சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ என்ற சமீபத்திய நாவல் எனக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பே நான் நைரோபியில் இருந்தபோது கிடைத்துவிட்டது. அங்கே இலக்கிய ஆர்வலர் ஒருவர் இருந்தார். ஆங்கிலம், தமிழ் என்று எப்பொழுதும் புத்தகம் தேடிப் படிப்பவர். என்னுடைய புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்துவிட்டு ‘I am very disappointed’ என்று கூறியபடி அதைத் திருப்பிக் கொடுத்தார். அவருடைய வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நான் அந்த நாவலை அப்படியே படிக்காமல் போட்டுவிட்டேன். சமீபத்தில்தான் இந்த நாவலை நான் மீண்டும் கையிலே தூக்கிப் படிக்க வேண்டி நேர்ந்தது. புத்தகத்தை எடுத்தபின் அது என்னை முற்றிலும் ஆட்கொண்டுவிட்டது. தரமான இலக்கியங்களையே படித்துப் பழக்கப்பட்ட என் நண்பர் எதற்காக அப்படி ஒரு விமர்சனத்தை போகிற போக்கில் போட்டுவைத்தார். இது என்னைச் சிந்திக்க வைத்தது.
இது ஒரு விமர்சனக் கட்டுரை அல்ல. மதிப்பீடோ, ஆய்வோ கூட இல்லை. இந்த நாவல் என்னிடம் ஏற்படுத்திய தாக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. உண்மையில் இது ஓர் அறிமுகம்தான்.
நாவல் மிக எளிமையாகத் தொடங்குகிறது. பாலு என்ற சிறுவனின் மன ஓட்டமாக முதல் பூ விரிகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் கிடைக்கிறது. பாத்திரங்கள் இயற்கையாகவும் யதார்த்தமாகவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு முறையாவது ‘கதை அமைப்பு’ என்ற எண்ணம் ஏற்படாதவாறு மிக உண்மைத்தன்மையுடன் நாவல் நகர்கிறது.
என் நண்பர் எதிர்பார்த்திருக்கக்கூடிய சஸ்பென்ஸோ மர்மமோ சிக்கலோ இந்த நாவலில் இல்லை. கதாநாயகனோ நாயகியோ வில்லனோகூட கிடையாது. இருந்தாலும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விரிந்து ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ஒரு முடிவை நோக்கி நகர்கின்றன. இதோ உச்சி வந்துவிட்டது நாம் நினைக்கும்போது கதை இன்னொரு சிகரத்தை பார்த்துப் போகும். இதற்குமேல் இன்னும் செல்ல முடியாது என்று நினைக்கும்போது இன்னொரு சிகரம் தோன்றிவிடும். இப்படியே இமயமலைத் தொடர்போல சிகரம் சிகரமாகக் கதை விரிந்தபடியே செல்கிறது.
‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் நாலாவது அத்தியாயம் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த நாவலில் மிகவும் உன்னதமான கட்டம் அது. ஜே.ஜே. தீட்டிய ‘சம்பத்தின் கனவு’ என்ற ஓவியத்தை டாக்டர் பிஷாரடியும் எஸ்.ஆர்.எஸ்ஸும் சென்று பார்க்கும் பகுதி. இந்த அத்தியாயம் ஒரு சிறுகதைக்குரிய அவ்வளவு கலை அம்சத்துடன் தனித்து நிற்கக்கூடியது. இதைப் படிக்கும்போது ஏற்படும் பேரனுபவத்தை விவரிக்க இயலாது. வாசிக்கும்தோறும் புதுப்புது அனுபவமாகத் தென்படும்.
சு.ரா. ஒரு இடத்தில் இந்த நாலாவது அத்தியாயத்தைத்தான் நாவலில்தான் முதலில் எழுதியதாக குறிப்பிட்டு இருக்கிறார். படைப்பின் ஆவேசம் அவரை முற்றிலும் ஆட்கொண்டிருந்த ஒரு அபூர்வமான தருணத்தில் தான் இதை எழுதியதாகவும் கூறுகிறார்.
‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலிலும் படைப்பாளி இப்படி ஓர் உச்ச ஆவேச கணத்தில் எழுதிய பல அத்தியாயங்கள் இருக்கின்றன. இவை ஆங்காங்கே தனித்து உயர்ந்து அதீதக் கலை அழகுடன் சவாலாக வீசிக்கொண்டு நிற்கின்றன.
நாவல் ஒரு நேர்க்கோடு விதத்தில் சொல்லப்பட்டது அல்ல. ஒரு கையில் தண்ணீரை எடுத்துப் பளிங்குத் தரையில் தெறித்ததுபோல இருக்கிறது. சில பெரிய துளிகள், சில சிறிய துளிகள். சில இடைவெளிகள், சில காய்ந்துபோன தடங்கள். இப்படியாகத்தான் நாவல் சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகிறது. இதிலே விட்டுப்போனது சில, ஒட்டாமல் போனது சில. எல்லாமாகச் சேர்ந்த அபூர்வ சித்திரமாக நாவல் வாசகனுடைய கற்பனை ஆற்றலுக்கு வசதி செய்து தந்ததபடி முடிகிறது.
1937,38,39 காலகட்டத்தில் இந்தக் கதை நிகழ்கிறது. ஒரு குடும்பம் ஆலப்புழையில் இருந்து கோட்டயத்துக்கு வருவதோடு தொடங்கி அவர்கள் நாகர்கோயிலுக்கு குடி பெயர்வதுடன் கதை முடிகிறது.இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல ஒரு கால கட்டத்தில் ஒரு சமூகத்தின் கதையும்கூட. எஸ்.ஆர்.சீனுவாச அய்யர் (எஸ்.ஆர்.எஸ்) பர்மா ஷெல் கோட்டயம் ஏஜண்ட். ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் அவருடைய மனைவி லட்சுமி, அவர்களுடன் தங்கி வீட்டு வேலைகளில் உதவும் உறவுக்கார மனுஷியும் விதவையுமான ஆனந்தம், பிள்ளைகள் ரமணி, பாலு. லட்சுமியின் தங்கை வள்ளி, வேலைக்காரி கௌரி.
இவைதான் பிரதான பாத்திரங்கள். இவர்களைச் சுற்றிச் சக பாத்திரங்களும் உப பாத்திரங்களும், இந்த காலகட்டத்தில் அந்தக் குடும்பத்துக்கு ஒரே நேரத்தில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. பாலு என்ற குழந்தையின மனம் உள வைத்தியரிடம் போகும் அளவுக்குப் பேதலிக்கிறது. பாலுவின் உற்ற நண்பனும் குருவும் அண்ணனுமான லச்சம் ஒருநாள் திடீரென்று இறந்துவிடுகிறான். படிப்பதற்கென்று ஊரில் இருந்துவந்த வள்ளி எதிர்பாராதவிதமாகக் காதலில் விழுகிறாள். இளம் விதவையான ஆனந்தம் மறுமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாள். இது போதாதென்று எஸ்.ஆர்.எஸ். நடத்தி வநத தொழிலில் பெரும் சரிவு ஏற்படுகிறது.
இதுதான் கதையின் சாராம்சம். தென்றல் தூவியதுபோல இதைச் சொன்ன முறை, கனவு பொதிந்த வாக்கியங்கள், மனித சுபாவத்தின் குணாம்சங்கள், அனுபவ முதிர்ச்சியான அவதானிப்புகள், இதயத்தைத் தொடும் சம்பவங்கள், உள்ளத்தைப் படம் பிடிக்கும் வசன காரியங்கள் இவற்றினால்தான் கதை சிறப்புப் பெறுகிறது.
Angela's Ashes என்ற நாவல் சமீபத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக வரவேற்கப்பட்டது தெரிந்ததுவே. மிகவும் பிரபலமான எழுத்தாளர் Frank McCourt எழுதி Pulitzer பரிசு பெற்றது. ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலைப் படித்தபோதும் எனக்கு Angela's Ashes படித்த தாக்கம் ஏற்பட்டது. இந்த நூல் Frank என்ற சிறுவன் தன் சிறுவயதில் தான் அனுபவித்த கொடிய வறுமையையும் துன்பங்களையும் மனம் உருகும் விதத்தில் சித்தரிப்பதாக இருக்கிறது.
