ஆளுமைச் சித்திரங்கள்

Camera

ஜீவா:
காற்றில் கலந்த பேரோசை

நண்பர் ஒருவரிடம் ‘ஜீவா மறைந்துவிட்டார்’ என்றேன். 1963 ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி. நண்பகல் வேளை.செய்தி தபால் நிலையத்துக்கு வந்து அப்போது ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை.

‘ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப் பின் ‘கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?’ என்று கேட்டார். ‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?’ எனக் கேட்க எண்ணியவன் ‘தெரியாது’ என்ற சொல்லோடு நிறுத்திக்கொண்டேன்.
அரை மணி நேரத்திற்குப் பின் மற்றொரு நண்பர் காதில் இச்செய்தியைப் போட்டபோது, அவரிடமிருந்தும் அதே கேள்வி பிறந்தது ஆச்சரியத்தை அளித்தது. நண்பர்கள் அரசியல்வாதிகளோ சமூகத் தொண்டர்களோ அல்ல. முற்போக்கு எழுத்தாளர்களும் அல்ல. இருவருமே ‘தன் காரியம் ஜிந்தாபாத்’ என்று பிழைத்துவரும் சராசரி ஆத்மாக்கள். இருவரது வாயிலிருந்தும் ஒரே கேள்வி புறப்பட்டதைத் தற்செயலான காரியம் என எண்ணி மறந்துவிடுவதும் சுலபம்தான். ஆனால் நான் அவ்வாறு எண்ணவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.
கொடுமை, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்துவிட்டது. வளைய வளைய அதை எண்ணியே பொருமுகிறது மனசு. ஈவிரக்கம் கெட்டு மறைந்திருந்து படு நீசத்தனமாகத் தாக்கிவிட்டது மரணம். நிகழக்கூடாதது நிகழ்ந்து முடிந்துவிட்டது.

அவ்வாறு நிகழக்கூடாதது நிகழ்ந்துவிட்டது உண்மை யென்றால், ஜீவா என்ற சக்திப் பிரவாகம் ஓய்வு பெற்ற இடம், அவருடைய இல்லமாகவோ அல்லது மனைவியின் கால்மாடாகவோ அல்லது ஒரு மருத்துவமனையாகவோ அல்லது அவருடைய அலுவலக அறையாகவோ இருந்திருக்கலாம் என ஏன் என் நண்பர்களால் எண்ண முடியவில்லை? மேடையில், மனித வெள்ளத்தை நோக்கி அவர் முழங்கிக்கொண்டிருக்கும்போதுதான் விபரீதம் நேர்ந்திருக்கக் கூடுமென ஏன் அவ்வுள்ளங்கள் தாமாகக் கற்பனை பண்ணிக் கொள்கின்றன? பைத்தியக்காரத்தனமான கற்பனை என எண்ணி விடலாமா இதை?

நண்பர்களைப் பொறுத்தவரையில் ஜனப்பிரளயத்தின் முன்னால் நின்று சங்கநாதம் எழுப்பிக்கொண்டிருக்கும்போதே, அண்டம் முட்ட எழுந்து நாற்றிசையிலும் அலையலையாய்ப் பரவும் அப் பேரோசையில் அவர் கலந்துவிடுவதே ஜீவாவின் முத்திரை கொண்ட மரணமாக இருக்கும் போலும். அப்போதுதான் நாடகத்தின் இறுதிக் காட்சி முந்திய காட்சிகளுடன் பொருந்தி அமையும் போலும். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டும்? இவ்வாறு எண்ணுகிறது பேதை மனசு. ஜீவா என்ற தொண்டன் தனது இறுதி மூச்சு நிற்பதுவரையிலும் கர்ஜித்துக்கொண்டுதான் இருந்திருப்பான் என்பதில் இவர்களுக்கு எத்தனை நம்பிக்கை! எனவேதான் ‘மூச்சு நின்றுவிட்டது’ என்று நான் சொன்னபோது ‘பேச்சு நின்றபோதா?’ எனத் திருப்பிக் கேட்கிறார்கள். எத்தனை அர்த்தபுஷ்டியான கேள்வி! ஜீவா தனது அரிய சேவையால் சர்வசாதாரண உள்ளங்களில்கூட எழுப்பியிருக்கும் சித்திரம்தான் எத்தனை ஜீவகளையுடன் காட்சி தருகிறது!

நண்பர்கள் எழுப்பிய கேள்வியை, ‘பற்றற்ற’ சமூகப் பிரதிநிதிகள் அவருடைய அயராத பணிக்கு மனமுவந்து அளித்த நற்சாட்சிப் பத்திரமாகவே நான் மதிக்கிறேன்.

இருபது வருடங்களுக்கும் அதிகமாகவே இருக்கும். அன்று திருவிதாங்கூர் திவானாயிருந்த ஸி. பி. ராமஸ்வாமி அய்யர் பிறப்பித்திருந்த தடையுத்தரவு காரணமாக ஜீவா நாஞ்சில் நாட்டில் கட்டுண்டு கிடக்க நேர்ந்த காலம்.

ஸ்ரீமான் சுப்பையா பிள்ளை அவர்களின் டீக்கடை அந்தக் காலத்தில் நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷனில் இருந்தது. ஸ்ரீமான் சுப்பையா பிள்ளை அவர்கள் என நான் சொன்னது சம்பிரதாயத்தைக் கருதி. ‘வெட்டுக் கத்தி’ சுப்பையன் என்பதே மக்கள் மன்றம் அறிந்த பெயர். காந்தியவாதி எனினும் அண்ணலின் அஹிம்சா சித்தாந்தத்தைப் பூரணமாக ஏற்றுக்கொண்டவர் என்று சொல்லிவிட முடியாது.

அவருடைய டீக்கடைக்குப் பின்னால் ஒரு குதிரை லாயம். அங்கு வற்றலாக ஒரு குதிரை. பார்த்தமாத்திரத்திலேயே அது நின்றுகொண்டிருக்கும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய்விடுவோம். எதிரே ஒரு ‘ரேக்ளா’ வண்டி. மாலை வேளைகளில் சுப்பையா பிள்ளை இதில் அமர்ந்து நகருள் உலா சென்று திரும்புவதுண்டு. இந்தக் குதிரை லாயத்தை ஒட்டியிருந்த ஒட்டுத் திண்ணையில், ஒரு சின்னஞ்சிறு முக்காலியில், பழகிப் பழுப்பேறிப்போன ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார், நான் முதன்முதலில் சந்தித்த ஜீவா.

ஸ்டாலின், கார்க்கி இருவரது முகச் சாடைகளையும் சம பாகத்தில் கலந்து தாமிரத்தில் வார்த்தெடுத்தது போன்ற முகம். செழுமையான மீசை. இறுக்கமான தேகக் கட்டு. நிஜாரும் அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

உள்ளே நுழைந்ததும் என்னை அங்கு அழைத்துச் சென்றவரைப் பார்த்து அவர் பட்டென்று போட்ட ‘லால் சலாம்’ என்னை வெருள அடித்துவிட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றவரும் தம் சொந்த வேலையைக் கருதி என்னை அவர் முன்னால் விட்டு விட்டுச் சென்றுவிட்டார். என் முகத்தைப் பார்த்த ஜீவா என் பீதியை உணர்ந்துகொண்டார் என்றே நினைக்கிறேன். ‘அம்பி, குதிரை பாத்தியா?’ என்று கொஞ்சலாகக் கேட்டார்.

நான் குதிரையைப் பார்த்தேன். ‘தெனாலிராமன் குதிரை வளர்த்தின கதை படிச்சிருக்கியா? நம்ம சுப்பையன் குதிரைகிட்டே அது பிச்சை வாங்கணும். ஆமா, பஞ்சகல்யாணிக் குதிரை, ஆமா . . .’ தலையை மேலும் கீழுமாக அசைத்தார். ‘அரேபியாவிலிருந்து எப்படி பொறுக்கிக் கொண்ணாந்து இருக்கான் பாரு . . . வண்டியிலே பூட்டப் பொறுக்காது . . . ஆமா . . .

வண்டியிலே காலைத் தூக்கி வைக்கணும்னு சொன்னா ஒரு ஆளு முன்னாலே நின்னு குதிரையை ஆவிசேத்து அணைச்சு மடக்கிப் பிடிச்சுக்கணும் . . . ஆமா . . . லேசா நெனக்காதே, வாயு வேகம் மனோவேகம் . . . சிட்டாப் பறந்துடும் . . . ஆமா . . .’

தொடர்ந்து சொடக்குப் போட்டுக்கொண்டே தலையை மேலும் கீழும் பலமாக ஆட்டினார்.

குரலில் வெளியான கிண்டலைப் புரிந்துகொண்டு சிரித்தேன். இரு கைகளையும் ஆட்டியபடி அவர் பேசுவதும் தலையை உருட்டுவதும் எனக்குப் புதிய காட்சிகளாக இருந்தன. ஆனால் அந்தப் பேச்சுத் தோரணை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதேசமயம் இனம் தெரியாத கலவர உணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சிறிது நேரம் அமைதியாகக் கழிந்தது. ஜீவா மீண்டும் என் வாயைக் கிளறினார்.

