சுந்தர ராமசாமியின் சிருஷ்டி ரகசியம்

நாகரத்தினம் கிருஷ்ணா

பகுத்துணரக்கூடிய, சீர்தூக்கிப் பார்க்கவல்ல வாசகர்களையும் அதற்கிணையான பாராட்டுதல்களையும் குவித்துக்கொண்டதைப் போலவே, நேர்மையற்ற விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளானதிலும் அவருக்கு நிகர் அவர்தான். இக்கட்டுரை ஒரு திறனாய்வு அல்ல. ஓர் சராசரி வாசகனுக்குச் சற்றுக் கூடுதலான வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் சுரா என்ற இலக்கியத் தச்சனை உள்வாங்கிக்கொண்டதன் சுருக்கம்.

தீவிர இலக்கியமும் வெற்றியும் அரிதாகவே இணையும், அதிசயமாக ஒன்றிணைகிறபோதும் விற்பனையில் வெகுசன இலக்கியத்துடன் போட்டியிடக்கூடிய நிலமையில் அவை இருப்பதில்லை. இந்நிலையில் பல நல்ல படைப்புகளை விருதுகளே நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவ்விருதுகளில் ஓட்டைகள் இருப்பின் காலம் தூக்கி எறிந்துவிடும், நூலக ரேக்குகளில் அநாதைப் பிணமாகிவிடும். சுராவின் எழுத்து விருதுகளால் அலங்கரிக்கப் பட்டவையுமல்ல. அவரை விமர்சித்தவர்கள்கூட வாஸ்து சரியில்லையெனக் குறை கூற முடிந்ததே தவிர அவர் கட்டி எழுப்பிய மாளிகையின் கலை நுட்பங்களையோ, கதவுகளின் சித்திர வேலைப்பாடுகளையோ, சன்னல்களும் சாத்திரங்களும் கண்ணுள்ளவர்களுக்கு அளித்த காட்சிப் பிரவாகங்களையோ குறைசொல்ல முடிந்ததில்லை.

சுராவின் படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. சிறுகதைகளைக்காட்டிலும், நாவலில் அவரது முழுமையான பரிணாமத்தை- அவ்வளர்ச்சி எட்டிய உயரத்தை, கண்ட ஆழத்தை அளவிட என்பதைக்காட்டிலும்- விளங்கிக்கொள்ள முடிந்தது. அவரது சம காலத்திய அல்லது அவருக்குப் பின்பு எழுதபட்ட நாவல்களோடு ஒப்பீடுசெய்து அவர்கள் அப்படி இவர் இப்படி என்று எழுதுவதும் சரியல்ல என்பதென் கருத்து. இவை சுராவின் நாவல்கள். சுரா என்ற எழுத்துக் கலைஞனின் தூரிகைக்குச் சொந்தமானவை. கண்காட்சிக்காக அல்ல தம்மை அலைக்கழித்த சிந்தனைகளை அவற்றின் முடிவில் உருவான கருத்துக்களைப் பிறருக்குத் தெரிவிக்கத் தீட்டியவை. ”கருத்துக்களின் மோதல் பதற்றத்தையும் தரக்கூடியது ” என்பது எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியும்.

தவிர ”எதிரே இருப்பவர்களின் உறவுகளுக்குஅதிக முக்கியத்துவம் அளிக்க அளிக்கக் கருத்து மங்கிக்கொண்டே போகிறது. மனித குலத்திற்கு முக்கியம் அளிக்கும்போது கருத்து கூர்மைப்படுகிறது. இந்தக் கூர்மை எதிர் நின்று பேசும் தனிமனிதர்களை எப்போதும் காயப்படுத்துகிறது. ஒரு சில மனிதர்களுக்காக விட்டுக்கொடுக்க முடியுமா ?” என ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் ஒலிக்கும் கருநாகப்பள்ளியின் குரல் அவருடையதுதான். எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தாரென்றும் தெரிகிறது.

