இல்லாத ஒன்று

(க.நா.சுவுக்கு எழுதிய கடிதம்)

18, ஏப்ரல் 1965

அன்புள்ள நண்பர் ஸ்ரீ க.நா.சு. அவர்களுக்கு,

நமஸ்காரம், தங்கள் 15/4 கார்டு கிடைத்தது. எனது கதைக்கு தாங்கள் சூட்டியிருக்கும் “இல்லாத ஒன்று” என்ற தலைப்பு எனக்கு பூர்ண திருப்தியை அளித்திருக்கிறது. அப்படியே இருக்கட்டும்.

எனது இலக்கிய வாழ்வின் இந்தக் கட்டத்தில் 24 பக்கங்களில் ஒரு இதழ் எனக்காக ஒதுக்க வேண்டியது அவசியம்தானா என்ற சந்தேகம் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு விமர்சகருமான தாங்கள் இதை புனர் பரிசீலனை செய்து பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதைத் தவிர சொல்வதற்கு எதுவுமில்லை. எதற்கும் கட்டுரை எழுதியனுப்புகிறேன். ஒரு வாரத்திற்குள்.

உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

அன்புள்ள

சுந்தர ராமசாமி.

ஊக்கமாகச் செயல்படுவதற்கான தூண்டுதல்

(க.நா.சுவுக்கு எழுதிய கடிதம்)

21, செப்டம்பர் 1985, நாகர்கோவில்.

அன்புள்ள க.நா.சு.,

அநேக நமஸ்காரம்.

உங்கள் 9.9.85 கடிதம். மலேசியா போய்விட்டு நேற்று முன்தினம் இரவுதான் ஊர் வந்து சேர்ந்தேன். அதனால் பதில் எழுதப் பிந்திவிட்டது. மன்னிக்கவும். வரும் வழியில் சென்னையில் ஒரு வாரம் தங்கினேன். தங்களைப் பார்க்க நினைத்தேன். ஆனால் சரியான வேலை நெருக்கடி. முடியவில்லை. அக்டோபர் மூன்றாவது வாரம் பாரிஸு போகிறேன். அங்கு இந்தியக் கலை விழாவில் கலந்துகொள்ளும் பத்து கவிஞர்களில் ஒருவனாக. அது சம்பந்தமாக வேலைகள் சென்னையில் கவனிக்க நிறைய இருந்தன. தமிழ்-மலையாள எழுத்தாளர்கள் சேர்ந்து சி.மணிக்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

தீபாவளி தினத்தில் வெளிவரும் விதத்தில் நீங்கள் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வருவதில் மகிழ்ச்சி. என்னால் இயன்றதை எழுதித் தருகிறேன். அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வரையிலும் தங்களுக்குக் கிடைக்கும்படி அவ்வப்போது என் மாட்டர்களை அனுப்பி வைத்துக் கொண்டிருப்பேன். தாங்கள் மிகவும் விரும்பக் கூடியவற்றை மட்டுமே தேர்வு செய்யுங்கள். மற்றவற்றை நான் அடுத்த மாதம் தங்களைச் சந்திக்கும்போது நேரில் பெற்றுக்கொள்கிறேன். தாங்கள் ஊக்கமாகச் செயல்பட்டு வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்து கொண்டிருக்கிறது. ஊக்கமாகச் செயல்பட எனக்குத் தூண்டுதலையும் அளிக்கிறது.

தங்கள் மனைவியாருக்கு எங்கள் அன்பைத் தெரிவிக்க வேண்டும். இனி நீங்கள் எனக்கு கடிதம் எழுதும்போது என் வீட்டு முகவரிக்கே எழுதுங்கள்: 151, சுந்தர விலாஸ், ராமவர்மபுரம், நாகர்கோவில் 629 001.

அன்புடன்

சுந்தர ராமசாமி.