‘அம்பி, காலையிலே என்ன சாப்பிட்டே?’

‘தோசை.’

‘தோசையா . . . பேஷ் . . . தோசை . . . இல்லையா? சரி, எத்தனை தோசை சாப்பிட்டே?’

‘ரெண்டு.’

தடித்த இருவிரல்களை என் கண்ணெதிரே நீட்டி ‘ரெண்டே ரெண்டா?’ என்று கேட்டார். தலையை அசைத்தேன்.

‘பூ! காணாது, காணவே காணாது. குறைஞ்சது நாலு தோசை திங்கணும். அதுக்கு மேலே அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து . . . அது உன் பிரியம் போலே.’

இரு கைகளையும் முன்னால் நீட்டி என்னை இழுத்து அவர் முன்னால் நிறுத்திக்கொண்டு, என் சோனிக் கைகளைத் தோளிலிருந்து மணிக்கட்டு வரையிலும் உருவியவாறு, ‘இப்படியா இருக்கணும் உடம்பு? இரைப்பூச்சி கணக்க. நல்லா சாப்பிடணும்; நல்லா ஓடியாடி விளையாடணும்’ என்றவர், வலது பக்கம் தலையைச் சரித்து இடது கையை மேலும் கீழும் அசைத்தபடியே, ‘நல்லா விளையாடணும்; தேகப் பயிற்சி செய்யணும்; தண்டால் எடுக்கணும்; புட்பால் விளையாடணும்; வாலிபால் விளையாடணும்; பாட்மிண்டன் விளையாடணும்’ என்று அடுக்கிக்கொண்டே வந்து சரேலென்று தலையை இடது பக்கம் சரித்து வலது கையை வேகமாக அசைத்தவாறு, ‘சடுகுடு விளையாடணும்; ஆசனம் போடணும்; கிட்டிப்புள் விளையாடணும்; குழிப்பந்து விளையாடணும்; மரக்குரங்கு விளையாடணும்; கண்ணாமூச்சி விளையாடணும்; கரணம் போடணும்’ என்று ஒரே மூச்சில் சொல்லி விட்டு இரைக்க இரைக்க என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். நான் அசந்துபோனேன். அவருடைய அபிநயத்தையும் பேச்சையும் வெகுவாக ரசிக்கவும் செய்தேன். இதற்குள் மூட்டம் கலைந்து மனசும் அவர்பால் கவிய ஆரம்பித்திருந்தது. அவருக்கும் உற்சாகம் பெருகி வந்தது. அப்போது அவர் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி, முன்னால் குனிந்து கண்களில் விஷமச் சிரிப்புப் பொங்க, ‘பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்டார்.

‘ம்.’

‘காட்டு.’

சட்டையைத் தூக்கிக் காட்டினேன்.

‘மந்திரம் தெரியுமா?’

‘ம்.’

‘சொல்லு.’

தயங்கினேன்.

‘கூச்சப்படாதே, சும்மா சொல்லு. மெதுவாச் சொல்லு போதும்’ என்றார். காதை என் வாயோரம் வைத்து, கூரை முகட்டைப் பார்த்தவாறு கேட்கவும் ஆயத்தமாகிவிட்டார். அவர் காதோரம் வளர்ந்திருந்த ரோமக் கற்றையைப் பார்த்தபடி நான் இரண்டு வரி மந்திரம் சொன்னேன். அவர் கடகடவென்று சிரித்தபடி என் முதுகைப் பலமாகத் தட்டினார். ‘நீ ரொம்பவும் கெட்டிக்காரன் போ’ என்றார். ‘ஆனால் உடம்பு இப்படி இருந்தாப் போதாது. ரெண்டு தோசையா? காணவே காணாது . . .

அவியல் சாப்பிடணும்; கட்டித் தயிர் சாப்பிடணும் . . .’ என்று மீண்டும் ஆகார விஷயங்களைப் பற்றிப் பேசலானார்.

அவர் ஏதோ ஒரு இடத்தில் பேச்சை நிறுத்தியதும், ‘இந்தக் குதிரை ஏன் ஒரு காலை மட்டும் லேசா தூக்கி வெச்சுகிட்டு இருக்கு?’ என்று நான் அவரிடம் கேட்டேன். என் வெகு நாளைய சந்தேகம் அது.

நான் பேச ஆரம்பித்துவிட்ட மகிழ்ச்சியில் ‘என்ன கேட்டே? என்ன கேட்டே?’ என்று அவர் ஆவலோடு முன்னால் குனிந்தார்.

திரும்பக் கேட்டேன்.

‘ஏன் ஒரு காலை மட்டும் சப்பாணிக் கை கணக்க தூக்கி வெச்சுக்கிட்டு இருக்குண்ணுதானே கேக்குறே? அப்படித்தானே? அப்படித்தானே?’ அப்போது அவருடைய வலதுகை மணிக்கட்டு தானாக அந்தரத்தில் உயர்ந்து கீழ்நோக்கி வளைந்து சப்பாணிக் கை காட்டிக் கொண்டிருந்தது. குதிரையை அவர் சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல், ஏதோ மிகச் சிறிய சாமானைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தார். ‘சப்பாணிக் கை’யும் அப்படியே அந்தரத்தில் அசைவின்றி நின்றிருந்தது.

அப்புறம் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். ‘பேஷ் பேஷ்’ என்ற பாவத்தில் தலையை அசைத்தார். நான் மிக அபூர்வமான ஒன்றைக் கண்டு சொன்னதுபோல் பெருமிதம் அவர் முகத்தில் பரவியது. (அவருடைய முகம் அப்போது என் மனசுக்கு ஊட்டிய குளுமை வார்த்தைகளில் தேக்க முடியாத ஒன்று. என் வாழ்நாளில் முதன்முதல் என்னை ஒருவர் பாராட்டிய சுகத்தை அன்று அனுபவித்தேன். இந் நினைவுகள் இன்றும் என் மனத்தில் பசுமையாய் நிலைத்து நிற்கக் காரணமும் இதுதானோ?)

‘அம்பி, நல்லாக் கேட்டே போ!’ என்று சொல்லிவிட்டு ஓட்டல் பக்கம் திரும்பி கனத்த குரலில் ‘சுப்பையா, சுப்பையா, அம்பி ஒரு கேள்வி கேக்கறான் பாரு. வந்து பதில் சொல்லு’ என்று கத்தினார்.

சுப்பையா பிள்ளை நகர்ந்து வந்து அவர் முன்னால் நின்றார்.

‘அம்பி கேக்கறான், இந்தக் குதிரை ஏன் ஒரு காலை மட்டும் லேசா தூக்கி வெச்சுக்கிட்டு இருக்குன்னு கேக்கறான் பாரு! எப்படிப் போடறான் பாரு கேள்வியெ! நோட் பண்ணிப்புட்டான் அம்பி! நோட் பண்ணிக் கேக்கறான். பதில் சொல்லு, சொல்லு . . .

சொல்லு . . . சொல்லு . . .’ என்று அமர்க்களப்படுத்தினார்.

பாவம் சுப்பையா பிள்ளை! கல்தூணாய் நின்று கொண்டிருந்தார்.

ஒன்றிரண்டு நிமிஷங்கள் கழிந்தன.

‘என்ன ரொம்ப யோசிக்கிறயோ?’ ஜீவாவின் குரலில் கிண்டல் தொனித்தது.

‘எனக்குத் தெரியாதண்ணேய்’ என்று இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிவிட்டு, பிள்ளை ஓட்டல் பக்கம் நழுவப் பார்த்தார்.

‘இந்தா, இந்தா, ஒரு நிமிஷம் . . . இங்கே வா . . . இது தெரியாதுன்னு சொல்லிவிட்டே, போகட்டும் . . . விடு . . . இந்தா பாரு, ஒரு கேள்வி . . . சின்னக் குருவியிருக்கே, சின்னக் குருவி . . .

அது எப்படிடே மானத்திலே பறக்குது?’

ஜீவா பதிலை எதிர்பார்த்துத் தரையை நோக்கி முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.

சிறிது நேரம் மௌனம்.

‘சரி போனால் போகட்டும், விட்டுத் தள்ளு. மோட்டார் கார் இருக்கே மோட்டார் கார் . . . சர்ர்ர்னு பாயுதே, அது எப்படி ஓடுது? சொல்லு பார்ப்போம் . . .’

பரிபூரண அமைதி.

‘ஸ்விச்செத் தட்னா பட்னு லைட்டு விழுதே. அது எப்படி சொல்லு, என் அருமைத் தம்பில்லா நீ . . . சொல்லு . . . என் ராசால்ல சொல்லு . . . சொல்லு . . .’

