(சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டு வந்தபோது உடனடியாக மனத்தில் தோன்றியது அவரது ‘சவால்’ கவிதைதான்.
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக்கட்ட கயிறுண்டு உன் கையில்
வாளுண்டு என் கையில்
இந்தக் கவிதையை அவர் எழுபதுகளின் துவக்கத்தில், எழுதாமல் இருந்து பின் எழுதவந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது இலக்கிய வாசகர்கள் அறிந்த ஒன்று. இந்தக் கவிதையை எழுதப்படாத துவக்கக் காலத்திலேயே அவர் மனதில் எழுதிவிட்டார். அவரது கட்டுரைகளின் வழி தன் இருப்பு குறித்துத் தெரிவிக்க முயன்ற சாரம் அதுதான். இதனை 1963 வாக்கில் பாரதி குறித்து எழுதவந்த கட்டுரையிலேயே காணலாம். எனவே சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடுதான் விரும்பி இலக்கியத்துறைக்கு வந்துள்ளார். இந்தக் கனவுகளே க.நா.சு. போல சற்று மூர்க்கமாகத் தமிழ் இலக்கியச் சூழலோடு மல்லுக்கட்டியும் தனது இலக்கிய வீச்சை வெளிப்படுத்த இயக்கியிருக்கிறது. இந்த இலக்கியப் பாத்திரத்தைத் தனது கட்டுரைகளின் வழி சிறப்பாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
சுந்தர ராமசாமி பொருளாழ்ந்த நிலையில் ஒரு தனித்துவமான மொழி நடை (Style) யைக் கையாண்டார். முன்னோடிகளின் செல்வாக்குத் தன்னிடம் வெளிப்பட்டிருக்கலாம் என்பதைச் சொல்லவந்த சு.ரா., ‘வாடைக்காற்று அடிப்பதால் மலையில் மழையிருக்கலாம் என்பது போன்ற அனுமானம்’ என்றும், ‘சம்பட்டியால் தாக்குவது போலவோ உரலில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வது போலவோ இது நிகழ்ந்திருக்கக் கூடும்’ என்று விசயத்தைத் தன் நடையில் காட்சி ரூபமாக்கி விடுகிறார்.
புதுமைப்பித்தனைப் பற்றிச் சொல்ல வரும்போதெல்லாம் ஆவேசம் கொண்டுவிடுகிறார். ‘தன்னுள்ளிலிருந்து கலையின் புயலைப் பரப்பி அப்புயல் இட்டுச்சென்ற திசை வழிகளில் சுழன்று ஒரு அசுரத்தன்மைக்கு ஆளான கலைஞர் அவர். இவருடைய தன்னிச்சையான வேகச்சுழற்சியில் கலையுலகில் சம்பிரதாய வேலிகள் எத்தனையெத்தனையோ சரிந்தன.’ ‘தான் ஆற்ற இருக்கும் வித்தியாசமானப் பங்கை முன்கூட்டி உணர்ந்த ஒரு கலைஞன் மிகுந்த தன்னம்பிக்கையோடு தன் மேதைமையைக் கிள்ளி தெருவில் நாற்புறமும் வீசிக்கொண்டு ஓடுவதைப் போன்ற சித்திரத்தை எழுப்புகின்றன இவரது கதைகள்.’
‘பத்திரிக்கைகளின் முதல் தேவையாகச் சிறுகதைகள் இருந்த காலத்தில் புதுமைப்பித்தன் அதனைப் பூர்த்தி செய்த விதம் நீச்சல் குளத்திற்குள் ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது’ என்று மொழியில் பித்தனை வசப்படுத்துவார்.
சிற்றிதழ்காரர்களிடம் தோன்றும் வர்த்தகரீதியான பத்திரிகைக் கனவு யதார்த்த உலகிற்கு ஒவ்வாதது என்பதை ‘சர்குலேசன் ஓங்கிவிடும் என்கிறீர்கள். மீண்டும் கனவு. தங்களுடன் பேசும் போதெல்லாம் மயக்கங்களின் குகைகளிலிருந்து நிஜ உலகத்தின் சூரிய ஒளிக்குத் தங்களைக் குப்புறப்பிடித்துத் தள்ளிவிடுவதற்கு ஒரு தாயத்து இருக்கக் கூடாதா என்று நினைப்பேன்’. ‘நமது தமிழ் மாதாவையும் பாரத மாதாவையும் உலக அரங்கில் தூக்கி வைத்தபின்தான் அவர்கள் முடி இறக்கிக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது,’ என்று சூழலின் முரணை நண்பர்களை முன்வைத்து எழுதுகிறார். சுந்தர ராமசாமியைக் கடுமையான யதார்த்தவாதி என்று சொல்லும்போதே, அவருள் இருக்கும் ‘கனவு’ தான் மேலதிகமாக உழைக்கவைத்திருக்கிறது.