பாரதி மீது நம்மவர்கள் காட்டும் அக்கறை

(சீனி. விசுவநாதனுக்கு எழுதிய கடிதம்)

நாகர்கோவில், 28.1.81

அன்புள்ள சீனி. விசுவநாதன் அவர்கட்கு.

உங்கள் 25.1.81 கடிதம்.

உங்களிடமிருந்து கடிதம் வருவது எனக்கு தொந்தரவு ஆகுமா? ஒரு நாளும் ஆகாது. எப்போதும் சந்தோஷத்தைத் தரக்கூடியதே அது. பாரதியின் பெயர்ப் பட்டியல் தாமதமாக அச்சாவதில் ஆயாசத்திற்கு இடமில்லை என்று தோன்றுகிறது. மிகவும் சிரமமான பணி இது. என்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறது. திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு மேலும் எவ்வளவோ சிரமங்கள் இருக்கும். 367 நூல்களுக்கான விவரங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்று அறியும்போது மலைப்பாக இருக்கிறது. பாரதி மீது நம்மவர்கள் காட்டியுள்ள அக்கறை எவ்வளவு அதிகமானது என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் உங்களிடம் நேரில் கூறியபடி பாரதி பற்றிய காரியங்களைச் செய்யவில்லையே என்று விசனப்படுகிறேன். இதற்கு இரண்டு முக்கியமான தடைகள்:

1. சென்ற ஆண்டு - முழுக்கவும் என்று சொல்லிவிடலாம் - என் காலம் நாவல் ஒன்றை எழுதுவதிலேயே செலவழிந்துவிட்டது.

2. பாரதியைப் பற்றி மேலும் அறிய அவசியமான பயணங்களை மேற்கொள்ள நினைக்கும்போது தனியாகப் புறப்படுவது சங்கடமாக இருக்கிறது. நீங்களும் உடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் சேர்ந்து சில இடங்களுக்குப் போவதுதான் ஏற்றதாகப் படுகிறது. எனது நண்பர் திரு. அ.கா. பெருமாள் பாரதியாரின் மைத்துனியை கடையத்திற்குச் சென்று பார்த்துவிட்டு வந்தார். இந்த அம்மையாரின் கூற்றுக்களில் இவருக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நினைவுகளை சீராக எடுத்துச் சொல்ல அவசியமான நினைவாற்றலும், நேர்மையும், நுட்பமும் உள்ளவராகவே என் நண்பர் இவரைக் கண்டிருக்கிறார். இவருக்கு வயது ஏகமாக ஆகிவிட்டது. நாம் சந்திக்க வேண்டியவர்களில் இவரும் ஒருவர். உங்களுக்கு எப்போது வசதிப்படுமோ எழுதுங்கள். கூடுமானவரையில் என்னையும் வசதிப்படுத்திக் கொண்டு உங்களுடன் கிளம்புகிறேன்.

பிப்ருவரி 9இல் மதுரையில் என் நண்பர் சிவராமனுக்கு கல்யாணம். சென்னையிலிருந்து ராமகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோர்களும் வருகிறார்கள். ஏதும் காரணம் முன்னிட்டு இந்தத் தேதிகளில் நீங்கள் மதுரையில் இருந்து, நாம் சந்தித்துக்கொள்ளாமல் போய்விடக் கூடாதே என்பதற்கு இந்தத் தகவல்.

காமம் இயற்கையாக மலரும்போது அழகானது

நாகர்கோவில்,16.2.87

அன்புள்ள அலி

உங்கள் 3.2.87 கடிதம்.

