதி வழியிலோ அதற்கும் பின்னாலோ என்றோ நிறுத்திவைத்துவிட்டு இளைப்பாறியது. நவீனத்துவத்தைக் கைவிட்டு வெல்லப் பாகு போன்ற கற்பனாவாதத்தைக் கைப்பிடிக்க முன்னணி எழுத்தாளர்களுக்கும் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. தென்னிந்திய மொழிகளில் நவீனத்துவத்தின் நிறுவனர்களில் ஒருவரான சு.ரா. வேறுபடுவது இங்கேதான்.

மொழிபெயர்ப்புகள் மூலமும் உரையாடல்கள் மூலமும் நான் புரிந்துகொண்டிருப்பது மரணம்வரையிலும் அவர் மொழியையும் கற்பனையையும் சிந்தனையையும் நவீனத்துவத்தின் விசாலமான மனிதாயப் பாதையில் சஞ்சரிக்கச் செய்துகொண்டிருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடுகளின் விளக்கங்கள் பற்றிக் கருத்து வேற்றுமைகள் உருவாகியிருந்தன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒருவேளை நடைமுறை வடிவங்களையும் விளக்கங்களையும் பற்றியதாக இருக்கலாம் அந்த விவாதம் என்று வெளியிலிருந்து ஊகிக்கும் எனக்குத் தோன்றியிருக்கிறது. தனக்குள்ளே தனது உலகப் பார்வையில் சு.ரா. சமகாலத்தன்மையுள்ளவராகவும் இயக்கமுள்ள சிந்தனையாளராகவும் தொடர்ந்து கொண்டிருந்தார். உள்ளுக்குள் மனிதன் நவீனமானவனல்ல எனில் பின் எப்படி அவனுடைய கரம் பேனா எடுத்து நவீனத்துவத்தையும் மனிதாயத்தையும் உருவாக்க முடியும்? எழுத்தாளனுக்குள்ளிருக்கும் அடிப்படையான மனிதன் மானுட விழுமியங்களையும் ஓருலகப் பார்வையையும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படைப்புகளின் தேவையும் ஈர்ப்புத் திறனும் பொருந்தாமல் போய்விடும். சு.ரா.வால் தனது தீர்மானத்துக்கு ஏற்பத் தனது அகத்தின் குரலுக்கு இசைவான வழியில் இவற்றை இணைத்துக்1கொண்டு செல்லவும் மகத்தானவையும் அழகானவையுமான படைப்புகளை உருவாக்கவும் முடிந்தது.

எங்களுக்கிடையிலான உறவு 1971 ஆண்டை நோக்கிப் பயணம் செய்கிறது. நான் கோயம்புத்தூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் மனைவி லலிதாவும் (தமிழ் எழுத்தாளர் வாஸந்தியின் ஒன்றுவிட்ட சகோதரி) நானும் நாகர்கோவிலுக்கு வந்து சு.ரா.வைச் சந்தித்தோம். எம். கோவிந்தன் மூலமாக நாங்கள் அவரை அறிந்திருந்தோம். அன்று அவர் எங்களுக்களித்த இனிய விருந்தோம்பலை நான் அன்போடு நினைத்துப்பார்க்கிறேன்.

கடைசியாக நாங்கள் சந்தித்தது சென்னையில் அசோகமித்திரனைப் பாராட்டுவதற்காக நடைபெற்ற விழாவில். ஊக்கமூட்டுவதும் கேட்பவர்களைப் பிடித்து உட்காரச் செய்வதுமான உரையை அவர் நிகழ்த்தினார். பல சமயங்களில் கூட்டம் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தது. அன்று அந்த மேடையில் பார்த்தது மர ணத்தை நெருங்கிக்கொண்டிருந்த மனிதரையல்ல. சிந்தனைகளும் கற்பனைகளும் தீப்பொறிகள்போல அவரிடமிருந்து கிளம்பிப் பறப்பதை நான் பார்த்தேன்.

'காலச்சுவடு' இதழில் பத்தி எழுத சு.ரா. என்னை அழைத்ததை உற்சாகமூட்டுவதும் மதிப்பு மிகுந்ததுமான வெகுமதியாகவே நான் கருதுகிறேன். தமிழின் வலுவும் வளமும் நிறைந்த உலகத்திலிருந்து வந்த ஓர் அழைப்பு மட்டுமல்ல அது; மகத்தான தமிழ் எழுத்தாளர் ஒருவர் எனக்கு நேராக நீட்டிய நட்பும்கூட.

தன் வாழ்க்கை மூலமாக மட்டுமல்ல, மரணத்தின் மூலமாகவும்தான் ஒருவர் தன் நம்பிக்கைகளுக்கு ஒளி கூட்டுகிறார். மத வழக்கங்கள் எதுவுமில்லாமல் தனது இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவுரைத்ததன் வாயிலாக நாம் வாழும் மத-ஜாதிச் சீர்கேடுகளின் சமூகத்துக்குத் தன் மரணத்தின் மூலமும் அவர் எதிர்வினையாற்றியிருக்கிறார். இறுதிவரையுமுள்ள மனிதாயமான சார்புநிலையென்பது இதுதான். இந்தப் பெரும் மனிதரின் நினைவுகளுக்கு முன் நேசத்துடன் தலைவணங்குகிறேன்.

தமிழில்: சுகுமாரன்

Camera

பின்னும் உயிர் வாழும் கானல்

சல்மா

சு.ரா. இறந்துவிட்டார். செல் ஃபோன் திரையில் தோன்றிய வார்த்தைகள் எவ்வளவோ கண்ணீருக்குப் பிறகும்கூட விழிகளிலிருந்து நீங்க மறுக்கின்றன. எனது ஓயாத அழுகையைப் பார்த்துவிட்டு அம்மாவும் நண்பர்களும் சொல்கிறார்கள், மரணம் அனைவருக்கும் பொதுவானது, நாமும் ஒரு நாள் இறந்துவிடுவோம், ஏற்றுக்கொள். என் குழந்தை சொல்கிறான், நம்ம கையில என்ன இருக்கு, அழுகாதே என்று. மரணம் அனைவருக்கும் பொதுவான ஒரு விதி.

நெருக்கமானவர்களின் மரணத்திற்கு மட்டும் ஏன் பொருந்தவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது? சம்பிரதாயமான ஆறுதல் வார்த்தைகளால் நிரப்பக் கூடியதா அவரது இழப்பு? நான் உயிர் வாழ்வதற்கான அவசியத்தைக் குழந்தைகள் மட்டுமே தந்துகொண்டிருந்த காலத்தில் அப் பொறுப்பைக் குழந்தைகளிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டவர் சு.ரா. உயிர் வாழ்தலுக்கான சகல நம்பிக்கைகளையும் எனக்குத் தர முடிந்தவரைப் பற்றி நினைவுக் குறிப்பை எழுத வேண்டும் என்பது அத்தனை எளிதானதல்ல. இன்றும் என்னை வந்து சேர்கிற மொத்த ஆறுதல்களையும் தின்று செரித்துவிட்டுத் துளியும் மறையாமல் எனக்குள் ஸ்திரமாக இறுகிக் கிடக்கிறது அவரது இழப்பு.

அவருடனான என் நினைவுகளை எழுத்துகளாக மாற்றுவதற்கான மனத் தயாரிப்பு இல்லை என்கிற எண்ணத்தைத் தாண்டி அவை இங்கே பதிவாகிக்கொண்டிருக்கின்றன என்றால் அதனைச் சாத்தியமாக்கியதும் அவர்தான்.

‘95ஆம் ஆண்டு அவரது படைப்புகளின் மீது கொண்ட அபிமானத்தில் கடிதமொன்றை நீண்ட தயக்கத்துடன் எழுதினேன். அவருடைய பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும் என்கிற பேராசை ஏதும் இல்லை. அதோடு அவரைப் போன்ற மிகப் பெரிய படைப்பாளி வாசகர்களுக்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் என்னவாக இருக்க முடியும்?

நான் எதிர்பாராத நேரத்தில் அவரிடமிருந்து வந்து சேர்ந்த நீண்ட கடிதம் உணர்த்திய முதல் விஷயம், மனிதர்களிடத்தில் தர நிர்ணயம் எதையும் வைத்துக் கொள்ள முடியாத பண்பாளர் அவர் என்பது.

கடிதங்களால் மட்டுமே உருவாகி வளர்ந்துகொண்டிருந்த எங்களது நட்பில் புலம்பல்களை மட்டுமே கடிதத்திற்கான விஷயங்களாக நிர்ணயம் செய்து கொண்டுவிட்டிருந்த எனக்கு நம்பிக்கைகளையும் பிரியங்களையும் மட்டுமே அவர் பதில்களாக்கிக் கொண்டிருந்தார். எங்களது பத்தாண்டுக் கால நட்பு, இலக்கியம் சார்ந்த உரையாடல்களாய் அல்லாது தனிப்பட்ட பிரியங்களால் கட்டப்பட்டதாகத்தான் இருந்துவந்திருக்கிறது.

எனது துக்கங்களை அவருக்கு எழுதிக்கொண்டிருந்த சமயங்களில் நான் என்னையுமறியாமலேயே அவரை மிகப் பெரிய அளவுக்குக் குற்ற உணர்வுக்குள்ளாக்கி வந்திருக்கிறேன். எனக்கு உதவ முடியாத தன் நிலையை எண்ணி துக்கிக்கும் அவரது பதில் கடிதங்கள் என்னை நிதானம் கொள்ளச் செய்தன.

ஒரு முறை என் கணவர் என்னை அடித்து விட்டதாக எழுதிய கடிதத்தைக் கண்டு தொலைபேசியில் அழைத்து, “ஏம்மா, உங்கள அடிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?” என்று கேட்டவரின் குரலில் உணர்ந்த துயரம் எனக்கு வாழ்நாள் முழுக்கத் தேவையான குற்றவுணர்வை இன்றும் தந்து கொண்டிருக்கிறது.

வீட்டுக்குள் முடங்கி இயலாமையின் பிடிக்குள் விழுந்து கிடந்த எனக்கு “நீங்கள் நினைப்பதுபோலச் சுலபமானதில்லை வெளி உலகம். உங்களால் வெளியில் சென்றுதான் எதையும் அடைய முடியும் என்றில்லை. இருந்த இடத்திலிருந்தபடியே உங்களது படைப்புக்கான உருவங்களையும் அதற்கான முயற்சிகளையும் தொடங்குங்கள்” என்கிற அவரது கடித வரிகளின் நிகழ்கால நிரூபணம்தான் என் படைப்பு முயற்சிகள்.

தனக்கு இந்த உலகத்திலிருந்து கிடைக்கக்கூடிய எந்த விஷயமும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் பெரிய ஆர்வத்தை எப்பொழுதும் தன்னிடத்தில் வைத்திருப்பவர். குறிப்பாக அவ்விஷயங்கள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் கொண்ட ஆர்வம் மிகவும் வியப்புக்குரியது.

எங்கேயாவது சென்று எதையாவது பார்த்துவிட்டு வந்த பிறகு என்னிடம் சொல்வார்: “நீங்க அவசியம் பாக்கணும்னு நெனச்சுக்கிட்டேன். ஒங்களுக்கு ரொம்பப் புடிக்கும்.”

நான் செய்கிற சின்னச் சின்னக் காரியங்களைக்கூட மிகையாகப் பாராட்டிக்கொண்டிருப்பார். இன்று நான் ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டேன் என்று சொன்னால் போதும். “உங்களால முடியாதது எதுவும் இல்ல, நீங்க கெட்டிக்கார ஆள் என்கிறது எனக்கும் கமலாவுக்கும் ரொம்ப நல்லாத் தெரியும்.” உற்சாகமான குரல் மிகையாக என்னைப் பாராட்டித் தீர்க்கும்.

எனது பாகிஸ்தான் பயணத்திற்குப் பிறகு பயணம் குறித்து விசாரித்தவர், “முதல் முறையா தனியா ஆறு பிளைட் மாறி போய்ட்டு வந்தீங்களா, ஆங்கிலமும் இந்தியும் தெரியாம? நிஜமாவே நீங்க பெரிய ஆள் தான்” என்றார். என் ஊரில் கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள்கூட அரபு நாடுகளுக்கென விமானப் பயணம் செய்துகொண்டிருக்கும் யதார்த்தமும் எனக்குத் தெரியும். அப்பாராட்டின் நோக்கமும் புரியும்.

’95ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம்தேதி அவரை முதல் முறையாக அவரது இல்லத்தில் சந்தித்தேன். தயக்கத்துடன் அமர்ந்திருந்தவளிடம் சம்பிரதாய மான உரையாடலுக்குப் பிறகு, “நீங்க நிறைய எழுதலாமே” என்றார். பதில் சொல்லத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

“கனிமொழி தொகுப்பு வந்திருக்கு, படிச்சீங்களா” என்றார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினேன். “அவசியம் படிங்க. அந்த அம்மா திராவிடக் குடும்பத்துலருந்து வந்தாலும் கொஞ்சங்கூட அதனோட சாயல் இல்லாம ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க. நீங்களும் எழுதுங்க, தொகுப்பா கொண்டுவரலாம்.”

அவருடைய நெடுநாள் விருப்பம் திருவனந்தபுரம் பத்மனாப சுவாமிகள் கோயிலையும் அரண்மனையையும் எனக்குச் சுற்றிக் காட்ட வேண்டும் என்பது. பயணிப்பது எனக்குச் சுலபமான பிறகு இரண்டாண்டுகளுக்கு முன் சு.ரா.வுடன் அதிகாலை ரயிலில் திருவனந்தபுரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். கனவில்லை அது.

கடந்துகொண்டிருக்கும் ஊர்களைப் பற்றி, அவற்றின் முக்கியத்துவம் பற்றி, கூடப் பயணிப்பவர்களது வேலைகளைப் பற்றி எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேசாத தருணங்களில் எனக்கே எனக்காக மட்டுமே அவரிடமுள்ள பிரத்யேக மான புன்முறுவலோடு நான் பயணத்தை ரசிப்பதை ரசித்தபடி.

ஓட்டலொன்றில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பே தனது உணவை முடித்துக்கொண்ட எனது மகன் கை கழுவவென வெளியேறும் வழியாகச் சாப்பாட்டு மேசை அடிப் புறத்தே தேர்ந்தெடுத்து வெளியேறியதை வியப்புடன் கவனித்தவர், “குழந்தைகள் வாழ்வை எத்தனை எளிதானதாக எதிர்கொள்கிறார்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.

பத்மனாப சுவாமிகள் கோயிலின் பிரகாரம் திறப்பதற்கென நீண்ட வரிசையில் என்னோடு காத்துக் கிடக்கையிலும் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிவந்து எனக்குத் தகவல்கள் சொல்கையிலும் என் சந்தோஷத்தைப் புன்முறுவலோடு அனுபவித்துக் கொண்டிருந்தார். மதிய உணவுக்கு மிகப் பெரிய ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றவர், “இங்கே ஐந்தாவது மாடியிலிருந்து உங்களிடம் காட்ட வேண்டிய ஒரு இடம் இருக்கிறது. நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றபடி ஐந்தாவது மாடிக்கு அழைத்துச் சென்றார். லிஃப்டில் பயணிக்கும் பொழுதே முகத்தில் லேசான பதற்றம் தெரிய ஆரம்பிக்க, குழப்பத்துடன் பயணித்துக்கொண்டிருந்தேன். லிப்டிலிருந்து வெளியேறியவர் பரபரப்பாக ஓரிடம் தேடிப் போனார். பதற்ற முகம் பரவசமடைகிறது. அது ஜன்னலோர இருக்கைகள் கொண்ட உணவு மேசை. “இந்த இடம் காலியா இருக்கணுமேங்கற கவலையில இருந்தேன்” என்றவர், “இந்தக் கண்ணாடி ஜன்னல் வழியா பாருங்களேன்” என்கிறார்.

அவர் காட்டும் திசையில் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலைப் போலத் தென்னை மரங்களின் அணிவகுப்பு கண்களுக்குத் தெரிகிறது. பார்ப்பதற்கு மிகவும் அற்புதமானதொரு காட்சி அனுபவம் அது.