எனது சகமனிதனைப் பற்றிய எனது அபிப்ராயம் இது, எனது சமூகத்தைப் பற்றிய எனது விமர்சனம் இது, இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. இது கசப்பு இது இனிப்பு, என்பதைத் தாம் சுயவரம்செய்துகொண்ட வார்த்தைகளில் பேசுகிறார், வாதிடுகிறார். அவற்றுடன் உடன்பட வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் நமக்கில்லை, கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாசல்வரை வந்து வழி அனுப்பவும் அவர் தயார். உண்மையில் சுரா தன் ரசனை, தனது ருசி, தனது நிறம், தனது வாசனை, தன் விருப்பமென (சுரா வார்த்தைகளில் சொல்வதெனில்) ‘தன் உள்ளொளியைக் காண’ எதனையெல்லாம் படைத்தாரோ அவைதான் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக அவரைக் கொண்டு நிறுத்திற்று.

சுராவின் கதை மூலம்

சமையற்கலையில் தேர்ந்த ஒருவர் சமைக்கிறபோது, தான் விரும்பிய வகையில் சமைத்து, ருசித்துப்பார்த்துத் திருப்தியுற்ற பின்னரே வந்திருக்கும் விருந்தினருக்குப் படைக்க நினைக்கிறார். நல்ல எழுத்தாளரிடத்திலும் இது நிகழ்கிறது. தன்னைச் சந்தோஷப்படுத்தும் எழுத்து பிறரையும் சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கை, எனவே தனக்காக முதலில் எழுதுகிறார். தெரியவந்த செய்தி, நேர்ந்த அனுபவம் அல்லது ஏதோ ஒன்று அவர் மன அலைகளில் கரையொதுங்கத் தவறி திரும்பத்திரும்ப மேலே வருகிறது.

உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்து அறிவைப் பிசைகிறது. தூக்கத்தைக் கெடுக்கிறது. பிடறியில் அடித்து ஊமையா நீ ! பேசித்தொலையேன் என்கிறது. எனவே சொல்ல வேண்டியதைத் தீர்மானிக்கிறான். அதை உரைக்கவும் கேட்கவும் மறுக்கவும் ஆட்கள் வேண்டும், பொருத்தமானவர்களையும், தன் கலையாற்றலுக்குப் பங்கம் நேராத மொழியையும் தேர்வு செய்கிறான். சிறந்த படைப்புகள், நல்ல எழுத்தாளர் எனக் கொண்டாடப்படும் மனிதர் அனைவரிடத்திலும் இது நிகழும்.

காற்றாடி மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து மண்ணில் விழுந்த காட்சியை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது இப்பொழுதுகூடப் பசுமையாக என் நினைவில் தங்கி நிற்கிறது… அடி மரம் அலற மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சாயும். கிளைகள் தரையில் மோதி நொறுங்கும். அதிர்ச்சியில் மரம் மேலே சற்று எம்பி உயர்ந்து மீண்டும் தொப்பென்று விழுந்து சரியும். பாரதப்போர் முடிந்த குருஷேத்திரம் மாதிரி பிணக்காடாய் காட்சி அளித்தது தோப்பு.” (‘ஒரு புளியமரத்தின் கதை’ பக்.57) இச்சம்பவத்தினைக் கண்ட சுரா மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவு ‘ஒரு புளிய மரத்தின் கதை’. ‘ஜே.ஜே சில குறிப்புக’ளை எழுதத் தூண்டியது எது ?