என் இரண்டாவது மகள் தைலா வந்திருக்கிறாள். அதனால் வீடு ஒரே கலகலப்பாகி விட்டது. என் அன்றாட அலுவல்களை நான் தள்ளி வைத்துவிட்டுக் குடும்பச் சூழலில் சிறிது கரைந்து கொண்டிருக்கிறேன். அதனால் தாமதம் பதில் போட. நாளை தைலா சென்னை போகிறாள். வழியனுப்ப நாங்களும் போகிறோம். 24ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து ஸியாட்டில் போகிறாள். இடைநாட்களில் நண்பர்களைப் பார்ப்பது, உறவினர்களைப் பார்ப்பது, அவளுடைய அமெரிக்க நண்பர்களுக்கு ஒரு சில பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்கள். கட்டுரையையும் கவிதைகளையும் இன்னும் செறிவாக எழுத முடியும். தளையசிங்கத்தின் ‘பிரபஞ்ச யதார்த்தம்’ போலவே. அல்லது ஆரம்பகாலக் கவிதைகள் போலவே. இவற்றையும் தாண்டிப்போக ஆவேசம் உண்டு. ஆனால் என்ன பயன்? ஏதோ ஒரு சிறு வட்டத்துக்கேனும் நாம் போய்ச் சேர வேண்டாமா? ‘பிரபஞ்ச யதார்த்தம்‘ கட்டுரையின் ‘இரண்டாவது பகுதி’ (அப்பகுதியில் மட்டுமே என் கருத்துக்கள்) புரியவில்லை என்று என்னிடம் கூறிய நண்பர்களின் பெயர்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். சென்றடையும் குறிக்கோளுக்கு இப்போது அதிக அழுத்தம் தருகிறேன். கவிதைகளில்கூட அப்படித்தான்.

ஆத்மபலத்திற்கு பிரம்மசரியம், சைவ உணவு ஆகிய நெறிகள் தவிர்க்க முடியாதவை அல்ல. இந்தியா அல்ல உலகம். இந்திய நம்பிக்கைகளும் அல்ல. உலக அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது மேல்நிலை அல்லது உச்சநிலை செயலாக்கங்கள் குறிக்கோளைச் சென்றடையும் ஆவேசத்தைச் சார்ந்து இருப்பதே நிரூபணமாகிறது. சூழ்நிலைகள், பொறிகள், இயற்கை இவற்றோடு இயற்கையான, மிதமான, தன்னை வீணாக்கிக்கொள்ளாத உறவுகள் கொள்வதன் மூலமே அதிக அளவு ஆத்மபலம் பெற முடியும். செயற்கையான கட்டுப்பாடுகளில் பலம், சக்தி கண்ணுக்குத் தெரியாமல் மிகப் பயங்கரமாக வீணாகிறது. ஞானிகளை விட்டு சாதாரண மக்களை எடுத்துக்கொண்டால் செம்படவர்களைப் பார்த்து சைவ உணவுகளை அருந்துங்கள் என்று கூறுவது அபத்தமானது. உணவுப் பழக்கங்கள் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து மனிதன் கற்றுக்கொண்டவை. சில உணவு வகைகள் விஞ்ஞான ரீதியாகவே காம உணர்வைத் தூண்டக்கூடியதாக இருக்கலாம். காம உணர்வைத் தூண்டும் காரியங்களும் மிக அவசியமானவையே. இவை அழகாகவும் நாகரிகமாகவும் இருக்க வேண்டும். இலக்கியம், நடனம், இசை ஓவியங்கள், ஆண், பெண் வடிவ அழகுகள் இவை ஓரளவில் காம உணர்வைத் தூண்டுபவைதான். காமம் இயற்கையாக மலரும்போது அது அழகானது.

தனிமனிதனுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. நீங்கள் சைவ உணவு மட்டுமே அருந்தலாம். அல்லது பாலும் பழமும் போதும் என்ற முடிவுக்கு வரலாம். உடலுறவை முற்றாக விட்டுவிடலாம். உங்களுக்குச் சந்தோஷம் தரும் முறையிலும் உங்களுக்குச் சந்தோஷம் தரும் முறையிலும் உங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கிக்கொள்ளும் முறையிலும் நீங்கள் வாழலாம். ஆனால் இவ்வழியில்தான் மேல்நிலையை அடைய முடியும் என்று நீங்கள் கூறக்கூடாது. தால்ஸ்தாயி, பிகாசோ, ஈன்ஸ்டீன், பீதோவன், ரஸல், மார்க்ஸ், தாமஸ் மன் எல்லோரும் மேல்நிலையில் சாதித்தவர்கள்தான்.

