சுந்தர ராமசாமியின் சிறந்த கவிதைகள் என்று கருதப்படுபவை கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தவையாகும். பசுவய்யா என்ற பெயரில்தான் அநேகமான கவிதைகளை எழுதியுள்ளார். இது தவிர தொன்னூறுகளில் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்து நடாத்திய சுபமங்களா என்ற இதழிலும் சு.ரா. அவர்கள் இயங்கியுள்ளார். இன்று வரை வெளியிடப்பட்டுவரும் சிற்றிதழான காலச்சுவடு 1988 ஆம் ஆண்டு சு.ரா. உருவாக்கியதேயாகும். சுந்தர ராமசாமியை நவீனத்துவத்தின் அசல் முகம் என்றே பலர் வகைப்படுத்துகின்றனர். பாரதியார் உண்டாக்கிவிட்ட மரபிலிருந்து புதுமைப்பித்தன் முதலியவர்களின் வழி மரபாக வந்தவராகவே சுந்தரராமாசியை நாம் அடையாளம் காணமுடியும். அவருடைய கவிதைகள், கதைகள், நாவல்கள்,கட்டுரைகள் அனைத்தும் நவீனத்தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களாகும். 1931 மே மாதம் 30 ம் தேதி பிறந்த சு.ரா. மலையாளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதன் வழியாகப் பல முக்கியமான மொழிபெயர்ப்புக்களைத் தமிழுக்கு அளித்தார். குறிப்பாக 1951 ஆம் ஆண்டு தோட்டியின் மகன் என்ற தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
சு.ரா.வின் ஜேஜே சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, தொலைவிலிருக்கும் கவிதைகள், சுந்தர ராமசாமி கவிதைகள், ஆளுமைகள் மதிப்பீடுகள்: கட்டுரைத்தொகுப்பு, மற்றும் சில கதைகள் முக்கியமாக வாசித்துள்ளேன். இதில் அவரது கவிதைகளையும் கட்டுரைகளையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அவரது பல புதிய முயற்சிகளை இந்திய மரபிலிருந்து நவீனத்துக்கு வழங்கிய முறையாகவே நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். எந்தக் கோட்பாடுகளுக்குள்ளும் கட்சி அரசியலுக்குள்ளும் சிக்குப்படாமல் சுயாதீனமான ஒரு இயக்கத்தையே சு.ரா. வெளிப்படுதிதியிருந்தார்.
சு.ரா.வின் ஜேஜே சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, தொலைவிலிருக்கும் கவிதைகள், சுந்தர ராமசாமி கவிதைகள், ஆளுமைகள் மதிப்பீடுகள்: கட்டுரைத்தொகுப்பு, மற்றும் சில கதைகள் முக்கியமாக வாசித்துள்ளேன். இதில் அவரது கவிதைகளையும் கட்டுரைகளையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அவரது பல புதிய முயற்சிகளை இந்திய மரபிலிருந்து நவீனத்துக்கு வழங்கிய முறையாகவே நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். எந்தக் கோட்பாடுகளுக்குள்ளும் கட்சி அரசியலுக்குள்ளும் சிக்குப்படாமல் சுயாதீனமான ஒரு இயக்கத்தையே சு.ரா. வெளிப்படுதிதியிருந்தார்.