சு.ரா. நடையின் மற்றொரு சிறப்பு இலக்கிய ஆளுமைகளின் வெளிப்பாட்டைப் படிமமாக வரைந்து காட்டிவிடும் திறன் அவருக்கு இலகுவாக வெளிப்பட்டிருப்பதும்தான். பாரதியின் ஆளுமையைப் பற்றி ’பாரதி ஒரு இடத்தில் வளரும் மரம் மட்டும் அல்ல. சுற்றி இருக்கக் கூடிய சாரங்களை ஒட்ட உறிஞ்சக்கூடியவன், நமக்குச் சக்கைதான் மிஞ்சுகிறது என்று நான் சொன்னது க.நா.சு. பாரதியை மனதில் வைத்துக்கொண்டுதான். எனக்காக இன்னொரு விசயம் தோன்றியது. அதாவது பாரதி பயன்படுத்திய எந்தச் சொல்லை நாம் பயன்படுத்தினாலும் அது பாரதி பக்கம்தான் போகிறதே தவிர நம் பக்கம் நிற்கவே செய்யாது. அப்படி ஒன்றும் அந்தச் சொற்கள் எல்லாம் பாரதிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. ஆனால் பாரதி பயன்படுத்திவிட்டால் அவனது முத்திரை அந்த வார்த்தைகள் மேல் அழுத்தமாக விழுந்துவிடுகிறது. அந்த வார்த்தைகளை நாம் நம் கவிதைக்குப் பயன்படுத்திக்கொள்ளவே முடியாது என்று ஆகிவிடுகிறது.’ என்று உணர்ந்து வெளிப்படுத்துகிறார்.
புதுமைப்பித்தன் கலை வெளிப்பாடு எத்தகையது என்பதை ‘கலையை அளவுகோலுக்கு ஏற்றபடி தயாரிப்பதைவிடத் தனது ஆளுமைக்கு ஏற்றபடி சதையும் ரத்தமுமாய் நம்முன் தள்ளிவிட்டுச் சென்றுவிடுகிறது. சீவுளி போட்டுச் சீவிக்கொண்டிருக்க அது பொறுமை கொள்வதில்லை. கலையின் பூர்ணத்துவத்தை விடவும் இயற்கையின் ஜீவன் துடிப்பதையே அது சற்று மோட்டாவாக இருந்துவிட்டாலும் பாதகமில்லை. ஆசைப்படுகிறது இவருடைய கலை மேதமை’ என்று புதுமைப்பித்தன் நாடியைப் பிடிக்கிறார்.
பிற உலக எழுத்தாளர்களிடமிருந்து தாஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து எப்படி வித்தியாசமானது என்பதை, ‘தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்டு குகை, முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளையிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச்சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், வனாந்தரம். அங்கு நறுமணங்கள், துர்நாற்றங்கள், கடுங்குளிர், பொறிபறக்கும் வெப்பம், எண்ணற்ற ரகசிய அறைகள், இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தி தஸ்தயெவ்ஸ்கி முன்செல்ல நாம் பின் தொடர்கிறோம்.’ என்று மொழியில் தஸ்தயெவ்ஸ்கி ஆழத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகள் எத்தகையது என்பதைக் காட்டுகிறார்.
கட்டுரையைத் துவங்கும் இடத்திலேயே அதன் உயிர் நாடியான இடத்தைத் தொட்டுவிடும் சொல்பக்குவம் அவரிடம் உண்டு. ஜீவாவைப் பற்றிய கட்டுரையை “‘ஜீவா மறைந்து விட்டார்’ நண்பர் சொல்ல, கேட்ட நண்பர் ‘ஆ’ கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதா?’ என்று ஸ்தம்பித்துவிட்டார்” என்று தொடங்கிய இடத்திலேயே ஜீவா வாழ்நாள் முழுக்க உழைத்த உழைப்பின் திரட்சி வாசகர்களிடம் வெளிப்பட்ட விதத்திலிருந்து காட்டுகிறார். அப்படிக் கட்டுரையைத் தொடங்கி, “சிறு பிராயத்திலிருந்தே நெஞ்சோடு வளர்த்த ஒரு கனவு அவருக்கு இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. மனித வெள்ளத்தை அவர்களில் ஒருவனாய் முன்னின்று தலைமை தாங்கி இட்டுச்சென்று, அதில் உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதே அது.” என்று ஜீவா இயங்கிய விதம் எத்தன்மையது என்று காட்டுகிறார்.
சுந்தர ராமசாமி தன் இலக்கிய முன்னோடிகள் பற்றி, தன் சக எழுத்தாளர்களைப் பற்றி, தன்னோடு இணைந்திருந்து- பிரிந்திருந்து இயங்கியவர்களைப் பற்றி அவர்களின் குணநலன்களைப் பற்றி, சரிவுகளைப் பற்றி அவர்களது ஆளுமை பற்றி, அவர்களது செயல்பாடுகள் பற்றி, கோபதாபங்கள் பற்றி, இலக்கிய நோக்கங்கள், அர்ப்பணிப்புகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். இதில் அனைவரையும் விமர்சன கண்ணோட்டத்துடன்தான் அணுகி இருக்கிறார். க.நா.சு.வுக்கும் சு.ரா.விற்குமான உறவு குரு-சிஷ்யன் உறவுபோலத்தான். ஆனால் எந்த இடத்திலும் அவரை மிகையாகத் தூக்கவோ, வக்கிரமாகத் தாழ்த்தவோ செய்ததில்லை.
