அவருக்கு அளிக்கப்பட்ட உயரிய விருது அது. அவரின் உரைநடையில் காணப்படும் எள்ளலும், நகைச்சுவையுடன் காணப்பட்டார். வட நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தமிழ்ப் படைப்பாளிகளை மனம் திறந்து பாராட்டி அறிமுகப்படுத்திய வண்ணம் இருந்தார். இடையில் ஒரு நாள் மாலையில் சாகித்திய அகாதமியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அப்போது அவர் காட்டிய உற்சாகமும் அவர் கட்டுரை வாசித்த விதமும் அவரை இளையவராகவே காட்டிக்கொண்டிருந்தது
‘கதா - சூடாமணி’ பரிசளிப்பு ஏற்புரையை சு.ரா. தமிழிலேயே குறிப்பிடத்தக்கதாய் வழங்கினார். கதா பரிசு ஒரு வார விழாவின்போது உறைந்த பனிமூட்டத்தினூடே அவர் உருவம் தோன்றி மறைந்து நண்பர்களுக்கு உவகை தந்து கொண்டிருந்தது . பனி மூட்டத்தினூடே அது நிரந்தரமாகிவிட்டது.
கனவு இதழ் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் அது செகந்திராபாத்திலிருந்து வர ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே அவர் கனவுக்குக் கவிதைகள் அனுப்பியிருந்தார். வெளி மாநிலத்திலிருந்து வரும் இலக்கிய இதழ் என்ற முறையில் அதன்மீதான அக்கறை இருந்தது. கனவின் சில இதழ்களின் கடைசிச் சில பக்கங்கள் செகந்திராபாத் எழுத்தாளர்களுக்கானது என்ற அளவில் அந்தச் சிறு சமரசம் தேவைதானா என்ற கேள்வியை எழுப்பியதாக என்னிடம் ஜெயமோகன் தெரிவித்தார். அதன்பின் அந்த உள்ளூர்ப் பக்கங்களைக் கைவிட்டேன். எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘மாறுதடம்’ அட்டையில் எனது சிறுகதைகள் பற்றிய அவரது அபிப்பிராயத்தை ‘காவ்யா’ சண்முகசுந்தரம் அச்சிட்டிருந்தார். ‘ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்பில் இவ்வகை வாசகங்கள் அட்டையில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் சு.ரா.வின் கருத்து இடம்பெற்றிருப்பது சிறப்பானது” என்று சொன்னார் சண்முகசுந்தரம்.
காலச்சுவடின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றபோது சு.ரா.வைச் சந்தித்தேன். சுகந்தியின் கவிதை ‘காலச்சுவடு கவிதைகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருப்பதும் அப்பிரதியை கூரியரில் அனுப்பியது ஏனோ திரும்பி வந்ததையும் குறிப்பிட்டு சிபிச்செல்வன் பிரதி தந்தார். அப்போது காலச்சுவடில் வெளிவந்த எனது சிறுகதை ‘ரூபங்கள்’ பற்றி நினைவுகூர்ந்து சிலாகித்தார் சுந்தர ராமசாமி. அன்று அவரின் பேச்சு காலச்சுவடு கவிதைத் தொகுப்பு பற்றியதாயிருந்தது. எது கவிதை என்பதைவிட எது கவிதையில்லை என்பது பற்றினதாக அவரின் பேச்சு இருந்தது. எள்ளலும் நகைச்சுவையுமான பேச்சு சுவாரயஸ்யமாக இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த சில இடதுசாரி நண்பர்களுக்குக் கவிதை பற்றின அவரின் விளக்கம் உவப்பானதாக அமைந்திருக்கவில்லை. எரிச்சல் அடைந்தனர். கவிதையை ரசனையோடும், வாழ்க்கையின் தரிசனமாகவும் பார்த்த அவரின் இலக்கியப் பார்வைமீது வறட்டு இடதுசாரிகள் எரிச்சல் அடைவது சாதாரணம்தான்.
சாந்தி போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் இடம்பெற்ற அவரின் ஆரம்பச் சிறுகதைகளை முன் வைத்து அவரின் படைப்பின் முற்போக்குத் திசையையும் படைப்பாளுமையையும் மனிதநேயப் பண்பையும் அவரின் மறைவின்போது இடதுசாரித் தலைவர்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைகள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், கட்சி சார்ந்த இலக்கிய அமைப்புகளில் இடம் பெறாத எழுத்தாளர்களுக்கு நேரும் பல்வகைப் புறக்கணிப்பும் அவர்கள் மீதான அவதூறும் கீழான விமர்சனங்களும் சுந்தர ராமசாமிக்கு வாழ்க்கை முழுவதும் நேர்ந்திருக்கிறது. அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மராய் இவ்வகை அவதூறு அம்புகளைத் தொடர்ந்து சுமந்தபடியே தன் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். இது அவரை வேதனைப்பட வைத்திருந்தாலும் தமிழ் மொழி, கலாச்சாரத்திற்குத் தமிழ்ப் பிரதேசத்திற்கு அப்பால் நிகழ்ந்த அவமானங்கள் அவரைக் குப்புறத் தள்ளியிருக்கிறது. தனிப்பட்ட துயரங்கள் மீறி மொழி சார்ந்த அவமானங்கள் அவருக்கு நிரந்தரப் புண்களாகி விட்டிருக்கிறது. இந்தப் புண்களை ஆற்ற வேண்டி அமரத்துவப் படைப்புகளில் அக்கறை கொண்டு எழுத்தியக்கத்தில் ஈடுபட வேண்டியி ருந்திருக்கிறது. வறட்டுத்தனம், வியாபார நோக்கம் கொண்ட படைப்பாளிகளை எரிச்சலடையச் செய்வதும், வாழ்க்கையினைத் தரிசனமாகக் கொண்டதைத் தனது படைப்புகளின் மூலம் முன் நிறுத்துவதும் அவரின் வாழ்நாள் இலக்கியப் போராட்டமாக இருந்தது.