வெங்கட்சாமிநாதன் எழுதிய இரண்டு தலைமுறைகளுக்கு இடையில் என்ற கட்டுரைக்கு பிரமிள் தொடக்கம் சி.மோகன் வரையானவர்கள் எதிர்வினையாற்றியிருந்தனர். ஆனால் அதற்குச் சுந்தர ராமசாமி எழுதிய எதிர்வினை அக்காலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் வெ.சா கலைகள் மற்றும் இலக்கியம், ஆகம விதிகள் பற்றிய தன்பார்வைக் கண்ணோட்டத்தை முன்வைத்திருந்தார். அதற்கு சு.ரா பலத்த எதிர்ப்பினை எழுதினார். குறிப்பாக சாதிய நோக்குகள், சினிமா, வெகுஜன எழுத்துக்கள், ரஸ்யாவின் ரசனைச் சீரழிவுகள் பற்றிக் கராரான விமர்சனத்தை எதிர்வினையாக எழுதினார். அவற்றை இன்று வாசிக்கும்போது அவரின் முற்போக்கு முகம் எவ்வளவு பொருத்தப்பாடாக உள்ளது என்று நோக்கமுடிகிறது. உதாரணமாக;
"கல்கி ஒரு புகழ் விரும்பி. புதுமைப்பித்தன், ராமையா, பிச்சமூர்த்தி ஆகியோரின் தரம் தன்னைவிடவும் தான் உருவாக்கிய படைப்பை விடவும் உயர்வானது என்று கல்கிக்குத் தெரியும். கல்கி தன் குருவின் அரசியல் தந்திரங்கள் அனைத்துக்கும் விவஸ்த்தையில்லாமல் ஜால்ரா தட்டியவர். அவரிடம் Innocence கிடையாது. மடமை கிடையாது. எழுத்தில் ராஜாஜி கடைப்பிடித்த நேர்மை கல்கிக்குக் கிடையாது. கல்கியின் நோக்கம் தனக்குச் சார்பான ஒரு வாசகப் பட்டாளத்தைத் திரட்டுவது"
இது 1978 சு.ரா. எழுதிய எதிர்வினை. இந்த கராரான முற்போக்கு முகம் இன்று எவ்வளவுக்கு உண்மையான கருத்தாக இன்று உணரப்படுகிறது என்று நீங்களே கருதமுடியும். சு.ரா. போட்ட வெகுஜன மற்றும் தீவிர இலக்கியப் பிரிப்பு என்பது மிக முக்கியமான ஒரு விடயம். இது பின்வந்த பல எழுத்தாளர்களிடையே எதிரொலித்தது. மிக முக்கியமான சுந்தர ராமசாமியின் வேரிலிருந்து வந்த ஜெயமோகன் இதனைப் பிரதிபலித்தார். ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலில் மிகத் தெளிவாக இதுபற்றி காலவரிசையாகவும் ஆசிரியர் படைப்பு உள்ளடக்க வகையாகவும் பிரித்து எழுதியிருப்பார். சுந்தர ராமசாமி விட்டுச் சென்ற மரபு கராரான தீவிர இலக்கியத்துக்கான மீட்பாக இருந்தது என்பதைத் தாண்டி வெகுஜன இலக்கியத்தை எப்படி அறிந்துகொள்வது பிரித்துப் பார்ப்பது என்பதற்கும் கால்கோளாக அமைந்தது. இந்த முறைமை இப்போது தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. அல்லது எளிதாகவே அதற்குள் நல்ல ஒரு வாசகன் சென்று சேர்கிறான். அதில் சு.ரா.வின் பங்கு அளப்பரியது.
சு.ரா.வின் கவிதைப் பணியில் மொழிபெயர்ப்புப் பணி முக்கியமானது. தான் மொழிபெயர்த்த பல கவிதைகளை பிரமிள் மெய்ப்புப் பார்த்து திருத்தியுள்ளதாகவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சு.ரா. தனது முதல் மொழிபெயர்ப்புனை 1964இல் மேற்கொண்டார். அதில் ழாக் ப்ராவர் என்பதை ஜாக்யூஸ் ப்ரீவேர்ட் என்று எழுதியதாகவும் பிரஞ்சு பெயர்களை உச்சரிப்பதிலுள்ள இடர்பாடுகளைப் பின் வந்த காலங்களில்தான் திருத்தியதாகவும் வெளிப்படையாகவே நினைவுகூர்ந்துள்ளார். இலக்கியத்தில் எந்த இடத்திலும் தன்னுடைய ஆக்கவுணர்வு சார்ந்த சம்பவங்களைச் சு.ரா. மறைத்துக்கொண்டவரல்ல. தன்னுடைய தவறு என்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்ட ஒருவராகவே இருந்துள்ளார். இதனை அவரது பல கட்டுரைகளில் காண முடியும். இந்த வெளிப்படையுணர்வுதான் அவரை முக்கியமான ஒரு இடத்தில் வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. லோர்க்கா கவிதைகள், லூயிடி கான்கோரா, லோபே டி வேகா, அன்டானியோ மச்சடோ, நிஸிம் இஸக்கியேல், பெயிஸ் அஹமத், முனிர் நியாஸி, கிய்விக் கவிதைகள், பாப்லோ நெருடா கவிதைகள் என்று பல நூறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இன்றைய கவிதை மொழிபெயர்ப்புக்கள் தரமற்ற சீரழிந்த ஒரு போக்கையே காட்டுகிறது. ஆனால் அன்று சு.ரா. மிக நிதானமான ஒவ்வொரு கவிதைகளையும் பெயர்த்துள்ளார். அசலான கவிதைகளா அல்லது மொழிபெயர்ப்புக்களா என்று சந்தேகத்தைச் சில கவிதைகள் உண்டாக்கியும் இருந்தன.