க.நா.சு.வின் மனநிலை பற்றி – எல்லாம் முக்கியமானது தான். எதுவும் அவ்வளவு முக்கியமில்லை’ என்பது போல ஒருவித இரட்டை மனநிலையில் இயங்கக்கூடியவர் என்கிறார். அவரது எழுத்தின் உள்ளோட்டம் குறித்து இப்படிச் சொல்கிறார். ‘சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமா என்று கேட்டால் அவர் வேண்டும் என்றுதான் சொல்வார். ஆனால் எழுத்தில் என்ன மனோபாவம் வெளிப்படும் என்றால் ஒரு Statues-quoவைத் தக்கவைத்துக்கொண்டு போவதுதான் நல்லது; பெரிய மாற்றங்கள் எதுவும் வேண்டாம் என்ற மனநிலையில்தான் அவர் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்கிறார்.
க.நா.சு.வின் விமர்சன எல்லை குறித்து “க.நா.சு. பண்டிதத்தை முக்கியமான எதிரியாகக் கண்டார். பண்டிதத்தை ஆராயப் புகுத்தவர். அம்முகங்களில் ஆபாசமாய்ப் பிதுங்கிய ஜாதி அரசியலையும் கண்டிருப்பாரெனில் அவருடைய விசாரணை இலக்கியத்திலிருந்து விரிந்து அரசியல், பொருளாதார நிலைகள், சமூக இயல் ஆகியவற்றைக் கவனிக்கும் வீச்சில் முழு வாழ்வுக்குமே அவரைத் தள்ளிக்கொண்டு போயிருக்கும்.” அவர் அவ்வாறு இலக்கியத்தின் வழி, வாழ்வின் ஆழங்களுக்குள் செல்லவில்லை என்று மதிப்பிடுகிறார். க.நா.சு.வை, ஒரு இலக்கிய சிபாரிசுகாரர் என்றே குறிப்பிடுகிறார். இந்த வகையில் சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, மௌனி, பிரமிள், ஜி. நாகராஜன் என அவரோடு பழகிய இலக்கிய நண்பர்களின் பலம் பலவீனம் குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறார்.
பிரமிளிடம் ஒருவித பிடிவாத குணம் மேலோங்கி இருந்ததை இப்படிச் சொல்கிறார். “சிவராமூ, அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து பல சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார். மிகவும் பெருந்தன்மை கொண்ட காரியமாக அவை அந்நேரங்களில் பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல. தன் முழு மூளையையும் தன்னை நியாயப்படுத்தவே வீணாக்கிக்கொண்டிருப்பார். வெற்றிபெற வேண்டும் என்ற ஆத்திரம்தான் அவருக்கு முன்னுக்கு நிற்கும். தளையசிங்கத்திடம் விமர்சனங்களுக்கு மேலாக ஒரு தார்மீகமான குரல் இருக்கும்.”
பிரமிளை, ‘அவர் ஒரு மைனர் பொயட்தான்; மேஜர் பொயட் இல்லை. இவரை மேஜர் பொயட் என்றால் கம்பனை என்னவென்று சொல்வது’ என்று கேட்கிறார். எனக்கு பிரமிள், கவிதையை ஒவ்வொரு வார்த்தைச் செங்கல்லாக எடுத்துப் பொருத்துகிறாரோ என்றுபடுகிறது. அவ்விதம் சொற்களை எடுத்து அடுக்க அடுக்க உணர்வின் தளம் கழன்று போய்விடுகிறது. அப்புறம் படிமம்தான் கவிதை என்று அவர் மிதமிஞ்சி நினைந்துச் செயல்பட்டது இன்று சிவுக்கென்று படுகிறது. படிமம் ஒரு உத்திதானே தவிர வாழ்வின் கொந்தளிப்பல்ல என்று எனக்குப்படுகிறது.
பிரமிளின் இலக்கிய உரையாடல் எப்படி இருக்கும் என்பதை “சாதாரண வாசகர்களுக்குப் புரியாமல் இருக்கும். வரிகளை (கவிதை) மனதிற்குள் தெளிவுபடுத்தி வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் ஏற்படும்போது ஒரு Casual தன்மையுடன் விளக்கம் தந்து பிறரை ஆச்சரியப்படுத்தும் சுபாவம் அவருக்கு உண்டு’ என்று அவரது நடத்தையை வெளிப்படுத்துகிறார்.
ஜி. நாகராஜன் குறித்தான சு.ரா.வின் நினைவோடையைப் படிக்கிறபோது ஈவு இரக்கமற்ற கெட்டித்தட்டிப்போன இதயம் படைத்தவர்போல ஒரு தோற்றம் உருவாகிறது. ஆனால் ஜி.நாகராஜனின் நண்பரான கர்ணன், அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்ணீர் மல்க இரவு நேரங்களில் பாடும்போது ரொம்ப துக்கமாக இருக்கும் என்று என்னிடம் சொன்னார். ஒருவேளை ஜி. நாகராஜன் இவ்விருவரிடமும் இருவேறு விதமாக வெளிப்படுத்திக்கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சு.ரா. அந்தப் பக்கத்தைப் பார்க்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது.
க.நா.சு.வை ஒருவித இதத்ததுடன் அணுகியிருக்கும் சு.ரா., செல்லப்பாவைக் கறாரான பார்வையில் பார்த்திருக்கிறார். பிரேமிளுக்கும் சு.ரா.விற்குமான உறவின் விரிசல்கள் செல்லப்பாவைக் கடுமையாகப் பார்க்கவைத்திருக்கும் என்று நம்புகிறேன். செல்லப்பாவின் இலட்சிய வேட்கையை உயர்வாகப் போற்றினாலும் க.நா.சு.விடம் காட்டிய இதம் இல்லை.