சிறுவயதில் இந்தச் சிறுவன் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறான். அவனுடைய அப்பா சொல்கிறார் "நீ உன்னுடைய தாய் நாட்டுக்கு உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்" என்று. அவனுடைய பள்ளிக்கூட ஆசிரியர் "நீ உன்னுடைய கத்தோலிக்க மதத்துக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்" என்று போதிக்கிறார். உயிரை வைத்து வாழக்கூடச் செய்யலாம் என்ற சிறு உண்மையை அவனுக்குச் சொல்லித் தருவதற்கு யாருமே இல்லை. அவன் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறான்.
‘கு.ஆ.பெ.’ நாவலில் வரும் பாலுவுக்கும் அப்படித்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் அப்பாவின் கழுகுக் கண்களிலிருந்து அவனால் தப்ப முடியவில்லை. திருப்பித் திருப்பி அவனை விசாரணைக் கூண்டில் அவர் ஏற்றிவிடுகிறார். சற்று முன்புகூட மிகவும் பட்சமாக இருந்த அப்பா ஒரு சிறிய காரியப் பிசகால் எப்படி இவ்வளவு கொடூரமுள்ளவராக மாறிப்போனார். அவரினால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவனைப் பிடித்துவிடுகிறது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வாழைத்தோட்டம் எல்லாம் ஒரு நாள் அழிந்துபோய்விடுமோ என்று அம்மாவிடம் ஒரு சமயம் கேட்கிறான். "கோடானுகோடி வருடங்களுக்கு அப்புறம் பிரளயம் வந்து லோகமே அழிஞ்சு போயிடும்" என்கிறார் அம்மா. "ஆகாயம் இருக்குமா அம்மா" என்று பாலு கேட்கிறான். ஒருநாள் பாலு ஓடிவந்து "ஆகாசம் தொங்கத் தொடங்கியாச்சு" என்கிறான். "ஆகாசம் அப்படியேதான் இருக்கும்டா. இது மேகம், பயப்படாதே" என்கிறாள் அம்மா. பாலுவுக்கு மேலும் குழப்பமாகிவிடுகிறது. ஆனந்தம் மாமிக்கு ஒரு சாபம் இருக்கிறது. "என்ன சாபம் மாமி" என்று ஒருநாள் பாலு கேட்டான். "வர அமாவாசை கழியட்டும் சொல்கிறேன்" என்றாள் மாமி, ஆனால் கடைசிவரை சொல்லவே இல்லை. அதுவும் பெரிய மனவருத்தம் அவனுக்கு. லச்சம் அண்ணாவை நிரம்பப் பிடிக்கும். அவனோடு இருந்தால் அவனுக்குப் பசியே எடுக்காது. லச்சம் தன்மீது காட்டும் பரிவை ஒரு நிமிடம்கூட அவனால் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ ஒரு குளறுபடி வந்துவிடுகிறது. எப்படி இது தனக்கு மட்டுமே நடக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் பாலு கரீம் மாப்ளையிடம் "கணக்கு எப்போ முடியும் மாமா" என்று கேட்டான். அதற்கு கரீம் மாப்ளே சொன்னார்: "கணக்கு முடியாது. இருக்கிற கணக்கை எழுதி முடிப்பதற்குள் புதிய கணக்கு வந்திடும்." "இந்த லோகம் அழிவதுவரை கணக்கு இருக்குமா" என்று கேட்டான் பாலு. "அழிந்த பிறகும் இருக்கும். அழிஞ்சி போனதுக்கு கணக்கு எழுதணுமே" என்றார் கரீம் மாப்ளே. பாலுவுக்கு எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
வள்ளிக்கு என்றால் குழப்பம் கிடையாது. கறுப்பெல்லாம் உதிர்ந்து அழகாக இருக்கிறாள். வெள்ளை உள்ளம். கிராமத்து முரட்டு தைரியம். அவளுக்கு ஸ்ரீதரனிடம் அடக்க முடியாத காதல். என்னதான் அவளுக்கு தைரியமிருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்க வள்ளி பயப்படுகிறாள்.