அலுவலக வேலை பற்றிக் கவலைப்பட வேண்டாம். சிறிது யோசித்து, சிறிது நிதானித்து நீங்களே உங்களைக் கவனப்படுத்திக்கொண்டு விட முடியும்.

மகாலிங்கம் ‘கசாலி கதைகள்’ இரண்டொன்றைச் சொன்னார். மிக வேடிக்கையான பயல் என்ற சந்தோஷம் ஏற்பட்டது.

இங்கு நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

திருமதி. தாமரைக்கும் கசாலிக்கும் எங்கள் அன்பும் வாழ்த்துக்களும்.

அன்புடன்,

சு.ரா.

மொழிபெயர்ப்பில் கவிதையின் மொழி

(ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதிய கடிதம்)

உங்கள் 27.6.87 கடிதம்.

அன்புள்ள வேங்கடாசலபதி,

உங்கள் 27.6.87 கடிதம்.

‘பாலம்’1 கிடைத்தது. மதிப்புரையும் மொழிபெயர்ப்பும் படித்தேன்.

தென்னாப்பிரிக்கா வெள்ளையர் நூல் குறிப்புரை பற்றி அதிகம் சொல்ல இல்லை. அந்த நூலை நான் படிக்காததால் உங்கள் மதிப்புரையை மதிப்புரை செய்ய இயலாது. தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாவனை சிறிதும் இல்லை. உங்கள் இளமையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இவை முக்கியமான விஷயங்கள்.

மொழிபெயர்ப்பு பற்றி நிறையச் சொல்லலாம். சாவகாசம் குறைவு என்பதால் தவளைப் பாய்ச்சலாகச் சில விஷயங்களைச் சொல்கிறேன். மூலக் கவிதை – இப்போது ஒப்பிட்டுப் பார்க்கவில்லை - என்றாலும் எனக்கு நன்றாகப் பரிச்சயமானது. கவிஞர் நா. சுகுமாரன் இக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உங்கள் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது. கவிதைமேல் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு, ஆங்கிலத்திலும் தமிழிலும் உங்கள் பிடிப்பு, மொழிபெயர்ப்பதில் உங்கள் சிரத்தை, ஆர்வம் இவை நன்றாக வெளிப்படுகின்றன.

தவிர்க்க முடியாத நிலைகளில் பழந்தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நான் எதிர் அல்ல. இருப்பினும் கவிதையை இன்றைய மனிதனின் பேச்சுக்குப் பக்கம், முடிந்த மட்டும், தமிழின் அமைதிக்கு வில்லங்கம் இல்லாமல் கொண்டுவர வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை. அப்போது ‘வருகின்றாய்’ என்பது ‘வருகிறாய்’ என்று இருந்தால் மட்டும் போதும். ‘முயல்கின்றேன்’-‘முயல்கிறேன்’. ‘மோதுகின்றது’- ‘மோதுகிறது’. இவ்வாறு முழுக்க பார்த்துக்கொள்ளுங்கள்…

பழைய பிரயோகங்களை நான் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு உதாரணம் ‘தென் புலத்து’ என்ற சொற்றொடர். இங்கு இது மிக வலுவாக அமைகிறது. ‘பயம்’ என்பதற்குப் பதிலாக ‘அச்சம்’ மற்றொரு உதாரணம். ‘துயர்மிகு’ என்பது மிக நன்றாக வந்திருக்கிறது.

மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இன்றைய உலகத்துக் கவிதைகளில் தரமான ஒரு பகுதியை நீங்கள் தமிழுக்கு அளித்துவிட்டால் அது ஒன்றே உங்களை நினைத்துப் பெருமைப்பட எனக்குக் காரணமாக அமைந்துவிடும். நீங்களோ இதற்கு மேலும் பல சாதிக்கக்கூடிய ஆற்றலுடன் இருக்கிறீர்கள்.

என் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சுரா

சினிமாவுக்கான தேசிய விருதுகள் எப்படி முடிவாகின்றன?

(அசோகமித்திரனின் கடிதம்)

24. 11. 2001.

‘Waves’ (சு.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு) வெளியீட்டு விழா பற்றிச் சற்று முன்னரே தெரிந்திருந்தால் நான் வேறு ஒரு கூட்டத்துக்கு வருவதாக ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். சற்றுத் துணிச்சலுடன் இந்தக் காலுடனும் டிசம்பர் டில்லி குளிரையும் அறிந்த அனுபவத்துடனும் நான் டில்லி வருவதாக ஒத்துக்கொண்டுவிட்டேன்.

தாங்கள் ரவி பற்றிச் சென்னது பலிக்க வேண்டும். கால் விரல்கள் இல்லாமல் எவ்வளவு முடியும்? தெரியவில்லை. அவனுடைய கம்பெனியில் மிகவும் எதிர்பார்ப்புகள் இருந்த நாளில் இது நேர்ந்து மாதக் கணக்கில் இடைவெளி.

என் தினமணி கட்டுரை கிணற்றில் போட்ட கல்லாகப் போயிருக்க வேண்டியது. அதில் பெரிய செய்தி ஏதும் இல்லை. ஆனால் இப்போது எல்லாரும் தேடிப் பிடித்துப் படிக்கிறார்கள்! *வாதப் பிரதிவாதங்கள் எழுகின்றன. நான் ஒருமுறை தேசிய சினிமா விருதுகளுக்கு நடுவராயிருந்தேன். மூன்று நான்கு பேர் சேர்ந்துகொண்டு, மற்றவர்கள் நியாயமாக இயங்கியபோதும் அந்த மூவர் திட்டமிட்டதே தேர்ந்தெடுக்கப்படுவதாகச் செய்தார்கள். அவர்கள் எல்லாரும் தீவிரக் கலைஞர்கள் என்று அறியப்படுபவர்கள். மிகவும் நல்ல கலைஞர். பீஷம் சாஹினி. நான் அந்தக் குழுவைக் கேட்டேன், உங்களுக்கு இந்தப் பாடல்களை எப்படி எடையிட முடியும்? ஒலி கேட்டே நிர்ணயித்துவிடலாம் என்று அடம்பிடித்தார்கள். நான் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் முக்கியமான விருதுகள் எல்லாம் அந்தச் சிறுகுழு திட்டமிட்டபடிதான்.

கோபாலகிருஷ்ணன் என்று எனக்கு ஓர் இளம் நண்பர் இருந்தார். அவர்கள் குடும்பமே சிறந்த இசை, இலக்கிய ரசனையுடையது. சிவாஜி பற்றி நான் அப்போது நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. ஒரு பொருட்டாகவே கருதியது இல்லை. அந்த கோபால கிருஷ்ணன்தான் அது நியாயமாகாது என்று கூறினார். அதன் பிறகு ‘முதல் மரியாதை’ என்ற படத்தைப் பார்த்தேன். அடிப்படையில் சிவாஜி பாமர ரசனையுலகத்தைச் சார்ந்த நடிகர்தான். ஆனால் நிறைய சாத்தியம் படைத்தவர். எனக்குப் பிடித்தது எல்லாம் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. உங்கள் கட்டுரை நன்றாகவே இருந்தது. சென்னை வந்தால் ரவிக்கு 6383372 போன் செய்யுங்கள்.

பேட்டிகளில் வணிகப் பத்திரிக்கை, இலக்கியப் பத்திரிக்கை என்று வித்தியாசம் கிடையாது. அந்தந்தப் பத்திரிக்கையின் விருப்பப்படி வெட்டி, திருத்தித்தான் போடப்படுகிறது.

மிக்க அன்புடன்

அசோகமித்திரன்.