செல்லப்பாவின் பார்வையில் ஒருவிதப் பழமையின் களிம்பு இருப்பதாகச் சொல்கிறார்; இருக்கலாம். அவரது சிறுகதைகள் வடிவச் செம்மை – சிறுகதையின் தொனிப்பொருள் லட்சியம் நோக்கியோ, லட்சியங்களின் சரிவை நோக்கியோ அமைந்தவை என்று சொல்லி இருக்கிறார். என்றாலும் செல்லப்பா சிறுகதைகளில் வெளிப்படுத்திய வண்ணங்கள் முக்கியமானவை. அந்தத் தேர்வுகளும் அதன் அடியில் ஓடும் நாதங்களும் நம்மை ஈர்க்கச் செய்கின்றன. சு.ரா. அவரது படைப்புகளை முழுமையாகப் பார்க்கவில்லையோ என்று படுகிறது. முக்கியமாகச் சிறுகதைகளில், ஒன்றிரண்டைப் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.
‘மணிக்கொடி எழுத்தாளர்கள் தங்களை காந்தியவாதிகளாகக் காட்டிக்கொண்டார்களே தவிர, ஒருவருக்குக்கூட காந்தி அளவுக்கு முற்போக்கான சிந்தனை கிடையாது. புதுமைப்பித்தனைத் தவிர.’ என்ற விமர்சனம் ஒருவகையில் சரியானதுதான்.
க.நா.சு.விற்கு ஜானகிராமனின் எழுத்து மீது நல்ல மதிப்புண்டு. ‘மோகமுள்’ குறித்து இந்திய நாவல்களிலேயே தனித்துவமானது என்பது போன்ற ஒரு மதிப்பீட்டைச் சொல்லியிருக்கிறார். அவர் கதைகள் பற்றியும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். தி.ஜானகிராமன் குறித்த ஒரு உரையாடலில், “ஜானகிராமன் ரசானுபாவத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் தருகிறார். அவ்வளவு முக்கியத்துவம் அதுக்குத் தரக் கூடாது. வாசகன் ரசித்துத்தான் ஆகணும் என்ற கட்டாயம் இல்லை. அவனை ரசிக்க வைத்துத்தான் ஆகணும்ங்கறதுக்காக விஷயங்களைக் கதைக்குள் கொண்டுவரக் கூடாது. வடமொழியில் இருக்கக்கூடிய ஒரு மரபு இது. வடமொழிக் காப்பியங்களில் அது அதிகமாக இருக்கேயொழிய தமிழில் செய்ய வேண்டிய செய்யக்கூடிய விஷயமே அல்ல என்றார்… கு.ப.ரா.வோட க்ராஃப்டை எடுத்துக்கொண்டு அதுக்குள் தேனைவிடறது மாதிரி செய்கிறார் ஜானகிராமன்” என்று சொன்னதாக சு.ரா. குறிப்பிடுகிறார். ஜானகிராமன் இயல்பாக எழுதிச் செல்வதிலேயே மொழியின் அழகிய லயம் கூடிவந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். வேண்டுமென்றே அதில் தேனை ஊற்றுவதாகத் தெரியவில்லை. இந்த க.நா.சு.வின் விமர்சனத்தில் சு.ரா.வின் விமர்சனமும் கலந்து வெளிப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.
காலமெல்லாம் உயர்ந்த இலக்கியம் குறித்துப் பேசிவந்த க.நா.சு. ‘குருதிப்புனல்’ போன்ற இரண்டாம் தர நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது அவரது பயணத்தில் விழுந்த சரிவாகக் காண்கிறார். சிறுகதையில் ஏதும் சாதனை நிகழ்த்தாத தருமு சிவராமுவின் ஒரு கதையைச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக (ஆங்கிலத்தில்) தேர்ந்தெடுக்கும் அவரது பொறுப்பற்றத் தன்மையைத்தான் காட்டுகிறது என்கிறார். சிவராமுவின் அந்தக் கதையை எழுத்து பௌண்ட் வால்யூமில் படித்தேன். அது முழுக்க முழுக்க மௌனியின் பாதிப்பில் எழுதப்பட்டிருந்தது. பெரிய பார்வை வீச்சை வெளிப்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
மௌனியைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது அவர் சவடால் பேர்வழியாக இருந்திருக்கிறார் என்று படுகிறது. ‘உலகத்தைப் பார்க்காமல், வாழ்க்கையிலிருந்து எந்த எதிர்வினையும் பெறாமல் தன்னைக்கூடப் பார்த்துக்கொள்ளாமல், தன் பிரதாபத்தின் போதையில் கரைந்து நிற்க விரும்பியவராகவே அவர் எனக்குத் தென்பட்டார்,’ என்று அடையாளப்படுத்துகிறார்.