ஸ்ரீதரன் சொல்கிறான். "நீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை... நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும்போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும்.
பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம். அவமானம். அதைவிட மரணம் எவ்வளவோ மேல்."
ஆனால் பாவம் வள்ளி. இறுதியில் கலீல் ஜிப்ரானுடைய ஒடிந்த சிறகுகளில் வரும் சல்மாபோல அந்தக்கால நியதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒருவித எதிர்ப்பையும் காட்டாமல் காதலைத் துறந்து சரணாகதியாகிவிடுகிறாள். வாசகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஆவேசம் அவளுக்கு ஏனோ ஏற்படவில்லை. ஏமாற்றமான இடம், ஆனாலும் மனதை உலுக்கிவிடுகிறது. மிகச் சாதாரண சம்பவங்கள்கூட கலைஞனின் கூர்ந்த அவதானிப்பாலும், அவற்றை அவன் விவரப்படுத்தும் அசாதாரணத் திறமையினாலும் உண்மையின் கணத்தோடு எங்கள் நெஞ்சங்களை வந்து தாக்கிவிடும். "அட! இது ஏன் நமக்கு முன்பே தோன்றவில்லை" என்று அடிக்கடி கேள்வி கேட்க வைக்கும். ஓர் ஏழைப்பெண் வீட்டின் வெளித்திண்ணையில் மழை விட்டுச்சென்று வெளியை வெறித்துப்பார்த்தபடி நிற்கிறாள். வர்ணனை எப்படி வருகிறது பாருங்கள்.
"அவள் விழிகளில் ஒளிபோல. புற உலகம் விழும் சாடையோ இல்லை. மார்பின்மீது தன் கைகளைக் குறுக்காக வைத்திருக்கின்றாள். விரல்கள் தோள்களை அழுத்தியிருக்கின்றன. சுருங்கிச் சிறுத்துப்போன அவள் வயிறு உள்வாங்கிக் கிடக்கிறது. அவள் கூந்தல் அவிழ்ந்து பாதியில் நிற்கிறது. அது முற்றாக அவிழ அவசியமான உடலசைவுகூட அவளிடம் இல்லை."
சு.ராவின் நடையைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். இயல்பான நடை என்று ஒன்றிருக்கிறது; சரளமான நடை, இலகுவான நடை, நளினமான நடை பலவாறு சொல்லலாம். ஆனால் சு.ராவின் நடையை "தெளிவான, சுவையான, சொல்மிகை இல்லாத நடை" என்றுதான் கூறலாம்.
சொல்லவந்த கருத்து நேராக மூளைக்குச் சென்றுவிடுகிறது. அதனால் தெளிவான நடை. ருசித்து, ருசித்து வாசிக்க முடிகிறது, அதனால் சுவையானது. கருத்தைக் கிரகிப்பதற்குமுன் வார்த்தை விதத்திலும் அழகிலும் மனம் லயித்துவிடுகிறது.
மைக்கேல் ஏஞ்சலோவின் உளிபோலச் சொற்சிக்கனம் ஒரு வார்த்தை கூடாமலும், ஒரு வார்த்தை குறையாமலும். மொழியின் மகிழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அதிசயம் இந்த நடையில் உண்டு. ஒரு சாதாரண சம்பவம்கூட அதைச் சொல்லும் முறையில் அசாதாரணமாக மாறி முற்றிலும் புதியதுபோன்ற தோற்றத்தை அளித்துவிடும்.
