சுந்தர ராமசாமியின் பத்து கதைகள் கொண்ட முதல் சிறுகதைத் தொகுதி இது. 1950 முதல் 60 வரை உள்ள ஒரு பத்து ஆண்டு காலத்தில் திறமை அறிகுறி காட்டி, வளர்ந்து, வெளித்தெரியவந்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் அவர். கதைகளின் உள்ளடக்கத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். முதல் கதை, அக்கரைச் சீமையில் ஆப்ரிக்காவுக்கு பிழைப்புக்குச் சென்றவன் அங்கு நிலைத்து வயிற்றைக் கழுவ முடிந்தும்கூட பிறந்த ‘மண்ணிலேதான் சாவணும் ஸார்’ என்று சுமந்து செல்லும் ஒரு ஏக்கத்தின், நாட்டுப்பற்றின் வெளியீடாக இருக்கிறது. ‘அடைக்கலம்’ என்கிற கதை இன்றைய, தன் குடும்பத்தின் புது மோஸ்தர் நாகரிகத்தை விழுங்க முடியாமல் தவித்த ஒரு ஆசார சீலப் பழங்காலப் பாட்டி ‘மனுஷாள் விதரணை கெட்டுப்போய்விட்டால் ஊர் என்னசெய்ய முடியும்’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு டில்லியை விட்டுத் தன் கிராமம் திரும்பியவள் - அவள் தன் மனிதர்களிடம் வெறுக்கும் நாகரிகத்தின் முழுச் சின்னமாக இருந்த ஒரு ‘துரைச்சானி’யை “அடியே, உன்னைத்தாண்டி! நானும் ஒரு நாழியாப் பாத்துண்டு இருக்கேன். நட்டு வச்ச மரம் கணக்கா நிக்கறியே! ஒரு ஜீவன் வயத்திலே தொங்கறது என்கிற நெனப்பில்லையோ? இதோ பாரு சமத்தா இப்படி உட்காரு” என்று அழைத்து, ஒட்டுத் திண்ணையில் தன்னை இழுத்தபடி அவள் உட்கார, தான் திண்ணையில் ஒட்டிக்கொண்டு உட்காருகிறாள். மனிதாபிமானம் தொனிக்கும் இந்தக் கதை வெகு நன்றாக அமைந்திருக்கிறது.
'முதலும் முடிவும்' என்ற கதை, பெரிய வீட்டில்தான் இருப்பேன் என்று குழந்தையாக அடம் பிடித்தவள் தான் எதிர்பார்த்தவிதமாக இல்லாமல் வேறுவிதமாக சொந்தக்காரியாக ஆன வாழ்க்கை பற்றிய ஒரு இளிவரலான (ஐரானிகல்) நிலையை உணர்த்துவது. 'பொறுக்கி வர்க்கம்' என்கிற கதை எச்சிற் கலைக்கு ஆசைப்பட்ட வேகத்தில் சிறு தவறு செய்யப்போய் ஹோட்டல் முதலாளி மகனால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட பொறுக்கி, துடிதுடித்துக் கதறின நிலைமையிலும், கூட்டத்தினரால் நியாயம் பேசப்பட்டு முதலாளியின் மகன் மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறதிலே சிரிக்கிறான் என்கிற வர்க்கத் திமிரை அடக்கும் கருத்தைக் கொண்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றிய கதை. அடுத்த கதை 'தண்ணீர்' என்பதும் தங்கள் பயிர் சாய, “நாங்கள் கடவுளெ எதுக்கலெ! தண்ணி தெய்வத்துக்குப் போகக் கூடாதுன்னும் நாங்க சொல்லல்லெ. எங்கே போகுதுங்கிறதெப்பத்தி எங்களுக்கு அக்கறை இல்லெ. எங்களுக்கு இல்லாம போகுது - அதுதான் விஷயம்” என்று வாதித்துத் தெப்ப விழாவுக்குப் போக இருந்த தண்ணீரை உடைத்துக்கொண்டு போகிறபோது நாஸ்திகம் பேசவில்லை, வயறு பேசுகிறது.
‘உணவும் உணர்வும்’ வயிற்றுத் தீ சம்பந்தமானதுதான். ‘கோவில் காளையும் உழவு மாடும்’ என்கிற கதையில், “தண்ணீயெ பூராவும் குடிச்சிட்டியே. பாவிப் பயிலெ” என்று குழந்தையை தாய் அடித்ததைப் பார்த்த ஒரு நாடோடிக் கிழவன் வயது சரிய இருந்தவன் - தண்ணீர்வராக் காட்டில் மனிதாபிமானியாக தான் ஒருவனாகவே கிணறு தோண்டி முடிகிறபோது இரண்டு முடிவுகள் சேர்ந்து நிகழ்கின்றன. 'கைக்குழந்தை' சுயமாக நடந்துகொள்ளத் தெரியாது மனைவியின் கைக்குழந்தையாக இருக்கும் ஒரு கணவனைப்பற்றியது. ஒரு லேசான சித்திரம்.
