"இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக ஆளாக, என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்தியமாக இருக்குமென்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள் என்னுடைய வாசகர்கள்' என்றார்.
தன் எழுத்துகள் பற்றியும், தன் வாசகர்கள் பற்றியும் தீர்க்கமான முன் முடிவுகள் கொண்ட ராமசாமி 1931-ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள "தழுவிய மகாதேவர் கோவில்' என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை எஸ்.ஆர். சுந்தரம் ஐயர். தாயார் தங்கம்மாள். எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் கோட்டயத்தில் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். அது மலையாள மொழி பேசப்படும் பகுதி. பள்ளிக்கூடத்தில் மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பப் படிப்பை மலையாளத்தில் தான் அவர் தொடங்கினார்.
1939ஆம் ஆண்டில் எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவர் பணியை விட்டு விட்டு நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அப்பொழுது ராமசாமிக்கு எட்டு வயதாகி இருந்தது. அவர் தந்தையார் சுதர்சன் ஜவுளிக் கடையை ஆரம்பித்து நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. எனவே பள்ளிக்கூடங்களில் மலையாள மொழி கற்பிக்கப்பட்டுவந்தது. அவர் பள்ளியில் மலையாள மொழி படித்துவந்தார். ராமசாமிக்குப் பத்து வயதாகும்போது பக்கவாத நோய் வந்துவிட்டது. அதனால் பள்ளிக்கூடம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. எனவே வீட்டில் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தமிழ்மொழி வீட்டில் பேசப்பட்டு வந்தது. அவர் தாயார் தங்கம்மாள் புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா சிறுகதைகளைப் படித்துக் காட்டிவந்தார். அவரை நவீன தமிழ்ச் சிறுகதைகள் வசீகரித்தன.
1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்பொழுது ராமசாமிக்குப் பதினாறு வயதாகி இருந்தது. தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. எனவே வீட்டில் இருந்துகொண்டே மலையாளம், ஆங்கிலம் வழியாக நாட்டின் நடப்புகளை, அரசியல் சமூக, கலாசார இலக்கிய நிகழ்வுகளைப் படித்தறிந்துகொண்டார்.
மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பெரியார், அரவிந்தர், ராம் மனோகர் லோகியா, ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஜே.சி. குமரப்பா உட்பட எதிர் எதிரான சிந்தனைப் போக்குகள் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சாதனைகளையும், தத்துவங்களையும் அறிந்துகொண்டார். அவருக்குத் தமிழ் மொழி வழியாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. "சொந்த முயற்சியால் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுக்கொண்டேன்' என்று பின்னால் எழுதியிருக்கிறார்.
அவர் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுத் தமிழ் மொழியில் பின்னால் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதியதால்தான் இலக்கிய ஆளுமை கொண்டவர், மேலான கலைஞர் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். அதுதான் எழுத்து என்பதின் வலிமை. தமிழ் படிக்கக் கற்றுக் கொண்ட ராமசாமி புதுமைப்பித்தனின் "காஞ்சனை' சிறுகதையைப் படித்தார். கதைகளின் கருத்துகளும், சொல்லப்பட்ட விதமும், மொழியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புதுமைப்பித்தன் அசலான கதாசிரியர் என்று முடிவுசெய்தார். பதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவு மலர் கொண்டுவர முயற்சிகள் எடுத்தார். புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட ஒரு சிறுகதை எழுதினார். அதற்கு "முதலும் முடிவும்' என்று பெயரிட்டார். தன் தாயாரிடம் படித்துக் காட்டினார். நன்றாக இருக்கிறது என்று தாயார் பாராட்டியதைக் குறிப்பிட்டுவிட்டு, "எந்தத் தாயார்தான் தன் மகன் எழுதியதைப் பாராட்டாமல் இருப்பார்' என்று ஒரு கேள்வியையும் கேட்கிறார்.