மௌனி சில தனித்தன்மையான கதைகளை எழுதியிருக்கிறார். மௌனி தொடர்ந்து எழுதிவந்த அந்த நாளில் புதுமைப்பித்தன் அவரைத் ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்று சொன்னதும் சரியாகப்பட்டிருக்கும். நான் மௌனியைப் படித்தபோது ‘திருமூலர்’ என்ற வார்த்தை அவரை கொம்பு சீவிவிட்டதோ என்றுபட்டது. அவரது எழுத்தின் பரப்பு மிகச் சுருங்கியது. மனஅவஸ்தை பாற்பட்டது. பகற்கனவால் வளர்வது. இலக்கிய உலகில் மௌனி நடந்துகொண்டவிதம் சண்டியர் தனமான சுயமோகம் சார்ந்ததாக இருந்ததை சு.ரா. வாயிலாக அறியமுடிகிறது.
விரிவாகவோ மிகச்சுருக்கமாகவோ முக்கியமான நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகள், முன்னோடிகள் பற்றி தனது மதிப்பீட்டை, விமர்சனத்தை சு.ரா. முன்வைத்தபடியே வந்திருக்கிறார்.
இதில் ஒரு மகத்தான கலைஞனாக புதுமைப்பித்தனை இனங்கண்டு கொண்டாடுகிறார். புதுமைப்பித்தன் குறித்த கட்டுரைகளில் மட்டுமல்ல. உதாரணத்திற்குப் பெயரை மட்டும் சொல்லநேரும் இடங்களில்கூட புதுமைப்பித்தனின் மேதமையைச் சொல்லாமல் விட்டதில்லை. சுவிடீஸ் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ் க.நா.சு. போல உலகில் காதலித்தவன் எவனும் இருக்க முடியாது. இப்படி தன் எழுத்துமீது தீராக்காதல் கொண்ட தமிழ் வாசகன் இருந்திருக்கிறான் என்று லாகர்லெவ்விற்கும் தெரியாது என்று சுந்தர ராமசாமி எங்கோ குறிப்பிட்டிருந்தார். அதையே புதுமைப்பித்தன் விசயத்தில் சுந்தர ராமசாமிக்கும் சொல்லலாம். புதுமைப்பித்தனின் எழுத்தை வெறித்தனமாகக் காதலித்தவர் சுந்தர ராமசாமி. அவரை உலகின் ஆகச்சிறந்த வரிசையில் வைத்து போற்றியிருப்பவர் ராமசாமி.
“மேதாவிலாசம், அந்தரங்க சுத்தி, சுதந்திரம் இம்மூன்று குணங்களிலிருந்து புத்தியின் தணிக்கைக்குக் காத்திராத அவருடைய கலை உணர்ச்சி செழுமையை உறிஞ்சி அவருடைய கதைகளில் எத்தனையோ சோபைகளை ஏற்றியிருக்கிறது.”
“அனுபவங்களைச் சிதைக்காமல், தன் பார்வையில் முழுமையாகத் தரும் சுய அபிமானமற்ற தன்மை, தன்னிலிருந்து விடுதலை பெற்று நிற்றல், புற உலகத்தையும் விலகி நின்று விமர்சிக்கும் குணம் புதுமைப்பித்தனைப் போல இவர்கள் எவரிடத்திலும் இல்லை.”
“பாரதிக்கு மனிதன் – காலத்தின் சோதனையால் அவன் எவ்வளவு தாழ்வுற்றிருப்பினும் – ஒரு தெய்வீகச்சுடர், அந்தச் சுடரைத் தூண்டினால் மனிதனை மேல்நிலைப்படுத்தி விடலாம்.
இதுதான் பாரதியின் ஆதாரமான கனவு. புதுமைப்பித்தனுக்கோ மனிதன் மிகச் சிக்கலான ஒரு பிராணி. இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ளாத வரையிலும் மனிதனை மேல்நிலைப்படுத்தவோ அவன் மூலம் வாழ்வைச் செழுமைபடுத்தவோ இயலாது. இந்தப் பார்வைதான் இரண்டாயிரம் வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியத்தின் பிடரியைப் பற்றி அதை நவீனத்திற்குள் தள்ளுகிறது.”
இப்படி புதுமைப்பித்தன் குறித்து 100 மேற்கோள்களையேனும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகளிலிருந்து எளிதாக எடுத்துவைக்க முடியும்.
ஒரு வகையில் புதுமைப்பித்தனின் நேர் வாரிசு சுந்தர ராமசாமிதான். ரகுநாதனைவிட இலக்கியத்தில் சு.ரா. வெளிப்படுத்தியிருக்கும் போர்க்குணம் கடைசிவரை வற்றிவிடவில்லை. முக்கியமாக அவரது கட்டுரைகளில்.
புதுமைப்பித்தனின் சுடர்மிக்க உலகை மிச்சம் மீதி வைக்காமல் எல்லா கோணங்களிலிருந்தும் எல்லா குறுக்குச் சந்துகளின் வழியாகச் சென்றும், நின்றும் எடுத்துக்காட்டியவர் சு.ரா., தவிர தமிழில் வேறொருவர் இல்லை. என்றாலும் இருவரின் எழுத்தின் வெளிப்பாட்டிலும் வேறுபாட்டைத்தான் காண முடிகிறது.