சுப்பையா பிள்ளை என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். ‘இந்த ஆள் கையில் அகப்பட்டுவிட்டால், அவ்வளவுதான்’ என்பது அந்தச் சிரிப்புக்கு அர்த்தம். ஒன்றாம் வகுப்பு மாணவன் மாதிரி அவர் ஜீவா முன் தொந்தி தொப்பையோடு நின்றிருந்தது வெகு ரசமான காட்சியாக இருந்தது.

‘சரி, கடைசிக் கேள்வி. இதுக்குள்ளே என்ன இருக்கு? சொல்லு பார்ப்போம்?’ என்று கேட்டுக்கொண்டே ஜீவா சுப்பையா பிள்ளையின் தொந்தியைத் தடவினார்.

‘மட்டன்’ என்று சொல்லிவிட்டு ‘பூ பூ பூ பூ’வென்று சிரித்தார் சுப்பையா பிள்ளை.

ஜீவாவும் கடகடவென்று உடம்பு குலுங்கச் சிரித்தார்.

‘மட்டன், கோழி சூப்பு, ஆம்லேட்டு, குருமா, காமா சோமா . . .

அதெல்லாம் இருக்கட்டும், இல்லாமலா போய்விடும்! நான் அதைக் கேக்கலே. சின்னக்குடல், பெரியகுடல், அந்தப் பை, இந்தப் பை அப்படீன்னெல்லாம் சொல்றாங்களே அதெக் கேக்கறேன். வயித்துக்குள்ளே என்ன என்ன இருக்குன்னு ஒரு சின்னப் படம் போட்டுக் காட்டு பார்ப்போம்.’

‘சும்மா இரு அண்ணேய், நீ ஒண்ணு. ஆளைப் போட்டுப் பயித்தாரன் ஆக்கிக்கிட்டு. அம்பி சிரிக்கான் என்னைப் பாத்து’ என்று உடம்பை நெளித்தபடி கொஞ்சினார் பிள்ளை.

ஜீவா, பிள்ளையின் கரங்களைப் பற்றியபடி, ‘சுப்பையா, தம்பி சுப்பையா, நாம் எல்லாம் இந்த தேசத்திலே, நாங்களும் மனுஷப் பிறவீன்னு சொல்லிக்கிட்டு வேட்டியும் கெட்டிக்கிட்டு அலையுறோமே, எதுக்குன்னு கேக்கறேன்? நமக்கு ஏதாவது தெரியுதா? நாம் ஏதாவது செய்து காட்டியிருக்கோமா? சத்தியமாக் கேக்கறேன் . . . காரு எப்படி ஓடுதுன்னு கேட்டா தெரியாதுங்கறே . . . சோறு எப்படிச் செமிக்குதுன்னு கேட்டா தெரியாதுங்கறே . . . விளக்கு எப்படி எரியுதுன்னு கேட்டா தெரியாதுங்கறே . . . குருவி எப்படிப் பறக்குதுன்னு கேட்டா தெரியாதுங்கறே . . . வாத்து எப்படி நீஞ்சுதுன்னு கேட்டா தெரியாதுங்கறே . . .’ என்று சொல்லிக்கொண்டே வந்தவர், துரித காலத்தில் ஆரம்பித்து, ‘எப்படி நிக்கறே? - தெரியாது; எப்படி ஓடறே? - தெரியாது; எப்படிப் படுக்கறே? - தெரியாது; பல் எப்படி முளைக்குது? - தெரியாது . . .’ என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் ‘என்ன எளவுதான் நமக்குத் தெரியும்?’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார்.

சுப்பையா பிள்ளை ஜீவாவின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தார். அவர் முகத்தில் கோபத்தின் சாயலே தெரியவில்லை. அதற்கு நேர்மாறாக அவரை உட்காரவைத்து புஷ்பார்ச்சனை செய்தால் பிறக்கும் திருப்தியே முகத்தில் தெரிந்தது.

ஜீவா தொடர்ந்து பேசினார் :
‘சுப்பையா, நல்லாக் கேட்டுக்கோ. எறும்பு இருக்கே எறும்பு, இதைப் பத்தி இங்கிலீஷிலே எழுதி வைச்சிருக்கான் பாரு, புஸ்தகம் தண்டிதண்டியா தலையாணி கணக்கா! எத்தனை ஆயிரம் புஸ்தகம் எறும்பெப் பத்தி! அட ஆண்டவனே, எறும்புலெ எத்தனை வகை; ஒவ்வொண்ணும் என்ன என்ன செய்யுது; பாட்டி எறும்பு என்ன செய்யுது; பேரன் எறும்பு என்ன செய்யுது; அக்கா எறும்பு என்ன செய்யுது; அம்பி எறும்பு (என்னைக் காட்டியவாறு) என்ன செய்யுது; எறும்புக் கூட்டம் லெஃப்ட் ரைட் போட்டு எப்படி மார்ச் பண்ணிப் போகுது; அதிலெ தலைவன் யாரு; தொண்டன் யாரு; ஆண்டை யாரு; அடிமை யாரு; அய்யர் எறும்புக்கு என்ன மரியாதை; அரிஜன் எறும்புக்கு என்ன மரியாதை; காதலன் எறும்பும் காதலி எறும்பும் பூங்காவனத்தில் ‘பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு’ அப்டீனு தொகையறா எடுத்து கிட்டப்பா சுந்தராம்பாள் மாதிரி பாடிக்கிட்டு எப்படி காந்தர்வ விவாகம் பண்ணிக்கிடுது . . . எனக்குச் சொல்லத் தெரியலே சுப்பையா, எனக்குச் சொல்லத் தெரியலே! பாவிகள் எழுதி வெச்சிருக்கிற புஸ்தகத்திலெ லேசா ஒரு பக்கத்தெப்பாக்க இந்த ஆயுள் பத்தாது. பத்தவே பத்தாது! . . . ஆமா . . . நாம் என்னடான்னா நாமதான் மகா கெட்டிக்காரங்கன்னு நெனச்சுக்கிடறோம் . . . ‘ஓம்’ என்கிற ரெண்டு எழுத்துக்குள்ளே நீ, உங்கப்பன், பாட்டன், பேரன், பூட்டன் தெரிஞ்சுக்கிட்டது அத்தனையும் அடக்கி வெச்சுருக்கோம், எல்லாம் இதுக்குள்ளே அடங்கிப் போச்சு என்கிறோம் . . . வேண்டாம், புதுசா ஒண்ணும் வேண்டாம், வேண்டவே வேண்டாம் அப்டீனு தொண்டை கிழியக் கத்தறோம், புல்லும் தர்ப்பையும் போறும் என்கிறோம். என்னை விட்டால் யாருடா? ஹாய் தாட்புட் ராஜா அப்டீனு தொடையெத் தட்டறோம் . . . சாயங்காலமாயுட்டா ரேக்ளா வண்டியிலெ ஊர் சுத்தப் போறோம் . . . மோர்க்காரியிட்டெ குஸ்திக்குப் போறோம் . . . பால்காரியிட்டே சவால் விடுறோம் . . . தம்பி உன்னைச் சொல்றேன்னு நெனச்சுக்கிடாதே. பொதுவாச் சொல்றேன் . . . ஆமா . . . நாம என்னைக்காவது அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி? அப்படி இருக்குமா? எப்படி இருக்கணும்? எப்படி மாத்தணும்? . . . கொஞ்சமாவது யோசிச்சிப் பார்த்திருக்கிறோமா? கடுகாவது யோசிச்சுப் பார்த்திருக்கிறோமா? . . . யோசிக்காம மண்ணாந்தைகளா போயுட்டோமே தம்பி, மண்ணாந்தைகளா போயுட்டோமே . . . மண்ணாந்தைகளா போயுட்டோமே . . .’

இரு கைகளாலும் ஜீவா தன் நெஞ்சில் அடித்துக்கொண்டார்.

ஜீவா, நீங்கள் எவ்வளவு அருமையான மனிதர்!

உள்ளூர் மின்சார நிலையத்துக்குச் செல்கிறோம். அங்குக் கணப்பொழுதில் மின்சக்தியை உற்பத்தி செய்யும் ராட்சச யந்திரங்களைப் பார்க்கிறோம். பக்கத்தில் நிற்கும் இஞ்சினியர் அதன் சக்தியை நமக்கு விளக்குகிறார். நாம் அதைக் கேட்டுப் பிரமிக்கிறோம். எனினும் அதன் சக்தி அங்கு நம் கண்களுக்குப் புலனாவதில்லை. அதை நம்மால் உணரவும் முடிவதில்லை. மின்சக்தி ஒளியுருவம் பூண்டு நம் வீட்டு வாசல் திண்ணைக்கு வருகிறது. அதன் அடியில் அமர்ந்து பிளேட்டோவின் அரசியல் படிக்கிறோம். ஒளி, அடுக்களைக்குள் செல்கிறது. மனைவி, குழம்புக்குத் தாளித்துக் கொட்டுகிறாள். கூடத்து விளக்கொளியில் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.