இந்த இடத்தைப் பாருங்கள். பிடில் ராமய்யர் சம்பாரம் கேட்டு வாங்கிப் பருகுகிறார். மறக்க முடியாத வர்ணனை. "பிடில் ராமய்யர் பித்தளைச் செம்பை இரு கைகளாலும் தூக்கிச் சம்பாரத்தை வாயில் விட்டுக்கொள்ளத் தொடங்கினார். செம்பு வாயிலிருந்து ஒரு சாண் உயரத்துக்குப் போயிருந்தது. நாவினில் எட்டிப்பார்த்த சாம்பாரம் உள்ளே போய்விட்டுத் திரும்ப வந்து நூலாக ஒழுகத் தொடங்கிற்று. ஒழுகல் ஒரு நிதானத்திற்கு வந்ததும் கை சிறுகச் சிறுக நிமிர்ந்து செம்பு மேலே போயிற்று. ஒழுகலும் சிறிது தடித்தது. கை நீளத்திற்கு மேல் செம்பைக் கொண்டுபோக முடியவில்லை. மேலும் முயற்சி செய்துபார்க்க முடியாதபடி சம்பாரமும் தீர்ந்துவிட்டிருந்தது. பெரிய ஒப்பம் ஒன்றை விட்டார் அவர்."
இப்படிப்பட்ட கூர்மையான அவதானிப்புகளும் வர்ணனைகளும் நாவல் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. நகைச்சுவைக்கோ குறைவில்லை. மறைத்துவைத்த நகைச்சுவை. சாம்பிளுக்குப் பாருங்கள். எஸ்.ஆர்.எஸ் எப்படி பாலுவுக்கு தேக உஷ்ணம் அளக்கிறார் என்று.
"பாலு விறைப்பாக உடல் கோண நடந்து திண்ணைக்குப் போவான். ரமணியும் பின்னால் போவாள். அவளுக்கு வெகுவாகப் பிடிக்கும் காரியம் அது. எஸ்.ஆர்.எஸ் வேனல் பந்தலில் இறங்கி தெர்மாமீட்டரை அவர் முழுச் சக்தியையும் திரட்டி உதறுவார். வேனல் பந்தல் தவிர வேறு எந்த இடத்திலும் அதை உதறினாலும் மற்றொரு பொருள் பட்டு அதன் மென்மையான வெள்ளி மூக்கு உடைந்துபோகலாம். அவர் உதறும்போதே திண்ணையில் வாயை திறந்து வைத்துக்கொண்டபடி நிற்பான் பாலு. முன்கூட்டித் தயாராகிவிடுவதுதான் அவனுக்கு ஆசுவாசமாக இருக்கும். எஸ்.ஆர்.எஸ்ஸூக்கு குலை நடுக்கும் தரும் விஷயம் பாலுவின் பல்லும் தெர்மாமீட்டரின் வெள்ளிமூக்கும் சம்பந்தப்பட்டது. நாக்கின் அடியில் வைத்து அவன் வாயை மூடிக்கொண்ட பின்பும் அவர் கை அவன் தாடையையே அழுத்திப் பிடித்திருக்கும். பாலு கண் கொட்டாமல் இருப்பான். தெர்மாமீட்டர் வாயில் இமைகளைக் கொட்டலாம் அறிவுப்பூர்வமான செய்தியை அவனிடம் தெரிவிக்க அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் இருந்தது." கவிதை என்றால் என்ன? வெறும் வார்த்தைகளின் தொகுப்புத்தானே! அது எப்படி சில வரிகளைப் படித்தவுடன் எங்கள் மன ஆழத்தின் நுண்ணுணர்வுகளை அவை தொட்டுவிடுகின்றன. வெறும் மலர்ச் சொற்களால் அலங்காரமாக ஒரு மாலை கட்டிவிட்டால் அது கவிதை ஆகிவிடுமா? கவிதை என்றால் அது மனத்தின் உணர்ச்சிப் பெருக்கில் தானாக உதித்து வரவேண்டும். வார்த்தை என்பது இரண்டாம் பட்சம்தான். உண்மைக் கவிக்கு வார்த்தைகள் தானாக வந்து கவிந்துவிடும் என்று சொல்வார்கள். ஓர் ஏழை இடைச்சிச் சிறுமி ஒரே ஒரு நீல ஆடையை அவ்வைக்குத் தந்துவிடுகிறாள். அப்போது பாடியதுதான் ”நீலச் சிற்றாடைக்கு நேர்..” என்று முடியும் உருக்கமான பாடல். இதேமாதிரி பாப்லோ நெருடா என்ற கவிஞருக்கும் ஒரு சம்பவம் ஏற்பட்டது. ஓர் ஏழை இடைச்சி அவருக்குத் தன் கையால் செய்த காலுறை ஒன்றைக் கொடுக்கிறாள்.