உங்கள் வாழ்க்கை வரலாறு

(அசோகமித்திரனுக்கு எழுதிய கடிதம்)

26.12.2001

அன்புள்ள அசோகமித்திரன் அவர்களுக்கு,

நீங்களும் உங்கள் மனைவியும் நன்றாக இருக்கிறீர்களா? இப்போது உங்கள் மனைவி அவருடைய சிரமங்களிலிருந்து முற்றாக வெளியே வந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ரவியிடமிருந்து தகவல் ஏதும் கிடைத்ததா? எப்படி இருக்கிறான்? அலுவலகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டானா? அவன் பூர்ண குணமடைந்துவிடுவான் என்பதில் சந்தேகமே இல்லை.

நான் இருமுறை சென்னை வந்த நேரத்திலும் உங்களையும் ரவியையும் பார்க்க முடியாமல் போனதில் ஏமாற்றம் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம்போகச் சிரமமாகிவிட்டது. ஆட்டோ ரிக்ஷாக்காரர்களை நினைக்கும்போது எங்கும் போகவேண்டாம் என்ற எண்ணம்தான் வருகிறது. திருவனந்தபுரத்தில் நேர் மாற்றி. அங்கு ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்ளும் முறையில், கூட ஒரு இடம் போவோம் என்ற தூண்டுதல் ஏற்படும்.

1949இல்தான் நான் முதன்முதலாக வீட்டில் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்னை வந்தேன். பஸ்ஸிலும் ட்ராமிலும் ஏற பயமாக இருந்ததால் சென்னை முழுக்க நடந்தே சுற்றினேன். கல்கி, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிகைகள் என் மனதில் ஊட்டியிருந்த கனவுக் காட்சிகள் எல்லாம் நேரில் பார்க்க ஆசைப்பட்டேன். ஜெமினி வாசனின் அற்புதமான வீட்டு வாசலில் ஒருமணிநேரம் வெயிலில் நின்றபின் அவர் காரில் வெளியேபோகும் காட்சி பார்க்கக் கிடைத்தது. அவர் முகத்தோற்றமும் அரைக்கைச் சட்டையும் எனக்குப் பிடித்திருந்தன. முன்சீட்டில் ஒரு இளைஞன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அது கேலிச்சித்திரக்காரர் ராஜுவாக இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டேன். பக்கத்திலேயே சக்தி காரியாலயம் இருந்தது. வாசலில் இருந்த சிப்பாயிடம், ‘வ.ரா.வைப் பார்க்க முடியுமா’ என்று கேட்டேன். ‘ஐயங்கார் சாமி உள்ளே இருக்கார், போ’ என்று அவன் சொன்னான். அவரைப் பார்த்துவிட்டு, ரகுநாதனையும், அழகிரிசாமியையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தொலைதூரத்திலிருந்த ஒரு தென்னைமரத்தின் நிழலில் நின்றவாறே அவர்கள் மூன்றுபேரையும் பார்த்தேன். அதற்குமேல் காலடி எடுத்து வைக்க தைரியம் ஏற்படவில்லை.

பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் நவீனப் பெண்கள் ஐந்தாறு பேர் நிற்கும் முழுப்பக்க கலர் கேலிச் சித்திரம் ஒன்றை மாலி ஆனந்த விகடன் தீபாவளி மலரில் போட்டிருந்தார். தாண்டிப் போகும் ரிக்ஷாக்காரர் ‘மயிலாப்பூராம்மா, மயிலாப்பூரா’ என்று கேட்கிறான். நவீனப் பெண்களைப் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் மயிலாப்பூர் போனேன். எல்லோருமே வேறு மாதிரி இருந்தார்கள். எங்கள் ஊரைவிட மோஸ்தர் மட்டாகத்தான் இருந்தது. மாலி ஏமாற்றிவிட்டதுபோல் தோன்றிற்று.

நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பற்றி எழுதும்போதும் கதைகளில் உங்கள் அனுபவங்கள் சார்ந்த பிரதிபலிப்புகளைப் படிக்கும்போதும் நீங்கள் மிகச் சிறப்பான உங்கள் வாழ்க்கை வரலாறை எழுத முடியும் என்று பலதடவை நினைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் அதுபற்றி யோசிக்கலாம். அவசியம் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுந்தர ராமசாமி

பாலமுரளி கிருஷ்ணாவுக்குக் கூடுதலான இடம்

(விமலாதித்த மாமல்லனுக்கு எழுதிய கடிதம்)

28.02.02.

அன்புள்ள மாமல்லன்,

வணக்கம். ஊருக்கு சௌகரியமாக வந்து சேர்ந்தேன். முன்கூட்டி என் மனைவியிடம் போனில் நீங்கள் செய்திகளைத் தெரிவித்திருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

அன்று மாலை உங்கள் வீட்டுக்கு வந்து இன்றைய இசை உலகத்திற்குள் நுட்பமான கருவிகள் வழியாக எட்டிப் பார்த்தது எனக்கும் என் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் என் சகோதரிக்கும் பேரனுபவமாக இருந்தது. வீட்டுக்குப் போனபின் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். உங்கள் நிகழ் கலையையும் பாராட்டினார்கள்.

காலையில் நீங்கள் ஓட்டலுக்கு வந்திருந்தபோது முழுநேரத்தையும் நீங்கள் பேச எடுத்துக்கொண்டது அங்கு வந்திருந்த பிற நண்பர்களுக்கு குறையாக இருந்தது. பத்திரிகை ஒன்றுக்கு உபயோகப்படக்கூடிய பத்தி ஒன்றை நீங்கள் எழுதலாம் என்று அன்று உங்கள் வீட்டுக்கு வந்தபோது எனக்குத் தோன்றிற்று. ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் பத்தியில் - அச்சில் மூன்று பக்கங்கள் என்று ஏகதேசமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு பகுதி இசையைப் பற்றிய குறிப்பாகவும் மறுபகுதி ஆங்கில/தமிழ்ப் படங்களைப் பற்றிய குறிப்பாகவும் அமையவேண்டும்.

எழுத்தில் ஆர்வமில்லாமல் கழியும் நாட்களாக இப்போது உங்களுக்கு இருந்து வந்தாலும் உங்களுடைய இன்றைய அனுபவங்களைச் சார்ந்தே இந்தப் பத்தி அமைவதால் சிறிது உற்சாகம் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். யோசித்துப் பாருங்கள்.

இந்தக் கடிதம் எழுதும்போது பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் ஆபேரி ராக ஆலாபனை. மறுபக்கம் ‘நகுமோ’. குரல் இவருக்குக் கம்பீரமாக இருக்கிறது. படே குலாம் அலிகானின் குரலுக்கு இணையாக இல்லையென்றாலும் ஒப்பிடக்கூடியதுதான். இவரது குரல் பெண்மை கலந்ததாகவும் கனம் இல்லாததாகவும்தான் என் மனதில் இருக்கிறது. உண்மையில் அப்படியில்லை. நான் கேசட் வைத்திருக்கும் ஸ்டாண்டில் கொஞ்சம் கூடுதல் இடம் இவருக்கு ஒதுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

திருமதி. மாமல்லனிடம் எங்கள் அன்பைத் தெரிவிக்க வேண்டும். அன்று அவர் தந்த காப்பி ஏ1 (அரியக்குடி சொன்னதுபோல் காப்பி அல்ல; அசல்.)

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்.