ஒன்று சிருஷ்டி; மற்றொன்று சிருஷ்டியின் பயன். பயன் இல்லையென்றால் சிருஷ்டி அர்த்தமற்றதாகிவிடும்.

ஜீவா தனக்கென ஒரு தத்துவத்தை சிருஷ்டித்துக்கொண்டவர் அல்ல. அவர், தான் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் அதன் சித்தாந்தக் கருத்துகளை, தனது அரிய திறமையால், கலை நோக்கால், கற்பனையால், உயிர்பெறச் செய்து, மனிதன் முன் படைத்தவர். மின்சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர் அவர்.

அவருடைய வாழ்வை, அதன் மையமான போக்கை எண்ணிப் பார்க்கையில், ஒரு கனவு, சிறு பிராயத்திலிருந்தே நெஞ்சோடு வளர்ந்த ஒரு கனவு, அவருக்கு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. மனித வெள்ளத்தை அவர்களில் ஒருவனாய் முன்னின்று தலைமை தாங்கி இட்டுச் சென்று, அதி உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அது.

‘மனித சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே. செய்துகாட்டுகிறேன். என்னைப் பயன்படுத்திக்கொள். முடிந்த மட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டாம். என்னை நீ பயன்படுத்திக் கொள்வதே நீ எனக்குத் தரும் கைம்மாறு.’ இதுவே அவருடைய பிரார்த்தனை.

இந்த அடிப்படையான மனோபாவத்திலிருந்து பிறந்தது அவருடைய கொள்கை; அவருடைய நம்பிக்கை.

கரும வைராக்கியத்தோடு தன்னை ஒரு கொள்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஜீவா, தன் வாழ்நாளில் அனுபவித்த துயரங்கள், இன்னல்கள் . . . அவற்றை எண்ணி இப்போது வருந்துகிறோம். கடைசி வரையிலும் அவர் சங்கடங்களை சந்தோஷத்தோடு அனுபவித்துவிட்டார். எண்ணிப் பார்க்கையில் இது எத்தனை சிரமமானது என்பது தெரிகிறது.

அவருடைய தியாகத்துக்குத் தலை வணங்குவோம்.

பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும் பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும். பேச்சுக்கலையை விளக்கும் பாடப் புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றைக் காலடியில் போட்டு மிதித்தவர். அவருடைய பாணி இரவல் பாணி அல்ல; கற்று அறிந்ததும் அல்ல. நம் நாட்டு மக்களின் தரத்தையும் அனுபவ அறிவையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு மனிதன், விஷயத்தைக் கலைநோக்கோடு அணுகிக் கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுப் பாணி அது. அதோடு, உழுது விதைத்தால் நல்ல அறுவடை காண வேண்டும் என்பதில் ஜீவாவுக்கு நிர்ப்பந்தமுண்டு. இந்தத் தேசத்தில் பேச்சு, அதற்குரிய பயனைத் தர வேண்டுமென்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் ‘ஜீவா நன்றாகப் பேசினார்’ என்று சொன்னால் மட்டும் போதாது; கொள்கை ரீதியாக அவனை மாற்றியதில் தான் வெற்றி பெற்றிருந்தால்தான் அவருக்குத் திருப்தி. தன்னை வளர்த்துக்கொள்ளப் பேசியவர் அல்ல அவர்; தான் நம்பிய கொள்கை, கண்ணோட்டம் இவை வளரப் பேசியவர். இந்தப் ‘பயன்கலை’ மனோபாவத்தைக் கருத்தில் கொண்டால்தான் அவருடைய பேச்சுத் திறனையும் பாணிகளையும் நாம் உணர முடியும். விஸ்தாரமான பீடிகை போட்டு, விரிவான பின்னணி அமைத்து, தூண்களை நிறுத்தி, முகப்புக் கட்டி, கோபுரம் எழுப்பி, பிரகாரம் சுற்றி வரும் பேச்சு அவருடையது. செல்விகள் குத்து விளக்கைச் சுற்றிக் கும்மியடிப்பது மாதிரி வெகுநேரம் விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடிப்பார். அப்போதெல்லாம் தற்செயலாய் விஷயத்தின் மையக் கருத்தைப் பேச்சு தொட்டுவிட்டாலும் சரேலென்று வாபஸ் வாங்கிப் பின்னணிக்குச் சென்று ஆலாபனை செய்துகொண்டிருப்பார். இப்போது பறக்கும் விமானத்திலிருந்து ஊரைப் பார்ப்பது போல் விஷயத்தை மேல்வாரியாகப் பார்க்கிறோம். பின்னால் எல்லோரையும் ஒரு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று விஷயத்தை ஒரு ‘குளோஸ் அப்’பில் காட்டுவார். அதுவரையில் விஷயத்தின்மேல் அனாவசியமாகப் படிந்து கிடந்து சேஷ்டைகள் செய்துகொண்டிருந்த பேய்கள் இப்போது ஓடிப்போய்விடும். சிக்கல்கள் அறுபடும். பனிமூட்டம் கலையும். விஷயத்தின் சொரூபம், கண்ணாடி அணியாமலே, தெற்றெனப் புலப்படும்.

சில சமயம் அவர் எதிர்க்கட்சிக்காரனின் கோணத்தை எடுத்துக் கொண்டு அவர்களே அமர்த்திய திறமையான வக்கீல் மாதிரி வாதம் பண்ணுவார். கூட்டத்துக்குப் பிந்தி வந்து, கட்டைவிரலில் நின்றபடி கழுத்தை நீட்டுகிறவன், ‘இவரென்ன கட்சி மாறிவிட்டாரா?’ என்று கூடச் சந்தேகப்படுவான். பின்னால் ஒரு ராட்சசப் பறவையின் இறகுகளைச் சீவித் தள்ளுவதுபோல் தானே எழுப்பிய கேள்விகளுக்குச் சாங்கோபாங்கமாகப் பதில் சொல்ல ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியின் வாதங்களைக் கொன்ற பின்பும் அவற்றை நையப் புடைத்தால்தான் அவருக்குத் திருப்தி பிறக்கும். சில சமயம் திறமையான திரைப்படப் புகைப்படக்காரர் மாதிரி ஒரு கோணத்தில் நின்றே விஷயத்தைப் பார்க்கச் சுட்டுக்கொண்டிருப்பதும் உண்டு. அடுத்தாற்போல் மற்றொரு கோணம். இவ்வாறு மாறிமாறிப் பல கோணங்களில் பார்க்கிறபோது விஷயம் பாமரர்கள் உள்ளங்களில்கூட மங்காத சித்திரம்போல் பதிந்துவிடும். எதிர்க்கட்சியின் வாதங்கள் சிறு பிள்ளைத்தனமானதாக இருக்குமென்றால், அவற்றைப் பூனை எலியைக் கொல்வதுபோல் வேடிக்கை பார்த்து, விளையாட்டுப் பார்த்துக் கொல்வது கேட்க வெகு ரசமாக இருக்கும்.

அவருடைய பேச்சில் சங்ககாலப் பாடலைத் தொடர்ந்து நந்தன் சரித்திரக் கீர்த்தனை ஒன்று வரும். பத்து வருடங்களில் கேட்டிராத பழமொழி காதில் விழும். பிராந்தியச் சொற்றொடர் ஒன்று வாய்ப்பான இடத்தில் விழுந்து அழகூட்டும். பிரதம மந்திரியின் பாராளுமன்றப் பேச்சையும் கிராமத்து விதவை ஒருத்தி வயிற்றெரிச்சலோடு ஏசுவதையும் அவர் அவரவருக்கு உரிய வார்த்தைகளில் சொல்வார்.

மாலையில் பேசப்போகும் விஷயத்தை ஜீவா நண்பர்களிடம் பிரஸ்தாபித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு புதுக் கருத்தை உதிர்க்கிறான். ஜீவா அதை வரவேற்று, தலையை அசைத்து ஆமோதிக்கிறார். ‘நீ சொன்னபடியே சொல்லப் போகிறேன்’ என்று அவனிடம் சொல்லிவிட்டுக் கூட்டத்துக்குச் செல்கிறார். இளைஞனும் முன் வரிசையில் அமர்ந்து பேச்சைக் கேட்க சித்தமாக இருக்கிறான். அன்றைய பேச்சுப் பூராவையுமே தான் அவருக்குத் தானம் செய்த எண்ணம் அவன் மனதில்! ஆனால் ஜீவா வாயிலிருந்து இளைஞன் சொன்ன கருத்து வெளியாகும்போது, அதற்கு ஆயிரம் இறக்கைகள் முளைத்திருக்கும்; ஆயிரம் கால்களும் கைகளும் முளைத்திருக்கும். அத்துடன் இளைஞனுடைய ‘காப்பிரைட்’டும் காற்றோடு போயிருக்கும்.