கே. சச்சிதானந்தன் கூறிய ஒரு கருத்துத்தான் இங்கே ஞாபகம் வருகிறது. "கவிதையை மொழிபெயர்ப்பது கூடுவிட்டுக் கூடு பாய்வதாகும். மீன் தண்ணீரின் அடியில் நீந்துவதுபோல் மொழிபெயர்ப்பாளன் மனங்களுக்குள் நீந்துகிறான்." சுந்தர ராமசாமி மனங்களுக்குள் நீந்திக் கவிதையை மொழிபெயர்த்திருந்தார் என்றும் கூறலாம். இந்தியப் பிராந்தியமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்த போது அதற்குப் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகள் அதனை மொழிபெயர்ப்புக் கவிதையா என்று எண்ண வைக்கக்கூடியது. உதாரணமாக ஆற்றூர் ரவிவார்மா மற்றும் ஏ.கே.ராமானுஜன் போன்றோரது சில கவிதைகளின் பெயர்ப்பில் இதனைக் காணலாம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில இடங்களில் சு.ரா.வின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சலிப்புத்தட்ட வைத்தன என்பதை மறுக்கவும் முடியாது.
ஏ.கே. ராமானுஜத்தின் ஒரு கவிதையை சுந்தர ராமசாமி மற்றும் நஞ்சுண்டன் இருவரும் வேறுவேறாக மொழிபெயர்த்திருந்தனர். "ஆ ஹக்கி பெகாதரே" என்று கன்னடத்தில் மூலக்கவிதை எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மாற்றப்பட்ட்ள்ளது. இதில் சு.ரா.வின் மொழிபெயர்ப்பு இயல்பாகவும் கைதேர்ந்த கவிஞருக்கான இலட்சணமும் தெரிகிறது. ஆனால் நஞ்சுண்டனின் மொழிபெயர்ப்பு வலிந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளால் ஆனதுபோல் தெரிகிறது அல்லது ஒருவிதத்திலும் கற்பனையை அகலப்படுத்தாத மொழிபெயர்ப்பு என்றும் சொல்லலாம். கதைசொல்வதற்கான உத்தியைக் கைக்கொள்ள முயன்றாலும் அதில் இருப்பது ஒரு கத்துக்குட்டித்தனம்தான். இருமொழிபெயர்ப்பும், ஆங்கிலப்பிரதியும் கீழேயுள்ளது. வாசிக்கும்போது அது புரியும். இங்கே சுந்தர ராமசாமியை உயரத்தில் வைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த ஒப்பீடு செய்யப்படவில்லை. சு.ரா.வின் மொழிபெயர்ப்புக்கள் இன்றைய மொழிபெயர்ப்புக்களைவிடவும் தரமானவை என்கிற கராரான கருத்தைக் கூறவே இது முன்வைக்கப்படுகிறது.
சுந்தர ராமசாமி
மங்கோலியாவில் அந்த அரசன் இருந்தான்
என்பதை நீ அறிவாய்.
தூரதேசம் ஒன்றைப் பிடிக்க அவன் படையெடுத்துச் சென்றான்.
அங்கு அபூர்வப் பறவை ஒன்றின் பாடலைக் கேட்டான்.
அந்தப் பாடல் அவனுக்கு வேண்டுமென்று தோன்றிற்று.
அந்தப் பாடலுக்காக பறவையும்,
அந்தப் பறவைக்காக அதன் கூடும்,
அண்டக் கூட்டிற்காக அந்தச் சுள்ளியும்,
அந்தச் சுள்ளிக்காக அந்த மரக்கிளையும்,
அந்த மரக்கிளைக்காக அந்த மரமும்,
அதன் வேர்களும்,
வேரடி மண்ணும்,
அந்த ஊரும்,
நீரும்,
அந்த ஊர் முழுவதும்,
அந்த தேசம் முழுவதும்,
அவனுக்கு வேண்டுமென்று தோன்றிற்று.
படைகளும் தேர்களும் யானைகளும் குதிரைகளும் கொண்ட அவன்
அந்த தேசத்தைப் போரிட்டுப் பிடித்தான்.