Maru Mori brought me a pair of socks which she knitted with her own shepherder hands two socks as soft as rabbits I slipped my feet into them as if they were two cases knitted with threads of twilight and the pelt of sheep.
மிகச் சாதாரண வார்த்தைத் தெரிவுகள்தான். எல்லாமே முன்பாகவே பரிச்சயமான சொற்கள். என்றாலும் நெஞ்சை நெகிழ்த்திவிடுகின்றன இந்த வரிகள். இப்படித் தானாக வார்த்தைகள் பொருந்திக் கவிதையாக விழும் இடங்கள் நாவலில் அநேகம். இந்த இடத்தைப் பாருங்கள்.
"கட்டைபோல அந்தப் பெண் விரைத்துக் கிடக்கிறாள். கதவுக்காக அறுத்து வைத்திருக்கும் பலகை போல இருக்கிறது அவள் உடல். ஐந்தாறு பேர் அவளைத் தூக்கியவாறு படிகள் ஏறியபோது அவளுடைய தொங்கும் இரு கைகளும் அவிழ்ந்த தலைமுடியும் முக்கோணத்தின் மூலைகளைத் அந்தரத்தில் உருவாக்கின.”
இன்னொரு இடம். எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு அசாத்தியக் கோபம் ஒரு மிக அமைதியான சமயத்தில் வெளிப்படுகிறது.
“ஒரு நிமிடத்தில் கூடத்து வெளி அமைதியில் வெடித்த சுக்கு நூறாயிற்று.” இப்படிக் கவிதை வரிகள் ஏராளம். எவ்வளவுதான் கலைஅம்சம் பொருந்த ஒரு நாவலைச் சொன்னாலும் அது மனதைத் தொடாவிட்டால் வெறும் கோதுதான். இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதோ ஒரு வழியில் ஒரு சம்பவமோ வசனமோ எங்கள் மனதைத் தொடும்படி அமைந்துவிடுகிறது. அதைப் படிக்கும்போது இது எங்கோ எங்கள் வாழ்க்கையில் நடந்தது மாதிரியான ஒரு பரிச்சயம் ஏற்படுகிறது. உணந்தக் கலைஞனின் கைவண்ணம் இப்படித்தான் பல சமயங்களில் வெளிப்படும். முதன்முதல் கோட்டயத்தில் இருந்து ஒரு பஸ் விடுகிறார்கள். பாலுவுக்கும் லச்சத்துக்கும் சுய நினைவே இல்லை. சவாரி கிடைக்குமா என்ற பயம். எப்படியோ இடம் பிடித்து பஸ்ஸில் ஏறிவிட்டார்கள். பஸ் நகரத் தொடங்கிவிட்டது. அந்த நேரம் பார்த்து தாமு என்ற ஏழைப் பையன் ஓடிவருகிறான். அவன் கறுப்பாகச் சட்டை அணியாமல் இருந்தான். “லக்ச்மணன்” என்று கத்தினான் அந்தப் பையன். அவனுடைய அழுக்குக் காக்கி நிக்கர் இடுப்பை விட்டு நழுவிக் கால்மூட்டை மறைத்துக்கொண்டிருந்தது. அவன் லச்சத்திடம் முகபாவத்தால் இடம் கேட்டான். “யாரடா நீ” என்றொரு அதட்டல் கேட்டது. முன்னிருக்கையிலிருந்து ஒருவர் திரும்பிப் பார்த்து முறைத்தார். பையன் ஒன்றும் சொல்லவில்லை. “கீழே இறங்குடா நாயே” என்று அவர் கத்தினார். முன்னிருக்கையில் இருந்த சர்வாதிகாரியக்காரர் திருப்பி “என்ன? என்ன” என்று கேட்டார். அவருக்குப் பின் கம்பித் தடுப்புக்கு பின்னால் அமர்ந்து அவருக்கு விசிறிக்கொண்டிருந்தவர் “ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை” என்றார். பஸ் நகரத்தொடங்கியது. லச்சம் கண்ணாடிவழி பின்னால் பார்த்தான். அங்கு நின்றுகொண்டிருக்கிறான் தாமு. முன்னிருக்கையில் இருந்த உத்தியோகஸ்தர்கள் வஞ்சிபூமி பாடத் தொடங்கினார்கள்.