தமிழ் நாவல்களில், அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனதைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா, தொடர்கதைகள் ! ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசு சீட்டு யாருக்கு விழும் ? கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால். நானும் மாறி மாறி அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பேன். யூகங்களை நொறுக்கி எறிந்துவிடுவார்கள் மன்னன்கள்.” (‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ . பக்-14)

மேற்குலகும், இந்தியாவின் பிற மாநிலங்களும் துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் இறங்க, அவ்வாறான முயற்சியில், பரிசோதனையில் தமிழ்நாடு இல்லை என்ற கவலை அவர் மனதைத் தொடர்ந்து அரித்து வந்திருக்கிறது. சுரா மட்டுமல்ல, அன்றைக்கு நம்மில் 99 விழுக்காட்டினர் இவற்றை வாசித்தவர்கள்தாம். ஆனால் சுரா இதற்குத் தம்வழியில் தீர்வுகாண விரும்பினார். அத்தீர்வை அல்பெர் கமுய் மரணத்துடன் இணைத்து வசீகரித்த அண்டைமாநில எழுத்தாளனில் தன்னைக் காணமுனைந்ததன் விளைவு ‘ஜே.ஜே சில குறிப்புகள்’.

உண்மையைச் சொல்லப்போனால் நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய வாசனையை நான் அறியாது இருந்த காலத்தில் சுராவை நக்கல் செய்யும் தொடரொன்றில்தான் சுஜாதா கைகாட்ட, ‘ஜே.ஜே. சில குறிப்புக’ளை வாசிக்கத் தொடங்கினேன். இன்று எல்லையற்ற கற்பனைகள், வாசகர்களை உணர்ச்சிக்கடலில் தள்ளும் மெலோ டிராமாக்கள் போன்றவற்றைப் படைபிலக்கிய உலகம் ஓரளவு நிராகரித்துவிட்தென்றுதான் கூற வேண்டும் மேலை நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக்கப்பட்ட கல்வி அறிவு இந்த மாற்றத்திற்கு மூலகாரணம். எனினும் அம்மாற்றம் இங்கு மெதுவாகவே நிகழ்ந்தது.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் பிறப்பு எப்படி நிகழ்ந்தது? ஆசிரியர் கூற்றின்படி ”’ஜே.ஜே சில குறிப்புக’ளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தது 1939 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், இரண்டாவது உலகமகா யுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் பற்றிய மயக்கம் ! இன்று அது இல்லை.” என்று நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆக இக்காலத்தைத் தெளிவாக வாசகர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்பதோடு, பாலுவைப் பற்றியும் விரிவாகப் பேச விஷயங்கள் இருக்கின்றன என்று சுரா நினைத்தார்.

இவை அவருடைய நாவல்களின் தோற்றத்திற்கான காரணங்கள். இப்பிரச்சினைகளை நாவலாக்குவதெப்படி, அதற்கான கதைமாந்தர்களைத் தேர்வுசெய்வது எப்படி, எதைச் சொல்வது, எப்படிக் கூறினால் தன் எண்ணம் சிறக்கும் என்றெல்லாம் பின்னர் சிந்தித்திருக்க வேண்டும்.

உள்ளொளியும் உண்மையும்

”ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” (கவிஞர் சுயம்புலிங்கம்) ரகப் படைபிலக்கிய விழாக்காலக் கோவில் யானைகளுக்கிடையில், ”நாமார்க்கும் குடியல்லோம்” எனத் திரிந்த காட்டுயானை சுரா. எவருடனும் எவற்றுடனும் சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளி. ”எங்கும் இந்தக் கதைதான், பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைபித்தனும் எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான்.” (ஜே.ஜே சி.கு. பக்கம் – 36) என்று தாம் கொண்டாடிய பாரதியையும் புதுமைப்பித்தனையுங்கூட கண்டிக்கக் காரணங்கள் இருந்தன, அத்தகைய ஒழுக்கமீறலைத் தாம் செய்யக் கூடாது எனத் தீர்மானமாக இருந்திருக்கிறார்.