1951ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் நினைவு மலர் வெளி வந்தது. அதில் அவரது முதல் சிறுகதை, "முதலும் முடிவும்' இடம் பெற்றது. ராமசாமிக்கு மலையாள மொழி இலக்கியத்தின் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், காரூர், கேசவ தேவ் உட்பட பலரைப் படித்திருந்தார். 1942ஆம் ஆண்டில் வெளிவந்த தகழியின் "தோட்டியின் மகன்' பெருமளவில் வெற்றி பெற்ற நாவலாக இருந்தது. நாவலின் தலைப்பே முற்போக்கான, எதைச் சொல்கிறது என்பதை உரக்கச் சொல்வதாக இருந்தது. "தோட்டியின் மகன்' நாவல் ராமசாமியை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மலையாளத்திலிருந்து அதனை தமிழில் மொழிபெயர்த்தார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்புக்கு 2000ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில், "அப்போது எனக்கு வயது இருபது, இருபத்தியொன்று. அதற்கு முன் தமிழில் சொல்லும்படி நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நிச்சயமாக என்னுடைய படைப்பென்று எதுவும் அச்சேறியிருக்கவில்லை. என் உடல், மனம் சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும், வருத்தத்துடனும் புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்' என்று "தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்பு பற்றி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் ராமசாமி நினைவுகூர்ந்து சொல்கிறார். "தோட்டியின் மகன்' மொழிபெயர்க்கப்பட்டு அவரிடம் இருபது ஆண்டுகள் இருந்தன. அவர் பிரபலமாகி வந்தார். கம்யூனிஸ்டும், இலக்கியவாதியுமான தொ.மு.சி. ரகுநாதன் வெகுஜனப் பத்திரிகைகள்மீதும், புலமை அற்ற பேராசிரியர்கள்மீதும் கடுங்கோபம் கொண்ட எழுத்தாளராக இருந்தார். அவர் வை. கோவிந்தனின் "சக்தி'யில் சில காலம் பணியாற்றியவர். தீவிரமான இலட்சியவாதி. அவருடன் ராமசாமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன், ராமசாமியைக் காட்டிலும் தத்துவரீதியிலும், கலைக் கோட்பாட்டிலும், கம்யூனிஸ்டு சித்தாந்தம் என்பதிலும் அதிகமாகவே சிந்தித்தவர் என்றே குறிப்பிட வேண்டும். இருவரும் தோழமை கொண்டிருந்தார்கள். ராமசாமி திறமை மிகுந்ததொரு கலைஞர் என்றே தொ.மு.சி. ரகுநாதன் கருதினார்.
1953ஆம் ஆண்டில் தொ.மு.சி. ரகுநாதன் "சாந்தி' என்றொரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார். அது சிற்றிதழ்தான். அதில் அரசியல் கட்டுரைகள் சில வந்தன. ஆனால் "சாந்தி' வெளியிட்ட கதைகளுக்காகவே மதிக்கப்படுகிறது. "சாந்தி' யின் முதல் இதழில் ராமசாமியின் இரண்டாவது சிறுகதை "தண்ணீர்' வெளிவந்தது. தண்ணீர் முற்போக்கான சிறுகதை. ஆனால் வறட்சி உள்ள சிறுகதை கிடையாது. மனிதாபிமானம் என்பதுதான் கதையின் ஆதார சுருதி. இலக்கியம் என்பது பொழுதுபோக்கிற்கானது இல்லை. அது மனித குலத்தின் மேன்மைக்கானது என்ற சோசலிச கருத்து முதன்மையுற்று இருந்தபோது ராமசாமி உளவியலையும் சேர்த்து எழுதினார். தண்ணீர் கதையின் பிரதான அம்சம் தண்ணீர்தான். "நீரின்றி அமையாது உலகு' என்பது பொதுவிதி. அது மனிதர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. பூமி பசுமை கொள்ள பயிர்கள் விளைய, பறவைகள் வானில் பறக்க, விலங்குகள் கானகத்தில் திரிய, மனிதர்கள் உண்டு களிப்புற்று இருக்க தண்ணீர் வேண்டும்.