புதுமையின் மீது புதுமைப்பித்தனுக்கு இருந்த மோகம் உணர்வுப் பூர்வமானது. சு.ரா.விற்கு அந்த மோகம் அறிவார்ந்த தளத்தில் நிகழ்கிறது. புதுமைப்பித்தன் வாழ்க்கையைத் தன் புதிய கண்கொண்டு பார்த்தார். சுந்தர ராமசாமி இலக்கிய வடிவத்தில்தான் அதிகமும் புதுமைகளைக் காண முற்பட்டார். புதுமைப்பித்தன் படைப்பில் அடங்காமல் வெளிப்பட்டதற்கும் சு.ரா. அடங்கி வெளிப்பட்டதற்கும் உணர்ச்சி வேறுபாடுகளே காரணம். இருவரும் வாழ்க்கையை அணுகிய விதம் வேறு. பண்பாட்டைப் பார்த்த விதமும் வேறு. தமிழ்ப் பண்பாட்டை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினார் புதுமைப்பித்தன். சு.ரா. முக்கியமாகப் படைப்பில் அறிவுபூர்வமாக அணுகினார்.
புதுமைப்பித்தனின் ‘பிரம்மராக்ஷஸ்’ கதையின் சிக்கலை ஒரு விமர்சன மேதைதான் வந்து விடுவிக்க வேண்டும் என்கிறார். அதுவரை ‘வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு’ என்ற புதுமைப்பித்தனின் வார்த்தைகளையே அக்கதைக்கு மேல் போட்டுவிட்டது பொறுத்திருப்பதுதான் நல்லது என்கிறார்
நாட்டுப்புற மரபில் சித்து விளையாட்டு பிரபலமானது. ரஸவாதம் குறித்த நம்பிக்கையும் நமக்குண்டு. பெண்களைத் தொடரும் பிரம்மராக்ஷஸ் என்ற படிமமும் உண்டு. இந்த நம்பிக்கை சார்ந்த மரபிற்கு ஒரு கதை வடிவம் தந்திருக்கிறார் புதுமைப்பித்தன், அதில் மானுட அகச்சிக்கலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது எண்ணம். இந்த அகம் சித்து மரபை நம்பும் உலகைச் சார்ந்தது. ‘காஞ்சனை’ போல.
சுந்தர ராமசாமியிடம் நான் விரும்பிக் கற்றுக்கொண்டது அவர் இலக்கியம் என்பது என்ன, கலை என்பது என்ன என்று திடீரென வெளிப்படுத்திய இடங்களில்தான். கடந்த கால இலக்கியத்துடனான வாகர் உறவு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு, ‘நினைவின் துணைகொண்டு இயன்ற வரையிலும் சத்தியத்தை உருவி எடுப்பது’ ‘இலக்கியத்தில் சொல்கிறவனின் சத்தியமே முக்கியமானது’ என்று சொல்லியிருப்பார். ஓரிடத்தில் ‘தூய்மையான வெள்ளங்கி போட்ட பாதிரியாரால் மிகச்சிறந்த படைப்பைத் தர முடியாது. ஒரு திருடனால் மிகச்சிறந்த நாவலை எழுதிவிட முடியும்.’ என்று எழுதியிருப்பார். இந்த வாசகம்தான், அனுபவம் இலக்கியத்தின் ஆகப்பெரிய பலம் என்பது எனக்கு விளங்கிற்று. சிறுவயதில் இந்த வரி தந்த மிதமிஞ்சிய உற்சாகம் இன்னும் நினைவில் இருக்கிறது. “சொல்லப்படாத ஒன்று சொல்லப்பட்டதற்கு நிகராகக் காரியம் நிகழ்த்துமா என்ற சந்தேகத்திற்கு, சில சந்தர்ப்பங்களில் சொல்லப்படாத நிலையிலேயே சொல்லப்பட்டதற்கும் மேலாகக் காரியம் நிகழ்த்தும் என்பதுதான் பதில்’ என் இளம் பிராயத்திலேயே மனனமாகிவிட்ட தொடர் இது.
கலைப்பார்வை குறித்த சு.ரா.வின் சிந்தனைகள் என்னை வளப்படுத்தின. அதிலிருந்து எனக்கானப் பாதையை உருவாக்கிக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன். சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் மகத்தான குறுநாவலைவிட வீச்சானவை. கட்டுரையாக அல்லாமல் அவை ஒவ்வொன்றும் இலக்கியப்பூர்வமான அனுபவத்தைத் தருவன. முக்கியமாக இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுதிய கட்டுரைகள் அபாரமானவை. அசத்தலானவை, மேலான நாவலில் வென்றெடுக்க முடியாத விசயங்களை சு.ரா. தனது கட்டுரைகளின் வாயிலாக வென்றெடுத்திருக்கிறார். ஒரு சிறுகதையைப் படைக்க முன்னும் கனவைவிட மேலான கனவுகளோடு இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்; செதுக்கியிருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம். இலக்கிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருக்கின்றனர். இலக்கியமாகும் அந்தஸ்து சுந்தர ராமசாமி கட்டுரைகளுக்குத்தான் உண்டு. ஜெயமோகன் கட்டுரைகளில் அவ்விதமான கவித்துவ பத்திகள் இறைந்து கிடக்கின்றன.