'அகம்' கதை தாயின் பிசகு நடத்தையை உள்ளுணர்வாக உணர்ந்து, அதற்கு காரணமானவனை பழிவாங்க முற்பட்ட குழந்தையின் மனோதத்துவத்தைப் பற்றியது. ‘செங்கமலமும் ஒரு சோப்பும்’ வேலைக்காரிக்கு நாகரிகம் சொல்லிக்கொடுத்து சுத்தமாக அவள் இருப்பதைப் பரீட்சிக்கப்போய் தான் ஒரு ரசமான சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட ஒரு கிருமி ஆராய்ச்சி பட்டதாரியைப் பற்றியது.
இந்த பத்து கதைகளும் ராமசாமிக்கு பல விஷயங்களில் இருக்கிற அக்கறையைக் காட்டுகின்றன. அவருக்கு கவனிப்பு இருக்கிறது. வர்ணிக்கத் தெரிகிறது. பார்வை இருக்கிறது. சிறுகதை உருவமும் பிடிபட்டிருக்கிறது. துரைச்சானியின் ‘தலைமயிரின் வனப்பைக் கண்டதும் ஆசையாக இருந்தது பாட்டிக்கு. தாழம்பூ வைத்துப் பின்னிவிட வேண்டும் போலிருந்தது. கழுதை! குதிரைவால் மாதிரி வெட்டிவிட்டுக்கொண்டிருக்கிறதே. எப்படித்தான் மனசு வருமோ’ பாட்டி வார்த்தையாக வரும் நல்ல கவனிப்பு. ‘புடவைகள் இரண்டு இணை சேர்ந்த பாம்புகள் மாதிரி முறுக்கிக்கொண்டு....!’, ‘நொங்கு மாதிரி உருண்டை முகம்’, ‘குட மிளகாய் மூக்கு’ படிமப் பிரயோகம் வர்ணிப்பில். “ஆப்ரிக்காவையே திருடித் திங்கறவன் நான் வளர்த்த பொகையிலையைத் திருடினேன்னு அடிக்கிறான்.” அடிப்படையாகத் தாக்கி விழும் கருத்துப் பார்வை.
இந்த பத்து கதைகளும் பிரமாதமானவை என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் அக்கரைக் சீமையில், அடைக்கலம், செங்கமலமும் ஒரு சோப்பும், குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. கதைகள் வெளியான சமயமும் புத்தகத்தில் காண்கிறது. அதைக்கொண்டு வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது ‘முற்போக்கு’ என்று கருதப்படும் பொருளாதார அடிப்படைப் பிரச்னையைக் கொண்ட முந்தின கதைகளான ‘பொறுக்கி வர்க்கம்’, ‘தண்ணீர்’, ‘உணவும் உணர்வும்’ இவைகளுக்குப் பிறகு வந்த கதைகளில் போக்கு மாற்றம் தெரிகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று கதைகளும் பச்சையாக, அப்பட்டமாக, பிரச்னையை முன்கொண்டுள்ளவையாக இருப்பதால் வேகம் இருந்தாலும் கலையழகு வீழ்ந்து இருக்கிறது. அவைகளில் கற்பனை போதிய அளவு தொனிக்கவில்லை, உருவாகவில்லை. ‘அகம்’ கதை உக்ரமாக வந்திருக்கிறது. உத்தி முறையில் சோதனை இருக்கிறது. இருந்தாலும், நமது சமுதாயத்தில் நிகழலாம் என்றாலும், நடத்தையும் பேச்சும் கருத்தும் வெளி மணம் வீசுவதாக இருக்கிறது. குழந்தை கண்விழிக்காமல் அவதிப்படுகிறபோது தாயைப் பார்த்து, கள்ள உறவுக்காரன், “வா மாடிக்கு. கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டுமோ உன்னிடம்? ரொம்ப உத்தமிதான். தெரியும்” என்கிற பச்சையான வாக்கியமும் பின் நடந்த அப்பட்டச் செயலும் கதாரசனைக்கு ரொம்பவும் பங்கம் விளைவிப்பது. நாசுக்காக உணர்த்தப்பட்டிருக்கவேண்டியது.