இன்னும் பல சம்பவங்கள் நாவலிலே ஆணி அறைந்ததுபோல மனதிலே பதிந்துவிடுகின்றன. விதவையான ஆணந்தம் மறுமணத்தைப் பற்றி யோசிக்க மிகவும் அஞ்சுகிறாள். காந்தி பக்தரான செல்லப்பா அவள் மனதை மாற்றுவதற்கு முயல்கிறார். செல்லப்பாவின் புதுவிதமான சிந்தனைகள் அவளுக்குத் தைரியமூட்டுவதற்குப் பதில் இன்னும் அச்சத்தையே கொடுக்கின்றன. செல்லப்பா சொல்கிறார்: ”காந்தி நடத்தற கல்யாணத்திற்கு போறவளா ஓடுகாலி? அது பெரிய பாக்கியம். அதுக்குமேல பெரிய பாக்கியம் எதுவும் இல்லை.”
“நான் ரெட்டை வேஷம் போட்டுண்டிருக்கேன். என்னால இதைத் தாங்கிக்க முடியலை.” “வேஷத்தை கலைச்சுடு இந்த நிமிஷமே. என்ன வந்தாலும் வரட்டும். உங்க அக்கா கிட்டப்போய் உன் மனசிலே இருக்கிறதை முழுசா கொட்டு இந்த நிமிஷமே. இதைச் செய்து நீ உன்னை உசத்திக்கோ. நீ புழு இல்லை. பூச்சி இல்லை. உசந்த ஜென்மம். என் முழு மனசோட இதைச் சொல்றேன்.” “இந்தக் காரியம் அடுக்குமா என்று அக்கா கேட்க மாட்டாளா?” “உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைன்னா எனக்கும் ஒரு வாழ்க்கை தேவைண்ணு நீ அவகிட்ட சொல்லு. உங்க மாதிரிதான் நானும்னு நீ அவகிட்ட சொல்லு. அதுல கொஞ்சமும் கூச்சப்பட வேண்டியது இல்லை.”இப்படியாகப் பல தரப்பட்ட பாத்திர வார்ப்புகள். வள்ளியிடம் நாம் எதிர்பார்த்தது ஒன்று அவள் செய்தது வேறு. ஆனந்தத்திடம் நாம் எதிர்பார்த்தது வேறு. அவள் செய்தது ஒன்று. ஆசிரியர் அதிகப் பிரயாசை இன்றி வாசகனின் ஆழ்மனத்துச் சில இடங்களில் புதுமைப்பித்தன் கூறியதுபோல அனாயாசமாக சில மூர்ச்சனைகளை எட்டிவிடுகிறார். மனம் அப்படியே நெகிழ்ந்துபோய்விடுகிறது. ஆனால் அவைமட்டும் ஒரு சிறந்த படைப்பை உருவாக்க முடியுமா? இந்த உணர்வுகளையும மீறி இன்னொரு தளத்தில் தேடல்களுக்கு நம்மை அழைத்துப் போகிறார். உன்னதப் படைப்பு என்றால் அதில் சமூக அக்கறைகள் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் வாழ்வுப் பிரச்சனைகளை பிரதிபலிப்பதுதானே நல்ல இலக்கியம். நடுநடுவே சமூகக் கவலைகளையும் உளவியல் கருத்துக்களையும் புதிய சிந்தனைப் பாய்ச்சல்களையும் நாம் தரிசிக்க முடிகிறது. படிக்கும்போது இப்படிக்கூடச் சிந்திக்க முடியுமா என்ற பிரமிப்புதான் ஏற்படுகிறது.
நாவலிலே ஓர் இடத்தில் கருநாகப்பள்ளி சொல்கிறார்:
“மனித துக்கத்துக்கு முக்கியக் காரணமே இல்லாமைதான். முதலில் அது நிவர்த்தியாகட்டும். இல்லாமையைவிட முக்கியமானது துக்கம் மனித சக மனிதனை இழிவுபடுத்துவது. இது ஜாதி சார்ந்த கொடுமை. அதிகாரம் சார்ந்த கொடுமை. ஒரு ஏழை வறுமையோடு வாழ்வதைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் அவமானத்தோடு வாழ்வதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது.” என்ன உண்மையான வார்த்தைகள்.