நான் சந்தோஷிக்கிறேனா எனப் பொறுத்திருந்தவர், “உங்களுக்குப் புடிக்கும்னு தெரியும். இங்கே வரப் போவெல்லாம் கமலாகிட்ட சொல்லுவேன். ராஜாத்திய ஒரு நாள் கூட்டி வந்து காட்டணும்னு” என்றார்.

பல கட்டுகளாக இருக்கக்கூடிய பத்மனாபபுரம் அரண்மனையின் உள்ளே கைடு மலையாளத்தில் சொல்வதை எனக்குத் தமிழில் சொன்னபடி உடன் வந்துகொண்டிருந்தார்.

குறுகலான மரப்படிகளில் ஏறி நடன மண்டபம் ஒன்றைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபொழுது எனக்குக் கால்கள் வலிப்பதை உணர்ந்தேன். அதிகாலையிலிருந்து நடந்துகொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. என் மனதிலிருந்த உற்சாகம் வடிய முகம் இருள ஆரம்பித்தது.

“நீங்க எங்கூட வரவேணாம். கால் வலிக்கும். இங்கியே உக்காந்திருங்களேன்” என்கிறேன்.

“எனக்கா, கால் வலியா? என் ஆரோக்யத்த உங்ககிட்ட காட்டறதுக்கு இதுதான் சந்தர்ப்பம். நீங்க பயப்படுவீங்களே என்னோட ஹெல்த்தப் பத்தி. இப்பப் பாருங்க, நான் எப்படி இருக்கேன்னு” என்றார்.

என் இருளடைந்த முகம் பிறகு தன் இயல்புக்குத் திரும்பவேயில்லை.

அன்றிரவு படுக்கையில் அவரது வீங்கியிருந்த பாதங்களைத் தொட்டு, “எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்றேன்.

“வருத்தப்படறீங்களா?” ஆதங்கத்துடன் கேட்டவர், “ஏன் கமலா, என் பாதம் எப்போதும் இப்படித்தானே இருக்கும், ராஜாத்திகிட்ட சொல்லு” என்றார்.

ஊருக்கு வந்த பிறகு ஒரு நாள் தொலைபேசியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர், “அன்னிக்கு நீங்க என் பாதத்தத் தொட்டுப் பார்த்து வருத்தப்பட்டீங்களே, அன்னிக்கு என் பொண்ணு ஞாபகம் வந்தது. நெகிழ்வா இருந்தது.”

திருவனந்தபுரத்தில் போட்டில் செல்வதற்கு டிக்கெட் எடுப்பதற்காகக் காத்திருந்த சமயத்தில், அவருடனேயே இருந்து அவரது சிந்தனைகளிலேயே தங்களைச் செதுக்கிக்கொண்ட சிலர் அவருக்கு எதிராகப் பேசுவது குறித்த என் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டபோது அவருடைய புன்முறுவல் மட்டுமே பதிலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது.

நம் காலத்தின் ஆகச் சிறந்த படைப்பாளி என்கிற நம் பெருமிதங்களுக்கிடையே, அவர் சிறந்த மனிதாபிமானி என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது.

இலக்கிய உலகம் அவருடைய இழப்பை மாபெரும் இழப்பாக வரித்துக்கொண்டிருக்கிறது. என்னளவில் வேறு யாராலும் ஈடுசெய்யவியலாத இழப்பாக என்னுள் கனன்றுகொண்டே இருக்கும், என் வாழ்நாள் முழுவதும்.

தலைப்பு சு.ரா.வின் கவிதை வரி

Camera

பின்தொடரும் வாசகரின் குரல்

உமா வரதராஜன்

கடந்த சனிக்கிழமை, காலை கடையைத் திறந்ததும் ஒரு கெட்ட செய்தி காத்திருந்தது. தொலைபேசி மூலம் நுஃமான் அதனைச் சொல்லி முடித்தார். என்னைப் போன்ற தமிழ் வாசகர்கள் பலருக்கு அது கெட்ட செய்தி மட்டுமல்ல. அதிர்ச்சியூட்டிய செய்தியுங்கூட.
“அற்பாயுளுக்கும் அதிமேதாவித்தனத்துக்கும் அப்படி என்னதான் ரகசிய உறவோ”* என்ற அங்கலாய்ப்புக்குரியதல்ல மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மரணம்.

74 வயதில் மரணம் நேர்வது அசாதாரணமான ஒன்றல்ல. ஆயினும் சமீபத்திய அவருடைய புகைப்படங்களிலிருந்த கம்பீரமான தோற்றம் மரணத்துடன் அவரைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதற்கான எந்தத் தடயங்களையும் முன்வைக்கவில்லை.

கடந்த நான்கு வருடங்களாக அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனது வீட்டுத் தோட்டத்தின் புதுப் பூக்களைச் சொந்தம் கொண்டாடும் அதே பெருமிதத்துடன் அவருடைய நூல்கள் வெளியானபோதெல்லாம் சந்தோஷத்தில் ஆழ்வதோடு சரி. ‘ஒரு புளியமரத்தின் கதை’யிலிருந்து, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதங்கள்’ வரை அவரை நான் பின்தொடர்ந்திருக்கிறேன்.

நான் இருக்கும் இந்த ஊரிலிருந்து காடு, மலை, கடல் என ஏராளமான தடைகளுக்கும் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலுள்ள நாகர் கோவில் சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் என்னதான் சம்பந்தம்? அவர் என் துரோணாச்சாரியரா? அல்லது பரிவு மிக்க ஒரு தந்தையின் மாற்றுருவா? அல்லது தலை சற்றே உயர்ந்து தெரியும் தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமையா? எல்லாமேதான்.

என் பதினேழு வயதில், இலக்கியக் கூட்டமொன்றின் அழைப்பைக் கொடுப்பதற்காகப் புடவைக் கடை ஒன்றிலிருந்த இக்பால் என்பவரை நான் தேடிச் சென்றபோது, பிளவுஸ் துணி வெட்டியபடி அவர் சொன்னார், “சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையைப் படித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அது!”

இக்பால் சொன்ன அந்த நாவலை ‘மணமகள் புத்தக சாலை’யில் சங்கர் லாலையும் சாண்டில்யனையும் சற்று விலக்கிவிட்டுக் கண்டுபிடித்தேன். தமிழ்ப் புத்தகாலயத்தின் வெளியீடாக வந்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை அன்றே அடையாளங்கண்டு சொன்ன இக்பாலின் கூர்மையான அவதானிப்பு இன்றும் என் நன்றிக்குரியது.

ஜெயகாந்தனின் தீவிர வாசகனாக நான் இருந்த ஒரு காலமது. ஆனால் சு.ரா.வின் படைப்புகளில் பரிச்சயம் கொள்ளத் தொடங்கியதிலிருந்து பீம்சிங்கின்படக் கதாநாயகிகளின் மனநிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுவிட்டேன். ஜெயகாந்தனா சுந்தர ராமசாமியா? வக்கரிப்பைவிட்டு விலகி அதிவிவேகத்தின்பால் என் மனம் சாய அதிக காலம் எடுக்கவில்லை. ஜெயகாந்தன் நமக்கு வழங்கும் வாசிப்பனுவத்தில் ஒரு சிறு புன்னகைக் கேனும் இடமிருந்ததில்லை. சுந்தர ராமசாமியோ நேரெதிர். அவருடைய எள்ளல் கலந்த மொழிநடை அந்நாட்களில் வெகுவாக என்னைக் கவர்ந்தது.

நண்பர் ஆனந்தனும் நானும் சம்மாந்துறை அஞ்சல் அலுவலகத்தின் பக்கத்துத் தேநீர்க் கடையிலிருந்து சு.ரா.வின் கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்போம். அவன் அவருடைய ‘பிரசாதம்’ பற்றிச் சிலாகித்துச் சொல்வான். நான் ‘முட்டைக்காரி’ பற்றிக் கூறுவேன். ‘சீதை மார்க் சீயக்காய்த் தூள்’ குறித்து அவன் பேசுவான். ‘லீலை’ பற்றி நான் குறிப்பிடுவேன். இப்படியாக, பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிபோல் அது நீண்டுகொண்டே செல்லும்.
தமிழ் நாவல் வரலாற்றில் நான் ஒரு பாய்ச்சலாக உனர்ந்தது சு.ரா.வின் ‘ஜே.ஜே. சில குறிப்புக’ளை. மொழியின் வாள்வீச்சு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அந்த நாவல். “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துக்கொண்டாளா?” எனத் தமிழ் எழுத்தாளனிடம் ஜே.ஜே. எழுப்பும் கேள்வி அந்தக் கணத்தில் எனக்குள் ஏற்படுத்திய உற்சாகத்திற்கு அளவில்லை.

அந்த நாவல் தந்த பிரமிப்பில் சுந்தர ராமசாமி அவர்களுக்கு முதல் தடவையாக நான் ஒரு கடிதம் எழுதினேன். அனுப்பி இரண்டாவது வாரத்தில் சு.ரா.விடமிருந்து பதில் கடிதம் வந்தது. தட்டச்சில் பதிவு செய்யப்பட்ட நான்கு பத்திகள் கொண்ட கடிதம் அது. அதை எத்தனை தடவைகள் படித்திருப்பேன், மற்றவர்களுக்குக் காட்டியிருப்பேன் என்பது ஞாபகத்தில் இல்லை. அதன் பின்னர் அவ்வப்போது நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொண்டோம்.

1990 என்பது ஒரு முக்கியமான வருடம். மனிதப் படுகொலைகளைப் பார்த்து நான் அதிர்ந்து போயிருந்த காலம் அது. தெரு நாய்கள் மனித உறுப்புகளைச் சர்வ சாதாரணமாகக் கவ்விச் சென்ற சூழலில் நான் இருந்தேன். எதிர்காலமும் இருப்பிடமும் குறித்த கவலை என்னை வாட்டி வதைத்தது. இங்கிருந்து எப்படி யாவது வெளியேறிவிட வேண்டுமெனத் துடித்துக்கொண்டிருந்த நிலைமையில் சுந்தர ராமசாமி அவர்களை நான் தொடர்பு கொண்டேன். எதனைப் பற்றியும் யோசிக்காமல் உடனே நாகர்கோயிலுக்கு வந்துவிடும்படி அவர் பதில் அனுப்பியிருந்தார்.

1990 செப்டம்பரில் திருவனந்தபுரம் வழியாக நாகர் கோவில் சென்ற நான் முதல் தடவையாக சு.ரா. அவர்களை நேரில் சந்தித்தேன். வாசல் நிலை தட்டும் உயரம். கம்பீரமான தோற்றம். மீசை, தாடியற்ற மொழுமொழுவென்று சவரம் செய்த முகம் (எஸ்.வி. ரங்காராவுடன் அவரை ஒப்பிட்டெழுதிய சாரு நிவேதிதாவுக்குத் தங்கப் பேனா பரிசளிக்க வேண்டும்). கைகுலுக்கி அவர் என்னை வரவேற்றார். சில வாரங்கள்வரை அவருடைய அவுட் ஹவுஸில் நான் தங்கியிருந்தேன்.

இரவானதும், அமைதியான சூழலில் திண்ணையில் உட்கார்ந்து அவரும் நானும் பேசிக் கொண்டிருப்போம். நல்ல சிறு கதைகள் என்பன ஒரு வகையில் கவிதைகளே என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். தமிழ் நாட்டின் சாபக்கேடு, தங்களுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத துறைகளில் சிலர் தங்களை விற்பன்னர்களாகக் காட்ட முயல்வது என்றார். சினிமாமயப்பட்ட தமிழ்நாட்டின் பாமர ரசனை அவரை உறுத்திக்கொண்டேயிருந்தது. மு. தளையசிங்கம் மீது அவர் மிகவும் மதிப்பு வைத்திருந்தார். உரிய முறையில் அவருடனான கடிதப் போக்குவரத்தைப் பேணாதது தன்னுடைய துரதிருஷ்டம் எனக் கூறி வேதனைப்பட்டார். கிருஷ்ணன் நம்பி, மௌனி ஆகியோருடனான தன்னுடைய அனுபவங்களை நினைவுகூர்ந்தார். அவருடன் சம்பாஷித்தல் என்பது வெகு சுவாரஸ்ய மான ஒன்று.

அண்மைக் காலமாக சு.ரா. அளவுக்குக் கண்டனங்கள், விமர்சனங்களை எதிர்கொண்ட, சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் வேறு எவரு மில்லை எனச் சொல்லலாம். இந்தக் கண்டனங்கள், விமர்சனங்களின் பின்னால் இருந்த நேர்மை சந்தேகத்துக்குரியது. பெரும்பாலும் மௌனம், நழுவல் போக்குகளையே கடைப்பிடிக்கும் எமது கலை- இலக்கியச் சூழலில் வெளிப்படையாகத் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் சு.ரா. போன்றவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது ஆச்சரியமூட்டக்கூடிய ஒன்றல்ல. அவரது கருத்துகளை நேர்மையான தளத்தில் சந்திக்க இயலாதவர்கள் சாதி அரசியலைத் துணைக்கழைத்தவர்கள் என்பதுதான் உண்மை. சமீபத்தில் அவருடைய படைப்பான ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ எதிர் கொண்ட எதிர்மறையான விமர்சனங்களின் உள் நோக்கங்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமான காரியமல்ல. விமர்சகர்கள் என்ற பெயரில் போக்குவரத்து போலீஸ்காரர்களைப் போல் கலைஞர் களுக்கு வீதி ஒழுங்குகளைக் கற்பிக்க சிலர் முன்வருவது சகிக்கக்கூடிய ஒன்றல்ல. சு.ரா. ஒரு தடவை எனக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘இந்தத் தமிழ்கூறு நல்லுலகிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது.’

சு.ரா.வின் அநேகமான படைப்புகள், சொற்பொழிவுகள், கடிதங்கள் என்பன நூலுருப் பெற்றுவிட்டன. மரணப் படுக்கையில், தலைமாட்டில் உள்ள தன் கையெழுத்துப் பிரதிகளை ஏக்கப் பெருமூச்சுடன் நோக்கும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்களின் நிலைமை அவருக்கு நேரவில்லை. படைப்பாளி, சிந்தனையாளர் என்ற இரு தளங்களிலும் அவர் இறுதிவரை சுறுசுறுப்பாகவே இயங்கியுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துலக விரிவாக்கத்தில் க.நா.சு.வுக்கு அடுத்தபடியாகப் பெரும் பங்காற்றியவர்கள் என சு.ரா.வையும் வெங்கட் சாமிநாதனையுமே எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது எனினும் வெங்கட் சாமிநாதனின் எழுத்து சில வேளைகளில் நிதானமிழந்து எதிராளிமீதான வசைகளில் இயங்கும். ஆனால் சு.ரா.வின் மொழிநடை குறும்பு கொப்பளிப்பது. நிலைகுலையாமல் தன் வாதங்களை அடுக்கிச் செல்வது. அந்த இழப்பின் வெற்றிடம் சுலபமாக நிரப்பக்கூடிய ஒன்றல்ல.

'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலில் வரும் வரி

Camera

நண்பர் ராமசாமி

யுவன் சந்திரசேகர்

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாளையங்கோட்டை தேவாலயத்தில் நடைபெற்ற சக ஊழியர் ஒருவரின் திருமணத்துக்கு நாங்கள் ஏழெட்டுப் பேர் சென்றோம். அங்கிருந்து கன்னியா குமரி. விவேகானந்தர் பாறையில் நின்றுகொண்டிருக்கும்போது நண்பர்களிடம் அறிவித்தேன் - நான் நாகர்கோயில் போய்விட்டு மதுரை திரும்புகிறேன் என்று. எதற்கு என்று அவர்கள் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.

அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் இளைய மாணவனான ரவி ஸ்ரீனிவாஸுக்கு சுந்தர ராமசாமியுடன் கடிதத் தொடர்பு உண்டு. அவன் கொடுத்த ‘ஜே.ஜே. சில குறிப்புக’ளைப் படித்திருந்தேன். அதன் பல பகுதிகள் புரியாவிட்டாலும் பொதுவான ஒரு வசீகரம் அந்த நாவலிடம் எனக்கு உண்டாயிற்று. அதற்குப் பிறகு அவனிடமே வாங்கி ‘ஒரு புளிய மரத்தின் கதை’ வாசித்தேன் (தமிழ் நாவல் கதா பாத்திரங்களில் ஜே.ஜே.வையும் பாலுவையும் விட தாமோதர ஆசானுக்கு இசக்கிக்கும் முக்கியமான இடம் உண்டு என்று இப்போது தோன்றுகிறது).

சுந்தர ராமசாமி நாகர்கோவில் மணிமேடையில் உள்ள சுதர்ஸன் டெக்ஸ்டைல்ஸின் உரிமையாளர் என்று ரவி ஸ்ரீனிவாஸ் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தது மனத்தில் நன்கு பதிந்திருந்தது. நேரே கடைக்குச் சென்றேன். வீட்டுக்கு வழி சொல்லி ஆட்டோவும் பிடித்துக் கொடுத்து அனுப்பினார்கள்.

சுந்தர விலாஸில் என் அழைப்பைக் கேட்டு நடுவயதினர் ஒருவர் வெளியே வந்தார். கைவைத்த பனியனும் முரட்டு நாலுமுழ வேட்டியும் அணிந்திருந்தார். “சுந்தர ராமசாமி . . .” என்று இழுத்தேன். “நான்தான். உள்ளே வாங்கோ” என்றார்.

உள்ளே சென்று அமர்ந்த மாத்திரத்தில் உரையாடல் ஆரம்பித்தது. நான்தான் அதிகமாகப் பேசினேன். பேச்சைத் தூண்டும் விதமாகச் சிறு சிறு கேள்விகள் கேட்டுவந்தார். சாப்பாட்டு நேரம் வந்தது. “சாப்பிடலாமே” என்று சொன்னார். பல வருடப் பழக்கம்போல மிக சுவாதீனமாக நானும் எழுந்து போனேன். கடந்த இருபத்தோரு வருடங்களில் எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். அந்த வீட்டில் சுவாதீனக் குறைவாக ஒரு நாளும் உணர்ந்ததில்லை. அந்தச் சாப்பாட்டு மேஜையில் நானும் ராமசாமியும் மட்டும் உட்கார்ந்து சாப்பிட்ட நாளும் கிடையாது. அவரைப் பார்க்க வேறு யாராவது வந்திருப்பார்கள்.

இன்றுவரை, என்னுடைய வீட்டில் நண்பர்களை வரவேற்று உபசரித்து உரையாடும்போது, ராமசாமி அளவு என்னால் இயல்பாக நடந்துகொள்ள முடிகிறதா என்ற கேள்வி எனக்குள் எழத்தான் செய்கிறது. நான் சதா தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.

தண்டபாணி எனக்கு அறிமுகமானபோது, அவன் நிறைய வாசித்திருந்தான் என்றாலும் தமிழ் நவீன இலக்கியத்தில் அவனுக்கு வாசிப்பு குறைவுதான். என்னிடமிருந்து சுந்தர ராமசாமியின் நூல்களை வாங்கிப் படித்தான். அந்தச் சமயத்தில் எஸ்.வி. ராஜதுரை நடத்திவந்த ‘இனி’ இதழில் ராமசாமியின் ‘மீறல்’ கதை வெளியாகியிருந்தது. பேருந்துப் பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஒரே கைதாங்கியைப் பகிர்ந்துகொள்ள நேரும் இருவருக்கிடையில் நிகழும் மானசீக யுத்தம் பற்றிய கதை அது. பிரயாணிகள் இருவரும் முன் பரிச்சயம் உள்ளவர்களாக இருப்பது கதையின் மேன்மையைக் குறைக்கிறது என்று தண்டபாணி அபிப்பிராயப்பட்டான்.

“சுந்தர ராமசாமிக்கு எழுதேன்” என்றேன். “சீச்சீ. அதெப்படி. அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர். நான் வெறும் ஆரம்ப வாசகன். அது சரியா இருக்காதுடா. எதோ தோணிச்சு. நாம ரெண்டு பேரும் பேசிக்கிறோம். நான் யாருன்னே அவருக்குத் தெரியாது. இதையெல்லாம் போய் எழுதலாமா?”

“தாராளமாக எழுதலாம். ராமசாமி நிச்சயம் பதில் எழுதுவாரு.”

“அப்பிடியா சொல்றே?”

“கட்டாயம். இன்னிக்கித் திங்கள் கிழமையா. உன் லெட்டர் நாளைக்கி அவருக்குக் கிடைக்கும். உடனே அவர் பதில் எழுதிருவாரு. வியாழக்கிழமைக்குள்ளே உனக்கு பதில் வந்துரும் பாரு.”

ஆனால் வியாழக்கிழமை பதில் வரவில்லை. சனிக்கிழமைதான் வந்தது. காரணம், ராமசாமி வெளியூர் சென்றிருந்தார்.

இரண்டு வருடப் பழக்கத்தில் இவ்வளவு பெரிய நம்பிக்கை எனக்குள் உருவானதற்குக் காரணம் சுந்தர ராமசாமியிடமிருந்த அடிப்படை ஒழுங்கும் நண்பர் களிடத்தில் அவருக்கு இருந்த அக்கறையும்தான். என்னை வளர்த்த சகோதரருக்கும் எனக்கும் இடையில் உண்டாகும் சிறுசிறு மனஸ்தாபங்களைக்கூட அவருக்கு ஒரு போஸ்ட்கார்டில் எழுதிப் போடுவேன். தட்டச்சில் நாலைந்து பக்கங்களுக்குக் குறையாமல் அவரிடமிருந்து பதில் வரும். உறுத்தாத வகையில் ஆலோசனைகள் சொல்வார். “தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிடுக்கு விழுந்துவிட்டது. இது இறுகாமலும், மேலும் பல முடிச்சுகள் விழுந்துவிடாமலும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்று எனக்குப் பதட்டமாக இருக்கிறது” என்று அவர் எழுதியிருந்த ஒரு வாக்கியம் இத்தனை வருடம் கழித்தும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

தண்டபாணிக்கு அவர் எழுதியிருந்த பதிலும் ஞாபகம் இருக்கிறது. “என்னையும் அறியாமல், படைப் பின் பிராணனான மையத்தில் ஒரு சிறு கீறல் விழுந்து விட்டது வாஸ்தவம்தான். இனி அவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி.”

ராமநாதபுரத்திலும் கோவில்பட்டியிலும் வசித்த வருடங்களில் மிகப் பல தடவைகள் நாகர்கோவில் சென்றிருக்கிறேன். தனியாகவும் தண்டபாணியுடனும். முன்னிரவில் தொடங்கி விடிவதற்குச் சற்று நேரம் முன்புவரை விடாது பேசிக்கொண்டிருப்போம். நானும் தண்டபாணியும் மாறி மாறி சிகரெட் பிடிப்போம். ராமசாமி புகைப்பதை நிறுத்தியிருந்தார். நள்ளிரவுக்குப் பிறகு அவரும் சிகரெட் பிடிக்கத் தொடங்குவார். இருப்பு தீர்கிறது என்று ஆகும்போது நாங்கள் புகைக்கும் சிகரெட்டைப் பகிர்ந்துகொள்வார். “சிகரெட்டை விட்டுட்டேன்னு சொன்னீங்களே” என்று தண்டபாணி ஒருமுறை கேட்டான். “நண்பர்களோடு இருக்கும்போது சின்னச் சின்னத் தப்புகள் செய்தால் சற்று ஆறுதலாக இருக்கிறது!” என்றார்.

அந்த முறை சுந்தர விலாஸின் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான், தண்டபாணி, கமலா மாமி மூவரும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, ராமசாமி குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே பேசிக்கொண்டிருந்தார். நெடுநாட்களாக உடற்கோளாறினால் அவதிப்பட்டு வந்த அவரது மூத்த மகள் சௌந்தரா பற்றிப் பேச்சு திரும்பியது. தொடர்ந்து பேசியவாறு நடந்த ராமசாமியின் நடை வேகம் குறைய ஆரம்பித்தது. உணர்ச்சி வெளிப்படாத வார்த்தைகளில் பேசிக்கொண்டே வந்தவர், ஒரு கட்டத்தில் நின்றுவிட்டார். கண்ணீர் மல்கியிருந்த அவரது முகத்தைப் பார்த்தபோது, ராமசாமியிடம் மிக மிகப் பிரியமாக உணர்ந்தேன்.

நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சட்ட ரீதியான தேவைகளுக்காக வருடத்தில் பல மாதங்கள் அவர் அமெரிக்காவில் சென்று தங்கவேண்டிவந்தது. இந்தியாவுக்கு வரும் சமயங்களில் அவர் மிகவும் பரபரப்பான மனிதராக ஆகியிருந்தார். வெகுஜன ஊடகங்கள் அவரைச் சுவீகரித்துக்கொண்டன. சாவ காசமாக உட்கார்ந்து பல மணிநேரம் உரையாட இயலாதபடி அவருடைய நடைமுறைகள் மாறிவிட்டிருந்தன.

இதுபோக, இலக்கிய வாழ்வின் பகுதியாக ஏகப்பட்ட துருவ மாற்றங்கள் கோபதாபங்கள், ஆதங்கங்கள் காரணமாகப் பல தரப்புகளிலும் சொற்கள் வாரியிறைக்கப்பட்டன.

ஆனால் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற தகவலை எனக்கு முதன்முதலில் கூறியவர் மனுஷ்யபுத்திரன். ஓரிரு மணி நேரம் கழித்து ஜெயமோகன் தொலை பேசியில் அழைத்தான். இருவருக்குமே குரல் உடைந்திருந்தது. சரளமாகப் பேச முடியாமல் தடுமாறினார்கள். முந்தைய இரவை உறக்கமின்றிக் கழித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எழுத்துக்கும் அது சார்ந்த சச்சரவுகளுக்கும் அப்பால், சுந்தர ராமசாமி உருவாக்கியிருந்த ஆத்மார்த்தத்தின் இன்னொரு சான்று இது என்று எனக்குத் தோன்றியது.

அவரளவு இளைஞர்களால் சூழப்பட்ட இன்னொரு எழுத்தாளரை நான் பார்த்ததில்லை. அவர் வழியாக எனக்குக் கிடைத்த நண்பர்களின் பட்டியல் மிக நீளமானது. அதன் விந்நியாசங்களும் அலாதியானவை. தி.அ. ஸ்ரீனிவாசன், எம்.எஸ்., அம்பை, மனுஷ்யபுத்திரன், சலபதி, சங்கரராம சுப்பிரமணியன், நெய்தல் கிருஷ்ணன் . . .

அவருடைய எழுத்துப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. குறிப்பாக அவருடைய படைப்பிலக்கியம் பற்றி; அவருடைய உரைநடையும் கவிதைப் பார்வையும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் எத்தனை பேரிடம் ஆழமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பது பற்றி; நேர்ப் பேச்சிலும் கடிதங்களிலும் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த எழுத்து ஆலோசனை பற்றி; நானும் எழுதுகிறவன் என்று ஆகி, வாசிக்கும் ஒவ்வொரு படைப்பையும் படைப்பாளியின் பார்வைக் கோணத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் படிந்துவிட்ட பிறகு, சுந்தர ராமசாமியின் படைப்புகள் சம்பந்தமாக எனக்குள் உருமாறிவரும் அபிப்பிராயங்கள் பற்றி; கடந்த சில வருடங்களில் அவர் புரிந்த எதிர்வினைகள் பற்றி . . . சாதகமாகவும் பாதகமாகவும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவை இப்போது முக்கியமில்லை என்றுதான் படுகிறது. பிற்பாடு விரிவாகப் பேசிக்கொள்ளலாம். இது உணர்ச்சிமயமான சந்தர்ப்பம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாகத் தொடர்ந்த நட்பின் மறுமுனையை இனிப் பார்ப்பதற்கில்லை என்று ஆகியிருக்கிறது. அந்த வெற்றிடத்தைக் காண்பது அத்தனை சுலபமாக இல்லை. ராமசாமியுடன் கழித்த தருணங்கள் கடந்த பத்து நாட்களாக காட்சிகளாய் நினைவில் ஊறியவண்ணமிருக்கின்றன.

அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களும் படைப்பாளிகளும் வரும்போது, அவர்களுக்கு சுந்தர ராமசாமியின் படைப்புகளும் அவற்றைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட விமர்சனங்களும் திறந்தே இருக்கின்றன. அவருடைய படைப்பு ஆளுமை பற்றிச் சுயமாக முடிவுசெய்யும் சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது.

ஒருபோதும் அவர்களுக்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் பகுதி என் நினைவுகளில் பதிந்திருக்கிறது. அதைச் சொல்லி ஆற்றிக்கொள்ள வேண்டும். எண்பதுகளின் இறுதியில் என்னுடைய உடல்நலமும் மனநலமும் வெகுவாகக் குன்றியிருந்த நாட்களில் அவர் என் மீது கொண்டிருந்த கரி சனம் பற்றி. பல வருடங்களுக்கு முன்பே, தன்னுடைய உணவுப் பழக்கம் ‘ருசியிலிருந்து ஆரோக்கியத்தை நோக்கித் திரும்பிவிட்டது’ என்று அவர் குறிப்பிட்டது பற்றி. உடல்நலத்தைப் பேணுவதில் அவருக்கு இருந்த அக்கறை பற்றி. சீரான வாழ்முறை கொண்டிருந்த அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கலாமே என்ற ஆற்றாமை பற்றி. தன்னோடு நெருக்கமாக இருந்த தண்டபாணி போன்ற நண்பர்களின் வாழ்க்கையில் துயரம் முட்டி நின்ற நாட்களில் அவர் வெளிப்படுத்திய பரிவும் கவலையும் பற்றி. அவர் பற்றிய சகல விவரங்களையும் இறந்த காலத்தில் குறிப்பிட வேண்டிவந்த துர்நிலை பற்றி . . . இவையெல்லாவற்றையும்விட, தன் படைப்புகள்மீது வெளியான அபிப்பிராயங்களை அவர் எதிர்கொண்ட விதம் பற்றி.

சுபமங்களாவில் அவருடைய நாடகம் ‘யந்திரத் துடைப்பான்’ வெளியாகியிருந்தது. ராமசாமியின் வீட்டில் அவருடன் சாப்பிட்டுவிட்டு, அவருடைய சொந்த அறையில், கட்டிலில் அமர்ந்து சிகரெட் பிடித்தவாறு “அந்த நாடகத்தில் தியேட்டரே இல்லை. வானொலி நாடகம் போல இருக்கு” என்று அபிப்பிராயம் உதிர்த்த போது என்னுடைய வயது முப்பதுக்குள்தான் இருக்கும். அவருக்கும் எனக்கும் முப்பது வயது வித்தியாசம். நாடகம் என்ற வடிவம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இன்றுவரை. எனக்குத் தெரியாது என்பது ராமசாமிக்குத் தெரியும்.

ராமசாமி முகம் மலர்ந்து சிரித்தார்.

“நீங்க சொல்றது சரிதான். ந. முத்துச்சாமியும் இதையேதான் சொன்னார்.”

கூட்டங்களுக்குப் பெரும்பாலும் முன்னதாகவே வந்துவிடுவார். நண்பர்கள் வரும்போது, ஒவ்வொருவரை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வார். சிலருக்குச் சிறு தலையசைப்பு. சிலருக்கு மலர்ந்த சிரிப்பு. சிலரிடம் கைகுலுக்கல். சிலரிடம் அதிகநேரம் கைகுலுக்கல். வெகுசிலரை ஆரத் தழுவிக்கொள்வார். அவரது மரணம்வரை சந்திக்கும்போதெல்லாம் சுந்தர ராமசாமியின் தழுவலுக்கு உரியவனாக இருந்திருக்கிறேன் என்பது மிகவும் பெருமிதமாய் இருக்கிறது. அதன் காரணமாகவே அவருடைய மரணம் வெகுவாக வலிக்கிறது.