விஷயத்தை வண்டி வண்டியாகக் குவித்து, சின்ன மூளைகளைக் குழப்பி வாதனைக்கு உள்ளாக்குவது பல பிரசங்கிகளுக்குப் பொழுது போக்கு. ஜீவா இதற்கு எதிரி. ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரியவைத்துவிட்டால் போதும் என்பதே அவருடைய எண்ணம். வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் இரண்டு கைப்பிடி விஷயம்தான் எடுத்துக்கொள்வார். மேடை மீது ஏறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதிலிருந்து வர்ண ஜாலங்கள் தோன்றும்; பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும்; குடைகுடையாய் இறங்கி வரும்; மாலைமாலையாய் இறங்கி வரும்.

பேச்சுக்கலை அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.

இப்போது மேடையில் ஒரு நாற்காலி காலியாகிவிட்டது.

அது என்றும் காலியாகவே கிடக்கும்.

வயதில் குறைந்தோரை, அவர்களுடன் தான் ஒட்டிப் பழகியிருந்தால், ஒருமையில் அழைப்பதற்கே ஜீவா பெரிதும் விரும்புவார். ஒருமையில் அன்பைக் காட்ட அவருக்கு ஆசை. நீ, நீ, நீ என்று ஒரு வாக்கியத்துக்குள் ‘நீ’க்கள் கணக்கில்லாமல் வரும்.

என்னை எப்போதும் அவர் ஒருமையிலேயே அழைப்பது வழக்கம். அதோடு அவர் பன்மையில் அழைப்பவர்களும் என்னுடன் இருந்து விட்டால் ஒருமை வேகம் மேலும் ஓங்கிவிடும். ‘இவன் நமக்குத் தம்பி மாதிரி. தொட்டில் குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இவனை நமக்குத் தெரியும். இவனுக்கு நம்மிடம் ரொம்பவும் வாஞ்சை’ என்று சொல்லாமல் சொல்வது போலிருக்கும்.

ஆயிரம் அணைப்பில் வெளியாகாத அன்பு அவருடைய ஒரு ஒருமை அழைப்பில் தேங்கிவிடும்.

இப்போது அதை எண்ண சந்தோஷமாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது.

அவருடைய உணர்ச்சிகளை நாம் புண்படுத்தி, அவருடைய பொறுமையை அளவுக்கு மீறிச் சோதித்துவிட்டால் சில சமயம் அவர் கோபப்படுவதுண்டு. ஒருசமயம் தனி அறையில் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் பெரிதும் மதித்திருந்த ஒரு சர்வதேச அரசியல் தலைவரை நான் இழிவுபடுத்திப் பேசியது பொறுக்காமல் உணர்ச்சி வசப்பட்டு, ‘இனிமேல் உன்னோடு விவாதம் செய்யமாட்டேன். சத்தியம்’ என்று மேஜைமீது அறைந்து சொல்லிவிட்டுப் பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டார். சத்தியம் நாலு மணி நேரத்தில் காற்றோடு போய் விட்டது. இரவு பத்து மணிக்குமேல் வந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். சினத்தைப் பேணும் சின்னபுத்தி அவரிடம் கிடையாது. மனிதன், தன்னுடைய குறைந்த ஆயுளில், நொள்ளைக் காரணங்கள் கூறிப் பிறரிடம் விரோதம் பாராட்டுவது அறியாமை என்பதே அவருடைய எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

தலைவர் ஜீவா என்ற மகுடம் பெற்று எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னாலும் தன்னுடைய கடைசி நாட்கள் வரையிலும் அவர் தன்னை ஒரு தொண்டன் என்றே எண்ணியிருந்தார். அதைவிடவும் ‘நான் ஒரு பள்ளி மாணவன், படித்துக்கொண்டிருக்கிறேன், படித்துக்கொண்டே இருப்பேன்’ என்ற எண்ணம் எப்போதும் அவர் மனதில் பசுமையாக இருந்தது போலிருக்கிறது. அவர் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும் அதையும் காது கொடுத்துக் கேட்பார். தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை எப்போதும் அவர் நினைவில் நிற்கும். தனக்கு முடிவெட்ட வரும் தொழிலாளியிடம் அரைமணி நேரம் பேசி அவன் தோளில் கை போட்டு உறவாடவில்லை என்றால் மண்டை வெடித்துவிடும் அவருக்கு. நீங்கள் அவரை இந்தியக் குடியரசின் தலைவர் ஆக்கியிருந்தாலும் அவரை விட்டு இந்த அரிய குணங்கள் மறைந்து இருக்காது.

ஜீவாவைப் பார்க்க நாலைந்து நண்பர்கள் புறப்பட்டுச் செல்கிறார்கள். உள்ளூர் இளைஞன் ஒருவனும் இவர்களுடன் தொத்திக் கொள்கிறான். இவன் ஒரு மாணவர் தலைவனாக இருக்கலாம்; அல்லது கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியனாகவும் இருக்கலாம். எல்லோரும் ஜீவா முன் அமர்ந்த பின் இவனுக்கு ஒட்டிக்கொள்ள பெஞ்சின் நுனி மட்டுமே கிடைக்கிறது. பேச்சை ஜீவா ஆரம்பித்து வைத்து சண்டமாருதமாகப் பொழிகிறார். அவர் கண்களுக்கு எப்போதும் எதிரே ஜனசமுத்திரம். அவர் அமர்ந்திருக்கும் இடமே மேடை. நண்பர்களும் பேச்சில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். சூழ்நிலை தரும் உற்சாகத்தில் இளைஞனும் எதையோ சொல்ல தைரியம் கொண்டு இதற்குள் மூன்று தடவை வாயைத் திறந்து திறந்து மூடிவிட்டான். நண்பர்களில் சிலர் இதைக் கவனிக்கவில்லை. கவனித்தவர்களும் கவனித்ததுபோல் காட்டிக் கொள்ளவில்லை. அதோடு ‘இவன் எதற்குப் பேச ஆரம்பிக்கிறான்’ என்று விசாரப்படுகிறார்கள். இவனைப் பேசவொட்டாமல் அடிக்க வழியுண்டா என்று தீவிரமாக யோசனை செய்கிறார்கள். அப்பாவி இளைஞன் நாலாவது தடவையும் வாயைத் திறக்கிறான். ஆனால் இந்தத் தடவை ஜீவா இதைக் கவனித்துவிடுகிறார். உடனே அவர் கையை உயர்த்திப் பெரிய மனிதர்களையெல்லாம் அடக்கிவிட்டு, கருவியை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டு, இளைஞனின் வாய் அருகே குனியும் வினயத்தைப் பார்த்தால், உடன் இருக்கிறவர்களுக்கு ‘அவன் வேத மந்திரத்தை ஓத, இவர் கேட்கப் போகிறார்’ என்றே தோன்றும்.

யாரும் அலட்சியத்துக்கு ஆளாகிப் புண்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார்.

தனக்கு ஏற்படும் சந்தோஷத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஜீவா மிகவும் ஆசைப்படுவார். சந்தோஷச் செய்திகளை முடிந்த மட்டும் ஆர்ப்பாட்டமாகக் கெட்டிமேளம் போட்டுக் கொட்டி முழக்குவார்.

ஒரு சமயம் குற்றாலம் திருவிதாங்கூர் பங்களாவில் அவர் தன் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருக்கையில், அவருடைய மூத்த பெண்ணைப் பார்த்து ‘இவளுக்கு நம்ம பக்கத்துச் சாடை’ என்று மனதில் பட்டதைச் சொல்லி வைத்தேன்.

‘நம்ம பக்கத்துச் சாடைன்னு ஒண்ணு இருக்கா? விளக்கமாச் சொல்லு’ என்றார்.

‘இதை ரொம்பவும் விளக்கமாகச் சொல்லிவிட முடியாது. நம்ம பக்கத்துப் பெண்களுக்கு ஒரு விதமான சாடையுண்டு. அது இவள் முகத்திலும் தெரிகிறது. அதாவது நம்ம மண்வாசி தெரிகிறது. மனதில் தோன்றுவதுதான் இதற்கு ஆதாரம்’ என்று சொன்னேன்.

ஏனோ இதைச் சொன்னதும் அவர் ஒரே ஆர்ப்பாட்டமாக சந்தோஷப்பட ஆரம்பித்துவிட்டார்.

‘நிஜமாகவா சொல்கிறாய்? எப்படித் தெரியுது உனக்கு? நிஜமாகவா? பத்மா. . . பத்மா . . . ராமசாமி என்ன சொல்றான்னு வந்து கேளு’ என்று அழைத்துக்கொண்டே, ஜன்னல் வழி வெளியே பார்த்து, அங்கு நின்றிருந்த ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரையும் உள்ளே அழைத்து, அவரிடமும் விஷயத்தைச் சொன்னார். அப்புறம் அன்று பூராவும் வந்து போனவர்களிடமெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குப் பின்னால் தெரியவந்தது. இதில் என்ன பிரமாதம் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அப்படியேதான் எண்ணுகிறேன். ஆனால் அதுவல்ல முக்கியம். ஜீவாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது! அதை ஆரவாரத்தோடு பிறருடன் சேர்த்துக் கொண்டாடினால்தான் அவருக்குத் திருப்தி.