(ஆனந்த விகடனுக்கு எழுதிய கடிதம்)

01.03.03

அன்புள்ள ஆனந்தவிகடன் ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். ஒரு சில விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இக்கடிதம் எழுதுகிறேன். என் உணர்வுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அலுவலகத்திலிருந்து 10.02.03 அன்று என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்த விகடனில் பிரசுரிப்பதற்காக நான் சில கேள்விகளுக்குப் பதில் தர வேண்டுமென்று கேட்டார்கள். பதில்களை எழுதித்தர எனக்கு இரண்டுநாட்கள் அவகாசம் வேண்டும் என்று சொன்னேன். இதழில் சேர்க்க வேண்டிய தேதி நெருங்கிவிட்டதால் ஒருநாள் அவகாசத்தில் எழுதித் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொல்ல, நானும் அதை ஏற்று, தொலைபேசி வழியாகவே மூன்று கேள்விகளைத் தெரிந்துகொண்டு மறுநாளே (11.02.03) கேள்விகளுக்கான பதிலை உங்களுக்கு அனுப்பிவைத்தேன்.

இக்கேள்விகளுக்கான பதில் ஆனந்தவிகடனில் வெளிவரவில்லை என்பதை அறிந்து 28.02.03 அன்று உங்கள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். விகடன். காமில் என் பதில்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். நான் விகடன். காமில் வெளியிடுவதற்காக அதை எழுதித் தரவில்லையென்றும், ஆனந்த விகடனுக்காகத்தான் எழுதித்தந்தேன் என்றும் கூறினேன்.

இக்கடிதம் எழுதும்போது என் பதில்களை ஆனந்த விகடனில் வெளியிடப் போகிறீர்களா இல்லையா என்பது பற்றி உறுதியாக எனக்கு எதுவும் தெரியாது. வெளியிட முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால் இக்கடிதத்தில் இனி நான் கூறவரும் விஷயங்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் என்னளவில், நீங்கள் பதில்களை ஆனந்தவிகடனில் வெளியிட மாட்டீர்கள் என்றும், அதற்குக் காரணம், என் பதில்கள்மீது நீங்கள் கொண்டுள்ள கருத்து வேற்றுமை என்றும், இந்நிலையிலேயே அவற்றை விகடன். காமில் வெளியிட முடிவு செய்தீர்கள் என்றும் ஊகிக்கிறேன்.

ஒரு ஆசிரியர் தன் இதழுக்கு எழுதும்படி ஒரு எழுத்தாளரை அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தாளர் எழுதித்தரும் விஷயத்தை ஆசிரியர் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் சமூகத்தில் எழுத்தாளர்களிடையே வலுவாக இருக்கிறது. நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அழைப்பு விடுத்த நிலையிலும், பல காரணங்களை முன்னிட்டு, படைப்பை திருப்பி அனுப்புவதற்கான உரிமை ஆசிரியருக்கு உண்டு. ஆகவே அழைப்பு விடுத்துப்பெற்ற என் எழுத்தை நீங்கள் வெளியிடவில்லையென்றால் உங்கள் உரிமையில் நான் குறுக்கிடமாட்டேன். ஆனால் இந்தக் குறிபிட்ட விஷயத்தில் உங்கள் மீது எனக்கு இரண்டு புகார்கள் இருக்கின்றன.

1. ஆனந்த விகடனுக்கு என்று வாங்கிய எழுத்தை, என்னுடன் கலந்துகொள்ளாமல் விகடன். காமில் வெளியிட உங்களுக்கு உரிமையில்லை.

2. கருத்து வேற்றுமை காரணமாகத்தான் நீங்கள் என் எழுத்தை வெளியிடவில்லையென்றால் அந்தக் காரணத்தை- அதன் உள் விபரங்களை அல்ல- என்னிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பதே எனக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும். எழுதக்கேட்டு நீங்கள்விட்ட அழைப்பு இவ்விரண்டு பொறுப்புக்களையும் உங்களுக்கு அளிக்கின்றன என்று நம்புகிறேன். இவ்விரண்டு பொறுப்புக்களையும் நீங்கள் ஏற்காததால் உங்கள் முடிவுகளில் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

அன்புடன்.

ஊக்கமாகச் செயல்படுவதற்கான தூண்டுதல்

(க.நா.சுவுக்கு எழுதிய கடிதம்)

21, செப்டம்பர் 1985, நாகர்கோவில்.

sundhara ramasamy

sundhara ramasamy