சுந்தர ராமசாமி தன்னை முன்நிறுத்தி தமிழ்ப் படைப்பாளிகளின் நிலைகுறித்து சொன்ன வாசகங்கள், இப்படித்தானே இருக்கிறோம் இதனை நமக்கு எழுதத் தோன்றவில்லையே என்று தோன்றும். ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனும் தன் நிலையைக் கண்டதாகப்படும். இவற்றை சு.ரா. முந்தி சொல்லிவிட்டாரே என்று நினைத்ததுண்டு. இந்த அவலமும் ஒரு வசீகரமாக இருந்தது, இருக்கிறது.
வாழ்க்கை முக்கியமா இலக்கியம் முக்கியமா என்று ந. பிச்சமூர்த்தியிடமோ, அசோகமித்திரனிடமோ கேட்டால் வாழ்க்கைதான் முக்கியம் என்பார்கள். புதுமைப்பித்தனும் அப்படியே சொல்வார். சுந்தர ராமசாமி வாழ்க்கை முக்கியம்தான் அதைவிட எனக்கு இலக்கியம்தான் முக்கியம் என்று பெரும் கனவுகளோடு வாழ்ந்தார். சு.ரா.வின் வாசகர்கள் படைப்பாளியாக மலர்ந்து இந்த வாசகங்கள் தந்த உத்வேகத்தில் மோசம் போனார்கள். இலக்கியத்தில் சில வெற்றிகளைக் கண்டார்கள். சு.ரா. மட்டுமே இதில் தனித்து நின்றார்.
தமிழ்ப் பண்பாட்டைப் பழமையான மரபு பக்கம் திருப்பாமல் நவீனத்துவத்தின் பக்கம் தொடர்ந்து திருப்புவதிலேயே முனைந்தவர். மரபின் சில உன்னதங்கள் இதனால் கழன்று போனாலும் பரவாயில்லை. இன்றைய நவீன வாழ்க்கையில் தமிழனும், தமிழ்ச் சிந்தனையும், தமிழர் நாகரிகமும், தமிழ் மொழியும் முன் நகர வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பத்தைப் பேராவலுடன் முன்வைத்தார். பணியும் ஆற்றினார். இந்தத் திசையில் தமிழ்ப் படைப்புலகம் சிறப்பான பாதையில் செல்வதற்கு க.நா.சு.விற்கு அடுத்தபடி சுந்தர ராமசாமி முக்கியமானவராக இருந்திருக்கிறார்.
சிற்றிதழ் வழிவந்த மகத்தான இலக்கிய வீரன் கலைஞன் சுந்தர ராமசாமி. வெகுஜன ரசனைக்கு எதிராக எழுந்த சிற்றிதழ்களின் தீவிரமான இலக்கிய செயல்பாடுகளின் வழி எழுத வந்தவர். இந்த இலக்கியக் கடலில் நீந்தி நீந்தி தன்னைத் தனித்துவம் மிக்கவராக உருவாக்கிக்கொண்டார். ஜனரஞ்சக இதழ்களின் வழி தன்னைச் சிங்கமென வடிவமைத்துக்கொண்டார் ஜெயகாந்தன். சிற்றிதழ்களின் வழி வேகம் மிக்க சிறுத்தையாகச் சுழன்றாடினார் சுந்தர ராமசாமி. சிற்றிதழ்களின் தோற்றமும் அதன் உச்சபட்சமான வெளிப்பாட்டுக் காலமும் அவரது எழுத்து வாழ்வின் இணை கோடுகளாக அமைந்துவிட்டன. எனவே சிற்றிதழ்களின் தனித்த வீரனாக எழுந்து வாள் சுழற்றி தனது இலக்கியப் பணியைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்திக்கொண்டார். இந்தப் புகழார்ந்த இடத்தை அடைய அவர் எவ்வளவோ இழந்திருக்கிறார். அந்த இடத்தின் மீது சக எழுத்தாளர்களுக்கு எரிச்சல் பொறாமைகூட இருந்தது. சுஜாதா, அசோகமித்திரன், மாலன் போன்றோர்கள் தங்கள் கோவத்தைக் காட்டியிருக்கிறார்கள். க.நா.சு. சிற்றிதழ்களின் இலக்கிய வெளிப்பாட்டை வெளிப்படுத்தியபோது சு.ரா. அவ்வெளியின் தனித்துவம் குறித்து அக்கறை கொண்டார். ஒன்றே ஒன்று, ஜெயகாந்தனிடம் டம்பம் இருந்தது. சுந்தர ராமசாமியிடம் அர்ப்பணிப்பு இருந்தது. அதாவது தமிழ் இலக்கியச்சூழலை மேலெடுப்பதில்.