இப்போது சந்தோஷ ஆரவாரம் அடங்கிவிட்டது.

ஆற்றில் ஒரு கிளையைப் போடுகிறோம். அது ஆற்றோடு செல்கிறது. நீரோட்டத்தில் சிக்கி கன வேகமாக ஓடுகிறது. சுழியில் அகப்பட்டுச் சுழல்கிறது. சில சமயம் கரையோடு ஒதுங்குகிறது. மீண்டும் ஓடுகிறது. சுற்றிச் சுழன்று இலக்கு அழிந்து செல்கிறது.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொரிமுத்துப் பிள்ளை ஆற்றில் கிளையைப் போட்டாற்போல் வாழ்ந்திருக்க வேண்டியவர் தான். ஆனால் அவரோ இயற்கையின் விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடத் துணிந்தார்.

அவரை அறிஞர் என்கிறோம்; பல்கலைக்கழகத்துக்கு இதில் பங்கு இல்லை. பேச்சுக்கலை வீரர் என்கிறோம்; கற்றுக்கொடுத்த குரு யாரும் இல்லை. பழந்தமிழ் இலக்கியத்தை யாரும் அவர் காதில் ஓதவில்லை. சாணுக்குச் சாண், அங்குலத்துக்கு அங்குலம் தன் வாழ்வைத் தானே உருவாக்கிக்கொண்டவர் அவர். சொரிமுத்துப் பிள்ளைக்கும் தலைவர் ஜீவாவுக்குமுள்ள இடைவெளி கொஞ்ச தூரமல்ல. அதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், அவருடைய சாதனை தெரியவரும்.

‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பியவர் அவர். அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறபோது அவருடைய நம்பிக்கை பலித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடவுளின் ‘முன்னேற்பாடுகளை’ முடிந்த மட்டும் அவர் தகர்த்து எறிந்து விட்டார். நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது.

எனினும், மரணம் இன்னும் கடவுளுக்குத்தான் சொந்தம்.

பேரோசை காற்றில் கலந்துவிட்டது.

தாமரை, ஜீவா சிறப்பு மலர், 1963

Camera

கிருஷ்ணன் நம்பி:
பாதியில் முறிந்த பயணம்

கிருஷ்ணன் நம்பியை 1950களின் ஆரம்பத்தில் என் முதல் இலக்கிய முயற்சியான ‘புதுமைப்பித்தன் நினைவு மலரை’ வெளியிட முயன்று கொண்டிருந்தபோது சந்தித்த ஞாபகம்.

முதல் சந்திப்பிலேயே இனம் தெரியாது ஏங்கிக்கொண்டிருந்த தோழமையைக் கண்டடைந்துவிட்ட மனநிறைவு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது. நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டன.
அதன்பின் 1976இல் தனிமையில் என்னை ஆழ்த்திய நம்பியின் மறைவு நிகழ்வது வரையிலும் சுமார் 25 வருடங்கள் எங்கள் நட்பு இடைவெளியின்றி நீடித்து வளர்ந்தது. ஆழம் கொள்ளும் நட்பின் சுருதி பேதங்களுடனும் சமாதானங்களுடனும். அந்த நீண்ட நட்பின் உயிர்த் துடிப்பை இப்போது மீண்டும் உணர முயலும் போது அனுபவங்களின்மீது சரிந்துவிட்ட காலத்தின் பனிக்கட்டி சோர்வைத் தருகிறது. நிகழ்வுகளும் நினைவுகளும் குழம்பி மறிகின்றன. சந்திக்காத நேரங்களிலும் இருவர் மனங்களிலும் உணர முடிந்திருந்த அந்த ஒத்திசைவு அது ஆட விரும்பிய நாடகத்தை ஆடி ஓய்ந்தது என்ற உணர்வுதான் இப்போது மிஞ்சுகிறது.

நண்பர்களாக நாங்கள் இணைந்து செய்த காரியம் என்று சொல்ல எதுவுமில்லை. விடாமல் நடந்தது பேச்சு. ஓய்வு ஒழிவில்லாத பேச்சு. அதிகமும் இலக்கியம் பற்றி. கலைகள் பற்றியும் மனித வாழ்க்கை பற்றியும் சொந்தக் கவலைகள் பற்றியும் பேசினோம். மொழியைக் கருத்துலகப் பயணத்திற்குப் பயன்படுத்தியிராத குடும்பங்களில் வந்தவர்கள் நாங்கள். மொழிக்குள் கருத்துகளின் சிறகுகளைக் காப்பாற்றும் முயற்சியில் திக்கித் திணறினோம். அந்தத் திணறல் சந்தோஷத்தைத் தந்தது. சரிவரச் சொல்லிவிட்டதற்கான குறிப்பை எதிராளியிடமிருந்து பெற்ற தருணங்களில் மித மிஞ்சிய சந்தோஷம் ஏற்பட்டது. பேசக் கற்றுக்கொண்டது எழுதுவதற்குப் பயிற்சியாக அமைந்திருக்கலாம். எங்களைப் பற்றிச் சிறிது தெளிவும், இழப்பில்லாமல் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் பேச்சின் விளைவுகளாகப் பெற்றோம் என்று சொல்லலாம். அபூர்வமான ரசனையும் தன் பலவீனங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இயற்கையும் நகைச்சுவை உணர்வும் தன்னையும் உலகப் போக்கையும் பரிகாசமாகப் பார்க்கும் குணமும் கொண்டவர் நம்பி. அவர் பேசிக்கொண்டிருக்கும்போது காலம் கரையும் வேகம்கூட நமக்குத் தெரியாமல் போய்விடுவது சந்தோஷத்தையும் கவலையையும் தரக்கூடியது.

எனக்கும் நம்பிக்குமான உறவைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும்போது இயற்கை நிலையைத் தாண்டிய ஆவேசமும் வெறியும் அதன் கூறுகளாக நின்றிருப்பதை உணர முடிகிறது. எங்கள் சங்கடங்களிலிருந்து தோன்றிய வெறி இது.

கலை இலக்கியத் துறையையோ அல்லது வருமானத்திற்கு உத்தரவாதமில்லாத வேறு துறையையோ தங்கள் ரசனை காரணமாகத் தேர்வு செய்ய நேர்ந்துவிடும் இளம் வயதினருக்கு இந்திய வாழ்க்கையும் அதிலும் கூடுதலாக நம் தமிழ் வாழ்க்கையும் அளித்துவரும் சோதனைகள் மிகக் கடுமையானவை. எங்கள் இலக்கிய ஈடுபாடுகள் காரணமாக எனக்கும் நம்பிக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளும் அவற்றால் விளைந்த சங்கடங்களும் மிகுந்த ஒற்றுமை கொண்டவை. இதனால் எங்கள் பிணைப்பு மேலும் நெருங்கிற்று. கல்வியைத் தொடர்வதில் வெறுப்பு; லௌகீகத் திறன்களை வளர்த்துக்கொள்வதில் உதாசீனம்; எதிர்காலம் பற்றிய கவலைகள்; இலக்கியம் தவிர பற்றுக்கோடு ஏதுமில்லை என்ற கற்பனை; பச்சாதாபம்; தாழ்வு மனப்பான்மை போன்ற பலவும் எங்களிடம் பொதுவாக இருந்தன. இவை தவிர மொழிக்குள் கொண்டுவரச் சங்கடமான மனச்சிக்கல்கள் எவ்வளவோ. இவற்றால் ஏற்பட்ட நிலைகுலைவுகளை அந்த வயதில் விவேகத்துடன் மதிப்பிடவும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில் எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும் குடும்பம், சுற்றம், சமூகம் ஆகிய தளங்களிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல்களிலிருந்து நிமிரவும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் மனச் சோர்விலிருந்து மீண்டு வாழ்வுக்குள் ஊன்றவும் எங்கள் உறவு எங்களுக்கு உதவிற்று. எங்கள் மனநிலைகளில் ஒழுங்கோ ஆரோக்கியமோ இல்லாதபோது, எதிர்மறையான பாதிப்புகளினால் அவை உருக்குலைந்து கிடந்தபோது அவற்றின் இணைப்பில் மட்டும் எப்படி ஆரோக்கியம் கூடும்? எங்கள் இலக்கிய ஈடுபாடும் சரி, எங்கள் நட்பும் சரி, மிகச் சிக்கலான மனச்சோர்விலிருந்து விடுதலை பெறவும் மன ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்ளவும் எங்களுக்கு நாங்களே செய்துகொண்ட சிகிச்சை என்றே இன்று நான் நம்புகிறேன். நோய் அப்போது கடுமையாக இருந்ததால் சிகிச்சையும் ஆவேசத்துடன் செய்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் ஒன்றாகப் பொழுதைக் கரைத்துக் கொண்டிருந்த காலத்தில் லௌகீகத் திறன்களை வளர்த்து வாழ்க்கையின் வெற்றிக்கு இட்டுச் செல்லும் பல வாய்ப்புகளையும் இழந்தோம் என்ற விமர்சனம் எங்கள் குடும்பங்களில் எழுந்தது. அவர்கள் பார்வையில் நியாயமான விமர்சனம்தான் அது. ஆனால் பலவற்றையும் இழந்தாவது உயிர் வாழ்தலைச் சாத்தியமாக்கிவிட பரிணாமம் முடுக்கி வைத்திருக்கும் சூட்சும ஏற்பாடுகளின் முன் லௌகீக சாமர்த்தியங்கள் மங்கிப்போய்விடுகின்றன என்று தோன்றுகிறது.