சைத்திரிகன் ஒருவன் ஒரு மணிக்கூண்டுக் கோபுரத்தை வரைகிறான். நடுநாயகமாக மணிக்கூண்டை நிறுத்திப் பின்புறமாக ஆகாயத்தை வரைந்தான். பிறகு பூங்கா, இரண்டு பறவைகள், ஒரு நாய், குடை பிடித்தபடி ஒரு மனிதர், ஒரு தள்ளுவண்டி என்று படத்துக்கு சம்பந்தமில்லாதவாறெல்லாம் எல்லாம் வரைந்தான். உண்மையில் இவை எல்லாம் மணிக்கூண்டுக்கு இன்னும் அழகு சேர்ப்பவைதான்.
இப்படித்தான் நாவலிலே வரும் நாராயணி, விருதன் சங்குமணி, முண்டன் மாதவன், திருவடியாபிள்ளை, முற்றம் பெருக்கும் தாத்தா போன்ற பாத்திரங்கள். ஒவ்வொருவரும் நாவலுக்கு அழகு சேர்த்து அதன் கலை மெருகை இன்னும் ஒரு அலகு உயர்த்திவிடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் கம்பளங்கள் உலகப் புகழ்பெற்றவை. ஆட்டு ரோமத்திலான கம்பளங்களை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வருடக்கணக்காக நெய்வார்கள். அவை மெசினில் செய்ததுபோல மிக நேர்த்தியாக ஒரு பிழையுமின்றி இருக்கும். மனித உழைப்பில் பிழை இருந்தால்தான் அதன் உண்மைத்தன்மை கூடும். அதனால் கம்பளம் முடியும் தருவாயில் ஒன்றிரண்டு பிழைகளை வேண்டுமென்றே செய்துவிடுவார்களாம். அதனால் கம்பளத்தின் தரமும் விலையும் தானாகவே உயர்ந்துவிடும்.
இந்த நாவலிலும் இது மனித உழைப்பில் தயாரிக்கப்பட்டது என்று ஞாபகமூட்டும் வகையில் ஒரு சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. முற்றிலும் படர்க்கையில் எழுதப்பட்ட நாவல் இது. அப்படி இருந்தும் சில பொறுத்த கணங்களில் “நான்” “எனக்கு” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் வந்துவிடும். நாவலைப் படிக்கும்போது இது கொஞ்சம் அசௌகரியமாகப் படும்.
இந்த நாவல் நாற்பதுக்கு மேற்பட்ட பாத்திரங்களைக் கொண்டது. நடு மயமான பாத்திரங்கள் என்றால் ஒரு எட்டு பாத்திரங்களைச் சொல்லலாம். மீதி எல்லாம் ஒன்றிரண்டு முறை வந்துவிட்டு மறைந்துவிடுபவை. இந்த நிலையில் 642 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை முதல் வாசிப்பில் முழுமையாக விளங்கிக்கொண்டு படிப்பது கஷ்டம்தான். நாவலின் தொடக்கத்தில் பாத்திரங்களின் பட்டியல் ஒன்று கொடுத்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றுகிறது.
இந்தக் குறைகள் நாவலைச் சாதாரண மனித யத்தனம்தான் என்று நினைக்கவைக்கின்றன. எது எப்படியோ புத்தகத்தைக் கையிலே எடுத்தால் கீழே வைக்க முடியாது. படிக்கும்போது பென்சிலை எடுத்துவைத்து அடிக்கோடு போட முயல வேண்டாம். ஏனெனில் புத்தகம் முழுக்க அடிக்கோடுகள் போட வேண்டி வரும். பல வருடங்களாக உலகத் தரத்திற்கு தமிழில் ஒரு நாவல்கூட இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது அந்த கவலை விட்டது. இனிமேல் தலை நிமிர்ந்து நடக்கலாம்.