தான் வரித்துக்கொண்ட இலக்கிய பாத்திரத்தைக் காந்தியைப் போல கடைசி மணித்துளி வரையிலும் கடைப்பிடித்தார். இது நம் கண்முன் நிகழ்ந்த ஒரு அபூர்வ இலக்கிய நிகழ்வு. காந்தியைவிட அவரது சீடர் ஜே.சி. குமாரப்பா தீவிரமாக காந்திய கொள்கையைச் செயல்படுத்துவதில் முனைந்தார் என்பார்கள். க.நா.சு.வையும் சுந்தர ராமசாமியையும் அப்படிப் பார்க்கத் தோன்றுகிறது
தமிழ் இலக்கியப் பரப்பின் மையங்களாக பாரதி, புதுமைப்பித்தன் இன்று மாறிவிட்டனர். அவர்களின் படைப்பாளுமைகள் இந்த இடத்தை வென்றெடுத்தன. சுந்தர ராமசாமி தன் கட்டுரைகளின் வழி வெளிப்படுத்திய இலக்கியக் கனவு தமிழ்ப் பரப்பில் மற்றுமொரு மையமாக –வீச்சான சுடராக நிலைத்து நிற்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த இலக்கியக் கனவு அவருக்குப்பின் வந்த படைப்பாளிகளிடம் அதே தீவிரத்தோடு இல்லை என்பதால் சுந்தர ராமசாமியின் இடம் இன்று துலக்கமாக நின்று ஜொலிக்கிறது. இந்த இடத்தில் ஜெயமோகனைச் சொல்லலாம்தான். அவரது வீச்சு பெரிதானதுதான். உன்னத இலக்கியத்தை அல்லது அவ்விதமான இலக்கியக் களத்தை தமிழ்ச்சூழலில் வென்றெடுக்க சுந்தர ராமசாமி அதிக அளவில் பாடுபட்டார் என்று சொல்வதில் மிகை இல்லை என்றே தோன்றுகிறது இப்போதைக்கு.
தனித்துவமான ஓர் இலக்கிய ஆளுமையாக சுந்தர ராமசாமி ஓங்கி நிற்கிறார். அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை அவரது கட்டுரைகளும் படைப்புகளும் சாட்சி, அவரது காலத்தில் அவர் தனித்துத் தெரியும் பனைமரம். உண்மையில் அவர் ஓர் ஆலமரம். சுந்தர ராமசாமியால் பாதிப்படைந்த படைப்பு விழுதுகள் நிறைய. தமிழில் ஒரு School of Thought-ஐ உருவாக்கியவர். நேர் வழியில் அல்லாது குறுக்குவழிகளில் சென்று புகழை நாடாதவர். விமர்சனத்துறையை இலக்கியத் தகுதிக்குரியதாக மாற்றியவர். நாவல் துறை, சிறுகதைத் துறை, கவிதைத் துறை எதிலும் சிறந்தவற்றையே தர வேண்டும் என்ற பெருவிருப்போடு இயங்கியவர். புத்தம் புதிய உத்திகளில் சொல்லப்படுவதினாலே இலக்கியமாகிவிடாது; வாழ்வின் சிடுக்குகளை விமர்சனக் கண்கொண்டு புதிய வடிவில் தருவதே இலக்கியக்கலை என்பதில் இம்மியும் பிசகாதவர். அவருக்கு இலக்கியம் உணர்வுப் பூர்வமானது; பக்திப்பூர்வமானது; காதல் பூர்வமானது; கனவுகளால் நிரம்பியது. இந்த மண்ணில் உன்னதங்களைத் தோற்றுவிப்பதே எனது வேலை என்று ஈடுபட்டவர். அவரிடம் வாசகர்களாகச் சென்றவர்கள் எழுத்தாளர்களாகத் திரும்பி வந்தார்கள்.
சுந்தர விலாஸ் ஒரு இலக்கியப் பள்ளிக்கூடம். இந்தத் தமிழ்ச் சமூகம் என்றேனும் தனது பணியைக் கண்டுபிடித்து அங்கீகரிக்கும் என்றே நம்பியவர். அந்த நம்பிக்கையைத் தமிழக அரசும் சரி இந்திய அரசும் சரி கடைசிவரை பொய்யாக்கி வெற்றிகண்டது. ஒருவேளை ஞானபீட பரிசு வழங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்திற்குக் கூடுதல் மரியாதை ஏற்பட்டிருக்கும். அவர் தமிழ்ச்சூழலில் மேலான வாசகர் கூட்டத்தை உருவாக்கினார். அவரை விமர்சிப்பவர்களும், மதிப்பவர்களும், கோபப்படுபவர்களும் பிரியத்துடன் இருந்தவர்களும், விலகிச் சென்றவர்களும், விலகி நின்று அந்தக் காலத்தை ஒரு பொன்னான நிகழ்வாக நினைப்பவர்களும் அவரது வாசகர்களே. இந்தச் செல்வாக்கை அவரது காலத்தில் வேறொரு எழுத்தாளர் அடையவில்லை. இது சுந்தர ராமசாமிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இதுவே அவர்பெற்ற நோபல் பரிசு. வேறொன்றுமில்லை. கம்பீரமாக எழுத வந்தார். தன் பணியைச் செவ்வனே முடிந்து வெறுங்கையோடு கம்பீரமாக விடைபெற்றுச் சென்றார். எனக்கு இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை என்றாலும் அவர் கடைசி தினம் வரைக்கும் எப்படி இருந்தார் என்பதற்கு அவரது கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
‘வாளுண்டு என் கையில்’
என்று எழுதவந்த சுந்தர ராமசாமி.
‘வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள்வீச்சு
பின் குதிரைஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்த வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களை தின்று சாகும் என்முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்’
அவர் எழுதிய இக்கவிதைக்கு எதிராகத்தான் அவர் வாழ்ந்தார். தமிழ்ச் சூழல் இக்கவிதையையே அவருக்கு வெகுமதியாக்கியது. சுந்தர ராமசாமி என்ற ஒரு அசலான அழகிய காவியம் இப்படி துயரத்தில் முடிந்தது.