Camera

சு.ரா.வுடன் சில நாட்கள்

பி.ஏ. கிருஷ்ணன்

சான் ஓஸே நகரத்திற்கு வந்த உடனேயே அவருக்கு ஃபோன் செய்திருக்க வேண்டும். சோம்பேறித் தனம். செய்யவில்லை. வந்த சில நாட்களுக்குப் பிறகு அவருடன் தொலைபேசியில் பேசியபோது என்னுடைய ஃபோனை அவர் தினமும் எதிர் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொன்னார். நாகர்கோவிலில் அவருக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்திருக்க நியாயம் இல்லை. அங்கே தமிழையும் இலக்கியத்தையும் இந்தியாவையும் பற்றிப் பேச அவரைச் சுற்றி ஒரு கூட்டமே நின்றுகொண்டிருக்கும்.

சான்டாக்ரூஸ், அவரிடம் அடக்கமாக அன்பு காட்டும் அவரது மகள் தைலாவின் நகரம். அங்கிருக்கும் தைலாவின் வீடு காலையானதுமே காலியாகிவிடும். சு.ரா.வும் கமலா அம்மாவும் தனியாகிவிடுவார்கள். வந்து சூழும் நிசப்தத்தைக் கலைப்பது பறவைகள், சிறு பூச்சிகள் அல்லது விலங்குகள் மட்டுமே. அதைத் தமிழ் கலைக்க வேண்டும் என்று சு.ரா. விரும்பினால் கோகுலக் கண்ணனிடமோ மனுபாரதியிடமோ அவர் பேச வேண்டும். அல்லது என்னைப் போன்ற சோம்பேறிகளின் ஃபோனை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நம் எல்லோரையும் போல சு.ரா.வும் மௌனம் கவியும் தருணங்களுக்கு ஏங்கியிருந்திருப்பார். ஆனால் அது வந்து கவிந்து, நினைத்தபோது விலகாதபோது, ஓசைக்காக, குறிப் பாகத் தமிழோசைக்காக, ஒரு பொறுமையின்மையோடு அவர் காத்துக்கொண்டிருந்தார் என்று நான் நினைத்தேன்.
எனக்கு என்மீதே மிகுந்த கோபம் வந்தது.

சான் ஓஸே நகரத்தில் ‘பார்டர்ஸ்’ புத்தக நிலையத்திற்கு அருகே நாங்கள் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. நானும் என் மருமகளும் காரை நிறுத்திவிட்டு சாலையைக் கடக்க முயலும்போது எங்களுக்கு மிக அருகில் சு.ரா. வந்த வண்டி நின்றது. முகம் பளீரென்று இருந்தது. நேர்த்தியாக வெட்டப்பட்ட வெண் தாடி. கண்களில் வெளிச்சம். சிரிப்பு. உடனே அவரது வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து நினைவிற்கு வந்தது. சு.ரா.வைப் பார்த்த மகிழ்ச்சியில் என் மருமகளிடம் விடைபெற்றுக் கொள்ள மறந்துவிட்டேன் என்று. அவரிடம் செல் ஃபோனில் உடனே பேசினேன். இத்தாலிய அமெரிக்க ரான அவர் சொன்னார், “It is fine, Chittappa. You did bid me goodbye. Oh, you are so forgetful. But I suppose it happens. It used to happen with my Granddad (or Granduncle- I forget who). Quite frequently. He had Alzheimer’s. You write. It comes to the same thing, doesn’t it?” அவர் சொன்னதை சு.ரா.விடம் சொன்னேன்.

“மறக்கறதுங்கறது ஒரு அருமையான வியாதி, கிருஷ்ணன். எத்தனை பேருக்கு அது வாய்க்கும்?”

“மறக்கக் கூடாதது மறந்துபோயிடறதே, சார்.”

“பொதி சுமக்கறதவிட அது எவ்வளவோ தேவலை. மறந்தா அது மறக்க வேண்டியதுதானோ என்னவோ.”

அன்று இரவு உணவு சரவண பவனில். நாக்கு செத்துவிட்டதா என்று அவர் கேட்டார். செத்த நாக்கிற்கு உயிர் தருகிற மாதிரி சரவண பவன் உணவு அன்று ஏனோ இல்லை. சு.ரா.விற்கு உணவு பிடித்திருந்தது என நினைக்கிறேன். அதிகம் சாப்பிடவில்லை. ஆனால் விரும்பிச் சாப்பிட்டார். அப்போது உடல் நலம் பற்றி கேட்டேன்.

“முன்னால இருந்ததுக்குத் தேவலை. தினமும் நடக்க முடியறது.”

தைலாவின் கணவர் எனக்கு உறவினர். நான் தைலாவை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால் பார்த்த உடன் நெடுநாள் பழகிய நண்பர்களைப் போலத்தான் இருவரும் நினைத்தோம். வாய் ஓயாமல் பேச வேண்டும் என்று இருவருக்கும் ஆசை. சு.ரா.வுடன் பேசியதைவிடத் தைலாவிடம்தான் அதிகம் பேசினேன். சு.ரா.வும் குறைவாகப் பேசினார். பேசி முடித்த உடன் சன்னமான, மற்றவர் கவனித்தால் உணரக் கூடிய, மூச்சு வாங்கல். நானும் தைலாவும் இரண்டு நாள்கள் தொடர்ந்து சான்டாக்ரூஸின் புகழ் பெற்ற கடற்கரையில் நீண்ட தூரம் நடந்தோம். நடக்கும்போது பேசியதில் பாதிக்கும் மேல் சு.ரா.வைப் பற்றி. பேசாதபோது நினைவு அவரைப் பற்றி.

சு.ரா.வுடன் நான் கிட்டத்தட்டத் தனிமொழி ஆற்றிக்கொண்டிருந்தேன். படித்ததையெல்லாம் விளம்பரப் பொம்மைகள் மாதிரி வார்த்தைகள் அணிவித்து வெளியே நிறுத்துகிறேனோ என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. சு.ரா. பொம்மைகள் அணிந்திருப்பதை அளவிடும் தேர்ந்த பார்வையாளர்.

“என்ன புத்தகம் அது?”

“மார்ட்டின் லூதரைப் பத்தின புத்தகம், சார். இங்க லைப்ரரில எடுத்தது. இந்த ஊர் லூதர் இல்ல. பழைய லூதர்...” என்று தொடங்கி லூதர் எப்படிப் போப் ஆண்டவரை எதிர்த்தார், எப்படி அவர் கொண்டுவந்த சீர்திருத்தம் மேற்கத்திய அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கியமும் வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பதைப் பற்றியெல்லாம் பேசி முடிக்கும்போது அவர் கேட்பார்:

“படிச்சு முடிச்சுட்டேளா?”

“எங்க சார், ஒரு நாப்பது பக்கம் படிச்சிருப்பேன்.”

“நாப்பது பக்கத்திலயே இவ்வளவு விஷயம் வச்சிருக்கானா?”

நான் படிக்க நினைத்து, நூலகத்திலிருந்து எடுத்து, படித்து முடிக்க முடியாமல் திரும்பக் கொடுத்த பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.

சு.ரா. விடாமல் படித்துக்கொண்டிருந்தார். நான் அவர் வீட்டில் இருந்தபோது அவர் படித்துக் கொண்டிருந்தது Saul Bellowவின் நாவல் என்று நினைக்கிறேன். அவர் வழக்கமாக உட்காருவது சாய்ந்து கொண்டு வசதியாகப் படிப்பதற்கென்றே அமைக்கப்பட்ட ஒரு உ- வடிவு (உ- வடிவா?) சோபா. அது அந்த வீட்டின் மிக அழகான அறையில் இருந்தது. அது சூரிய ஒளி வருவதற்கு ஏதுவான கண்ணாடிக் கூரை கொண்டது. இரு புறங்களில் மரப்பட்டிகள் இடையூடிய கண்ணாடிச் சுவர்கள். சுவர்களுக்கு வெளியே காடு. சிறிது நேரம் இருந்தால், மான்களையும், பருத்த கறுத்த முயல்களையும் பார்க்க முடியாத வாய்ப்பைத் தராத காடு. மூன்றாவது புறம் அமைந்த கதவைத் திறந்து சிறிது தூரம் நடந்தால் நீச்சல் குளத்திற்கு வந்துவிடலாம். இந்தக் கதவிற்குப் பக்கத்தில் ஒரு சிறிய புத்தக அலமாரி. அதில் பல புத்தகங்கள். அவற்றில் ஒன்று ஆங்கில இலக்கணத்தை எளிமையாகப் பயில உதவி செய்வதாக வாக்குறுதி அளிக்கும் புத்தகம். புகழ் பெற்ற புத்தகம். சு.ரா. அப்போது படித்துக்கொண்டிருந்த புத்தகம்.

சு.ரா. எல்லா வகை மாமிசமல்லா உணவுகளையும் விரும்பி, அளவோடு சாப்பிடுவார் என்று எனக்குத் தோன்றியது. வீட்டில் பாஸ்டா, நூடுல்கள், புரிட்டோ, டார்டியா போன்ற உணவுகளுக்கு விலக்கு இல்லை. நான் ஸான் பிரான்சிஸ்கோவில் ஒரு எரித்ரியன் உணவகத்தில் நம்மூர் கோதுமை தோசை போன்ற ஓர் உணவைச் சாப்பிட்டேன் என்று சொன்னேன். மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார். நோய் நான் நிச்சயம் இருக்கிறேன் என்று அவ்வப்போது காட்டிக்கொண்டிருந்தது - கணினியின் முன் உட்கார்ந்து கதையெழுத முயலும் வேளையில், அல்லது வீட்டிற்கு வெளியே நடக்கும்போது. சிறிது தூரம் நடந்துவிட்டு, முடியாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் பெஞ்சில் அமர்ந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு குறுந்தகட்டுச் சங்கீதம் (அருணா சாயிராம், மொஸார்ட்) கேட்டுக்கொண்டிருப்பார். அல்லது அவரது பேத்தி பாஸ்கட் பால் பயிற்சி செய்வதை ரசித்துக்கொண்டிருப்பார்.

இப்போதைய இளைஞர்கள் போன தலைமுறை இளைஞர்களைவிட நிறையப் படித்திருக்கிறார்கள் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும் படிப்பு பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணமாக இருப்பது குறித்துக் கவலை. நமது தமிழ்நாட்டுக் கிராமங்களில் உள்ள நூலகங்கள் சீரழிந்துபோனதைப் பற்றி அவருக்கு மிகுந்த வருத்தம். “எனக்குத் தெரிஞ்சு நாகர்கோவிலிலிருந்து ஒரு பத்து மைல் சுத்தளவில் இருக்கற கிராமம் எல்லாத்திலும் ஒரு நல்ல லைப்ரரி இருந்தது. இப்போ அதோட தடமிருக்கறதே சந்தேகந்தான். திருப்பதிசாரம் சீனிவாசன் சொல்றார், பழைய லைப்ரரி புத்தகம்லாம் இப்போ திருநெல்வேலி பழைய புத்தகக் கடைகள்ள கிடைக்கறது, சீப்பா வாங்கலாம்னு.” அவரது கூர்மையை நோய் நெருங்கக்கூட முடியவில்லை. யாருடைய வீட்டைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தோம்.

“பெரிசோ?”
“தொலைஞ்சு போயிடலாம் கிருஷ்ணன்.”
நான் என்னுடன் ஸு-டோ-கு புதிர்ப் புத்தகம் ஒன்று கொண்டுபோயிருந்தேன். கமலா அம்மாவிற்கும் தைலாவிற்கும் ஸு-டோ-கு பைத்தியமே வர அது காரணமாக இருந்தது. இணையத்திலிருந்து புதிர்களை இறக்கி நான் கமலா அம்மாவிற்குக் கொடுக்க, அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றுகொண்டிருந்தார். சு.ரா.விடம் அவர் பேசும் நேரம் இதனால் கணிசமாகக் குறைந்து போயிருக்கலாம். என்னிடம் அவர் ஒரு வெளியில் சொல்ல முடியாத கோபம் கொள்ள ஒரு வாய்ப்பை அவருக்கு என்னையே அறியாமல் அளித்துவிட்டேன் என்று எனக்கு அப்போது தோன்றியது.

சான் ஓஸே நகரில் தமிழ் வாசகர்களை நான் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு சு.ரா.வால் வர முடியவில்லை. எனவே அவரது வீட்டிலேயே சிறிய மறு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சு.ரா., கோகுலக் கண்ணன், மனுபாரதி, நான். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருப்போம். தீவிர இலக்கியம் பக்கம் தீவிரத் தமிழர் என்று தங்களைச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் தலை வைத்துக்கூட வைக்காமல் இருப்பது பற்றிப் பேச்சு திரும்பியது. தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சு.ரா.விற்கு நடந்த ஒரு புகழ் பெற்ற வரவேற்பைப் பற்றி நான் சொன்னேன்.

(தலைவர் கூட்டத்திற்குத் தாமதமாக வருகிறார். இடது தோள்பட்டையில் கழுத்து செல் ஃபோனை இடுக்கிக்கொண்டிருந்தது. அவரது பேச்சின் சாரம்: இவர் பேர் சுந்தரம் ராமசாமி. நாவல், சிறுகதை, நாடகம், கவிதையெல்லாம் எழுதியிருக்கார். நானும் எழுதியிருக்கேன் பெரியவாளைப் பத்தி. அவரைப் பத்தி அவரையே இரண்டு வார்த்தை பேசச் சொல்லிருக்கேன். நம்ம கிருஷ்ணனும் அவரைப் பத்திச் சொல்லுவார்.)

மற்றவர்கள் சிரித்தார்கள். சு.ரா. சிரித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. இலக்கியச் சுரணை இலக்கியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க வரும் அனைவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது பேராசை என்று அவர் கருதியிருக்க வேண்டும்.

மறுநாள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நாள். மிக உற்சாகமாக இருந்தார். நானும் அவருடன் சென்றேன். தைலாவும் நானும் காரை நிறுத்திவிட்டு வருவதற்கு முன்னரே அவர் வரவேற்பறையில் சென்று அமர்ந்துகொண்டார்.

“ஒண்ணும் இம்ப்ரூவ்மென்ட் இருக்க சான்ஸ் இல்லை. மோசமா ஆகாம இருந்தா அதுவே ஒரு நல்ல அறிகுறி”, என்று தைலா என்னிடம் லிஃப்டில் செல்லும்போது சொன்னார். அவரைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்ற நர்ஸ் குறைந்தது 150 கிலோவாவது இருப்பார். எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி உருண்டையாக இருக்கும் ஒருவரை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன்.

“ஆளைப் பாத்து பயந்துடாதேங்கோ, கிருஷ்ணன். அவ குழந்தை. வெறும் குழந்தை. என்னமா பாத்துக்கறா. இவ்வளவு வெள்ளையா இருக்கே, உங்க தலைக்கும் தாடிக்கும் டையடிச்சு விடட்டுமான்னு கேட்டா.”

சோதனை அறையிலிருந்து வெகு சீக்கிரமே அவர் திரும்பிவிட்டார். முகத்தில் மலர்ச்சி. நுரையீரல் இருப்பதைவிட மோசம் அடையவில்லை.

அன்று இரவு நாங்கள் வீடியோவில் சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். இரவு மெக்ஸிகோ உணவு. அதற்குத் தேவையானதை வாங்க நாங்கள் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றோம். சு.ரா.தான் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வந்தார். நாங்கள் பார்க்கலாம் என்று நினைத்து எடுத்த படங்கள் இரண்டு. eter Sellersஇன் The Party.. ஹிட்ச்காக்கின் Vertigo. மூளையை அதிகம் வேலை செய்யவிட சு.ரா.வும் விரும்பவில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது.

விருந்திற்குப் பிறகு சினிமா பார்க்க உட்கார்ந்தவர்கள் - தைலாவின் கணவர் ராம், தைலா, சு.ரா., கமலா அம்மா, நான். ராமும் நானும் பீட்டர் செல் லர்ஸ் ரசிகர்கள். அவர் இந்தியனாக நடிக்கும் படம் அது. கலப்படமில்லா நகைச்சுவைக்கு அப்படத்தின் முதற்காட்சிகள் உதாரணம். நானும் ராமும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறோம். சு.ரா. அதிகம் சிரிக்கவில்லை. படம் அவருக்குப் பிடித்ததாகத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துத் தூக்கம் வருகிறது என்று சொல்லிக்கொண்டு எழுந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்துக் கமலா அம்மா. பிறகு தைலா. பிறகு ராம். நான் இரண்டு படங்களையும் பார்த்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன்.