2 நான் நம்பியைச் சந்தித்த காலத்தில் அவருடைய பெயர் அழகிய நம்பி. பலரைப்போலவே அவருக்கும் அப்போது தன் பெயர் பிடித்திருக்கவில்லை. தன் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். தொடக்க காலத்தில் நம்பி எழுதிப் பிரசுரமாகியிருந்தவை அதிகமும் குழந்தைக் கவிதைகள்தாம். ‘சசிதேவன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதிய கவிதைகள் பின்னால் தொகுக்கப்பட்டு, ‘யானை என்ன யானை’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.

குழந்தைக் கவிதைகள் எழுதுவதில் நம்பி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. என் மனநிலையும் ஈடுபாடும் அப்போது முற்றிலும் வேறு தளத்தில் இருந்ததால் என்னிடமிருந்து அவர் அதிக ஊக்கம் பெறவில்லை. குழந்தைகளை உய்விக்க விரும்பும் உத்தம குணத்தின் வெளிப்பாடாக அவர் குழந்தைக் கவிதைகள் எழுதவில்லை. அவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கிருந்த ஆசையினால் அவர் எழுதினார். அது அவருடைய முதன்மையான ஈடுபாடாகவும் அப்போது இருந்தது.

நம்பியின் குழந்தைக் கவிதைகளையும் அவற்றை அவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரைவிடவும் பல மடங்கு புகழ்பெற்றிருந்த வேறு பல குழந்தைக் கவிஞர்களுடைய கவிதைகளையும் அன்று படித்துப் பார்த்தபோது தமிழிலேயே சிறப்பான குழந்தைக் கவிதைகள் எழுதியிருப்பவர் நம்பிதான் என்றும் குழந்தைக் கவிதைகளைப் பற்றி அவருக்குத்தான் விவேகமான அடிப்படைச் சிந்தனைகள் இருக்கின்றன என்றும் எனக்குப் பட்டது. (இந்தத் துறையில் நம்பியின் காலத்திற்குப் பின் வேறு சாதனையாளர்கள் தோன்றியிருந்தால் அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது.)

நம்பியின் மனவார்ப்பைக் குழந்தைகளின் உலகைக் கற்பனை செய்துகொள்ள மிக அனுசரணையான ஒன்று என்று சொல்ல வேண்டும். அவருடைய கதைகளும் இந்த உண்மையை ஆமோதிக்கின்றன. அத்துடன் இசையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் அபூர்வமான அவருடைய அழகுணர்ச்சியும் வாழ்க்கையை நாடகமாகப் பார்க்கும் மனப்பாங்கும் குழந்தைகள் பாடி மகிழும் கவிதைகளை உருவாக்க அவருக்குத் துணை நின்றன. அவர் தன்னுடைய அக்கறைகளைக் குழந்தைகள்மேல் திணிப்பதைத் தவிர்த்து அவர்கள் மிகவும் விரும்பும் உலகத்தை அவர்களுக்குப் படைத்துத் தந்தார். அறவொழுக்கங்களையும் உபதேசங்களையும் தன் பாடல்களில் தவிர்க்கத் தெரிந்துகொண்டிருந்தார். அதே சமயம் வாழ்க்கைக் காட்சி ஒன்றைக் குழந்தைகள் கண்முன் எழுப்பி அதன் மூலம் அவர்களுடைய நல்லுணர்ச்சிகளை மறைமுகமாகத் தூண்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

எவ்விதத் தூண்டுதலுமின்றி நம்பியின் கவிதைகளைக் குழந்தைகள் பாடி மகிழ்ந்துள்ளதை நானே நன்கு அறிவேன். என் குழந்தைகள் அவருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் பாடியது என் பழைய நினைவின் சந்தோஷமான பகுதியாகும். எவ்வளவோ வருடங்கள் ஓடி மறைந்த பின்பும், பணியும் படிப்பும் என் குழந்தைகளை அந்நியச் சூழலுக்கும் நெடுந்தொலைவுக்கும் இட்டுச்சென்ற பின்பும், ‘நம்பி மாமா’வின் பாடல்களை அவர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரிகளை ஒப்பிப்பது அவருடைய திறனுக்குக் காலம் தந்த ஆமோதிப்பு என்றே நம்புகிறேன்.

3 இன்று கிருஷ்ணன் நம்பியின் 19 கதைகள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. ஒரு இளம் படைப்பாளி தன்னை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொண்ட கதைகள் இவற்றில் பெரும் பகுதி. ஆயாசமில்லாமல் கூடிவிட்ட மொழி, ஆத்மார்த்தம், தன் அனுபவங்களைப் பச்சாதாபத்துடன் கூர்ந்து பார்க்கும் குணம், உருவாகி வந்திருக்கும் ஒற்றையடிப் பாதையில் பயணத்தை வற்புறுத்தும் நம் மரபுக்கு எதிரான குமுறல், ஆழத்தைச் சென்றடைய வேண்டுமென்ற ஆசை, சமத்காரம் ஆகிய குணங்கள் கொண்ட கதைகள் இவை. உலகத்தைப் பற்றிய தன் அனுபவங்கள் சார்ந்த கற்பனையைத் தாண்டிச் செல்ல முயன்றதன் அடையாளங்களாக இருக்கின்றன வேறு சில. தன்னைத் தாண்டிச் செல்லும் பயணத்தின் வெற்றி எடுத்த எடுப்பிலேயே கூடி வந்திருப்பதற்கு உதாரணங்களாக நிற்பவை ‘வருகை’, ‘காலை முதல்’, ‘தங்க ஒரு . . .’ ஆகிய கதைகள். வாழ்க்கையின் முன் வெற்றுக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதன் வியர்த்தம் அவருக்குப் புலப்படத் தொடங்கி எழுத்தின் அடுத்த நிலையிலான விமர்சனம் கூர்மைப்பட்டு வந்திருக்கிறது, இந்தக் கதைகளில். விமர்சன சாரத்தைக் கலையாகத் தேக்கும் இப்பயணம் அவகாசம் இடந் தந்திருந்தால் எந்தவிதமாகச் செழுமைகொண்டிருக்கும் என்ற கேள்வியில் பிறக்கும் ஆற்றாமையைத் தவிர்க்க முடியவில்லை.

கிருஷ்ணன் நம்பியின் கதைகளை ஒன்றாக இப்போது படித்துப் பார்க்கும்போது அவற்றினூடே உள்ளார்ந்து ஓடும் இழையை ‘புறக்கணிப்பின் துக்கம்’ என்று சொல்லத் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றிவிட்டதால் இனி இச்சொற்களை இவருடைய ஒவ்வொரு கதைமீதும் வரிசையாகப் போட்டுச் சரியான விடைக்குக் காத்துக் கொண்டிருப்பதுதான் நம் வேலை என்று நாம் கருதுவோம் என்றால், அனுபவத்திற்கும் ஆக்கத்திற்குமான இடைவெளிச் சிக்கலை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறோம் என்றுதான் பொருள். கலை ஆக்கத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் இடைவெளிச் சிக்கல் இது. இந்த இடைவெளிச் சூட்சுமங்களை ஆராய்ந்து மொழிக்குள் மடக்குவதையே விமர்சனம் இன்றுவரையிலும் தலையாய சவாலாகக் கொண்டிருக்கிறது. படைப்பில் அனுபவம் வெற்று விவரிப்பு கொண்டு துவண்டு போய்விடுவதில்லை. அனுபவத்தின் சாரம் மறுஆக்கம் கொண்டு உயிர் பெறுகிறது. இந்த மறு ஆக்கத்தில்தான் படைப்பாளியின் ஆளுமையும் அதன் ஆழமும் கூடிப் படைப்பை வலுப்படுத்துகின்றன. புறக்கணிப்பின் துக்கம் என்ற சொற்கள் இந்த ஆளுமையின் ஒருமையை நம் மனத்தில் உணர்த்த எந்த அளவுக்கு உதவுமோ அந்த அளவுக்குத்தான் அவற்றுக்கு மதிப்புண்டு. இவருடைய கதைகளில் வெளிப்படும் துக்கத்தை நம்மால் இழை பிரித்துப் பார்க்க முடிந்தால் அவற்றுடனான நம் உறவும் சிறிது வலுப்படலாம்.