அதன் பின் அவன் ஊர் திரும்பவில்லை.
நஞ்சுண்டன்
மங்கோலியாவில் ஒரு ராஜா இருந்தானாமே.
அவன் ஏதோ தூர தேசத்திற்குப் படையெடுத்துப்
போனபோது அங்கொரு புதிய பறவையின் பாடல்
கேட்டு அந்தப்பாடல் எனக்கே வேண்டுமென்று
பாட்டுக்கென்று பறவையைப் பிடித்து
பறவையுடன் சேர்த்துக் கூடெடுத்து
கூடோடு கொம்பு
கொம்புக்குக் கிளை
கிளைக்கு மரம்
மரத்தடியின் வேர்
வேரைச் சுற்றிய கட்டி மண்
அந்த ஊர்
நீர்
பருவ மழை
அந்தப் பகுதி
தேசம்
அந்த ராஜ்யம் முழுவதும் அனைத்தும் பிடித்துப் போட
நினைத்து போன வந்த யானை குதிரை தேர் படை
எல்லாம் கூட்டி ராஜ்யம் முழுவதையும் வென்று
தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான்.
வீட்டிற்கே போகவில்லை.
There lived a king in Mongolia
They say
Who went to a far-off land
With his army
Where he heard a bird sing
A bird he had never heard before
Wanting to capture her
He lifted her along with her nest
Along with the branches of the tree
The entire tree
And the roots underneath
The lumps of earth in the roots
The village
The water
The climate
The region
The country
The entire kingdom
He wanted them all
And so he gathered his elephants,
Horses and men
Conquered the whole kingdom
Merged it with his own
And never returned home.
சுந்தர ராமசாமியின் புனைவுலகத்தை வேறொரு இடத்தில்தான் பேசவேண்டும். இங்கு அவரது கவிதைகள் பற்றி ஓரளவுக்கு சில விடயங்களைக் கூறி ஆகவேண்டும். சு.ரா. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னர் பிறந்தவர் என்பதால் அக்காலத்தில் நிலவிய பழைய பண்பாட்டு முறைகளைத் தனது கவிதைகளில் நுணுக்கமாக எழுதியுமுள்ளார். அத்துடன் சுதந்திரத்துக்குப் பின்னரான இந்திய நடைமுறைச் சமூகம் சீரழிந்த நிலைக்குப் போனதைப் பற்றிப் புனைவுகளிலும் தந்துள்ளார். ஒவ்வொருவரின் ஆழ்மன சமூக பிம்பங்கள் மிகச் சிறுவயது முதலே பரீட்சார்த்தமாக உண்டாக்கப்படுகிறது. அது குழந்தை கருவில் இருக்கும் போதே உண்டாக்கப்படுகிறதா என்ற ஆய்வு அருவமாகவே இருக்கிறது. குழந்தைகளுக்குச் சிறுவயதில் பெற்றோர் வழங்கும் முதற் தண்டனை தொடர்ந்து ஞாபகமாகவே இருக்கும். அந்த பிம்பம் பின்வந்த காலங்களில் உள்ளே ஒளிந்துதான் இருக்கும். அவற்றைப் புனைவுகளாலும் வெளிப்படுத்த முடியும். இந்த உதாரணத்துக்குச் சுந்தர ராமசாமியின் ஓவியத்தில் எரியும் சுடர் என்ற கவிதையை இங்கே ஞாபகப்படுத்தலாம்.
"அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது.