மறுநாள் காலை சு.ரா.விடம் விடைபெற்றுக்கொண்டேன். நெஞ்சார அணைத்துக்கொண்டு விடை கொடுத்தார் நிமிர்ந்து பார்த்தேன். கண்கள் கலங்கியிருந்தன. வீடு திரும்பும்போது ஞாபகம் வந்தது, சு.ரா. கமலாம்மா தம்பதிகள் காலில் விழுந்து சேவிக்க மறந்துவிட்டேன் என்று. மறுபடியும் பார்க்காமலா போகப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.

Camera

அன்புள்ள சு.ரா.

கோகுலக் கண்ணன்

உங்களை முதன்முதலில் சந்தித்தது நாகர்கோவிலில் தான். ஆறு வருடங்களுக்கு முன்பு. கண்ணனைக் கடையில் விட்டுவிட்டு நீங்களும் நானும் ஒன்றாக ஆட்டோவில் வீடு வந்தோம். உங்கள் நண்பர்கள் இருவர் அன்று பார்க்க வந்திருந்தார்கள். பொதுவாய் இலக்கியம் பற்றிய பேச்சு. உங்களின் சிறுகதைகளை மட்டுமே அப்போது படித்திருந்தேன். ‘அழைப்பு’, ‘பல்லக்குத் தூக்கிகள்’ ஆகியவை என் கவனத்தைக் கவர்ந்திருந்தன.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சான்டாக்ரூஸில் உங்கள் மகள் தைலா வீட்டில் சந்தித்தோம். அன்றைய பொழுது எனக்கு இன்னமும் நினைவில் நன்றாக நிற்கிறது. இப்போது கணினி அறையாக மாறிவிட்ட அறையில் நீங்கள் கட்டிலில் படுத்தவாறு பேசிக்கொண்டிருந்தீர்கள் (படுத்தபடி பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது).

‘கொந்தளிப்பு’ என்ற உங்கள் சிறுகதையைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். திருவனந்த புரத்தில் கோர்ட் வாசலில் போலீஸ் சில விபச்சாரிகளை அடித்ததைப் பார்த்த பிறகு எழுதிய கதை என்று சொன்ன ஞாபகம். நான் விடாமல் உங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன், அழைப்பு, கொந்தளிப்பு போன்ற கதைகள் எழுதிய தருணங்கள் என்ன, ஏன் இடைவெளிக்குப் பிறகு எழுதிய கதைகளில் இறுக்கம் கூடிப்போயிற்று என்று. அந்தச் சமயங்களில் நீங்கள் எழுதிய கதைகளின் மீது எனக்குத் தீராத மயக்கம் இருந்தது. கதைகளின் தளத்தில் உள்ள தீவிரம், யதார்த்தத்திலிருந்து ஒரு அடி விலகியது போன்ற தோற்றம், கழுத்தைக் கவ்விப் பிடிப்பது போன்ற நெருக்கடி, முறுக்கிய கயிறெனத் திமிறும் மொழி - இவையெல்லாம் எப்படி அமைந்தன என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். முட்டாள்தனமான கேள்விகள்தான். நீங்கள் அப்போதிருந்த மனநிலை அப்படி என்று சுருக்கமாக நிறுத்திக் கொண்டீர்கள். எனக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

ஒவ்வொரு கதை பற்றியும் ஒவ்வொரு வரி பற்றியும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று மிகுந்த ஆசையாக இருந்தது. கதைகளை அக்குவேறாக ஆராய்வது அது கிளர்த்தும் ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது என்றவுடன்தான் நான் நிறுத்தினேன். ஆனால் உங்களுக்கு மிகுந்த பொறுமை இருந்தது. என் அறியாமையைப் பொருட்படுத்தாது என்னுடன் பேசினீர்கள். உங்கள் சகஜமான தோரணையும் அனுசரணையான பேச்சும் தோளில் கைபோட்டுப் பேசுவது போன்ற நெருக்கமான நட்பைச் சட்டென்று ஏற்படுத்திவிட்டது. பிறகொரு நாள் உங்களைக் கேட்டேன்: நான் உங்களை எப்படி அழைப்பது என்று. சு.ரா. என்றுதானே கூப்பிட வேண்டும் என்றீர்கள். நான் உங்களை இறுதிவரையிலும் சார் என்றே அழைத்தேன், வார்த்தையில் மட்டு மரியாதை இருப்பினும் மனதிலும் செயலிலும் உங்களை என் வய தொத்த நண்பனாகவே நினைத்து வந்தேன். ஒரு நாள் என் பெண் ஷ்ரியாவிடம் இன்று சான்டாக்ரூஸுக்கு என் நண்பர் சு.ரா.வைப் பார்க்கப் போகிறேன் என்றேன். அவள் கேட்டாள்: “சு.ரா. நிஷா, தனுவின் தாத்தா இல்லையா? அவர் எப்படி உனக்கு நண்பராக இருக்க முடியும்?” அது அவளுக்குக் கடைசிவரை விளங்காத ஒன்றாய் இருந்தது.

உங்களிடம் நான் எப்போதும் கேட்கும் முதல் கேள்வி, “சார், உங்க ஹெல்த் எப்படியிருக்கு?” உங்கள் குரலில் ஒரு தீவிரமான உற்சாகம் ஏறிக்கொள்ளும். “ரொம்ப நல்லாருக்கேன் கோகுல்” என்று பதில் வரும். அதற்கு மாற்றுக் கருத்து உண்டா? அந்தக் குரலுக்குள்ளும் அதைச் சொன்ன மனதிற்குள்ளும் குடியிருந்த ஆரோக்கியம் என்னை உவப்பில் ஆழ்த்தும். நான் சற்று மனத் தளர்வில் இருக்கும்போது குறிப்பாக மீண்டும் மீண்டும் உங்களைக் கேட்பேன். ஆரோக்கியம் உங்களை ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஏற்றி வைத்திருப்பதுபோல நீங்கள் விவரிப்பது என்னை ஏதோ ஒரு விதத்தில் மீட்டுக் கொடுக்கும். “தினமும் தைலா வீட்டிலிருந்து ரோட்டோர கேட் வரைக்கும் நடக்கிறேன்” என்று சொல்லி அதை விவரிப்பீர்கள். அது சுலபமான நடையல்ல. ரோடு மேலும் கீழும் வளையும். ஒரு குறிப்பிட்ட மேட்டைக் கடப்பது கடினம். அதைத் தினமும் வென்று வரும் உங்கள் ஆரோக்கியத்தை அழுத்திச் சொல்வீர்கள்.

நான் உங்களை அதிகமாகப் புதன்கிழமைகளிலேயே சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நீங்கள் தங்கியிருக்கும் ஆறு மாதங்களில் ஐந்து மாதங்களேனும் சான்டாக்ரூஸில்தான் செலவழித் திருக்கிறீர்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாம் சந்தித்துக்கொள்வோம். இருப்பினும் தினமும் உங்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறேன். சில சமயம் உங்கள் குரலைக் கேட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஏதேனும் ஒரு காரியத்தை உருவாக்கி உங்களை அழைத்திருக்கிறேன். உங்கள் எழுத்து வேலையைத் தடைப்படுத்துகிறேனோ என்ற குற்றவுணர்வு அழுத்தும். உங்களைக் கேட்டால் ‘உங்கள் தொலைபேசிக்காகத்தான் காத்திருந்தேன் கோகுல்’ என்பீர்கள். புதன்கிழமை மாலை உங்களைச் சந்திப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே என் மனம் பரபரக்கத் தொடங்கிவிடும். உங்களுக்குக் காட்ட வேண்டிய புத்தகங்கள், பத்திரிகைகள், குறிப்புகள் என்று எல்லாவற்றையும் சேகரிக்கத் துவங்கிவிடுவேன்.

தைலா வீட்டின் கண்ணாடி அறை எத்தனை அற்புதமானது. ஜன்னல் வெளியே குலுங்கும் பசிய மரங்கள் எப்பேர்ப்பட்ட சித்திரங்களைத் தீட்டுகின்றன. அதற்கு நடுவில் நாம் அமர்ந்திருப்போம். நம் முன்னால் ஒரு அடுக்காகப் புத்தகங்கள். நான் உங்களுக்குக் கொண்டுவந்த புத்தகங்களைப் பார்ப்பீர்கள். புத்தகத்தின் அட்டையை உங்கள் விரல்கள் சொல்ல முடியாத பிரியத்தோடு நீவிக்கொண்டிருக்கும். ஏதோவொரு பக்கத்தில் உங்கள் கவனம் ஆழும்பொழுது கன்னத்தை உங்கள் இடது கை தாங்கி, கட்டை விரல் தாடைக்கடியில் தாடியைக் கோதும். நான் கணினியிலிருந்து அச்செடுத்து வந்திருக்கும் தமிழ்க் குறிப்புகளைப் பார்க்க எப்பொழுதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். “நீங்கள் ப்ரின்ட் பண்ணி வருவதில் மட்டும் எழுத்துரு இவ்வளவு அழகாக இருக்கிறதே.”

ஒரு இயந்திரத்தின் காரிய நேர்த்தியும் என் கையில் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பாகக் கூடிவருவதாக நீங்கள் நினைக்கும்பொழுது அதை நான் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்?

நான் ஒரு முறை உங்களை ஒரு ‘இலக்கியக் கூட்ட’த்திற்கு அழைத்துப்போயிருந்தேன். கூட்டம் முடிந்து வீடு திரும்பும்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள்: “இந்த மாதிரி கூட்டத்துக்குப் போனால் ஹெல்த் கெட்டுப் போயிடும்.” அதுவே நாம் போன கடைசிக் கூட்டம்.

நாம் போகப்போக அதிகமும் கவிதைகளைப் பற்றியே பேசினோம். எனக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தீர்கள், 2005 ஜனவரி 1இலிருந்து கவிதை பற்றிய யோசனை மட்டும்தான் மனதில் வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று. 2003-04 சிறுகதைகளின் கால மென்றும் 2005இலிருந்து கவிதைகளுக்கான காலம் பிறக்கப்போகிறதென்றும் பேசிக்கொண்டோம். 2003ஆம் ஆண்டு நான் தொடர்ந்து கவிதைகளைக் கிட்டத்தட்ட தினமும் எழுதிக்கொண்டிருந்தேன். அதற்கு முக்கியக் காரணியாக நீங்கள் இருந்தீர்கள். ஒவ்வொரு கவிதையையும் பல முறை படித்துப் பார்த்த பிறகே உங்கள் கருத்துகளைச் சொல்வீர்கள். படிப்பதைத் தவிரக் கவிதைகளை நான் வாசிக்கச் சொல்லிக் கேட்பதிலும் உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. பேச்சு, தமிழின் நவீனக் கவிதையிலிருந்து உலகக் கவிதைக்குத் தாவும். அனேகமாக ஒவ்வொரு முறையும் நாம் ஒரு கோப்பை மதுவுடன் கவிதைகளைப் பற்றிப் பேசியிருக்கிறோம். அப்போது உங்கள் எழுத்து, சிறுகதைகள் பக்கம் படிய ஆரம்பித்திருந்தது.

2004 கோடைக் காலம். நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த மாதங்கள். உங்கள் கற்பனையின் ஒவ்வொரு இழுப்புக்கும் கலை படிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு கதையும் உங்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. அனுபவம் சார்ந்த கதைகளைவிடக் கற்பனை விரிவு கொண்ட கதைகளைப் படைப்பதில் மிகுந்த கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ தொகுப்பு வெளிவருவதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு விதத்தில் அக்கதைகளுடன் வாசகன் என்ற நிலையை மீறியவொரு தொடர்பினை நம் உரையாடல்கள் மூலம் நான் பெற்றிருந்தேன். அந்தப் புத்தகத்தில் நான் ஒரு சிறு குறிப்பையேனும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உங்களிடம் அதைச் சொல்ல மிகுந்த கூச்சமாக இருந்தது. புத்தகம் வெளி வந்த பிறகு அதை நான் உங்களிடம் சொன்னபொழுது மிகவும் சந்தோஷப்பட்டீர்கள். அடுத்த பதிப்பில் அதை நிச்சயம் செய்துவிடலாமே என்று கூறினீர்கள்.

இந்த வருடம் உங்களைப் பார்த்தபொழுது ஏதோவொரு விதத்தில் உங்கள் உற்சாகம் சற்றுக் குன்றியிருப்பதுபோல்தான் தோன்றிற்று. சுனாமியால் உண்டான அதிர்ச்சி உங்களைப் பாதித்திருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். இது நான் எதிர் பார்த்ததுதான். சுனாமி அழிவு ஏற்பட்ட பிறகு நீங்கள் நாகர்கோவிலில் இருந்தபோதே உங்களைத் தொலை பேசியில் தொடர்புகொண்டேன். மிகுந்த மனச் சோர்வில் இருக்கிறீர்களா என்று கேட்டபொழுது எழுத்து வேலை ஒன்றுதான் மனதைக் கட்டியிழுத்து முன்னே கொண்டுசெல்கிறது என்றும் அதில் முழுவதாக ஈடுபடுவதன் மூலமே ஆறுதலை அடையக் கூடும் என்றும் சொன்னீர்கள்.

இந்த வருடம் நான்கு முறை உங்களை மருத்துவ மனையில் சந்தித்தேன். முதலிரண்டு முறையும் உங்களுடன் பேச முடிந்தது. உங்களுக்கு நடப்பது மிகுந்த சிரமம் தரும் காரியமாக ஆகிவிட்டிருந்தது. இந்த ஜூன் மாதம்தான் நாமிருவரும் சான்டாக்ரூஸ் கடலோரம் ஒரு மைல் தூரத்திற்கு நிற்காமல் நடந்தது என் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. இப்போது நான்கைந்து அடிகள் வைப்பதற்குள்ளேயே மிகவும் சிரமப்பட்டீர்கள். ஆனாலும் மருத்துவர்களின் மீது இருந்த நம்பிக்கை சற்றும் குறையவில்லை. தொடர்ந்து நடப்பதன் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் இந்த மூச்சுத் திணறலை வென்றுவிடலாம் என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு ஒரு நாள் உங்களைப் பார்க்க வழக்கம்போல வந்திருந்தேன். எப்போதும்போல என்னை வரவேற்க நீங்கள் கூடத்தில் இல்லை. கமலா அம்மா நீங்கள் வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளத்தைச் சுற்றி நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். நான் சன்னல் வெளியே பார்த்தேன். உறுதியும் சோர்வும் உங்கள் முகத்தில் ஒரே சமயத்தில் இடம்பிடித்திருந்தன; உங்கள் கால்கள் விடாமல் நகர்ந்துகொண்டிருந்தன.

அக்டோபர் 2 காலை. மருத்துவமனையிலிருந்து தொலைபேசியில் அன்று அழைத்திருந்தீர்கள். எப்படியிருக்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு முதல் முறையாக ‘மோசமாத்தான் இருக்கு’ என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அன்று மாலை உங்களை மருத்துவமனையில் பார்த்தேன். எல்லோரும் போன பிறகு உங்களுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் அன்று உங்களுடன் அந்த அறையில் இருக்கவே முடியவில்லை. நீங்கள் நடக்க சிரமப்பட்டீர்களே தவிரப் பேச்சில் மிகுந்த தெளிவு இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்குள் நீங்கள் எழுதியிருந்த (செப். 7) ‘ஜகதி’ கதையைப் பற்றி மீண்டும் பேசினோம். ‘ஏற்கனவே திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீஸ் எனக்காகக் காத்திருக்கிறார்கள்!’ என்று சிரித்தீர்கள். நான் சொன்னேன், ‘நல்ல வேளை ‘ஜகதி’ தமிழ்நாட்டில் வெளியாகவில்லை, இல்லையென்றால் இதிலிருந்தும் ஏதாவது பூதம் கிளம்பியிருக்கும்’ என்று. ‘நான் தமிழ்நாடு பக்கம் போகாமல் இருப்பது நல்லதுதான்’ என்று சிரித்தீர்கள்.