ஒரு கிராமம் நீரின்றி வறண்டு போனபோது மனிதர்கள் தண்ணீர் இன்றித் தவிக்கும்போது, ஒரு முதியவர் கிணறு வெட்டுவதுதான் தண்ணீர். அது மனித முயற்சியின் உச்சம். அது வெறும் முற்போக்கு இல்லை. ஆனால் சொல்லப்படும் முறையில் சார்பு கொண்டுவிடுகிறது
உலகம் முழுவதிலும் பல எழுத்தாளர்கள் இளம் பருவத்தில் கவரப்பட்ட இலட்சியப் பிடிப்போடு எழுதிக்கொண்டு இருப்பதில்லை. இடையில் இலட்சியம் ஒரு சுமையெனக் கருதி அதைக் கீழே இறக்கி வைத்துவிட்டு எழுதப் போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் இளம் பருவத்தில் தவறானதொரு இலட்சியத்திற்காக எழுதியதாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அதற்கு எதிராக எழுதியிருக்கிறார்கள். எழுதவே வேண்டாம் என்று போனவர்களும் இருக்கிறார்கள். சிலர் இலட்சியத்தைப் பற்றி விமர்சனம் செய்யாமல் அதனை செயல்முறைப்படுத்திய தலைவர்கள் செயற்பாட்டில் அதிருப்தியுற்று வெளியேறியுள்ளார்கள். சித்தாந்தம் தவறு என்று சொல்லிக்கொண்டு வெளியில் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
1950ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளில் பலர் எழுத்தாளர்களாக இருந்தார்கள். அல்லது எழுத்தாளர்களில் சிலர் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் முதன்மையானவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் கம்யூனிஸ்டு சித்தாந்தவாதி. இளம் பருவத்தில் இயக்கத்தில் பங்குபெற்ற அவர், தன் இறுதிக் காலம் வரையில் கொள்கைப் பிடிப்பாளராகவே வாழ்ந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் சித்தாந்த அடிப்படையிலேயே எழுதிவந்தார். மொழிபெயர்ப்பாளர். சோவியத் நாவல்களையும் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் காந்தியக் கோட்பாடுகள், கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள், திராவிடச் சிந்தனைகள் பரவியிருந்தன. அவற்றில் கவரப்பட்ட சிலர் கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் எழுதிவந்தார்கள். நாடகங்கள் எழுதி சிலர் அரங்கேற்றினார்கள். சித்தாந்தம் கலைப் படைப்பிற்கு அவசியமில்லை. வாழ்க்கையை எழுதுவதுதான் இலக்கியம் என்ற முறையில் சிலர் எழுதிவந்தார்கள். பத்திரிகைகள் குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் வெளியிட்டு வந்தன. எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் பெரும்பாலும் பத்திரிகை எழுத்தாளர்களாக இருந்தார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து சுந்தர ராமசாமி வந்தார். கடலூரில் இருந்து ஜெயகாந்தன் வந்தார். இருவரும் சொற்பப் படிப்புப் படித்தவர்கள்தான். ஆனால் சுயமான சிந்தனை கொண்டவர்கள். மார்க்ஸ், லெனின் சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள். ஒரு பத்தாண்டு காலத்திற்குள் அவர்கள் சித்தாந்தம் சார்ந்து எழுதுவதில் இருந்து வெளியில் வந்துவிட்டார்கள்.
சுந்தர ராமசாமி, ""சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டபோது மனம் மாறி வந்துட்டேன்'' என்றார். ஜெயகாந்தன், " நான் கம்யூனிஸ்டுகளால்தான் உருவானேன். ஆனால் அவர்களோடு இருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒரு கட்சியில் சேர்வதற்கும், சித்தாந்தம் சார்ந்து எழுதுவதற்கும் பெரிய ஈர்ப்புகள் ஒன்றும் கிடையாது. சித்தாந்தத்தின் கவர்ச்சி, தலைவர்களின் செயற்பாடுகள், அறிமுகம், அரவணைப்பு சேர்த்து வைக்கிறது. வயது ஏற ஏற எழுத்தாளர்களின் ஆர்வம் மாறுகிறது. கட்சியின் மீது பிடிப்பு குறைகிறது. தலைவர்கள் சாதாரணமான முதியவர்களாகப் படுகிறார்கள். தன்னிடம் அபாரமான அறிவும் ஆற்றலும், தலைமைப் பண்பும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் காரணமாகச் சுதந்திர எழுத்தாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டு தலைவர் ப. ஜீவானந்தத்திடம் சுந்தர ராமசாமி பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஜீவா இலக்கியவாதி இல்லை. இலட்சியவாதி. இலட்சியவாதிக்கு சமூகத்தில் இடம் உண்டு என்ற முறையில் நினைவோடையில் ப. ஜீவானந்தம் பற்றி எழுதியிருக்கிறார்.
சுந்தர ராமசாமிக்கு எழுதும் மொழி, முறை, படிக்கும் விதம் பற்றி எல்லாம் தனியாகக் கருத்து இருந்தது. அவர் சொல்கிறார்: "முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்கும் என உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.”