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாவின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது"
இக்கவிதையின் முன்பகுதி மேற்சொன்ன ஆழ்மன பிம்பங்களை அப்படியே கூறிவிட்டு "அந்தச் சுடர் தன்னை எரித்துக்கொண்டே ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம் அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை" என்ற வரிகள் மூலமாக ஆரம்பதின்திலிருந்த ஆழ்மன பிம்பங்களுக்குள் அழகியலை ஏற்றுகிறார். அதாவது தொடக்கத்தில் மனிநடத்தையின் சாதாரண விடயத்தையும் பின்னவந்த வரிகளில் அசாதாரணமான பிரமிப்பையும் கூட்டி அழகியலை ஏற்றுவது என்று கூறலாம். இந்தக் கவிதையின் முக்கியமான இரண்டு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று கவிஞரின் ஆழ்மனம். இரண்டு கவிதையின் அழகியல். கவிஞரின் ஆழ்மனம் குழந்தை தாயின் முகத்தைத் தயங்கிப் பார்ப்பதுடன் நிற்கிறது. ஆனால் கவிதையின் அழகியல் குழந்தை ஓவியத்தை வியப்பதுடன் ஆரம்பமாகிறது. அது மேலும் நீட்டிக்கின்றது. அதைத்தான் "குழந்தையின் விரல்களில் அப்போதும் வியப்பு துடித்துக் கொண்டிருக்கிறது" என்று கூறுகிறார். சுந்தர ராமசாமி ஆரம்பநாட்களில் மார்க்சிய சார்புடைய ஒருவராக இருந்துள்ளார். பின்பு மார்க்சியம் என்பதைவிட இந்தியப் பண்பாடும் இந்து ஞான மரபும் மிக ஆழமானது என்பதை அவரைடைய பரந்த வாசிப்பு அவருக்கு வழங்கியிருந்தது. இதனால்தான் அந்த முகாமைவிட்டு வெளியேறி சுயாதீனமாக இயங்கினார். அந்தச் சுயாதீனம் அவரை நவீனத்துவத்தின் முக்கிய எழுத்தாளராகவும் மாற்றியுள்ளது. சிவப்பு என்பதைக் கம்யூனிஸ்டுகளின் குறியீடாகக் கருதுகிறார்கள். அதைப்போல தியானம் என்பது இந்து ஞான மரபின் யோக தரிசனங்களில் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்த வடிவம். இது இன்று உலகம் முழுமைக்கும் உபயோகிக்கும் யோக மரபாக மாற்றப்பட்டுள்ளது. (இதன் வடிவங்களில் ஒன்றுதான் ஜென் நிலை என்பது) இதனை இந்திய மரபின் பூர்வீக முகமாகவும் நாம் அடையாளப்படுத்தலாம். சுந்தர ராமசாமி அதனையே தன்னுடைய ஒரு சில கவிதைகளில் கொள்கை சாராமல் எழுதியுள்ளார். அதாவது இந்தியப் பண்பாட்டிலிருந்து கிளர்ந்தெழுந்த மிக முக்கியமான எழுத்தாளராக சு.ரா.ழை மாற்றியது அவரது சுயமான தீர்க்கமான எழுத்து என்றால் அது மிகையல்ல. மேற்சொன்ன கருத்துக்களுக்கு அழுத்தம் சேர்க்கும் முகமாக அடிக்கடி ஞாபகம் வரும் சு.ரா.வின் கவிதையொன்று.
"உன் கண்களில் சிவப்பு இறங்கியிருக்கிறது.
அந்தப் புகழ்பெற்ற பார்வையில் பாய்ந்தோடித்
தொற்றும் கண்நோயின் முதல் ஜாலம்
என்று நினைக்கிறேன்.
தயவுசெய்து ஒதுங்கிப் போய்விடு.
உன் கண்கள் உனக்குத் தெரிவதில்லை.
பார்ப்பவர்களுக்கோ உறுத்துகிறது.
கறுப்புக்கண்ணாடி அணிந்துகொள்.
சொட்டு மருந்து ஊற்றிக்கொள்.
இருட்டறையில் படுத்துக்கிட.
சலிப்புத் தாங்கவில்லை எனில்,
தியானம் செய்.
மனிதனைப் பற்றி
சற்று உன்னைப் பற்றி.
சிவப்பு நீங்கும்வரை
வெளியே வராதே
சக மனிதனுக்காக"
சுந்தர ராமசாமியை நவீனத்துவத்தின் கராரான முகம் என்று சொல்வதுடன் நிறுத்தாமல் அவர் படைப்புக்களும் எழுத்துக்களும் எந்த மரபைச் சார்ந்தவை என்ற பிரக்ஞையும் எம்மிடம் ஏற்படவேண்டும். அப்பொழுதுதான் அவரை விஞ்சிய ஒரு படைப்பூக்கத்தை எம்மால் உண்டாக்க முடியும். அல்லாது போனால் கட்சியரசியலுக்குள்ளும் கோட்பாட்டு முகங்களுக்குள்ளும்தான் நம்மை மூடிவைத்துக் கொள்ள நேரிடலாம். இதனை மீறிவருவதுதான் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களிலிருந்து நான் கற்ற பாடம் என்று கூறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.