”அவன் எழுத்தாளன், தன் உள்ளொளி காண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான விஷயமல்லவா இது ? அபூர்வம் அல்லவா ?” (ஜே.ஜே சி.கு. பக்கம் -9)

”சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது” (ஜே.ஜே சி.கு. பக்கம் – 11)

உள்ளொளியைக் காண்பதும் தம்மைச் சுயவிசாரணை (introspection) செய்து அதன்மூலம் தம்மையும், தம்மைச் சுறியுள்ள மனிதர்களையும் நிகழும் சம்பவங்களையும் மூளையில் பரப்பி, கொழுப்பு நீக்கி, கசடுகளிலிருந்து பிரித்தெடுத்துக் கண்டறிந்த உண்மைகளை அந்தந்தப் பாத்திரங்கள் ஊடாக அவற்றின் தன்மைக்கேற்ப மொழிநடையில் பகிர்ந்துகொள்வதும் மூன்று நாவல்களிலும் இயல்பாய் நடக்கிறது.

”அது தானாகப் பிறந்தது, தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்டது பூ பூத்தது. பூத்துக் காய் காயாக காய்த்ததில் இலைகள் மறைந்தன. ……வானத்தை நோக்கித் துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம் சுய மரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது.” (ஒ.பு.கதை பக்.-14)

”கனவானுக்குத் தனது தோரணைகள்மீதும் தனது பண்பாடுகள்மீதும் தாங்க முடியாத வெறுப்பு ஏற்படுகிறது… தான் சன்மார்க்கியல்ல, வெறும் மனிதன் என முச்சந்தியில் நின்று உரக்கக் கூவி , தனது மேலங்கியைக் கிழித்தெறிந்துவிட்டு இன்ப வெள்ளத்தில் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.” (ஒ.பு.கதை பக்.68)

”மனிதன் தன்னைச் சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப்படுகின்றன… இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள்… அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது அவன் போட்டுக்கொண்ட அடிகள். இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்க வேண்டும். அவன் இயற்கையாய் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம்.” (ஜே.ஜே.சி.கு. பக் 42)

”எனக்குப் புத்திசாலி என்று பெயர். ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து கனகச்சிதமாக அறிமுகப்படுத்துகிறவன் என்றுபெயர் பிறர் நினைக்கும் அளவுக்குச் சாமர்த்தியம் என்னிடம் இல்லை என்பது உள்ளூரத் தெரிந்துகொண்டே இருக்கிறது. மற்றவர்களுக்கும் அது தெரிந்துவிடாமல் மறைத்துக்கொண்டிருப்பதுதான் உண்மையில் என் சாமர்த்தியம். என் வேஷம்தான் நான் என்று பிறர் நினைக்கும்படி செய்துவிடுகிறேன்.” (‘கு.பெ.ஆ.’ பக்.182)

தம்மைப் புடம்போட்டுப் பார்த்துத் தம்மைப் பற்றிய உண்மைகளை ஏற்பதோடு அவற்றைப் பிறமனிதருடன் பகிர்ந்துகொள்ளச் சுயபுனைவு(autofiction) உத்தி. ஒரு சாதுர்யமான தேர்வென்றுதான் சொல்ல வேண்டும். மூன்று நாவல்களுமே சுய புனைவு வகை. இவற்றுள் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சமுத்திரம். கதை மாந்தர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகம். எனவே படர்க்கையில் சொல்லப்படுகிறது.

‘ஒரு புளியமரத்தின் கதையி’லும், ‘ஜே.ஜே சில குறிப்புக’ளிலும் கதை மாந்தர்களின் எண்ணிக்கை குறைவு; எனவே தன்மையில் உரைக்கச் சௌகரியம். படைப்பாளிகள் அனைவருமே புனைவென்று முன்வைக்கும் எழுத்தில் தங்கள் உண்மை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவே செய்கிறார்கள். எனினும் சுயபுனைவுகளில் உண்மைக்குக் கூடுதலாக இடமுண்டு, அவை போலி உண்மைகளாகவும் இருப்பதில்லை.

சுராவும் கதை மாந்தர்களும்

சுராவின் பாத்திரப் படைப்புகளில் எனக்குப் பிரியமானவர்களில் அநேகர் ‘குழந்தைகள், பெண்கள் ஆண்க’ளில்தான் இருக்கின்றனர். பாலு என்கிற பெரிய குடும்பத்துக் குழந்தை உள்ளத்தைப் போலவே, வறுமையினால் பிஞ்சிலே பழுத்திருந்த லச்சம் சாதுர்யம் என்னைக் கவர்ந்தது. லச்சத்திற்கும் பாலுவிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்து வாசிக்க வேண்டியவை. எஸ்.ஆர்.எஸ்ஸுக்குவாய்த்த லட்சுமியைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.