அப்புறம் சமீபத்தில் படித்த புத்தகங்களுக்குப் பேச்சு மாறியது. C.P. SnowM¡ Realists, மற்றும் ndre Mauroisஇன் From Proust to Camus - இவை இரண்டும் நிச்சயம் நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று உங்களுக்குத் தோன்றியது. காந்தியின் எழுத்துகளை மீண்டும் வாசித்தது பற்றிப் பேசினீர்கள். ‘ஜகதி’ கதை எழுதிய பிறகு உங்களால் எழுத முடியாமல் போயிருந்தது. இதற்கு முந்தைய சந்திப்பில் ‘எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?’ என்ற என் கேள்விக்கு ‘படித்துக்கொண்டிருக்கிறேன் கோகுல்’ என்ற பதில் முன்பே வந்திருந்தது. உங்கள் மனதில் அது குறித்த வருத்தம் இருப்பது எனக்குப் புரிந்தே இருந்தது. ‘ஆனால் என்னால் இப்போது படிக்கவும் முடியவில்லை’ என்றீர்கள். சொல்ல முடியாத ஒரு கஷ்டம் என்னை அன்று சேர்ந்திருந்தது. அதைக் கஷ்டம் என்றுகூட மனம் உணர்ந்திருக்கவில்லை. ஏதோ ஒரு விதத் தவிப்பில் இருந்தேன். உங்களிடம் அதைச் சொல்லவும் செய்தேன். அப்போதுதான் நான் புதிய வேலையில் சேர்ந்திருந்தேன். அது சம்பந்தமான பிரச்சினையா என்றுகூடக் கேட்டீர்கள். நான் அந்த அறையிலிருந்து வெளியேறிவிடவே விரும்பினேன். உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நான் எழுந்து நின்றபொழுது “இன்னும் சித்த இருங்க கோகுல்” என்றீர்கள். நான் விடைபெற்றுக் கொள்ளும்பொழுது ‘சார், விளக்கை அணைத்து விடட்டுமா’ என்று கேட்டேன். அப்போது என் மனதுக்குள் ஒரு குரல் அபசுரமாகக் கிறீச்சிட்டது. சீ மூடத்தனமே என்று அதை முடக்கினேன். நீங்கள் ‘நான் அணைத்துக்கொள்கிறேன்’ என்றபோது உங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டேன். பற்றிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. விடை பெற்றுக்கொண்டேன்.

அதற்குப் பிறகு உங்களைப் பார்த்தது அக்டோபர் 6 மாலை தீவிர சிகிச்சைப் பிரிவில். நீங்கள் விழித்துக் கொள்ளாதபடி மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. பிராணவாயு, உணவு எல்லாம் குழாய்கள் மூலம் உங்களுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. சுவாசத்திற்கு மாற்றாக ஒரு இயந்திரம் உங்கள் இதயத்தை இயக்குகிறது. உங்கள் முகமெங்கிலும் குழாய்கள் பரவியிருந்தன. பேச முடியாதபடி வாய் வழியாகவும் குழாய். தீர்க்க முடியாத சிக்கல்போல் தோன்றியது. நான் தைலா, தங்கு, தங்குவின் கணவர் மற்றும் கமலா அம்மா உங்கள் அருகில் வந்தபொழுது சட்டென்று உங்கள் கண்கள் விழித்தன. அந்தப் பார்வை என் மனதில் தைத்துக்கொண்டிருக்கிறது இன்னும். மருந்தின் மயக்கம். ஸ்தம்பித்த பார்வை. தைலா உங்களைக் கேட்கிறார்: “அப்பா, எப்படி இருக்கிறீர்கள்? ஏதேனும் அசௌகரியம் இருக்கிறதா?” உங்கள் தலை தலையணை மேல் ‘இல்லை’ என அசைகிறது. “உங்களைப் பார்க்க கோகுல் வந்திருக்கிறார், அவர் விரல்களைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்ற பொழுது நான் உங்கள் இடதுகையைப் பற்றிக் கொண்டேன். என் விரல்களை அழுத்திக் கொண்டே இருந்தீர்கள். “இப்போது உங்கள் இடது காலைத் தூக்குங்கள் பார்க்கலாம்” என்று கேட்டார் தைலா. உங்கள் இடதுகால் மெல்ல அசைந்தது. அதற்குப் பிறகு நீங்கள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டீர்கள். சொல்வதைச் செய்கிறாரே தவிர எதையும் முழுதாக உள்வாங்கிக்கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்று தோன்றுகிறது என்றார் தைலா.

அக்டோபர் 9. தைலாவிடமிருந்து தொலைபேசி. அப்பாவின் நிலை சற்று முன்னேறியிருக்கிறது. சுவாசத்திற்கான இயந்திரத்தைக் கழற்றியாகி விட்டது. அவரால் மூச்சுவிட முடிகிறது. எழுந்து உட்கார முடிகிறது. சற்றே பேசவும் முடிகிறது. என் மனம் துள்ளிக் குதித்தது. இத்தனை நாட்களாக மனதின் மூலைக்குள் அகல் விளக்குப் போல அண்டியிருந்த நம்பிக்கை சற்றே நிமிர்ந்தது.

அக்டோபர் 10. உங்களை மீண்டும் சுவாச இயந்திரத்துடன் இணைக்க வேண்டியதாயிற்று.

அக்டோபர் 13. தைலாவுடன் மீண்டும் பேசிய பொழுது இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றிவிட்டது என்றார். அன்று மதியம் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு உங்களை வந்து பார்த்தேன். உங்கள் முகம் ஒடுங்கிப்போனது போலிருக்கிறது. மார்பு ஒவ்வொரு முறையும் மேலெழும்பி விபரீதமான இடைவெளிக்குப் பிறகே தணிவது போல் தோன்றியது. நான் கையோடு ‘107 கவிதைக’ளை எடுத்து வந்திருந்தேன். உங்களுக்கு ‘ஓவியத்தில் எரியும் சுடர்’ கவிதையை வாசித்துக் காட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருந்தது. பக்கத்திலிருந்த நர்ஸ் ‘அவரை எழுப்பிவிடாதீர்கள். அவர் மிகவும் பதற்றமடைகிறார். அவருடைய இதயத் துடிப்பு மிகவும் அதிகமாகிவிடுகிறது' என எச்சரித்தார். நான் மௌனமாக நின்றிருந்தேன். உங்கள் அருகே இருந்த நர்ஸ் சற்றுப் படபடப்புடனே எல்லாக் காரியங்களையும் செய்தாள். அடிக்கடி குழாய்களின் இணைப்புகளைக் கண்காணிக்கும் இயந்திரம் பீப் பீப் என அலறிக்கொண்டிருந்தது. முன்தினம்தான் பிராண வாயுவை நேரடியாகக் குழாய் மூலம் இணைத்துவிடும் சிகிச்சை உங்கள் தொண்டையில் செய்யப்பட்டிருந்தது. தொண்டையில் உலர்ந்த ரத்தக் கறை சற்று அதிகமாகவே தோன்றியது. உடனே ஒரு மருத்துவரை அழைத்து உங்கள் தொண்டைப் பகுதியைக் காட்டினால் டாக்டர் ‘அது ஒன்றுமே இல்லை. சாதாரணமான விஷயம்தான்’ என்றார். என்னிடம் ‘நான் இந்த procedureஐ செய்த டாக்டர் மட்டுமே. அவருடைய பொதுவான நிலையைப் பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது’ என்றார். நர்ஸ் 'இல்லை டாக்டர், இவருடைய நிலை மோசமாகத்தான் இருக்கிறது' என்றாள்.

நான் உங்கள் அருகில் வெகுநேரமாக நின்றிருந்தேன். ஆனால் உங்கள் முகத்தைப் பார்ப்பது கணத்திற்குக் கணம் மிகக் கடினமாகவே இருந்தது. நர்ஸ் சற்று அகன்ற பிறகு உங்கள் கையைப் பற்றிக் கொண்டேன். ‘நான் போகிறேன் சார்’ என்றேன் மெலிதாக. உங்கள் கைவிரல்கள் சில்லென்று இருந்தன. உங்கள் முகத்தில் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டாற்போல இருந்தது. மூடியிருந்த கண்கள் லேசாகத் திறந்தன; எங்கோ பார்த்தன; பிறகு மீண்டும் அவை மூடிக் கொண்டன. நான் அங்கிருந்து நகர்ந்தேன். என் பார்வையிலிருந்து நீங்கள் மறையும்வரை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே வெளியேறினேன்.

அக்டோபர் 14. மதியம் 2:30 மணிக்குத் தைலாவிடமிருந்து அழைப்பு. மதியம் 1:35க்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று செய்தி.

சில வருடங்களுக்கு முன்னால் நாமிருவரும் மரணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மரணத்தைப் பற்றிய என் அச்சத்தை உங்களிடம் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். ‘என்னுடைய காலம் நிறைந்து விட்டது, நான் விடை பெற்றுக்கொள்கிறேன் என ஏற்றுக் கொள்வது கவித்துவமானது’ என்று கூறினீர்கள்.

நீங்கள் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் எழுதுகிறீர்கள்: “விசேஷமான மனிதனாய் இருப்பதை விட சகஜமான மனிதனாய் இருக்க வேண்டும்.”

நம் நட்பில் சகஜத்தின் இதத்தை மறக்க முடியாது. நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை நீங்கள் என் கண் எதிரே வாழ்ந்தீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்க்கும்பொழுது எனக்கும் என் ஆதர்சத்திற்குமுள்ள இடைவெளி குறுகிக்கொண்டே வந்தது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் சிறிதே என்றபொழுதில் விடைபெற்றுக்கொண்டீர்கள். உங்கள் மனம் விடை பெறுவதற்கான எல்லாத் தயாரிப்புகளையும் முன்பே மேற்கொண்டு விட்டது போலவே இப்போது தோன்றுகிறது.

அருமை நண்பரே, இனி வரவிருக்கும் கலிஃபோர்னியக் கோடைக் காலங்களின் தனிமையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அன்புடன்,
கோகுலக் கண்ணன்

Camera

வரையறைக்குள் சிக்காத உறவு

நெய்தல் கிருஷ்ணன்

வாசகராக அவரைச் சந்தித்தவர்கள் உண்டு. எழுத்தாளராகச் சந்தித்தவர்கள் உண்டு. அவரைச் சந்தித்துவிட்டுத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் வந்து அவரைச் சந்தித்த பின்பு வாழ்க்கையைத் தொடர்ந்தவர்கள் உண்டு. ஜே.ஜே: சில குறிப்புகள் படித்து நிலைகொள்ளாமல் தங்கள் கனவுகளைத் தொலைத்தவர்களாக, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, வாழ்க்கையைப் புரட்டிப்போட வேண்டும் என்னும் வேகத்தில் அவரைச் சந்தித்தவர்கள் உண்டு.

ஆனால், சுந்தர ராமசாமியை நான் முதன்முதலாகச் சந்தித்தது வேறொரு எண்ணத்தில்.என் கல்லூரித் தோழி புனிதாவின் எம்.ஃபில், ஆய்வேட்டிற்காக எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ நாவல் குறித்த நேர்காணலை யாரிடம் எடுக்கலாம் என அவளுடைய பேராசிரியரிடம் கேட்டபோது, (பேராசிரியர் தம் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதால் பெயரைத் தவிர்க்கிறேன்), "நம்ம ஊரில் ஒரு முக்கியமான எழுத்தாளர் இருக்கிறார். அவர் மட்டும் பேட்டி தந்தால் அது போன்ற வேறொரு பேட்டி அமையாது. பன்றி பல குட்டிகளைப் போட்டதுபோல் எழுதியவரல்ல, யானை போல் இரண்டே குட்டிகள்தான் போட்டிருக்கிறார். ஒன்று ஒரு புளியமரத்தின் கதை, இன்னொன்று ஜே.ஜே: சில குறிப்புகள்" என்றார்.

"அப்படியானால் அவரிடமே பேட்டி எடுக்கலாம்" என்றேன்.

"ஆனால் அவர் இலகுவாக யாரையும் சந்திக்கமாட்டார்" என்றார்.

"ஏன்?" என்றேன்.

"அவர் ஒரு கர்வம் பிடித்த மனிதர்" என்றார்.

அதுவரை இயல்பாகக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரைக் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குக் காரணம், நாகர்கோவிலில் நம்மைவிடவும் கர்வம் பிடித்த மனிதன் இருக்கிறானா என்னும் எண்ணம்தான்.

முக்கியமான எழுத்தாளர் என்றபோது, அவரைச் சந்திக்கத் தோன்றவில்லை. காரணம், என் எண்ணங்களில் கலைஞரே நிறைந்திருந்தார். தமிழில் அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர் எவரும் இல்லை. உலகத் தமிழர்களின் ஒரே தலைவர், கடுமையான உழைப்பாளி, சூழ்ச்சிகளுக்கிடையே கட்சியைக் கட்டிக் காத்துச் செல்பவர் என்பன போன்ற எண்ணங்களில் உறுதியாகவும் ஆவேசமாகவும் இயங்கிய காலம் அது.

அன்று வகுப்பறையில் இருப்புக்கொள்ளவில்லை. மாலை வீட்டிற்குச் சென்றதும் அவரைச் சந்திப்பதற்காக உடனே சைக்கிளில் கிளம்பினேன். அவர் வீடு எங்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம். பார்வதிபுரம் சாலையில் வேட்டாளி அம்மன் கோயில் எதிர்ப்புறம். வீட்டின் முன்புறம் ஒரு போஸ்ட் பாக்ஸ். சிறுவயதில் அந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது ஒரு போஸ்ட் ஆபீஸ் என்று நினைத்திருந்தேன். வீட்டு மாடியில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை, காம்பவுண்டில் நீண்ட இரும்புக் கதவுகள். கதவுகளுக்கிடையே இடைவெளிகள். இடைவெளி வழியாக வீட்டின் முன்பகுதி தெரிந்தது. கதவின் சிறிய பகுதியைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். வீட்டின் முன்னால் முற்றம். அடுத்து வராந்தா. வராந்தாவின் இருபுறமும் சிறிய திண்டு. வீட்டின் வெள்ளைநிறக் கதவுகள் சாத்திக் கிடந்தன. ஆள் அரவம் இல்லை. எப்படிக் கூப்பிடுவது? யோசித்துக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தேன். கதவுக்கு அருகில் அழைப்புமணி இருந்ததைக் கண்டேன். அழுத்தினேன். சிறிது நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு சிவப்பு நிறத்தில், உயரமான தோற்றத்தில், முகத்தை அடைத்தது போன்ற சதுரவடிவக் கண்ணாடியும் வெள்ளைநிற பனியனுமாக, காவிநிற ஒற்றை வேஷ்டி கட்டிய ஒருவர் வெளிப்பட்டார்.

"என்ன விஷயம்?" என்று கேட்டார்.
"சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும்."
"இதில் உட்காருங்கள்" என்று நாற்காலியைக் காட்டினார்.
நான் உட்கார்ந்தேன். அவரும் உட்கார்ந்தார்.
"என்ன விஷயம்?" என்று மீண்டும் கேட்டார்.
"சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும்."
"நான்தான். விஷயத்தைச் சொல்லுங்கோ."
"எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ நாவல் பற்றி உங்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்."

"வெங்கட்ராம் கும்பகோணத்தில் இருக்கிறார். அவரிடமே நீங்கள் பேட்டி எடுக்கலாமே."

"அவரை எனக்குத் தெரியாது."

"அவர் முகவரியைத் தருகிறேன். நாவல் எழுதியவரிடமே பேட்டி எடுங்கள்."

"உங்களிடந்தான் பேட்டி எடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறேன்."

"இப்போது பேட்டி தருவது சிரமம். நிறைய வேலை இருக்கிறது."

"உங்களுக்கு எப்போது வசதிப்படும் என்று சொல்லுங்கள் அப்போது உங்களைச் சந்திக்கிறேன்."

"இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வெள்ளிக்கிழமை இதே நேரத்தில் வாருங்கள்."