இலக்கியம், அது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், எதுவாகட்டும் மொழியில்தான் எழுதப்படுகின்றன. மொழி என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்டதுதான். மொழியைக் கொண்டுதான் பலரும் தம் மேதமையை நிலை நாட்டி வருகிறார்கள். ஆனால் மொழிக்கு என்ன இடம் என்பது படைப்பாளர்கள் தீர்மானிப்பதுதான். சிலர் கருத்துக்கேற்ற வசீகரமான மொழி நடையையும், வார்த்தைகளையும் வளர்ப்பதோடு கொண்டு வந்து எல்லோரையும் படிக்க வைத்துவிடுகிறார்கள். மற்றும் சிலர் மொழியே பிரதானமென்று கொண்டு முரட்டுத்தனமாக எழுதி படிக்கவே முடியாமல் செய்துவிடுகிறார்கள்'. ஓர் படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் மொழியின் முக்கியத்துவம் பற்றி சுந்தர ராமசாமி தன் அனுபவம் என்ற முறையில் சொல்லியிருக்கிறார்.
மொழி என்பது கற்கப்படுவது. ஒருவன் எந்த மொழியும் கற்றுக்கொண்டு எழுதலாம். அவன் வாழும் பகுதியில் அது அதிகமான மக்களால் படிக்கப்படுகிறது. ராமசாமிக்கு மலையாள மொழி முதல் மொழியாக இருந்தது. அதில் அவர் எழுதியிருந்தால் மலையாள எழுத்தாளராகியிருப்பார். தமிழ் மொழி தாய்மொழியாக இருந்தது. அவர் பெற்றோர்கள் தமிழ் பேசிவந்தார்கள். சில தமிழ்க் கதைகள், கேட்டு, அதனால் தமிழ் படித்து தமிழில் கதைகள் எழுதித் தமிழ் எழுத்தாளராகிவிட்டார். அது சொந்தமான முடிவுதான் என்கிறார். மலையாள மொழியில் எழுதியிருந்தால் கூடுதலான அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்ற அர்த்தம் சொல்லப்பட்டதின் வழியாகத் தெரிகிறது.
சுந்தர ராமசாமி இளம் பருவத்தில் படித்த புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் நினைவுகளையெல்லாம் உரையாடலில் எழுதியிருக்கிறார்.
அவர்களில் க.நா. சுப்பிரமணியம் மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னையும், ஜெயகாந்தனையும் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்கள் என்று அவர் அறிமுகம் செய்தது உற்சாகம் அளித்தது என்று ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனாலும் க.நா. சுப்பிரமணியம் பட்டியல் அடிக்கடி மாறக்கூடியதாக இருப்பது பற்றிக் கேலி செய்கிறார். சிறுகதை எழுத்தாளரும் புதுக்கவிஞருமான ந. பிச்சமூர்த்திமீது அவருக்கான மரியாதை குறையாமலே இருந்துவந்தது. அவர் வாழ்க்கையையும் சாதனைகளையும் பற்றி "ந. பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்' என்று இலக்கியச் சிந்தனைக்காக 1991ஆம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.
ந. பிச்சமூர்த்தியை அவர் சி.சு. செல்லப்பாபோல மகாகவி என்று கொண்டாடாவிட்டாலும் அசலான புதுக் கவிஞர் என்று உறுதிபட நம்பினார். ந. பிச்சமூர்த்தி ஒரு படைப்பு எழுத்தாளராகவே இருந்தார். அவர் சார்ந்திருந்த மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா அலசல் முறையிலும், ரசனைரீதியிலும் நவீன படைப்பிலக்கியத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது சிறுகதைகள், புதுக் கவிதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். விமர்சனம் செய்ய வேண்டாம் என்றுதான் இருந்தார்.
சுந்தர ராமசாமி விமர்சனத்தின் மீது ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். அதாவது ஒரு படைப்பின் சக்தியை, கலையம்சத்தைக் கண்டறியும் ஆற்றல் பெற்று இருந்தார். அவர் தனக்கு உவப்பான எழுத்தாளர்கள் பற்றி நினைவோடையில் எழுதினார். அந்தத் தேர்வே விமர்சனம்தான். ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள், நாடகங்களை விட, புதுக்கவிதைக்காக அதிகமாக மதிக்கப்படுவார் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அதனை விளக்கி எழுதவில்லை. ஆனால் புதுக்கவிதைகள், சிறுகதைகள் பற்றி எழுதியதன் வழியாகத் தெரியவருகிறது.