”முல்லை பூத்துக்கிடக்கு. போய் பாருங்கோன்ன்னு தினசரி சொல்றா ஆனந்தம். நடக்க முடிஞ்சால்தானே ? அவ வச்சுக்கக் கூடாது. எனக்கு வச்சுக்க முடியாது!” என எத்தனை எளிதாகச் சொல்ல முடிகிறது. எஸ்.ஆர்.எஸ் என்ற சாமர்த்தியசாலி இருட்படிமத்தை வெகு எளிதாகத் தோற்கடிக்க நறுமணத்துடன் ஜொலிக்கும் பெரிய தீச்சுடர் அவள். பிறகு ”ரதி வீட்டில் ரம்பை சமையற்காரி” என்பதுபோல வந்துசேர்ந்த ஆனந்தம். பல கை மாறிய நாராயணி, தளியல் சேது அய்யர், வள்ளி…

மூன்று நாவல்களிலுமே கதைகள், கிளைக்தைகள் அதற்கேற்ப பாத்திரங்கள்.
“அடேயப்பா எத்தனைக் கதைகள் ! எவ்வளவு விசித்திரமான பாத்திரங்கள் ! எவ்வளவு கோணலும் நெரிசலுங்கொண்ட மன இயல்புகள் !” (ஒ.பு.கதை பக்.15) என சுராவின் வார்த்தைகளைக் கொண்டே நாமும் வியக்க வேண்டியுள்ளது.

ஜே. ஜே. பாத்திரம் உருவாக ஆல்பெர் கமுய் மேலிருந்த பிரியமும், சுரா நேசித்த மலையாள எழுத்தாளரும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் ஜே. ஜே சில குறிப்புகளை எழுதுகிறபோது அவனாகவே சுரா வாழ்ந்திருப்பார் என்பதுதான் நிஜம். ”ஜே.ஜே – நான். நான் ஆகவேண்டியதை ஜே. ஜே ஆகியிருப்பது.” (ஜே.ஜே. சில குறிப்புகள் பக். 23)

சுயபுனைவு என்பதால் கற்பனை மனிதர்கள் குறைவு மூன்று நாவல்களுமே பாலுவைச் சுற்றிவருபவை. பாலுசார்ந்த மனிதர்களையும் அவன் அனுபவங்களையும் பேசுபவை. பெரும்பாலான கதை மாந்தர்கள் கற்பனைகளல்ல என்பதை ஊகிப்பதில் சிக்கல்களில்லை.

”1958 இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் தங்கியிருந்தார். நானும் இலக்கிய நண்பரும் வெகுநேரம் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கைப் பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரிகடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பதுபோலத் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம்பெற்றாள்,” என்பது தமது பாத்திரத் தேர்வு குறித்து சுரா தரும் வாக்குமூலம். சுராவின் அபிமானம் பெற்ற ஜோசஃப் ஜேம்ஸ், எம்.கே அய்யப்பன், பேராசிரியர், சாரம்மா. தாமோதர ஆசான், செல்லத்தாய், வள்ளிநாயகம் பிள்ளை ;எஸ்.ஆர்.எஸ், ரமணி , லட்சுமி, லச்சம், டாக்டர் பிஷாரடி போன்ற நிஜ மனிதர்களும் சரி, அவர் சண்டை பிடிக்கிற கற்பனை மனிதர்களும் சரி வேறு கண்டத்திலிருந்து குதித்த மனிதர்களாக இருக்க முடியாது. பாலுவின் தேசத்தைச் சேர்ந்தவர்களே.