எழுந்து விடைபெறும் முன் என் பெயரைக் கேட்டார். சொன்னேன்.

அங்கிருந்து நேராகப் பேராசிரியர் வீட்டிற்குச் சென்றேன். "சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். மிகக் குறைவாதான் பேசினாரு, அடுத்தவாரம் வரச் சொன்னாரு" என்றேன்.

அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை மாலை அவர் சொன்ன நேரத்திற்குப் போனேன்.

"உட்காருங்கள் கிருஷ்ணன்" என்றார்.
எனக்கு ஆச்சரியம். சந்தோஷம்.
உட்கார்ந்தோம்.
"என்ன செய்கிறீர்கள்?"
"கல்லூரியில் படிக்கிறேன்."
"எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள்?"
"எஸ்.டி. இந்துக் கல்லூரியில் படிக்கிறேன்."
"தமிழ்ப் பேராசிரியர் யாரெல்லாம் உங்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள்?"
"நான் காமர்ஸ் படிக்கிறேன்."
ஆச்சரியம் கலந்த முகபாவத்துடன், "காமர்ஸ் படிக்கிறீர்கள், வெங்கட்ராமின் நாவல் பேட்டி எதற்கு?"

"என்னுடைய தோழி தமிழில் எம்ஃபில் ஆய்வு செய்கிறாள். அவளுக்காகத்தான்."
ஆய்வுத் தலைப்பைக் கேட்டார். சொன்னேன்.
"என்னைப் பார்க்கும்படி உங்களிடம் யார் சொன்னார்கள்?"
"தமிழ்த் துறைப் பேராசிரியர்."
"நான் நினைத்ததுபோல் வேலை முடியவில்லை. இழுத்துக்கொண்டே செல்கிறது. அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள். எப்படி என்று சொல்கிறேன்."

அவர் சொன்னது எனக்கு ஏமாற்றம் தருவதற்குப் பதிலாக அவரை விடாமல் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணந்தான் என்னுள் வலுப்பெற்றது.

மூன்றாம் வெள்ளிக்கிழமை அவரைச் சந்தித்தேன். ‘வேள்வித் தீ’ நாவல் பற்றி பேட்டி தருவதற்குச் சம்மதித்தார். என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"என்றைக்குப் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்" என்று கேட்டேன்.
"நாவலைப் படிக்க வேண்டும். இப்போது என் நூலகத்திலிருந்து நாவலைத் தேடி எடுப்பது சிரமம். உங்களிடம் இருந்தால் கொடுங்கள்."

"என்னிடம் இப்போது இல்லை."
"உடனே தர வேண்டுமென்று சொல்லவில்லை. இரண்டொரு நாளில் கொடுங்கள்."

புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என்று என்னிடம் கேட்டதுதான் தாமதம், "கலைஞர், அண்ணா எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். முரசொலியைத் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்று காலையில் வந்த முரசொலியைக்கூடப் படித்து விட்டேன். எதைப் படிக்கிறேனோ இல்லையோ கண்டிப்பாக முரசொலியைப் படித்துவிடுவேன். கலைஞரைப் போல எவனும் எழுத முடியாது" என்று சொன்ன நான், எப்படியாவது இவரையும் நம்ம கட்சியில் இழுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், "நீங்கள் கலைஞரைப் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.

"கிருஷ்ணன். கலைஞரும் அண்ணாவும் ஒவ்வொரு வட்டங்கள். அதுபோல ஏராளமான வட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் உள்ளேயும் நீங்கள் நுழைந்து பார்க்கலாம்" என்றார். கலைஞரைப் படித்திருக்கிறாரா என்று கேட்டதற்கு நம்மை வட்டத்துக்குள் நுழையச் சொல்கிறாரே. ஒருவேளை இவர் கலைஞரைப் படிக்கவில்லையோ எனத் தோன்றியது. இது பற்றிப் பின்னால் அவரிடமே கேட்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

அடுத்த நாளே ‘வேள்வித் தீ’ நாவலை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். "நீங்கள் வேலையில் இருப்பதாகச் சொன்னீர்களே" என்று கேட்டேன்.

"காலச்சுவடுன்னு ஒரு பத்திரிகை தொடங்கியிருக்கிறேன். இரண்டாவது இதழ் வரப்போகிறது. அது தொடர்பான வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்" என்றார்.

அதுவரை ராணி, இதயம் பேசுகிறது, கல்கண்டு, குமுதம், ஆனந்த விகடன் என்று கேட்ட காதுக்கு, காலச்சுவடு என்னும் பெயர் வித்தியாசமாகத் தோன்றியது. "காலச்சுவடு எந்தக் கடையில் கிடைக்கும்?" என்று கேட்டேன்.

"கடைகளில் கிடைக்காது. சந்தாதாரர்களுக்குத் தபாலில் அனுப்புகிறோம்" என்றவர், இருங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டினுள்ளே சென்றார். திரும்பி வரும்போது கையில் சிறிய புத்தகத்துடன் வந்தார். அதை என்னிடம் கொடுத்தார்.

வாங்கிப் பார்த்தேன். சந்தன நிற அட்டையில் சாக்லேட் நிறத்தில் காலச்சுவடு பெயர் நேர்வரியில் இல்லாமல் மேலும் கீழுமாக வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. வீட்டிற்கு வந்ததும் அதைப் புரட்டிப் பார்த்தேன். உள்ளே படங்கள் எதுவும் இல்லை. முழுவதும் எழுத்துகளாகவே இருந்தன. இருப்பினும் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. அட்டையின் பின்பக்கம் 'கனவுகளும் காரியங்களும்' என்னும் தலைப்பில் இருந்ததைத்தான் முதலில் படித்தேன். யார் எழுதியது என்று தெரியாமலே, முதலில் இருந்ததால் அதைப் படித்தேன். வாரப் பத்திரிகைகளைப் படித்ததைவிட வித்தியாசமாகத் தோன்றியது. ஆனால், என்ன வித்தியாசம் என்று சொல்லத் தெரியவில்லை. முகப்பு அட்டையின் பின்புறத்திலிருந்து படிக்கும் பழக்கம் காலச்சுவடிலிருந்துதான் தொடங்கியது.

‘வேள்வித் தீ’ நாவல் பேட்டியின்போது புனிதா கேட்ட கேள்விகளுக்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்கள், ‘வேள்வித் தீ’ நாவலை நான் புரிந்துகொண்டதற்கு மாறுபட்டு இருந்தது. ஒரு நாவலை இன்னொரு கோணத்தில் பார்க்க முடியும் என்பதையும் மற்றொருவருடைய பார்வையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் என்னுள் உருவாக்கியது.

காலச்சுவடு மூன்றாம் இதழில் வெளிவந்த அம்ருதா பிரீதத்தின் 'எச்சில் நாய்' என்னும் மொழிபெயர்ப்புக் கவிதையை வாசித்தேன். கவிதையின் முதல்பகுதி புரிந்தது. கடைசிப்பகுதி புரியவில்லை. கல்லூரித் தமிழ்த்துறைக்குச் சென்று பேராசிரியரிடம் கேட்டேன். வேறுசில பேராசிரியர்களும் படித்துப் பார்த்தார்கள். ஹோட்டல் எச்சிலைத் தின்னும் நாய், தெருவிலுள்ள எச்சிலைப் பொறுக்கும் நாய், வீட்டு எச்சிலை மட்டுமே தின்னும் நாய் என்று தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கவிதை எச்சில் நாயைப் பற்றியது அல்ல. வகுப்பு முடிந்ததும் சுந்தர ராமசாமியைச் சந்தித்து கவிதையின் புரியாத பகுதியைப் பற்றிக் கேட்டேன். கவிதையைப் பற்றிய பேராசிரியர்களின் கருத்துகளையும் தெரிவித்தேன்.
"கவிதையின் முதல் பகுதியைப் புரிவதில் சிரமமில்லை. இந்தக் கவிதையைப் பொறுத்தவரை கடைசிப் பகுதிதான் முக்கியம். கவிதை நாயைப் பற்றியது அல்ல. கணவனும் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து இருப்பதைப் பற்றியது. பிரீதத்தின் வாழ்க்கையைத் தெரிந்தவர்களுக்கு இது இலகுவாகப் புரிந்திருக்கும். கவிதையைப் புரிந்துகொள்வதற்கு அதை ஒரு முறைக்குப் பலமுறை வாசித்துப் பார்க்கலாம்" என்றார்.
கல்லூரியில் படிக்கும்பொழுது எங்கள் வணிகவியல் துறையின் மாணவர் பேரவைத் தொடக்கவிழாவில் பேச வேண்டுமென்று சுந்தர ராமசாமியை அழைத்தேன். தொடர்ந்து அழைத்ததன் காரணமாக வருவதாக ஒப்புக்கொண்டார். என்ன தலைப்பில் பேசவேண்டுமென்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பேராசிரியர் அ.கா. பெருமாளிடம் சென்று கேட்டேன். 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை' என்னும் தலைப்பைத் தந்தார்.

பேரவைத் தொடக்கவிழாவில், வாசிப்பின் அவசியம், துறை சார்ந்த சமாளிப்பு, தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, ஆங்கில மொழிமீது தமிழர்களுக்கு இருக்கும் மோகம் போன்ற விசயங்களை முன்வைத்து சுந்தர ராமசாமி பேசினார். பேச்சு மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பிடித்திருந்தது. பேச்சை முடிக்கும்பொழுது தான் பேசிய விசயத்தை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்கலாம் என்று அவர் கூறியது, அதுவரை சவால் விடுத்து உணர்ச்சி கொப்பளிக்கும் பேச்சை மட்டுமே கேட்டுவந்த எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. சில மாணவர்களும் சில பேராசிரியர்களும் விவாதத்தில் பங்கெடுத்தனர். இது சுந்தர ராமசாமிக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. (சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள் புத்தகத்தின் முன்னுரையைப் படித்தபோதுதான், அவர் கூட்டங்களில் பேசுவதை அப்போது தவிர்த்து வந்ததாகவும் பல வருடங்கள் கழித்து முதன்முறையாகப் பேசியது எங்கள் மாணவர் பேரவையில்தான் என்பதும் தெரிந்தது.)

‘செம்மீன்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அதுபற்றி சுந்தர ராமசாமியிடம் பேசினேன். நாவலில் வரும் நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்டேன். அந்த நம்பிக்கைகள் பற்றித் தனக்கும் பல கேள்விகள் இருப்பதாகவும் தகழியைச் சந்தித்தால் என்ன என்ன கேள்விகளை எழுப்புவார் என்பதையும் என்னிடம் கூறினார்.

"ஒரு நாவல் முதலில் படிக்கும்பொழுது முக்கியமான நாவலாகப்படும். சில ஆண்டுகள் கழித்துப் படிக்கும் பொழுது அப்படித் தோன்றுவதில்லை. சில நாவல்கள் முதலில் படிக்கும்பொழுதும் பல வருடங்கள் கழித்துப் படிக்கும்பொழுதும் முக்கியமானதாகப்படும். ‘செம்மீன்’ எனக்கு இப்பொழுது முக்கிய நாவலாகப் படவில்லை" என்றார்.

" ‘செம்மீன்’ நாவலின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"விருப்பம் இல்லா ஆணும் பெண்ணும் ஐம்பது வருடங்கள் வாழ்வதைவிட விரும்பிய ஆணும் பெண்ணும் ஐந்து நிமிடங்கள் வாழ்வதுதான் வாழ்க்கை" என்றார்.

தன் மகன் கண்ணன் திருமணத்திற்கு என்னையும் புனிதாவையும் நண்பர்களையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். திருமணத்தன்று தன் அருகில் நிற்கவேண்டுமென்று என்னிடம் கூறினார். எழுத்தாளர்கள் பலரையும் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தில் அவர் அருகில் நிற்கவில்லை. ஊர் திரும்பியதும் அவரைப் பார்க்கச் சென்றேன். "திருமணத்தன்று உங்களை என் அருகில் ஏன் நிற்கச் சொன்னேன் என்று தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியாது" என்றேன்.

"திருமணத்திற்கு வருபவர்கள் என்னை வந்து பார்ப்பார்கள். அப்பொழுது அவர்களிடம் உங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்" என்றார். அப்போதுதான் ஒரு முக்கிய வாய்ப்பை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.

ஒருமுறை அவரது அறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "கிருஷ்ணன், நீங்கள் எழுதிப் பார்க்கலாமே" என்றார். "என்னால் எழுத முடியுமா?" என்று கேட்டேன்.

அறையிலிருந்த பெரிய மேசையைச் சுட்டிக்காட்டி, "பலபேர் சேர்ந்து தூக்கினால்தான் இதைத் தூக்க முடியுமென்று தெரியும். அதனால் இதைத் தூக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால், எழுதுவது அப்படி அல்ல. முதலில் நீங்கள் படித்த புத்தகத்தைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை ஒரு நோட்டில் எழுதுங்கள், முக்கிய நிகழ்வுகளை டைரியில் குறித்து வையுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயத்தை எழுதுங்கள். பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுங்கள். இப்படியே பயிற்சி செய்து பாருங்கள். எழுத வரும். உழைப்புதான் முக்கியம்" என்றார்.

பெரியார், புரோட்டா, காந்தி பற்றிய கட்டுரைகள் எழுதினேன். காந்தியின் சத்திய சோதனை என்னைப் பெரிதும் பாதித்திருந்த நேரம். சுந்தர ராமசாமியிடம் "நான் தொடர்ந்து எழுத நினைக்கிறேன்" என்றேன்.

"அது நல்ல விஷயம்" என்றார்.

"தொடர்ந்து எழுதும்பொழுது உங்களுக்கும் எனக்குமான உறவு சீராக இருக்குமா என்பதைச் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன்" என்றேன்.

"நீங்கள் எதை மனத்தில் வைத்துச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் சுயபரிசோதனை பண்ணிப் பாருங்கள், உங்களுக்கும் எனக்குமான உறவு சீர்கெடாது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்" என்றார் சுந்தர ராமசாமி. "எதை வைத்துச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"என்னைச் சந்திக்க வருபவர்களுடன் பழக ஆரம்பித்து, பழக்கம் தொடரும்போதே அவர்களுடைய உறவு எப்படிப் போகும் என்பது எனக்குத் தெரிந்துவிடும். ஆனால், அதை முன் முடிவாக வைத்து நான் யாருடனும் பழகுவதில்லை" என்றார்.

நான் நிறைய வாசிக்க வேண்டும், கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பதைவிடவும் என் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு தன் கவலையை என்னிடமும் நண்பர்களிடமும் அடிக்கடி கூறுவார்.

சுந்தர ராமசாமிக்கும் எனக்குமுள்ள உறவு எத்தகையது என்று இதுவரை நான் யோசித்துப் பார்த்ததில்லை. யோசிக்கும்பொழுது 'குரு-சிஷ்ய' உறவாகக் கொள்ளலாமா எனத் தோன்றியது. அவரைக் 'குரு' என்று சொன்னவர்கள் உண்டு. ஆனால், அவர் எவரையும் 'சிஷ்ய'னாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர் தன்னை ஒருபோதும் குருவாகப் பாவித்துக்கொண்டதில்லை.

ஆலோசகராக, நண்பராக, தந்தையின் பரிவு கொண்டவராக, வழிகாட்டுபவராக, மனிதாபிமானியாக, ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக, வாசகத் தன்மையை விரிவடையச் செய்தவராக இப்படிப் பல்வேறு நிலைகளில் என்னிடம் உறவு கொண்டவர். இந்த உறவை உணர்த்தும் ஒரு சொல்லை நாடி என் தேடலைத் தொடங்கியுள்ளேன். இந்தத் தேடல் எளிமையானது அல்ல. யோசித்துப் பார்க்கையில் அப்படி ஒரு சொல் தேவையில்லையோ என்றும் தோன்றுகிறது. சொல்லால் அடையாளப்படுத்தவோ விவரிக்கவோ முடியாத உறவாகவே இது எனக்குப்படுகிறது. அப்படியே இருக்கட்டும்.