இந்த நூற்றாண்டில் தோன்றிய நவீனத் தமிழ் எழுத்தை மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் சாரம் என்று பொதுவாகக் கூறலாம். மத்தியதர வாழ்க்கை உருவாக்கித் தரும் மதிப்பீடுகளை அந்த வர்க்கம் பேணிக் காத்து தன் இருப்பின் நலன்களைத் தொடர அவற்றை உறுதிப்படுத்த முயல்கிறது. லோகாயத மதிப்பீடுகளைப் பின்னகர்த்தி ஆத்மீக மதிப்பீடுகளை வாயளவில் தூக்கிப் பிடிக்கும் மத்தியதர வர்க்கம் லோகாயத வெற்றிகளைச் சென்றடைய முழு வேகத்துடன் நீச்சலடித்துக்கொண்டும் இருக்கிறது. இதனால் சொல்லும் செயலும் இரு கூறாகப் பிரிந்து இரட்டை வாழ்க்கையே அதன் நித்தியகோலம் என்றாகிவிட்டது. இந்த இரட்டை வாழ்க்கைக்கு எதிரான கலகம் தமிழ் எழுத்தின் முக்கியமான பகுதி என்று சொல்லலாம். வாழ்க்கையை எதிர்கொண்ட விதத்தில் தங்கள் அனுபவங்கள் மூலம் மத்தியதர வாழ்வின் போலித்தனத்தை உணர்ந்தவர்கள் நம் எழுத்தாளர்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் நிகழ்த்தும் கலகம் மூலம் குடும்பம், சுற்றம், சமூகம் ஆகிய மூன்று தளங்களிலிருந்தும் இவர்கள் அந்நியப்பட்டுப் போய்விடு கிறார்கள். மத்தியதரக் குடும்பங்களில் எழுத்தாளர்கள் உருவாகி வரும்போது, அவர்கள் எழுதத் தொடங்குவதற்கு முன்னரே, கல்வித் துறைக்கு அப்பால் நூல்களைப் படிக்கத் தொடங்கும்போதே ‘குடும்பத்திற்கு எதிரானவன்’ என்ற பெயர் பெற்றுவிடுகிறார்கள். இந்நிலையை இன்றும் தமிழ் வாழ்க்கை உறுதி செய்துகொண்டிருக்கிறது.

கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் படிப்பவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டவர்களின் துக்கத்தை எழுத்தாளர்களை முன்வைத்து அவர் சொல்லவில்லையே என்று தோன்றலாம். அது உண்மைதான். ஆனால் நம் சமூகத்தில் எழுத்தாளர்கள் தங்களை எழுத்தாளர்களாக அடையாளம் காட்டிக்கொள்ளக் கூச்சப்பட்டு, ‘தந்திர’மாக மறைந்துதான் செயலாற்றி வருகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்வைப் போலவே கிருஷ்ணன் நம்பியின் கதைகளிலும் இந்த அடையாளம் மறைந்து கிடக்கிறது. ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’, ‘கணக்கு வாத்தியார்’, ‘விளையாட்டுத் தோழர்கள்’, ‘எக்ஸென்ட்ரிக்’ போன்ற பல கதைகளிலும் - கதாபாத்திரங்களின் வயதும் முகமும் வெவ்வேறாக இருந்தாலும் - இந்த துக்கத்தின் அலைகளைத்தான் பார்க்கிறோம். இந்தியாவில் வேறு பல மொழிகளில், தங்கள் இளமைக் காலங்களில் பல சோதனைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகிவிடும் எழுத்தாளர்கள் அவர்களுடைய சாதனையை வாசக உலகம் அங்கீகரிக்கும் காலத்தில் முழுச் சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இளமையில் அவர்களுக்கு இழைத்த புறக்கணிப்புக்குப் பரிகாரம்போல் பல கௌரவங்களை அதிகமாகவே பெற்றுவிடுகிறார்கள். இளம் எழுத்தாளர்களுக்கு எதிராகக் குடும்பமும் சமூகமும் அங்குத் தொடுக்கும் போரின் முனையை அவர்களே ஏற்றுக்கொள்ள நேர்ந்துவிட்ட இந்தப் பிரபல எழுத்தாளர்களின் படிமங்கள் மழுங்கடித்துவிடுகின்றன. நம் தமிழ்ச் சமூகத்திலோ இளம் எழுத்தாளன் பெறும் புறக்கணிப்புக்கும் பெரிய சாதனையாளர்கள் பெறும் புறக்கணிப்புக்கும் அதிக வேற்றுமையில்லை. சாதனையாளர்களின் வாழ்வு சார்ந்த அவலம் இளம் எழுத்தாளர்களுக்கு எதிராகக் குடும்பம் இங்குத் தொடுக்கும் போருக்குக் கூர்மையும் வலுவும் சேர்த்துத் தருகிறது. இந்த அளவில் புறக்கணிப்பை எதிர்நிலைகள் எதுவும் முளைக்கவிடாமல் முழுமை செய்து வைத்துக்கொண்டிருக்கும் சமூகம், தமிழ்ச் சமூகம்போல் நான் அறிந்தவரையிலும் வேறு எங்குமில்லை. இந்நிலைகள் நம் மனத்தின் பின்னணியில் நிற்குமென்றால் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் நம்முடன் கொள்ளும் உறவின் அர்த்தமும் சற்று விரிவுபெறும்.

4 மாறிவரும் காலத்தின்முன் கிருஷ்ணன் நம்பி கொள்ளும் வரையறைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனுபவத்தின் சாரம் படைப்பில் நிறுவும் ஆளுமையும் அந்த ஆளுமை கொள்ளும் ஆழமும் மிக முக்கியமான கூறுகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு அனுபவமும் அந்த அனுபவம் தோன்றும் சந்தர்ப்பத்தையும் காலத்தையும் தாண்டி நம் பின்னணியோடு, சமூகத்தோடு, மனித உறவுகளோடு, தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருக்கும் காலத்தோடு பல சூட்சுமமான இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இணைப்பைப் பற்றிய படைப்பாளியின் பிரக்ஞை மிக முக்கியமானதாகும். இப்பிரக்ஞையே ஆளுமையை ஆழத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. ரத்தம் எப்போதும் சிவப்பாகவே இருக்கிறது என்றாலும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படும்போது அதன் நிறத்தைத் தாண்டி எத்தனையோ குணங்களையும் கூறுகளையும் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது. அனுபவங்களைச் சோதனை செய்வதன் மூலம் எண்ணற்ற அறிகுறிகள் வெளிப்படுகின்றன; வரவிருக்கும் ஆபத்துக்களின் முதல் பதிவுகள் கூடி வருகின்றன; எச்சரிக்கைகள் சாத்தியமாகின்றன; புரிதல்கள் நிகழ்கின்றன. அனுபவம் எனும் ஒரு துளி நீர் வழியாக மனிதகுல வரலாற்றையே தொடும் கடலுக்குள் நுழைந்துவிட முடிகிறது, ஆழம் மிகுந்த படைப்பாளியால். இவ்வாறு தான் சார்ந்த தளங்கள் தாண்டி நிகழும் யாத்திரை படைப்பில் ஆழத்தைக் கூட்டி காலத்துடன் படைப்பு பிணைய வழிகோலுகிறது. இலக்கியத்தில் கண்ணீரின் தடங்களைக் கண்ணீரின் தடங்களாகவே பதிவு செய்யும் காலம் தமிழில் முடிந்துவிட்டது. கண்ணீரின் ஊற்றுக் கண்களைப் பற்றிய தேடலும் அவதானிப்பும் சுய கண்டுபிடிப்புகளும் முக்கியமாகி விட்டன. பகுதிக்கும் முழுமைக்குமான உறவு முக்கியமாகிவிட்டது.

துக்கத்தின் கலைப் பதிவு நிகழ்ந்ததுபோல் ஊற்றுக்கண் சார்ந்த சுய கண்டுபிடிப்புகள் கிருஷ்ணன் நம்பியின் கதைகளில் கூடிவரவில்லையென்று தோன்றுகிறது. பச்சாதாபத்துடன் விட்டுக் கொடுப்பதற்கு அல்ல; ஆளுமை சார்ந்து உருவாக்கிக்கொள்ள வேண்டியது வாழ்க்கை என்ற பிரக்ஞை நம் சூழலில் இல்லாதது போலவே அவர் கதைகளிலும் இல்லை. பயணம் தடைப்படாத வரையிலும் அவருடைய ஆளுமையும் ஆழம் தேடிச் செல்லக் கூடியதுதான் என்ற முடிவுக்கு நாம் வர அவருடைய இன்றைய எழுத்திலேயே தடயங்களும் உள்ளன. அவர் வாழ்ந்துகொண்டிருந்தபோது நடந்து கொண்டுதான் இருந்திருக்கிறார். பயணம் பாதியில் முறிந்துபோனது நம் துரதிருஷ்டம்.

சிநேகா பதிப்பகம் வெளியிட்ட ‘கிருஷ்ணன் நம்பி கதைகள்’ நூலுக்கான முன்னுரை, 1995