சுராவின் இலக்கியம்

”கதைகளின் முடிவுகள் மட்டுமல்ல வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு முக்கியம்” (ஜே.ஜே சி.கு. பக்கம் - 90)

”தோற்றங்கள் அல்ல தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையே இலக்கியத்திற்கு ஆதாரமாகும்.. இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை.” (ஜே.ஜே சி.கு. பக்கம்-91)

உள்ளொளியைக் காண்பது, சிந்தனையை உண்மை மொழியில் தெரிவிப்பது, அத்தெரிவித்தலுக்கு உபயோகிக்கும் சொற்களைக் கவனமாகத் தேர்வுசெய்வது ஆகியன சுரா வகுத்துக்கொண்ட படைப்பு நெறிகளைத் தெரிவிக்கின்றன. மூன்று நாவல்களிலும் மறந்துங்கூடத் தான் வகுத்துக்கொண்ட இலக்கியக் கோட்பாட்டிலிருந்து விலகியவர் அல்ல. உதாரணம் காட்ட மூன்று நாவல்களையும் இங்கே பிரதிபடுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையையும் இலக்கியப்படுத்தியிருக்கிறார். ‘ஒரு புளியமரத்தின் கதை’யில் வரும் நவீன பூங்காவின் காட்சிச் சித்தரிப்பு. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்க’ளில் வரும் மழைக்காட்சி, ஏன் செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது என நாம் அற்பமென்று அலட்சியப்படுத்தும் ஒரு துக்கடா காட்சியைக்கூட still-frameஆக மாற்றும் அழகும் கலைதான், இலக்கியம்தான்.

அவரது எள்ளல் நடையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
”உத்தியோகம் பார்த்த காலங்களில் ஒழுங்காக இருந்து பரிதவித்து விட்டாராம் அவள் அப்பா. அதற்குப் பரிகாரமாக பென்ஷன் வாங்கியதும் பிருஷ்டத்தை எல்லோரும் பார்க்கும்படி சொரிந்துகொள்ள வேண்டுமாம். சுதந்திரத்தைப் பற்றித்தான் என்னென்ன கற்பனைகள்.” (‘குழ.பெண்.ஆண்கள்’ பக்-236)

”புளியமரத்தடியைப் பெருக்கிய தோட்டி அன்று விசேஷ சிரத்தை எடுத்துக்கொண்டு பெருக்கினான். கீழே விழுந்துகிடந்த சுதந்திரக் கொடியை மட்டும் சிறுகுழந்தைக்குச் சட்டை தைக்க உதவும் என்ற எண்ணத்தில் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான்.” (‘ஒ.புளி.கதை’ பக்.76)

”அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியிருந்த சம்பளத்தொகை எங்களுடைய ஏழை முனிசிபாலிடியை பொறுத்தவரை கௌபீனத்தை அவிழ்த்து தலைப்பாகைக் கட்டிக்கொள்ளும் காரியம்.” (‘ஒ.புளி.கதை’ பக்.60)

இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ‘ஜே.ஜே சிலகுறிப்புகள்’ நூலுக்கும் அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள் உண்டு. சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கை. புரிதல் நம்முடையதாக இருக்கலாம்; நாமாகக் கற்றதுபோகச் சிலவற்றை இச்சமூகமும் போதிக்கிறது. பால் பூத்திற்குச் செல்லும்போதும், பேருந்தில் இன்னொருவர் இறங்கிய நிறுத்தத்தில் நாமும் இறங்க வேண்டியிருந்தது என்பதாலும், உணவு விடுதியில் எதிர்மேசையில் இருப்பவர் ஆர்டர் செய்ததை நாமும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம் என்பதாலும், சவரக்கத்தியைக் கழுத்தில் இறக்குகிறபோது தேவையின்றி வந்துபோகிற அச்சமும் எல்லோருக்கும் பொதுவான அனுபவங்கள்தான், ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் மொழியில்தான் இலக்கிய ஆளுமைகள் வேறுபடுகிறார்கள்.

நன்றி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் வலைப்பதிவு


https://nagarathinamkrishna.com