Camera

காலத்தால் வீழாதவர்

ராஜ் கௌதமன்

பொதுவாக மரணச் செய்தியைக் கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள்; சிலர் துடிப்பார்கள்; சிலர் அழுது கண்ணீர் வடிப்பார்கள். வெகு சிலருக்கு எந்தவிதமான சலனமும் ஏற்படாது; மரணம் பற்றிய செய்தி கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்கி, போகப் போக அவர்களைப் படுத்தித் தொல்லை கொடுக்கும். சுந்தர ராமசாமி காலமாகிவிட்டார் என்ற செய்தி என்னையும் அப்படித் தொல்லைப்படுத்திவிட்டது.

அவரோடு எழுபதுகளின் இறுதியில் நேர்ப் பழக்கம் ஏற்பட்டது; என்னைவிட முப்பது வயது மூத்தவர்; தெளிந்த சிந்தனையாளர்; தேர்ந்த படைப்பாளி. நான் பணியாற்றும் ஊரிலிருந்து தெற்கே ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் வாழ்பவர் என்ற காரணங்களால் அந்தப் பழக்கம் ஆலமரம்போல விழுது விட்டுப் பரவவில்லையென்றாலும் தொடர்ச்சியாக இலக்கியக் கூட்டங்களின் வழியாகத் தொடர்ந்துவந்தது.

அவர் காலமான செய்தியை அறிந்த பிறகுதான் அவரும்கூடக் காலமாகிவிடுவார் என்ற அரணை எனக்குள் ஏற்பட்டது. இப்படியே எப்போதும் போல அவர் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார் என்றுதான் எல்லோரையும்போல நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அவரும் மரணத்தைத் தொட்டுவிட்டார்.

எழுபதுகளின் பிற்பகுதியில் கோடை விடுமுறை நாட்களில் ஏர்வாடியிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த நாகர்கோவிலுக்கு பஸ் ஏறிப்போய் சுந்தர ராமசாமியைப் பல முறை சந்தித்துப் பேசிய நாட்கள் இனிமையானவை. அவரைச் சந்திக்கும்முன் அவர் இப்படித்தான் இருப்பார், பேசுவார், கிண்டல் செய்வார் என்று அவரது ‘ஒரு புளியமரத்தின் கதை’யைப் படித்து எனக்குள் ஒரு கற்பனை செய்திருந்தேன். நேரில் சந்தித்தபோது அப்படித்தான் இருந்தார். ஒரு சிறந்த படைப்பாளியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிற எதார்த்தம் எனக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தவில்லை. அப்படி ஏற்படாதபடி அவரது பேச்சும் பழக்கமும் இயல்பாக இருந்தன. அவரது பழக்கத்தின் எல்லைக்குள் வர நேர்ந்த ஒவ்வொருவரது தனித்தன்மையையும் அவர் மதித்தது தான் இதற்குக் காரணம். கணியன் பூங்குன்றன் சொன்ன மாதிரி அவர் ‘பெரியோரை வியத்தலும் . . . சிறியோரை இகழ்தலும்’ இல்லை. இது அவரது இயல்பு.

நெருங்கிய ஒரு நண்பனோடு பேசத்தக்க விஷயங்களை அவர் பேசினார்; புதுப்பிக்கப்படுவதற்கு முன்னிருந்த அவர் வீட்டு மாடி அறையில் அதிகாலை ஒன்று, இரண்டு மணிவரை தற்கால இலக்கியம், விமர்சனம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சில சமயங்களில் நேராக அவருடைய ஜவுளிக் கடைக்கே போய்விடுவேன். கடைக்குள் ஒரு சிறிய அறை உண்டு; அங்கே போய்ப் பேசுவோம்; ஜவுளிக் கடை அவருக்கு இலக்கிய நண்பர்களைச் சந்திக்கிற இடமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஜவுளிக் கடையிலிருந்து கறுப்பு நிறக் காரை இலக்கணச் சுத்தமாக அவர் ஓட்டிவர, கூச்சத்தில் நெளிந்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்த அனுபவம் இனியது. அவர் வீட்டுச் சமையலறையில் அமர்ந்து (அப்போது வீடு புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது) ஒன்றாகச் சாப்பிட்டபோது இயல்பாகப் பேச முடியாத எனது மனச் சிக்கலை அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. வித்தியாசமாக, அந்நியமாக நான் உணரக் கூடாது என்பதை அவர் நுட்பமாக அவதானித்துக்கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன்.

அவர் வீட்டு மொட்டை மாடியில் ‘காகங்கள்’ என்ற இலக்கியக் கூட்டத்தை மாதந்தோறும் சிரத்தையோடு நடத்திவந்தார். ஒருமுறை நானும் ஒரு காகமாக அதில் கலந்துகொண்டேன். அதில் அவர் பேசியபோது பெரிய தத்துவார்த்த அடிப்படைகளை வைத்துக் கைலாசபதி சிபாரிசு செய்தவர்களை விட, தனது ரசனையை மட்டும் வைத்துக் க.நா.சு. பட்டியலிட்டவருள் அநேகர் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்றார். ஒரு இலக்கியப் படைப்பு முதலில் ஒரு படைப்பாக, ரசிக்கத் தக்கதாக இருந்து கொண்டுதான் எதைப் பற்றியும் பேசலாம் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் பேச்சு அமைந்தது.

நாகர்கோவில் என்றால் தென்னை, பலா மரங்களும் புத்தேரி காதரின் பூத் ஆஸ்பத்திரியும் குளமும் சுந்தர ராமசாமியின் வீடும்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். காதரின் பூத் ஆஸ்பத்திரியில் எனது மகள் பிறந்த இனிய நினைவுகளோடு மற்றவை தந்த சந்தோஷங்களும் தொற்றிக்கொள்ளும். சு.ரா.வின் வீட்டின் இரு ஓரங்களிலும் அவரது மகனுடைய கூந்தலைப் போல அடர்ந்து செழித்து ஆகாயத்தில் விரிந்திருக்கும் அந்தப் பலா மரமும் சப்போட்டா மரமும் மனதுள் பசுமையிடும்.

எழுபதுகளின் இறுதிவரைகூட நாகர்கோவிலின் வனப்பு ஒருவரைப் படைப்பாளியாக்கக் கூடிய உந்துதலைத் தந்துகொண்டிருந்தது. ‘புளியமரத்தின் கதை’யில் வரும் உயிருள்ள இடங்களின் தடயங்களை நாகர்கோவிலில் காண்பதற்கு நடந்திருக்கிறேன்; கண்டுபிடிக்க முடியவில்லை. பள்ளத்திலுள்ள அந்த பஸ் ஸ்டாண்டும் எதிரேயுள்ள பூங்காவும் புளிக் குளத்தையும் முனிசிபல் பூங்காவையும் லேசாக நினைவூட்டி நிற்கின்றன.

சு.ரா.வின் படைப்புகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் இங்கே பலரும் பல விதமான அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் கொண்டிருக்கலாம். அதுதான் மனித வழக்கம். என்னைப் பொறுத்தமட்டில் அவர் மிகவும் தெளிவான எழுத்தாற்றல் கொண்டவர். முதிர்ந்து கனிந்த அவரது நகைச்சுவைதான் அவரது சுபாவம். அந்தச் சுபாவம்தான் அவரது படைப்புகள்; அவரே ஒரு படைப்புதான். அவரது படைப்புகளில் சொல்லப்பட்ட சில கருத்துகளோடு உடன்பாடில்லா விடினும் அவரது படைப்புகள் எப்போதும் அனுபவிக்கத் தக்கவையே; அவரும்தான்.

அவர் காலத்தால் வீழாதவர்; பழக்கத்தால் சலிக்காதவர்.

Camera

ஓர் எதிர்ப்புக் குரல்

சுந்தர ராமசாமி

ஜே.ஜே.: சில குறிப்புகள் என்ற இருத்தலியல்வாத நாவலை ஒரு எழுத்தாளனின், சிந்தனையாளனின், அறிவு ஜீவியின் வாழ்க்கைப் போக்கை சித்தரி ப்பதாக அமைந்த சக்தி வாய்ந்த நாவல் மூலம் நவீன தமிழ் படைப்புலகிலும் இலக்கியத்தில் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் பலமான அடித்தளமிட்ட படைப்பிலக்கிய வாதியான சுந்தர ராமசாமி இன்றைய தினம் நம்மிடையே இல்லை.

தனது 20ஆவது வயதில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டி மகன் நாவலை தமிழில் ஆக்கம் செய்ததன் மூலம் தமிழக இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்த இவர் எழுத்து என்ற சிறுபத்திரிகையில் தனது முதல் கவிதையை எழுதினார். முதல் சிறுகதையை புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட்டார் அவரது முதல் சிறுகதை முதலும் முடிவும் என்ற சிறுகதையாகும்.

இவரது சிந்தனை வீச்சுகள் காந்தி, பெரியார் , ஸ்ரீ அரபிந்தோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது தாக்கம் பெற்றது. ஆனால் குறிப்பாக இவர் மார்க்சீய தத்துவத்தை பெரிதும் நம்பியவராக இருந்தார். எம் என் ராய், லெனின் ஆகியோரது அரசியல் தத்துவங்களில் ஆழ்ந்த வாசிப்பும் நம்பிக்கையும் கொண்டவர் சுந்தர ராமசாமி. மலையாளத்தின் இலக்கிய மேதையான எம் கோவிந்தனை இவர் 1957ஆம் ஆண்டு சந்திக்கிறார் தற்போது வரை இவர்கள் நட்பு நீடித்து வந்தது. ஆனால் அதற்கு முன்பே 1952ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் தொ.மு.சி. ரகுனாதனை சந்திக்கிறார், மார்கிஸிய தத்துவங்களால் ஈர்க்கபட்ட இவர் ரகுனாதனின் சாந்தி என்ற இலக்கிய சிறுபத்திரிகை, மற்றும் இன்னொரு கம்யூனிஸ்டான விஜயபாஸ்கரன் என்பவரது சரவ°வதி பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்ததும் இலக்கிய எழுத்து வாழ்க்கையை தீர்மானித்ததாக கூறலாம்.

1966ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ஒரு புளிய மரத்தின் கதை என்ற நாவல், வடிவம் உள்ளடக்கம் ஆகியவற்றில் புதிய எல்லைகளை எட்டியது, இதன் மூலம் தமிழ் நாவலின் எல்லைகள் விரிவடைந்தன, வெகுஜன அரசியல், வணிகக் கலாச்சாரம் குறித்த, இவைகள் அழிக்கும் சிறு கலாச்சாரங்கள், இவைகள் அழிக்கும் வளமையான மரபுகள் என்று அவருடைய சமூக, இலக்கிய அக்கரைகளில் புதிய தரிசனங்கள் உருவாகின. புளியமரம் என்பதும், அதனடியில் கதை சொல்லும் தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரமும் மரபு, கலச்சாரம் ஆகியவற்றின் குறியீடாக சித்தரிக்கப்பட்டது.

கதை, கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம் என்று செயல் பூர்வமான இலக்கிய பயணமாக இருந்து வந்த இவர் நடுவில் ஒரு 6 ஆண்டுகளுக்கு எழுதாமலேயே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் அதன் பிறகு சோவியத் லட்சியவாதங்களின் தோல்வி, இந்திய வெகுஜன அரசியல், தமிழக வெகுஜன அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இவரது சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது, வாழ்வின் அபத்தம், அர்த்தமின்மை, கட்டுண்டு கிடந்து உழலும் நவீன வாழ்வின் பீதி நிறைந்த முன்னேற்றங்கள் ஆகியவை இவரை பாதிக்கத் தொடங்கியபோது ஜோசப் ஜேம்ஸ் என்ற கலைஞன்- சிந்தனையாளன் பற்றிய கலக வாழ்வை இவர் ஜே ஜே சில குறிப்புகள் என்ற நாவலில் வெளிப்படுத்தி தமிழ் இலக்கிய உலகை அதிர்வலைகளை ஏற்படுத்தினார், பெரும்பாலும் கம்யூனிச சிந்தனை கொண்ட அத்தகைய இலக்கிய, விமர்சன சூழலில், கம்யூனிஸ்ட்கள் பற்றியும் மனித இயல்பு குறித்து அந்த நாவலில் இவர் தோலுரித்துக் காட்டியது, பரவலான அதிர்ச்சிகளுக்கிடையே கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சுந்தர ராமசாமி இலக்கியத்தை பொறுத்தவரையிலும் ஒரு நடையியல்வாதி என்றே கூறலாம். வெகுஜனக் கலாச்சாரத்திலும் பத்திரிகையிலும் சீரழிந்து வரும் மொழியை மீட்டெடுத்து அதன் அழகியல் கூறுகளுக்குத் திரும்பும் கவனமும் இவரது நடையில் முக்கியமான அம்சமாகும், தமிழ் இலக்கிய மொழியில் நவீனத்துவத்தை புகுத்தியதில் முக்கியமாக கருதப்படும் புதுமைப்பித்தனின் தாக்கம் இவரது கதைகளில் இருப்பது பலருக்கு ஒரு குறிப்பிட்ட சிலகதைகளிலேயே தெரிய வரும், தனக்கே உரிய முறையில் இவர் நேர்த்தியாக படைப்புகளை உருவாக்கினார், கட்டுரை கதை கவிதை எதுவாயிருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு சரளமான மொழி நடை இவருக்கு கைகூடியது இவரது சிறப்பம்சம். இவரது பல்லக்கு தூக்கிகள் சிறுகதை உலக இலக்கிய மேதையான பிரான்ஸ் காப்காவின் கதைக்கு ஒப்பானதாக கருதலாம்.

1959ஆம் ஆண்டிலிருந்தே கவிதைகள் எழுத துவங்கிய சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை படைத்தார், இவர் எழுதிய காலக்கட்டத்தில் புதுக் கவிதைகளை ஏற்றி கொள்ளாத பழைய யாப்புடை கவிதைகளின் மலிவுக் குவியலின் காலமாக விளங்கியது, வார்த்தை அதன் அர்த்தம் போன்ற தூலத் தன்மையிலிருந்து விலகிய கருத்து அல்லது சிந்தனையை குறிப்பதாய் கவிதை அமைய வேண்டும் என்ற புதுமையாளர்களின் கோட்பாட்டை இவர் ஆதரித்தேவந்தார்.

இவரது கவிதைகள் சில சமயங்களில் சிந்தனை, மொழி மற்றும் படிம வீச்சு கொண்டதாய் முழுமை பெற்றிருந்தாலும், பல இடங்களில் கவிதையின் சாத்தியக்கூறுகளை எட்ட முடியாத உரைநடைத் தன்மையைக் கைக்கொண்டுள்ளது. ஆனால் உணர்வுகளை உடனடியாகவும், பிரச்சாரம் ஆகாமலும், சூட்சுமமாகவும் தெரிவிக்கும் கலையை இவரது கவிதைகளில் காணலாம். இவரது கவிதைகள் அனைத்தையும் 108 என்ற தலைப்பில் தொகுத்துள்ளனர்.

இவரது மதிப்பீடுகள் பெரும்பாலும் ஆங்கில இலைக்கிய விமர்சகர் எஃப் ஆர் லீவிஸ் என்பாரின் மதிப்பீடுகளையே சார்ந்ததாக இருந்தன. வெகுஜன, சந்தை, நசிவுக் கலாச்சரத்திற்கு எதிராகக் கடைசிவரை எதிர்ப்புக் குரல் கொடுத்துவந்தவராய் சுந்தர ராமசாமியை நாம் ஒரு கலாச்சாரப் போராளியாய் நினவு கொள்ளலாம்.

பிற்காலத்தில் இவர் மீது பல தாக்குதல் விமர்சனங்கள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்தபோதும் எவரையும் கீழ்த்தரமாக நடத்தும், சிந்திக்கும் தன்மைகளை முற்றிலும் களைந்த, மனித சுய மரியாதை என்பதை முற்றிலும் மதித்த சமரசமாகாத ஒரு சிறந்த மனிதார்த்தவாதியாக சுந்தர ராமசாமியின் வாழ்வும் பாடமும் வருங்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம்.

நன்றி: வெப்துனியா இணைய இதழ் (2007இல் வெளியான கட்டுரை)